அரசியல்

பெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 2

பெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – முதல் பகுதி

முதல் பகுதியின் தொடர்ச்சி….

5. ஹோண்டுரசையும் ஹைத்தியையும் நிர்மூலமாக்கியவர்

உலகில் மிக அதிகமாகக் கொலைகள் நடக்கும் நாடு தென்னமெரிக்காவிலிருக்கும் ஹோண்டுரஸ் தான். 2006இல் ஹோண்டுரசில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அதிபர் மேனுவேல் செலயா, மக்களுக்கான பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார். தானொரு இடதுசாரி அதிபராக மாறிக்கொண்டிருப்பதாகவும் வெளிப்படையாக அறிவித்தார். “எல்லா குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி”, “குறைந்தபட்ச ஊதியத்தை 80%வரை உயர்த்தியது”, “16 இலட்சம் குழந்தைகளுக்கு இலவச உணவு”, “வறுமைக்கோட்டுகு கீழே இருக்கும் ஏழைகளுக்கு இலவச மின்சாரம்”, “சமூகப் பாதுகாப்பு சட்டம்” போன்ற பல புதிய மக்கள்நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தத் துவங்கியது மேனுவேல் செலயாவின் தலைமையிலான ஹோண்டுரஸ் அரசு.

அதனால், மிகக்குறுகிய காலத்திலேயே ஹோண்டுரசின் வறுமை 10% வரை குறைந்தது. ஆனாலும், நாட்டின் உற்பத்திமுறையில் பெரியளவில் மாற்றத்தினைக் கொண்டுவருவதற்கு, பழைய மக்கள்விரோத அரசியலமைப்புச் சட்டம் தடையாக இருந்தது. காலங்காலமாக மிகச்சிலரின் இலாபத்திற்காக பெரும்பாலான உழைக்கும் மக்களை சுரண்டுவதற்கு ஏதுவாகவே ஹோண்டுரசின் அரசியலமைப்புச் சட்டங்கள் இருந்துவருகின்றன. அதனால், அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர மக்களுக்கு விருப்பமிருக்கிறதா என்று அறிய விரும்பினார் செலயா.

“அடுத்த அதிபர் தேர்தலின்போது, அரசியலமைப்புச் சட்டத்தினை மாற்றலாமா வேண்டாமா என்கிற கேள்வியையும் இணைக்கலாமா?”

என்று ஒரு ஓட்டெடுப்பினை நடத்த செலயா முடிவெடுத்தார். அரசியலமைப்பை மாற்றுவதற்கான ஓட்டெடுப்புகூட இல்லை அது. ஓட்டெடுப்பு நடத்தலாமா வேண்டாமா என்று மக்களின் கருத்தை அறியவிரும்புகிற “ஓட்டெடுப்புக்கான ஓட்டெடுப்பு” தான் அது.

அமெரிக்கா உடனே விழித்துக்கொண்டது. ஏற்கனவே மக்களுக்கான அரசியலமைப்புச் சட்டத்தினை நிறைவேற்றியிருக்கிற வெனிசுவேலா, ஈக்வடா, பொலிவியா போன்ற நாடுகளை தடுக்காமல்விட்டதுபோல், ஹோண்டுரசையும் விட்டுவிடக்கூடாது என்று நினைத்தது அமெரிக்கா.

ஹோண்டுரசின் அதிபராக மேனுவேல் செலயா மீண்டும் வருவதற்காகவே அரசியலமைப்புச் சட்டத்தினை மாற்ற முனைவதாக வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால் அது உண்மையல்ல. ஏனெனில் அது அரசியலமைப்பை மாற்றுவதற்கான ஓட்டெடுப்பு அல்லவே.

அப்படியே மக்கள் அதற்கு ஒப்புக்கொண்டாலும், அடுத்த அதிபர் தேர்தலின்போதுதான் புதிய அரசியலமைப்புக்கான வாக்கெடுப்பே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படியானால், அடுத்த அதிபர் தேர்தலே பழைய அரசியலமைப்புச் சட்டத்தின்படிதான் நடக்கும் என்றும் மேனுவேல் செலயாவால் நிச்சயமாக தேர்தலில் போட்டியிடமுடியாது என்பதும் எல்லோருக்கும் தெரிந்த எளிய உண்மை.

இதற்கிடையே 2009இல் அமெரிக்க ஆதரவு ஹோண்டுரஸ் இராணுவம், செலயாவை துப்பாக்கிமுனையில் கைதுசெய்து, அவரது ஆட்சியினைக் கவிழ்த்து, நாடுகடத்திவிட்டது. அப்போது அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் ஹிலாரி.

“இது நிச்சயமாக ஒரு சட்டவிரோத ஆட்சிக்கவிழ்ப்புதான்” என்று ஹோண்டுரசில் இருந்த அமெரிக்கத் தூதரகம் ஹிலாரிக்கு தகவல் அனுப்பியது.

ஐநா சபையும், அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பும் கூட அதனை ஒரு ஆட்சிக்கவிழ்ப்பாகவே பார்த்தன. ஆனால் ஹிலாரி மட்டுமே அதனை ஆட்சிக்கவிழ்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்.

மேனுவேல் செலயாவை மீண்டும் நாடுதிரும்ப அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையினை உலகின் எல்லா நாடுகளும் முன்னிறுத்தின. ஆனால், ஹிலாரியோ மேனுவேல் செலயாவை மீண்டும் ஹோண்டுரசுக்குள் வருவதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும், அவரில்லாமல் விரைவில் மற்றொரு தேர்தலை நடத்திடவேண்டும் என்றும் வலுயுறுத்தினார். ஆட்சியைக் கவிழ்த்தவர்களே ஒரு தேர்தலை நடத்தினர். பெரும்பாலான மக்களும் அரசியல் கட்சிகளும் அத்தேர்தலைப் புறக்கணித்தனர்.

மேனுவேல் செலயாவுக்கு எதிரான இயக்கங்களுக்கு உதவி செய்ததும், செலயா நாடு திரும்பவேண்டும் என்கிற கோரிக்கையினை கைவிடக்கோரி பல நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்ததும், செலயா இல்லாமல் நடந்த முறையற்ற தேர்தலை ஏற்றுக்கொள்ளவைத்ததும் ஹிலாரியே என்று சமீபத்தில் வெளியான அவரின் மின்னஞ்சல்களின் மூலம் நமக்கு தெரியவருகிறது.

முறையற்ற தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அதிபரான லொபொவைச் சந்தித்து தன் ஆதரவைத் தெரிவிக்க ஹோண்டுரஸ் விரைந்தார் ஹிலாரி.

“அமெரிக்காவுடன் இராஜ்ஜிய உறவுகளை தொடர்வதற்கு ஏற்றவாறு ஹோண்டுரசின் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. ஹோண்டுரசிற்கு மீண்டும் பணவுதவிகள் செய்வதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும்”

என்று வாக்குறுதி அளித்தார் ஹிலாரி.

ஆனால், ஹிலாரி சொன்னதுபோல அங்கே ஜனநாயகம் தழைக்கவில்லை, மாறாக இராணுவ ஆட்சியே துவங்கியது. நூற்றுக்ணக்கான பழங்குடித் தலைவர்கள் கொல்லப்பட்டனர்; மீன்பிடி தொழிலிலிருந்து மீனவர்கள் துரத்தப்பட்டனர்; இயற்கை வளங்களை சுரண்டும் நிறுவனங்கள் அமெரிக்காவிலிருந்து ஹோண்டுரசுக்கு வருகை தந்தன; விவசாயிகளிடமிருந்து விளைநிலங்கள் பறிக்கப்பட்டு அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன; இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடியவர்களும் கொல்லப்பட்டனர்.

2010 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் 101 சுற்றுச்சூழலியலாளர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

ஹோண்டுரசின் ஆட்சிக்கவிழ்ப்புக்கும் அவலநிலைக்கும் ஹிலாரிதான் காரணம் என்று “சிறந்த போராளிக்கான கோல்ட்மேன் பரிசு” பெற்றவரும், சூழலியல் போராளியுமான  பெர்ட்டா காக்கெரெஸ் கடந்த மார்ச் மாதத்தில் குற்றஞ்சாட்டினார். அதன்பின்னர் ஒரே வாரத்தில், அவரது வீட்டிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.

இப்படியாக தற்போது உலகிலேயே அதிகளவில் கொலைகள் நடக்கும் நாடாக ஹோண்டுரஸ் உருவெடுத்திருக்கிறது.

பெண் என்பதாலேயே கொல்லப்படுவதும் (Femicide) அதிகளவில் அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு 16 மணிநேரத்திற்கும் ஹோண்டுரசில் ஒரு பெண் கொல்லப்படுகிறார்.

ஹைத்தி:

கரீபியத்தீவுகளில் இருக்கும் சிறிய நாடான ஹைத்தி, எப்போதும் அமெரிக்காவின் இராணுவ மிரட்டலுக்கு அடிபணியவேண்டிய கட்டாயத்திலேயே இருந்துவந்திருக்கிறது.

2011 இல் ஹைத்தியை கடுமையாக புயல் தாக்கிய பின்னர், அங்கே உடனடியாகத் தேர்தலை நடத்தவேண்டுமென்று ஹிலாரி நெருக்கடி கொடுத்தார். அதனைத்தொடர்ந்து ஏராளமான முறைகேடுகளோடு சம்பரதாயமாக நடந்த தேர்தலில் வெறும் 25% மக்களே வாக்களித்தனர். மக்கள் வாக்களிக்காத ஒரு தேர்தலில் பிரபல பாப் பாடகரான மிஷல் மார்தெல்லி வெற்றிபெற்று அதிபரானார்.

அவர் முன்னொரு காலத்தில் ஹைத்தியை ஆண்டுவந்த அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரிகளோடு தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள மக்களும், தேர்தலுக்கு முந்தைய அதிபரான ரேனே பிரெவலும் மறுத்தனர். சர்வதேச விசாரணை தேவை என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். ஆனால் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், அமெரிக்க மற்றும் சர்வதேச உதவிகள் எதுவும் ஹைத்திக்கு கிடைக்காமல் செய்துவிடுவேன் என்று ஹிலாரி மிரட்டினார்.

அதற்குப்பிறகு வேறுவழியின்றி அவரை அதிபராக ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஹைத்திக்கு ஏற்பட்டது. அவருடைய காலகட்டத்தில் ஜனநாயகம் ஒடுக்கப்பட்டது; வேறெந்த தேர்தல்களும் நடத்தப்படவில்லை.

பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள் கடத்தல் போன்றவை அதிகரித்தன. மார்தெல்லியும் அவரது நண்பர்களும் போதைப்பொருள் கடத்தல் மன்னர்களாகத் திகழ்ந்தனர்.

புயல் தாக்கி ஐந்தாண்டுகளாகியும், அது ஏற்படுத்திய அழிவிலிருந்து ஹைத்தி இன்னமும் மீண்டுவரமுடியாமல் தவிக்கிறது. அவ்வப்போது அம்மக்கள் ஹைத்தியிலிருந்து தப்பித்து டொமினிக் குடியரசு நாட்டிற்கு அகதியாகப் போவதும், மீண்டும் திருப்பியனுப்பப்படுவதுமாக இருக்கிறார்கள்.

ஹைத்தியின் இன்றைய நெருக்கடியான சூழலில் அதிகளவில் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஹைத்தியின் இந்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, அந்நாட்டின் சட்டங்களை மாற்றி அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரியும் ஏழைத் தொழிலாளர்களின் கூலியுயர்வு கோரிக்கையினை ஒடுக்க தன்னுடைய அதிகாரத்தினை ஹிலாரி பயன்படுத்தினார்.

குறைந்தபட்ச கூலியினை உயர்த்தும் போராட்டத்திற்கு எதிராக ஹேனஸ், லெவி மற்றும் புரூட் ஆஃப் தி லூம் உள்ளிட்ட அமெரிக்க ஒப்பந்ததார நிறுவனங்களோடு ஹிலாரி கைகோர்த்த உண்மையினை விக்கிலீக்ஸ் வெளியிட்ட மின்னஞ்சல்களின் மூலம் நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.

6. உலக அமைதிக்கு எதிரானவராக…

ஹிலாரி எப்போதும் உலக அமைதிக்கு எதிரானவர் என்பதை அவரது கடந்தகால நிலைப்பாடுகளே நமக்கு உணர்த்திவிடுகிறது.

அமெரிக்காவின் அயல்துறை அமைச்சராக அவர் இருந்தபோது, அமெரிக்காவின் ஆயுதவியாபாரம் உச்சத்தைத் தொட்டது. 2011இல் மட்டும் 66.3 பில்லியன் டாலர் அளவிற்கு ஆயுதங்களை அமெரிக்கா விற்றிருக்கிறது. அதில் பெரும்பாலானவை வளைகுடா நாடுகளுக்குத்தான் விற்கப்பட்டிருக்கின்றன.

ஈராக்கைப்போல ஆப்கானிஸ்தானையும் கடுமையாக தாக்கி அவர்கள் மீண்டெழமுடியாத அளவிற்கு அழிப்பதற்கான திட்டங்களைத் தீட்டினார் ஹிலாரி.

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 40000 அமெரிக்கப் படையினரை அனுப்புமாறு, ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க இராணுவ அதிகாரியான ஸ்டான்லி மெக்கிரிஸ்டல் ஒபாமாவிடம் 2009 ஆம் ஆண்டு மத்தியில் கோரிக்கைவிடுத்தார். துணையதிபரான ஜோ பிடன் உள்ளிட்ட பல தலைவர்களும் உயரதிகாரிகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஏற்கனவே நெடுங்காலம் தொடர்ந்து நடந்த பல போர்களால் ஆட்சியாளர்கள் மீது அமெரிக்க மக்கள் கோபமாக இருப்பதாகவும், அதனால் மீண்டுமொரு நீண்ட போரினை நடத்தினால் மக்கள் நம்பிக்கையிழந்தே போவார்கள் என்றும் ஒபாமாவிடம் வலியுறுத்தினர். ஆனால் ஹிலாரி மட்டும் மெக் கிரிஸ்டலுக்கு ஆதரவாகவே இருந்தார்.

பாகிஸ்தானிலும் ஏமனிலும் தொடர்ந்து நடத்தப்படுகிற ஆளில்லா ஏவுகணைத் தாக்குதலை ஹிலாரி தொடர்ந்து ஆதரித்து வருகிறார். அதன்மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பது குறித்தெல்லாம் ஹிலாரி என்றுமே கவலைப்பட்டதில்லை.

ஹிலாரி கிளிண்டனின் பல்லாயிரக்கணக்கான மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. எத்தனை நாடுகளில் ஹிலாரி குழப்பம் விளைவித்தார், அல்கொய்தா-ஐஸ்ஐஎஸ் உள்ளிட்ட எத்தனை தீவிரவாத அமைப்புகளுக்கு அவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவினார் என்கிற விவரங்கள் அனைத்தும் அவருடைய மின்னஞ்சல்கள் மூலமாக நமக்குக் கிடைத்தன.

இதுகுறித்து விவாதிக்க ஒரு மறைமுகக் கூட்டத்தை நடத்தினார் ஹிலாரி. அதில் அவர் கேட்ட கேள்வி இதுதான்…

“ஜூலியன் அசாஞ்சேவை ஏவுகணை வீசிக்கொல்ல முடியாதா?”

ஹிலாரிக்கு ஆலோசனை வழங்கிவரும் ஆலோசகரான ஹரோல்ட் கோ என்பவர்,

“எந்த வழக்கும் போடாமலே மக்களை சிறைவைக்கும் உரிமை மட்டுமல்ல, தேவைப்பட்டால் உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள மக்களையும் ஆளில்லா ஏவுகணைகளை வீசிக்கொல்லும் உரிமையும் அரசுக்கும் உண்டு”

என்றார்.

2012இல் சிஐஏ வின் இயக்குனரான டேவிட் பெத்ராசுடன் இணைந்து சிரியாவில் ஒரு நிழல் இராணுவத்திற்கு பயிற்சிவழங்கும் திட்டத்தை அமெரிக்க அரசு முன்பு வைத்தார். அதே டேவிட்தான் முன்னொரு காலத்தில் ஈராக்கிலும் ஆப்கானிலும் அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி பல தீவிரவாத குழுக்களுக்கு பயிற்சியளிக்க உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்ற பணியினைத்தான் சிரியாவிலும் செய்வதற்கு ஹிலாரியுடன் கைகோர்த்தார்.

ஹிலாரியும் டேவிட்டும் இணைந்து சிரியாவில் இயங்கிவரும் தீவிரவாதக் குழுக்களுக்கு பணம், ஆயுதம், பயிற்சி போன்ற அனைத்துவிதமான உதவிகளையும் அமெரிக்கா செய்யவேண்டுமென்று தொடர் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டனர். ஹிலாரியே முன்னின்று இப்பணிகளை நடத்தியதில் அமெரிக்காவின் அதிதீவிர வலதுசாரிகளே மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்.

ஆனால் ஈராக், ஆப்கான் மற்றும் லிபிய போர்களினால் அமெரிக்காவிற்கு சர்வதேச அரங்கில் நல்லபெயர் இல்லை என்பதால், மற்றொரு நேரடிப்போரை துவங்கும் ஹிலாரியின் திட்டத்திற்கு வெள்ளை மாளிகையில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால், அதிபராக அதிக அதிகாரம் கிடைப்பதற்காகக் காத்திருக்கிறார் ஹிலாரி.

அயல்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்திலும், தன்னால் இயன்றவரை பல நாடுகளின் பிரச்சனைகளை ஊதிப்பெருதாக்கினார் ஹிலாரி. வட-தென் கொரிய நாடுகளுக்கு இடையிலான போர் துவங்கி 60 ஆண்டுகளை நினைவுகூறும் விழாவுக்கு 2010 ஆம் ஜூலை மாதத்தில் ஹிலாரி கொரியாவுக்கு பயணமானார்.

அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி போர் நிறுத்தம் குறித்தும், இருநாடுகளுக்கும் அமைதிவரவேண்டிய அவசியம் குறித்தும் பேசியிருந்திருக்கலாம். ஆனால், அமெரிக்காவின் இராணுவப்படைகள் இருப்பதால்தான் இன்று சாதகமான சூழல் நிலவுவதாக சொன்னார் ஹிலாரி. அமெரிக்க இராணுவத்தால்தான் வட-தென் கொரிய நாடுகளுக்கு இடையில் எப்போதும் பதட்டமான சூழல் இருக்கிறது என்பதை தென்கொரிய மக்கள்கூட ஒப்புக்கொள்ளும் நிலையில், ஹிலாரியின் பேச்சு மேலும் பதட்டத்தைத் தான் அதிகரித்தது.

தான் அதிபராக இருந்தகாலகட்டத்தில் நிகழ்த்திய இரண்டு மிகப்பெரிய சாதனையாக ஈரானுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தையும், கியூபாவுடன் பேச்சுவார்த்தையைத் துவங்கியதையும் ஒபாமா பெருமையோடு சொல்லிவருகிறார். இவ்விரண்டையும் எதிர்த்தவர் ஹிலாரி.

ஈரானுடனும் கியூபாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார். அதனால்தான் அவர் அயல்துறை அமைச்சராக இருந்தவரை, அப்பேச்சுவார்த்தைகளோ ஒப்பந்தங்களோ ஓர் அங்குலம்கூட நகரவில்லை.

அயல்துறை அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலகியபின்னர்தான், இரண்டு ஒப்பந்தங்களும் நிறைவேறின.

தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபின்னர், ஈரான் ஒப்பந்தம் மீண்டும் சரிபார்க்கப்படும் என்றும் அது இரத்து செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் ஹிலாரி தற்போது தெரிவித்திருக்கிறார்.

“இவ்வொப்பந்ததின்படி ஈரான் நம்முடைய நட்பு நாடாக இருப்பதற்கு வாய்ப்பில்லை”

“நான் வெள்ளை மாளிகையில் இருந்தால் அது நடக்காது”

செனட்டராக ஜார்ஜ் புஷ் துவங்கிய ஈராக் போரை ஆதரித்தார்; ஆப்கானிஸ்தான் போரை ஆதரித்தார்; அயல்துறை அமைச்சராக லிபியாவில் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கினார்; ஈராக் மற்றும் சிரியாவில் இயங்கும் தீவிரவாதக் குழுக்களுக்கும் ஆயுதங்கள் வழங்கவேண்டுமென்று ஒபாமாவை நிர்பந்தித்தார்; உலகெங்கிலும் பல்வேறு நாடுகளிலுள்ள சர்வாதிகாரிகளோடு நட்புறவை ஏற்படுத்திக்கொண்டார். இவையனைத்தும் அமைதியை விரும்பாத ஒரு போர்வெறியராக மட்டும்தான் ஹிலாரியை நமக்கு அடையாளம் காட்டுகின்றன.

(தொடரும்…)

-இ.பா.சிந்தன்

Related Posts