பிற

நிப்பான் தாஸ்களின் தேவை அதிகமாகி இருக்கிறது . . . . . . . . . !

சமூகம் அதில் சூழ்ந்திருப்பவர்களுக்குத் தீர்மானித்திருக்கும் எல்லை என்பது மிகச்சிறியது. அதிலும் இறுக்கிக் கட்டப்பட்டவர்கள் பெண்கள். ஒவ்வொரு முறையும் இந்த இறுக்கங்களைத் தளர்த்தியும், தடைகளைத் தகர்த்தெறிந்துமே வாழ்வில் வெற்றியென்ற பக்கத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். அப்படிப்பட்ட தடையை மீறித்தான் உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்திருக்கிறார் தங்கமகள் ஹிமா தாஸ்.

அசாம் மாநிலம் நௌகாவ் மாவட்டத்தில் உள்ள காந்துலிமாரி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஹிமா தாஸ். தந்தை ரஞ்சித் தாஸ் மற்றும் ஜோனாலி தாஸுக்கு தொந்தரவு தராத செல்லப்பிள்ளை. சிறுவயதிலேயே கால்பந்துப் போட்டியில் அதிக ஆர்வமிக்க ஹிமா, தனது ஆண் நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதை விளையாடப் பழகினாராம். பின்னாளில் அதனால் கிடைத்த வருமானத்தை அப்படியே வீட்டிற்கு தந்துவிடுவார் என்று பெருமைப்படுகிறார் ஜோனாலி.

தினமும் விவசாய நிலத்தின் கரடுமுரடான (மூன்று மாதங்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கும்) மேற்பரப்பில் ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும் ஹிமா, சாலையில் செல்லும் கார்களை முந்துவதற்காக வெறுங்காலில் விரட்டிச் செல்வாராம். ஹிமாவின் இந்தத் திறமையை அறிந்த நிப்பான் தாஸ் எனும் பயிற்சியாளர், அவரது வீட்டில் இதையெல்லாம் விளக்கி தலைநகர் கவுகாத்தியில் நடைபெறும் பயிற்சியில் கலந்துகொள்ள அனுப்பு வைக்குமாறு வேண்டியுள்ளார். பொருளாதார நெருக்கடியை தானே ஏற்றுக்கொள்கிறேன் என்று சுமையை நிப்பான் தாஸ் தனதாக்கிக் கொள்ள, சமூகம் தந்த கொச்சையான நெருக்கடிகளை ஹிமா தாஸ் பொருத்துக்கொண்டார். உண்மையில் பின்னால் திரும்பிப் பார்க்கவில்லை.

மாநில அளவிலான தடகளப் போட்டிகளுக்காக தயார்ப்படுத்தப்பட்ட ஹிமா தாஸின் இயல்பான உடல்வாகு, அவரை சர்வதேச தடகளப் போட்டிக்கு தகுதியாக்கியது. 18 மாத தீவிர பயிற்சியின் மூலம் 18 வயதேயான ஹிமா, சர்வதேச 20 வயதுக்குட்பட்டோருக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றிருக்கிறார். அரையிறுதிச் சுற்றில் மூன்றாவது இடத்தை மட்டுமே பிடித்த அவரது இறுதிப்போட்டி ஓட்டம் என்பது ரொம்பவே நுட்பமானது. பொதுவாக 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வளைவுகளில் மட்டுமே போட்டியாளர்கள் முந்துவார்கள். ஆனால், கடைசி நூறு மீட்டர் வரை வேகமெடுக்காத ஹிமா நேர்ப்பாதையில் சக போட்டியாளர்களை சாதாரணமாக கடந்து இலக்கை சுலபமாக எட்டினார்.

எங்கோ ஒரு மூலையில் நின்றிருந்த நிப்பான் தாஸிடம் அதே வேகத்தில் சென்று தேசியக் கொடியையும், சால்வை ஒன்றையும் வாங்கிவந்து பதக்க மேடையில் நின்ற ஹிமா தாஸின் கண்களில் தேசிய கீதம் இசைக்கையில் சலனம் உண்டானது. உலகின் எந்த மொழிகளாலும் வர்ணிக்க முடியாத அந்தக் கண்ணீர் ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்குமான மகிழ்ச்சியின் அடையாளம்.

நாளொன்றுக்கு நான்கு மணிநேரம் மட்டுமே மின்சாரம் இருக்கும் ஹிமாவின் கிராமத்தில், அவர் வாங்கிய பதக்கத்தைக் கூட சரியாக பார்க்க முடியவில்லை என வருத்தம் கொள்கிறார் தாயார் ஜோனாலி.

இந்தியாவின் எல்லா மூலைகளிலும் கொட்டிக்கிடக்கும், யாரும் கண்டுகொள்ளாத திறமைகளின் ஒற்றைப் பிரதிநிதியாக முன்வந்து நிரூபித்துக் காட்டியிருக்கிறார் ஹிமா தாஸ். அவரது அசல் திறமையை அறிந்து, உரிய பயிற்சிகள் வழங்கி, இந்தியாவை பெருமைப்பட  செய்திருக்கிறார் பயிற்சியாளர் நிப்பான் தாஸ். ரஞ்சித், ஜோனாலியிடம் மகிழ்ச்சி நிரம்பிய முகத்தைத் தவிர வேறெந்த வார்த்தைகளையும் இப்போதைக்கு எதிர்பார்க்க முடியவில்லை. அன்று தூற்றிய கிராமம், இன்று ஹிமாவைக் கொண்டாடித் தீர்க்கிறது.

திறமைகள் நிறைந்திருந்தும் புறக்கணிக்க மட்டுமே தெரிந்த நம் சமூகத்தில் இருந்து, இன்னொரு ஹிமாவைக் காண எத்தனை தலைமுறைகள் காத்திருக்க வேண்டுமோ?! நிப்பான் தாஸ்களின் தேவை அதிகமாகி இருக்கிறது!

– தேன்சிட்டு.

 

Related Posts