அரசியல்

இந்தியா இந்து ராஜ்யமா?

நமது நாடு பல்வேறு மதத்தினர் வாழும் நாடு. ஒரே மதத்தினர் பல்வேறு மொழிகளைக் கொண்டவர்களாக பிரிந்தும், ஒரே மதத்தினர் பல்வேறு சாதியினர்களாக பிரிக்கப்பட்டும் உள்ளனர். இத்தகைய வேற்றுமைகளைக் கொண்ட மக்கள் நீண்ட நெடுங்காலமாக ஒரே தேசத்தில் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர்.

சமுதாயத்தின் மீது, நாட்டின் மீது தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படும் பிற்போக்காளர்கள் இவ்வேற்றுமைகளை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

வாழ்க்கையின் இன்னல்களுக்கு காரணமறியாது தவிக்கின்ற மக்களை திசை திருப்பிவிடுகின்றனர்.

இதர மதத்தினர், மொழியினர், சாதியினர் தான் வாழ்க்கையின் துயரங்களுக்கு காரணம் என்று நச்சுக் கருத்தைப் பரப்புகின்றனர்.

சாதி, மத, மொழி உணர்வுகள் வெறிகளாக மாற்றி மக்களை மோதவிடுகின்றனர். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள், மொழியைக் கொண்டவர்கள், சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக மனித உடல்கள் வாழைத் தண்டுகள் போல் வெட்டி சாய்க்கப்படுகின்றன. பச்சிளம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை படுகொலை செய்யப்படுகிறார்கள். பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர். வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன.

மதப்பற்று, மொழிப்பற்று, சாதிப்பற்று என்ற பெயரால் வளர்க்கப்படுகிற வெறிகளால் மனித சமுதாயம் அனுபவித்துள்ள கொடுமைகள் ஏராளம்?

கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் படுகொலைகள், வெறித்தனமாக செயல்கள் தொடர்ந்து நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இதனால் மனித குலம் கண்ட பலன் என்ன?

மக்கள் ஒற்றுமை குலைந்து சிதறுண்டன. குடும்பங்கள் சின்னாபின்னாமாகி கணவனை இழந்தோர், மனைவியை இழந்தோர், பெற்றோரை இழந்த அனாதைக் குழந்தைகள், வாழ்விழந்த லட்சக்கணக்கான மக்கள், அகதிகள், புகலிடம் தேடி அலையும் கோரக் காட்சி?

குடியேறிய இடத்தில் மீண்டும் விரட்டப்பட்டு நாடோடிகளாக அலையும் பரிதாப நிலை.

பாகிஸ்தான் பிரிவினையின் போது  பங்களாதேசத்திலிருந்து விரட்டப்பட்ட வங்காளி மக்கள் திரிபுராவில் குடியேறினர். அப்போது அவர்களை அங்கிருந்து விரட்டுவதற்கு மலை சாதி பூர்வகுடி மக்களுக்கு வெறியூட்டினர். அதேசமயத்தில் அசாமிலும் வங்கதேசத்திலிருந்து‍ குடியேறிவர்களை விரட்ட போராட்டம் நடைபெற்றது.

எங்கே வாழ்வு? எங்கே நிம்மதி? எங்கும் அவதிப்படும் மக்களின் அபயக் குரல்? இது சாதி, மத, மொழி வெறிகளினால் இந்திய மக்கள் கண்ட பலன்………… இதற்கு இந்தியாவில் வரலாற்று ரீதியில் மதவெறியினால் மக்கள் மனதில் நச்சூட்டப்பட்டு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம்…

அசாம் கலவரம்

2013, ஜீலை மாதம் 20 ஆம் தேதி அசாமின் போடோலாந்து பிராந்தியத்தில் முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினர் 78 பேர் கொல்லப்பட்டு, ஏறத்தாழ 400 கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 4 இலட்சம்  போடோ அல்லாத பழங்குடி மக்களும்  முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். போடோ அல்லாத மக்கள் மீது, குறிப்பாக முஸ்லிம்களைக் குறிவைத்து போடோக்கள் நடத்திய வன்முறை.

மகாராஷ்டிரக் கலவரம்

‘மண்ணின் மைந்தன்’ கொள்கையுடன் சிவசேனா நடத்திய வன்முறை. மகாராஷ்டிரம் மகாராஷ்டிர மக்களுக்கே என்று இன உணர்வூட்டி மகாராஷ்டிரா அல்லாத மக்களை விரட்டியடித்த பால்தாக்கரேவின் கொடுமையை அனைவரும் அறிவோம்..

உத்தரபிரதேசக் கலவரம்

உத்தரப்பிரதேச மாநிலம் முஷாபர் நகரில் செப்டம்பர் 2013 இல் ஏற்பட்ட கலவரம்.

இன்னும் இப்படி‍ உதாரணங்களுக்கு‍ ஏராளமான வன்முறைகள் நிகழ்ந்திருக்கிறது. நடைபெற்ற அத்துனை வன்முறைகளுக்கு‍ பின்னும் மதவாத சக்திகள் இருப்பது‍ ஊரறிந்த ரகசியம்.

இந்து மதமும் இந்தியாவும்

இந்தியா இந்துக்களுடைய நாடு, மற்றவர்கள் அன்னியர்கள். இந்தியாவின் மதம் இந்து மதம், மற்றவை அன்னிய மதங்கள். இந்து தர்மமே இந்திய தர்மம். இந்து நாகரீகமே இந்திய நாகரீகம், மற்றவைகள் அன்னியமானது. இவர்களின் கருத்துப்படி இந்தியாவில் குடியேறியவர்கள் இந்தியாவை ஆக்கிரமித்தவர்கள் இந்து மதத்தையும் இந்து நாகரீகத்தையும் அழித்தனர். இதனால் இந்தியா அதனுடைய இந்து ராஜ்ய தன்மையை இழந்துவிட்டது. இந்து மதத்தையும் இந்திய நாகரீகத்தையும் பாதுகாக்க மீண்டும் இந்தியாவை இந்து ராஜ்யமாக ஆக்க வேண்டும். இந்திய மண்ணில் இந்து தர்மத்தை நிலை நாட்ட வேண்டும். இதர தர்மங்களையும் மதங்களையும் இந்திய மண்ணிலிருந்து விரட்ட வேண்டும்.

இந்தியாவில் வாழ்பவர்கள் அனைவரும் இந்து தர்மத்தை இந்து ராஷ்ட்ரத்தை ஏற்பவர்களாக இருக்க வேண்டும். இதனை ஏற்றுக் கொள்ளும் முஸ்லீம்களும் கிருத்தவர்களும் கூட ஆர்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினராக சேர முடியுமாம்.

இந்து ராஷ்ட்ரம்-இந்து தேசம் என்னும் இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இராணுவ அமைப்பு கொண்ட ஆர்எஸ்எஸ் இன் வெகுஜன அமைப்பாக, அரசியல் அமைப்பாக கடந்த காலத்தில் ஜனசங்கம் செயல்பட்டு வந்தது. இப்போது அதன் பெயர் பாரதிய ஜனதா கட்சி என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த இரண்டு அமைப்புகளும் அடிப்படையில் ஒன்றுதான்.

இந்துக்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் அன்னியர்கள் என்பது அவர்களது அடிப்படையான நிலை. இதனை தெளிவுபடுத்தி குரு கோல்வால்கர் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்துக்களும் பல சமூகத்தினரும் வாழ்ந்து வந்த ஒரு முழுமையான தேசம் ஏற்கனவே இருந்தது என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். அவர்கள் ஒன்று விருந்தினர்களாகவோ (யூதர்கள் – பார்சிகள்) அல்லது ஆக்கிரமிப்பாளர்களாகவோ (முஸ்லீம்கள் -கிருத்தவர்கள்) தான் இங்கு இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டனர்.

இந்தியா இந்துக்களின் நாடு, மற்றவர்கள் விருந்தினர்களாகவோ அல்லது ஆக்கிரமிப்பாளர்களாகவோ இங்கு இருக்கின்றனர். ஆகவே, அவர்கள் அன்னியர்கள் வெறியேற்றப்பட வேண்டியவர்கள். இதுதான் ஆர் எஸ் எஸ் இன் கொள்கை. இதை குருகோல்வால்கள் ஒளிவு மறைவின்றி தெளிவாகக் கூறியுள்ளார்.

(குரு கோல்வால்கர்-சிந்தனைக் குவியல். பக்கம் – 142)

ஆனால், இது முற்றிலும் தவறானது. வரலாற்று உண்மைகளுக்கு புறம்பானது.

இந்தியாவின் உண்மை முகம்

மனித குல வாழ்க்கையின் துவக்கத் தொட்டில்களில் ஒன்று இந்திய உபகண்டம். நீண்ட நெடுங் காலத்திற்கு முன்னால் நாகரீகம் தோன்றிய மிகச்சில நாடுகளில் ஒன்று. தத்துவஞானம், நாகரீகம், கணிதம், மருந்தியல், வானவியல் துறைகளில் சாதனைகள் பல புரிந்த நாடு.

தத்துவஞான சிந்தனைகளின் வளர்ச்சியை தொடர்ந்து பல்வேறு மதங்களும் தோன்றின. இந்தியாவில் தோன்றிய தத்துவ ஞானங்களும் மதங்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளும், நாகரீகமும் இந்திய எல்லைக்கப்பால் பல நாடுகளில் தோன்றிய பல தத்துவங்களும், மதங்களும் நாகரீகமும் இந்திய துணைக் கண்டத்திலும் ஊடுருவிப் பரவியது. இவையனைத்தும் இணைந்து இந்திய நாகரீகம் உருவாகியது. ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் கொண்ட நாடாக இந்தியா எப்போதும் இருந்ததில்லை. இந்து “ராஷ்ட்ரமாக – இந்து தேசமாக” இந்தியா என்றும் இருந்ததில்லை. புத்த, ஜைன மதங்கள் இந்து மதத்தைவிட  செல்வாக்குடனும், பலத்துடனும் இருந்த காலம் இந்திய வரலாற்றில் உண்டு. இந்திய தேசம், இந்து தேசம் என்பதும் இந்திய கலாச்சாரம் இந்து கலாச்சாரம் என்பதும் சரி்த்திர உண்மைகளுக்கு புறம்பானது.

மோடி‍ வகையறாக்கள் கூறுவது‍ போல் இந்தியா ஒருபோதும் இந்து‍ தேசமாக இருந்ததில்லை..  இருக்கப் போவதும் இல்லை… மதவாதத்திற்கு‍ எதிராக சிந்தனையை உயர்த்துவோம்!

தொடரும்…….

மேற்கோள்கள்

  1. இந்தியா இந்து ராஜ்யமா? எழுதியவர்.. பி.ஆர்.பரமேஸ்வரன், வெளியான ஆண்டு:1980
  2. தமிழ் விக்கிப்பீடியா
  3. குரு கோல்வால்கர் – சிந்தனைக் குவியல்

Related Posts