அரசியல்

பெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 3

முதல் பகுதி – பெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 1

இரண்டாம் பகுதி – பெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 2

7. அகதிகளை வெறுப்பவராக…

அகதிகள் குறித்து டொனால்ட் டிரம்ப் மட்டுமல்ல, ஹிலாரியும் மிகமோசமான பிற்போக்குத்தனமான கருத்துடையவர்தான்.

அமெரிக்காவிற்கு அகதிகளாக நுழையும் ஆதரவற்ற குழந்தைகளை, சர்வதேச மற்றும் அமெரிக்க சட்டங்களின்படியும், மனிதாபிமான அடப்படையிலும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் ஹிலாரியோ,

“அகதிகளாக வரும் குழந்தைகளை மீண்டும் அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பிடவேண்டும். அப்போதுதான் அமெரிக்காவிற்கு குழந்தைகளை அனுப்புவதை தென்னமெரிக்கர்கள் நிறுத்துவார்கள்”

என்றார்.

“தங்கள் குழந்தைகள் எல்லையைத் தாண்டிவிடுவதால் மட்டும் இங்கே தங்கிவாழ அனுமதி கிடைத்துவிடும் என்று அவர்கள் நினைத்துவிடக்கூடாது. அதனால் அக்குழந்தைகளை திரும்ப அனுப்பிடவேண்டும்”

அமெரிக்காவின் ஆதிக்கத்தினால், கொலம்பியா, எல் சால்வடார், குவாத்தமாலா, ஹோண்டுரஸ் போன்ற நாடுகள் அனைத்தும் குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடுகளாக மாறியிருக்கின்றன. அங்கெல்லாம் மக்களாட்சி நடக்கவிடாமல் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவளித்து தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது அமெரிக்கா. வாழவழியில்லாமல் அங்கிருந்து தப்பித்து அமெரிக்கா வந்தடையும் சிறு குழந்தைகளைக்கூட கைது செய்து மீண்டும் அவர்களது நாடுகளுக்கே திருப்பியவேண்டுமென்கிறார் ஹிலாரி.

8. வார்ஸ்ட்ரீட் நிறுவனங்களின் விருப்பத்திற்குரிய வேட்பாளராக…

“அமெரிக்காவில் அவ்வப்போது நாம் செய்யவேண்டியதெல்லாம்….. முதலாளித்துவம் வீழ்ச்சியடையாமல் காப்பாற்றுவது”

-ஹிலாரி

ஹிலாரி அயல்துறை அமைச்சராக இருந்தபோது தங்களுக்கு ஏற்றவாறு சட்டங்களை திருத்தியமைக்கும் முயற்சியில் இருந்த 60 மேற்பட்ட நிறுவனங்கள், ஹிலாரியின் கிளிண்டன் அறக்கட்டளைக்கு நேரடியாகவே 26000000 டாலர் அளவிற்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றன. அந்நன்கொடைகள் எதற்காக வழங்கப்பட்டன என்பதை யாரும் நமக்கு சொல்லிப்புரியவைக்க வேண்டியதில்லைதானே.

அதுமட்டுமல்லாமல், அதே காலகட்டத்தில் “கிளிண்டன் சர்வதேச முயற்சி” என்கிற திட்டத்திற்கு மேலும் 3200000000 டாலர் பணத்தினை 40 வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் கொடுத்திருக்கின்றன.

அயல்துறை அமைச்சராக ஹிலாரி இருந்த காலகட்டம்தான் உலகின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியானது என்று சொல்லலாம். ஆனால் தொழிலாளர்களுக்கோ அது சோதனைக்காலம்.

மூன்றாமுலக ஏழை நாடுகளின் தொழிலாளர் நலச்சட்டங்களை அமெரிக்க பெருநிறுவனகளுக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கு அந்நாட்டு அரசுகளுக்கு கடும்நெருக்கடி கொடுத்தார் ஹிலாரி. கொலம்பியாவுடனான தடையற்ற வியாபார ஒப்பந்தத்தை 2008இல் அதிபர் தேர்தலில் வேட்பாளராவதற்கு முயன்றபோது எதிர்த்தார். தொழிற்சங்கத் தலைவர்கள் மீது நடத்தப்படும் தொடர் வன்முறைகளையே அதற்குக் காரணமாகச் சொன்னார் ஹிலாரி.

ஆனால் தேர்தலெல்லாம் முடிந்து இராண்டாண்டுகளுக்குப் பின்னர், ஹிலாரியின் கிளிண்டன் அறக்கட்டளைக்கு கனடாவின் பசிபிக் ருபியேல்ஸ் நிறுவனம் பல மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியது. அதனைத்தொடர்ந்து, கொலம்பியாவுடனான தடையற்ற வியாபார ஒப்பந்தத்திற்கு தடாலடியாக ஆதரவைத் தெரிவிக்கத் துவங்கினார் ஹிலாரி.

பசிபிக் ருபியேல்ஸ் நிறுவனத்திற்கு கொலம்பியாவில் ஏராளமான வர்த்தக வியாபாரம் இருப்பது குறிப்பிடத்தக்கது. கொலம்பியாவில் தொழிலாளர் விரோதப்போக்கை கடைப்பிடிப்பதாகவும், தொழிற்சங்கத் தலைவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதாகவும், அவர்களில் பலரைக் கொலையும் செய்திருப்பதாகவும், பசிபிக் ருபியேல்ஸ் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை மனிதவுரிமைக் கழகங்களும் தொழிற்சங்கங்களும் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கின்றன.

இன்று உலகிலேயே அதிகளவில் தொழிற்சங்கத் தலைவர்களும் உறுப்பினர்களும் கொல்லப்படும் நாடுகளில் கொலம்பியாதான் முதலிடத்தில் இருக்கிறது. ஆனாலும், மனிதவுரிமை அளவுகோலில் கொலம்பியா சிறந்துவிளங்குவதாக ஹிலாரியின் அமைச்சகம் தொடர்ந்து கூறிவந்தது. அத்துடன் பசிபிக் ருபியேல்ஸ் நிறுவனத்தின் மீதான எந்தக் குற்றச்சாற்றையும் விசாரிக்கவுமில்லை.

2016 அதிபர் தேர்தலில் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களிடமிருந்து மற்றனைத்து வேட்பாளர்களைவிடவும் அதிகளவில் நிதியினை பெற்றிருப்பது ஹிலாரிதான். கோல்ட்மன் சாக்ஸ், மோர்கன் ஸ்டாலி, ஜேபிமோர்கன் சேஸ் மற்றும் பேங்க் ஆஃப் அமெரிக்கா உள்ளிட்ட பெருநிறுவனங்களின் தலைவர்கள் அனைவரும் ஹிலாரியைத்தான் ஆதரிக்கின்றனர். ஹிலாரிக்கு அதிகமாக நிதி வழங்கியர்களின் பட்டியிலில் முதல் ஐந்து இடங்களில் இருப்பவர்கள் அனைவரும் வால் ஸ்ட்ரீட் நிதி நிறுவனங்கள்தான்.

கடந்த இருபது ஆண்டுகளில் பில் கிளிண்டன் மற்றும் ஹிலாரி ஆகியோர் இணைந்து 1000000000 டாலருக்கும் மேலான நிதியினை அமெரிக்க பெருநிறுவனங்களிடமிருந்து பெற்றிருக்கின்றனர்.

2013இல் கோல்மேன் சாக்ஸ் நிறுவனத்திடம் 675000 டாலர் பணத்தினை பெற்றுக்கொண்டு மூன்று முறை அந்நிறுவனத்தில் உரையாற்றியிருக்கிறார். அப்பேச்சுகள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே ஆதரவான புதிய தாராளமயக் கொள்கைகளைக் கொண்டவர்தான் ஹிலாரி என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

“பில் கிளிண்டன் அதிபராக இருந்த எட்டு ஆண்டுகளில், நான் உங்களின் பிரதிநிதியாகவே செயல்பட்டேன்”

“2008 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சியின்போது, வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட என்னாலான எல்லாவற்றையும் செய்தேன்”

“வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களின் பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக்கொள்ளமுடியும். அரசாங்கம் இதில் தலையிடக்கூடாது”

இதுதான் ஹிலாரியின் உண்மையான முகம். ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின்போது மட்டும், தன்னை தொழிலாளர்களின் நண்பராகக் காட்டிக்கொள்ள முயல்கிறார்.

அமெரிக்காவின் எளிய மக்களுடைய கோடிக்கணக்கான பணத்தினைக் கொள்ளையடித்த வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களின் விருப்பமான வேட்பாளர் ஹிலாரிதான் என்பதில் சந்தேகமே இல்லை.

அவர்கள்தான் இலட்சக்கணக்கான அமெரிக்க மக்களை வீடில்லாதவர்களாகவும், வாழ்க்கையிழந்தவர்களாகவும் மாற்றியவர்கள்.

அமெரிக்க நடுத்தர மக்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிற வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களுக்கும் தனக்கும் இடையில் இருக்கும் நட்பினை தேர்தல் காலத்தில் ஒப்புக்கொள்ள ஹிலாரி தயாராக இல்லை. ஆனால் வரலாற்றினையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் ஆவணங்களையும் மறைக்கமுடியுமா? எல்லாமும் வெளியானபின்னர் தற்போது பதில்சொல்லமுடியாமல் தவிக்கிறார் ஹிலாரி. அவர் அதிபராக வெற்றிபெற்றால் மீண்டும் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் மகிழ்ச்சியடையும் என்பதும், அமெரிக்க மக்களின் பணத்தை மேலும் கொள்ளையடிப்பார்கள் என்பதும் கசப்பான உண்மை.

9. சிரியாவையும் லிபியாவையும் அழிவிற்குள் தள்ளியவராக…

லிபியா இன்று சீரழிந்துகிடக்கிறது. அமெரிக்காவும் இன்னபிற நாடுகளும் இணைந்து நேரடியாக அங்கே நடத்திய போரும் வீசிய குண்டுகளும்தான் அதற்குக் காரணம்.

மத்திய கிழக்கு நாடொன்றில் மற்றுமொரு போரினைத் துவக்க ஒபாமாவுக்கு விருப்பமிருக்கவில்லை. ஆனால், பிரான்சு மற்றும் பிரிட்டனுடன் அமெரிக்காவும் இணைந்து போர் தொடுக்கவேண்டும் என்றும் ஒபாமாவை கடுமையாக நிர்பந்தித்தார் அப்போதைய அயல்துறை அமைச்சராக இருந்த ஹிலாரி.

துணையதிபர் பிடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டொனிலன் மற்றும் பாதுகாப்பு செயலர் ராபர்ட் கேட்ஸ் உள்ளிட்ட பல உயரதிகாரிகளும் லிபியாவுடனான போரை எதிர்த்தனர்.

ஹிலாரி கொடுத்த கடுமையான நெருக்கடியினால்தான், போருக்கு செல்வதற்கான வாக்கெடுப்பில் 51-49 என்கிற விகிதத்தில் வெற்றிபெற்றது.

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தாம் தயாராக இருப்பதாக கடாபியின் மகனான் சைஃப் தெரிவித்தார். அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகளுடன் இதுகுறித்து பேசினார். ஆனால், ஹிலாரி தலையிட்டு கடாபியுடன் எவ்விதப் பேச்சுவார்த்தையும் நடத்தக்கூடாது என்று பென்டகனிற்கு கட்டளையிட்டார்.

அதன்பிறகும் கடாபி தலைமையிலான லிபிய அரசு, அமெரிக்காவின் முன்னாள் கப்பற்படை அதிகாரியான சார்லஸ் குபிக்கை வைத்து மற்றொரு பேச்சுவார்த்தையை துவக்கமுயற்சித்தது. 72 மணிநேர போர்நிறுத்தத்திற்கு தாம் தயாராக இருப்பதாகவும், உடனடியாக தாம் பதவிவிலகத் தயாராக இருப்பதாகவும், நேட்டோ அனுமதியுடன் லிபிய இராணுவம் கட்டுப்பட்டு நடக்கத் தயாராக இருப்பதாகவும், கடாபி தெரிவித்தார்.

ஆனால், அமைதிப்பேச்சுவார்த்தைக்கெல்லாம் ஹிலாரி தயாராகயில்லை. லிபியாவில் மதச்சார்பற்ற அரசின் எந்தத் தடயங்களையும் விட்டுவைக்க ஹிலாரி விரும்பவில்லை. அதற்கு நேரடிப்போர் ஒன்றே வழிமுறை என்பதில் குறியாக இருந்தார் ஹிலாரி.

பேச்சுவார்த்தையை நிராகத்துவிட்டு ஏழு மாதங்கள் தொடர்ச்சியாக நேட்டோ படைகள் நடத்திய தாக்குதல்களில் லிபியா தரைமட்டமானது. அரசு என்கிற ஒன்றே இல்லாமல்போனது. லிபியாவின் பெரும்பகுதிகள் பயங்கரவாதிகளின் கைவசம் சென்றன. இலட்சக்கணக்கான லிபிய மக்கள் அதிகாரப்பூர்வ அரசே இல்லாமல் வாழ்கின்றனர்.

சர்வதேச ஆதரவினைப் பெற்ற பொம்மை அரசோ லிபியாவின் மிகச்சிறிய கிழக்குப் பகுதியினை மட்டும்தான் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. மீதமுள்ள பகுதிகள் பயங்கரவாதிகளிடம்தான் இருக்கின்றன.

வளர்ச்சியடைந்த நகரமாக இருந்த பெங்கசி இன்று ஒன்றுமில்லாமல் அழிந்துபோயிருக்கிறது.

அன்சர் அல்-ஷரியா என்கிற சலாஃபி பயங்கரவாத அமைப்புதான் அந்நகரின் பெரும்பகுதியை கைப்பற்றி வைத்திருக்கிறது. ஈராக் மற்றும் சிரியாவுக்கு வெளியில் தன்னுடைய மிகப்பெரிய கலீஃபாவாக லிபியாவைத்தான் அறிவித்திருக்கிறது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு.

இலட்சக்கணக்கான லிபிய மக்கள் அனுதினமும் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் ஏராளமானோர் அகதிகளாக்கப்பட்டிருக்கின்றனர். ஆபத்தான படகுகள் மூலமும் பல இலட்சக்கணக்கானோர் தப்பித்து சென்றிருக்கின்றனர். ஐநா சபையின் கணிப்புப்படியே 400000 மக்கள் லிபியாவை விட்டு வெளியேறியிருக்கின்றனர்.

போருக்கு முந்தைய பேச்சுவார்த்தைகளை புறக்கணித்துவிட்டு, ஒரு தேசத்தையே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டு, தற்போது எதற்கும் உதவாத மிகநீண்ட பேச்சுவார்த்தைகளை யார்யாரோ நடத்திக்கொண்டிருக்கின்றனர். பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்கான எவ்விதத் திட்டமும் எவரிடமும் இல்லை. லிபியா தன்னுடைய பழைய இயல்புநிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்பு ஏதும், கண்ணுக்கெட்டும் தூரம் வரையிலும் தென்படுவதாகவும் இல்லை.

லிபியாவில் தான் செய்த தவறுகளிலிருந்து எவ்விதப் பாடங்களையும் ஹிலாரி கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

கண்ணெதிரே லிபியா அழிவிலிருந்து மீளமுடியாமல் தவிக்கிறது. ஆனால், ஹிலாரியோ அதேபோன்றதொரு போரினை சிரியாவிலும் ஈரானிலும் நடத்தத் துடித்துக்கொண்டிருக்கிறார்.

மீண்டும் மீண்டும் தன்னையொரு போர்வெறியர் என்பதை உலகிற்கு நிரூபித்துக்கொண்டிருக்கிறார் ஹிலாரி.

கடாபியின் மறைவுக்குப்பின்னர், லிபியாவில் சில நூற்றாண்டுகள் பின்நோக்கித்தான் போயிருக்கிறது பெண்களின் நிலை. லிபியாவில் நேட்டோ படைகள் தாக்கியபோது, “இசுலாமியப் போராளிக்குழு” தலைவரான அப்தெல்ஹக்கிம் பெல்ஹட்ஜ் என்பவருடன் நேட்டோ படைகள் இணைந்து பணியாற்றின. போருக்குப்பின்னர் அவரோடு அமெரிக்கப் போர்வெறியர்களான ஜான் மெக்கெயின் மற்றும் லிண்ட்சே கிரகாம் போன்றோர் அதே அப்தெல்ஹக்கிமுடன் புகைப்படமெல்லாம் எடுத்துக்கொண்டனர். அந்த அப்தெல்ஹக்கிம் வேறு யாருமல்ல. அவர்தான் ஐஎஸ்ஐஎஸ்-சின் லிபியா பிரிவின் இன்றைய தலைவர்.

லிபியாவில் நிகழ்த்தியதைப் போன்ற தாக்குதல் நடத்தி சிரியாவிலும் ஆசாத்தின் ஆட்சியைக் கவிழ்க்கவேண்டும் என்கிற கொள்கையோடு துவங்கப்பட்ட “பிரெண்ட்ஸ் ஆஃப் சிரியா” என்கிற சர்வதேச அமைப்பை உருவாக்குவதில் ஹிலாரி முக்கியப் பங்காற்றினார்.

லிபியாவைப்போன்றே சிரியாவிலும் ஒரு நேரடிப்போரை நடத்தவேண்டும் என்பதில் ஹிலாரி முனைப்பாக இருக்கிறார். அதிபரானால் சிரியாவை தன்னுடைய போர்வெறிக்கு பயன்படுத்தத் துடிக்கிறார்.

றுதியாக…

ஒரு பொருளை சந்தையில் விற்பதைப்போன்றுதான் அமெரிக்க தேர்தல் எப்போதும் நடக்கும். தங்களுடைய வேட்பாளரை வெற்றிபெறவைக்க ஏதாவது புதியதாக ஒன்றைக் கண்டுபிடித்து அதனை மட்டுமே முன்னிருத்தி தேர்தலில் பிரச்சாரம் செய்யப்படும்.

இப்படித்தான் 2008இல் கருப்பினத்தைச் சேர்ந்தவர் முதன்முறையாக அமெரிக்க அதிபராகப்போகிறார் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் அமெரிக்காவில் வாழும் கருப்பின மக்களின் வாழ்க்கைத்தரமும் உயரவில்லை; சமவுரிமையும் பெற்றுவிடவில்லை. சொல்லப்போனால் அவர்களது நிலைமை மேலும் மோசமாகத்தான் ஆகியிருக்கிறது.

இப்போது அதேபாணியில், “பெண்ணியவாதி ஹிலாரி” என்றும் “முதல் பெண் அதிபர்” என்றும் ஹிலாரிக்கு மகுடம் சூட்டி பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் ஹிலாரியின் கடந்தகால நடவடிக்கைகளையும் கொள்கைகளையும் வைத்துப்பார்க்கிறபோது, அவரால் அமெரிக்கப் பெண்களுக்கு எந்தப்பலனும் இருக்கப்போவதில்லை என்பது உறுதி.

அமெரிக்காவின் உயரிய பதவிக்கு பெண்ணொருவர் வரமுடியும் என்கிற ஒரு இலக்கை மட்டும் அடையலாமேயொழிய, அதனால் பெரும்பாலான அமெரிக்கப் பெண்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

தனியார் சிறைச்சாலைகள் அமைப்பதற்கு ஆதரவளிப்பது, தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கொண்டிருப்பது, மக்கள் நலனைவிட கார்ப்பரேட் நலனே முக்கியமென்றிருப்பது, தீராத போர்வெறியினைக் கொண்டிருப்பது போன்ற அவரது கொள்கைகளினால் அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை அவலநிலைக்கு தள்ளியிருப்பதை கண்கூடாகக் காணமுடிகிறது.

பெண்ணியம் என்பது சமூகத்தின் இருக்கும் 1% பணக்கார பெண்களின் நலனில் மட்டுமே அக்கறை கொள்ளும் தத்துவமல்ல அது. அப்படியான கொள்கைகளை பெண்ணியமென்று சொல்லமுடியாது. அது வெறும் மேட்டுக்குடித்தனம் மட்டுமே.

உலக நாடுகளிலெல்லாம் படையெடுத்து ஆக்கிரமிக்கவேண்டும் என்கிற போர்வெறிகொண்டவராக இருக்கிறார் ஹிலாரி.

“பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அமெரிக்கா கைதேர்ந்த நாடு. அதனால் நாம் தொடர்ந்து உலக நாடுகளின் பிரச்சனைகளில் தலையிட்டு, தீர்த்து அமெரிக்காவின் கீழ் கொண்டுவரவேண்டும்.”

அமெரிக்க அயல்துறை அமைச்சராக, பாலஸ்தீனம், லிபியா, சிரியா, ஹோண்டுரஸ், ஹைத்தி உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் பெரும் அழிவினை ஏற்படுத்தக் காரணமாக இருந்தவர் ஹிலாரி. அதனால் உயிரழந்த இலட்சக்கணாக்கானவர்களின் இரத்தம் ஹிலாரியின் கைகளிலும் படிந்திருக்கிறது.

அமெரிக்காவின் போர்வெறித்தனத்திற்கும் மனிதவிரோத ஏகாதிபத்தியத்திற்கும் ஹிலாரியை மட்டுமே கைகாட்டிவிடமுடியாது என்றாலும், கடந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவை அனைத்திற்கும் தன்னாலான உதவிகளை ஹிலாரி செய்திருக்கிறார். மத்திய கிழக்கை முழுவதுமாக ஆக்கிரமிக்கவேண்டும் என்று வலியுறுத்தும் பினாக் உள்ளிட்ட அமெரிக்காவின் அதிதீவிர வலதுசாரி அமைப்புகள்கூட ஹிலாரியை ஆதரிக்குமளவிற்கு போர்மீது தீராவெறிகொண்டவர்தான் ஹிலாரி. ஒருபோதும் அவர் உழைக்கும் மக்கள் பக்கம் நின்றதில்லை; பெண்களின் சமவுரிமைக்குக் குரல் கொடுத்ததுமில்லை;

அவரை எப்படி நாம் பெண்ணியவாதி என்று ஏற்றுக்கொள்ளமுடியும்?

-இ.பா.சிந்தன்

Related Posts