அரசியல்

பெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 1

(திவெரல்ட்மோர்கன் என்கிற பெல்ஜியப் பத்திரிக்கையில் டச்சு மொழியில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்)

இன்னும் சில நாட்களில் அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறப்போகிறது.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக்கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்பும் களத்தில் இருக்கின்றனர். அவர்களில் இனவெறிபிடித்த பாசிச டொனால்ட் டிரம்ப் குறித்து நாம் அதிகம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. அவருடைய பேச்சுக்களும் விவாத உரைகளுமே நமக்கு அவரை அடையாளம் காட்டிவிடுகின்றன. அமெரிக்க வரலாற்றின் முதல் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகவும், பெண்ணியவாதியாகவும் ஒட்டுமொத்த ஊடகங்களும் உயர்த்திப்பிடிக்கும் ஹிலாரி குறித்து அறியமுற்படுவோம்.

ஹிலாரி வெற்றிபெற்றால், அவர்தான் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராவார். அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் உள்கட்சித் தேர்தலின்போதும், தற்போது அதிபர் தேர்தலின்போதும், தன்னையொரு பெண்ணியவாதியாக சித்தரித்து வாக்கு சேகரித்துவருகின்றார் ஹிலாரி.

பெண் என்பதால் மட்டுமே ஒருவரை பெண்ணியவாதி என்று சொல்லிவிடமுடியாதுதானே? சில கொள்கைகளை உள்ளடக்கிய தத்துவமாயிற்றே அது.

ஹிலாரி உண்மையிலேயே பெண்ணியவாதிதானா? அவர் வெற்றிபெற்று அதிபரானால், அமெரிக்க மற்றும் உலகின் பெண்கள் அனைவரும் அதனைத் தங்களுடைய வெற்றியாகக் கருதி கொண்டாடமுடியுமா? என்கிற கேள்விகளுக்கெல்லாம் நாம் விடைதேடவேண்டியிருக்கிறது.

அமெரிக்க அரசியலில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செனட்டர், அதிபரின் மனைவி, வெளியுறவுத்துறை அமைச்சர், அதிபர் வேட்பாளர் போன்ற பல்வேறு பாத்திரங்களையும் பதவிகளையும் ஹிலாரி வகித்துவந்திருக்கிறார். அதிலெல்லாம் அவர் நடந்துகொண்டவிதம், அவருடைய கொள்கைகள், பேச்சுகள், நடவடிக்கைகள், தொடர்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வுக்குட்படுத்தினாலே, அவர் தன்மீது உருவாக்கியிருக்கிற பெண்ணிய பிம்பம் உண்மையா பொய்யா என்பது விளங்கிவிடும். அதனைச் செய்ய முயற்சிக்கும் கட்டுரைதான் இது.

1. வால்மார்ட்டின் நிர்வாக இயக்குனராக…

1986 முதல் 1992வரை வால்மார்ட்டின் நிர்வாகக்குழுவில் ஒரு இயக்குனராக இருந்திருக்கிறார் ஹிலாரி. அதற்காக வருடத்திற்கு 18000 டாலர் ஊதியத்தையும், பங்குபெறும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் 1500 டாலர் போனசையும், 1,00,000 டாலர் மதிப்பிலான வால்மார்ட்டின் பங்குகளையும் ஹிலாரி பெற்றிருக்கிறார்.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக, அப்போதிலிருந்து இன்றுவரையிலும் வால்மார்ட் நிறுவனத்திடமிருந்து ஒரு மில்லியன் டாலர் முதல் இரண்டு மில்லியன் டாலர் வரை தன்னுடைய கிளிண்டன் பவுண்டேசனுக்கு நன்கொடையாக பெற்றிருக்கிறார்.

ஹிலாரியின் பிரச்சார செலவுக்காக மிகச்சமீபத்தில் 3,53,000 டாலரை வால்மார்ட் நிறுவனம் வழங்கியிருக்கிறது.

இவ்வளவு ஆண்டுகளாக ஹிலாரிக்கு வால்மார்ட் வழங்கிவந்திருக்கும் பணத்திற்கு நன்றிக்கடனாக வால்மார்ட்டின் அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் பாராட்டியும் வந்திருக்கிறார் ஹிலாரி.

அமெரிக்காவின் அயல்துறை அமைச்சராக ஹிலாரி இருந்தபோது, இந்தியாவிற்குள் வால்மார்ட்டை அனுமதிக்கவைப்பதற்காக, இந்திய அரசை தன்னாலானவரை நிர்பந்தித்தார். தென்னாப்பிரிக்கப் பயணத்தின்போது, வால்மார்ட்டின் உயரதிகாரிகளையும் தன்னுடனே அழைத்துச்சென்று, அந்நாட்டில் வால்மார்ட்டை விரிவுபடுத்துவதற்கு உதவினார்.

வால்மார்ட்டில் பணிபுரியும் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் பெண்கள். மிகக்குறைந்த ஊதியம், அதிலும் ஆண்களைவிடக் குறைவான ஊதியம், சங்கம் அமைக்கும் உரிமை மறுப்பு, பாலினப் பாகுபாடு போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகளை அவர்கள் அனுதினமும் எதிர்கொண்டுவருகின்றனர். வால்மார்ட் நிறுவனத்தால் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக அத்தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் ஹிலாரியோ தனக்குக் கிடைத்துக்கொண்டிருக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு, வால்மார்ட் முதலாளிகளின் பக்கமே நின்றுவருகிறார்.

ஹிலாரியோடு வால்மார்ட்டின் நிர்வாகக்குழுவில் பணிபுரிந்த ஜான் டாட்டே என்பவர்தான் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை முன்நின்று நடத்தியவர். ஒரு முறை ஜான்,

“தொழிலாளர்களின் உழைப்பில் உயிர்வாழும் இரத்தம் உறிஞ்சும் ஒட்டுண்ணிகள்தான் தொழிற்சங்கங்கள்”

என்றார்.

ஆனால் தொழிலாளர் விரோத, பெண்ணிய விரோத வால்மார்ட்டின் விதிமுறைகளை எதிர்த்து ஒருபோதும் கேள்வியெழுப்பாமலே இருந்துவந்திருக்கிறார் ஹிலாரி.

“வால்மார்ட்டின் பங்குதாரராகவும் நிர்வாகக்குழு உறுப்பினராகவும், வால்மார்ட்டின் வளர்ச்சியிலும் அந்நிறுவனம் இயங்கும் முறையிலும் நான் எப்போதும் பெருமைப்படுகிறேன்.”

என்றார் ஹிலாரி.

உலகிலேயே மிகப்பெரிய எண்ணிக்கையில் (15 இலட்சம்) பெண்களை பணிக்கமர்த்தியிருக்கும் தனியார் நிறுவனமான வால்மார்ட்டில் அனைத்துவித அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டுவருகிறது. அப்படிப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகக்குழுவிலேயே இருந்துகொண்டு அதற்கெல்லாம் முட்டுக்கொடுத்தும் உயர்த்திப்பிடித்தும் வருகிறார் ஹிலாரி.

2. ஆசிரியர்களுக்கு எதிராக…

ஹிலாரியின் கணவரான பில் கிளிண்டன் அர்கன்சஸ் மாநிலத்தின் கவர்னராக இருந்தபோது, “அர்கன்சசில் ஏழைகள் வாழும் மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு குறைவான நிதியும், வசதியானவர்கள் வாழும் மாவட்டங்களுக்கு அதிகமான நிதியும் ஒதுக்கிவருவது ஏன்?” என்கிற கேள்வியினை அமெரிக்க நீதிமன்றம் எழுப்பியது.

பாகுபாடு மிகுந்ததான இம்முறையை கவர்னரே தலையிட்டு சரிசெய்யவேண்டுமென்றும் நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது.

ஹிலாரியின் தலைமையில் ஒரு குழுவினை அமைத்து இதுகுறித்து ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பில் கிளிண்டன் உத்தரவிட்டார். ஹிலாரியின் ஆய்வுக்குழு ஒரு நீண்ட பட்டியலைக் கொண்ட பரிந்துரைகளை அறிக்கையாக சமர்ப்பித்தது. அப்பரிந்துரைகளே இன்று “கார்ப்பரேட் கல்விச் சீர்திருத்தம்” என்று அழைக்கப்படுகிறது. அச்சீர்திருத்தங்கள் ஏறத்தாழ நாடுமுழுமைக்குமேயான சட்டங்களாக மாறிவிட்டன.

ஏழை மாவட்டங்களுக்கு நிதியினை அதிகப்படுத்தி மாநிலத்தின் நிதியினை செலவிட ஹிலாரிக்கு விருப்பமில்லை. அரசின் பணத்தை அதிகமாக செலவிட்டால், மக்களின் ஆதரவினை பில் கிளிண்டன் இழந்துவிடுவாரோ என்று அஞ்சினார் ஹிலாரி.

அதனால் பிரச்சனையின் வேரை மறைத்து, திசைதிருப்ப ஆரம்பித்தார். கல்விக்கான நிதிப்பற்றாக்குறையிலும் உள்கட்டமைப்பு வசதியின்மையிலும் கவனம் செலுத்தாமல், அப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கடுமையான தேர்வுகளை நடத்தி வடிகட்டினாலே எல்லாப்பிரச்சனைகளும் தீரும் என்றார் ஹிலாரி.

பில் கிளிண்டனும் ஹிலாரியும் நல்லவர்களாக மக்களுக்குத் தெரியவேண்டுமென்றால், இப்பிரச்சனையில் நிச்சயமாக ஒரு வில்லன் தேவை என்பதில் குறியாக இருந்தார் ஹிலாரி. அதனால் அவருடைய திட்டத்தில் ஆசிரியர்கள் வில்லன்களாக்கப்பட்டனர்.

ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக தேர்வுகள் வைத்தாலே, கல்விமுறை மேம்பட்டுவிடும் என்றார். கல்விச்சீர்திருத்தம் குறித்து தொடர்ந்து பல மேடைகளில் இதையே வலியுறுத்தத் தொடங்கினார்.

ஆனால், அமெரிக்காவிலேயே அர்கன்சசில் பணிபுரிந்த ஆசிரியர்கள்தான் உண்மையிலேயே மிகக்குறைவான ஊதியத்தைப் பெற்றுவந்தனர். அதன்காரணமாக, பெரும்பாலான ஆசிரியர்கள் வருமைக்கோட்டுக்குக் கீழே வாழ்ந்துவந்தவர்களின் பட்டியலில்தான் இருந்தனர். அப்படியான ஒரு சூழலில், தொடர்ச்சியான தேர்வுகள் வைப்பதென்பது, அவர்களை மேலும் வாட்டிவதைப்பதாகும் என்று பல மனிதவுரிமை இயக்கங்களும் தொழிற்சங்கங்களும் எச்சரித்தன.

ஹிலாரி அதற்கெல்லாம் செவிமடுக்கவில்லை. அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஏழை ஆசிரியர்களை தொடர்ந்து தாக்கிப் பேசிக்கொண்டே இருந்தார்.

தரமான கல்விக்குத் தேவையானவற்றை வழங்குவது குறித்து ஆய்வுசெய்யாமல், மாணவர்களையும் ஆசிரியர்களையும் குதிரைப்பந்தயத்தில் ஓடும் குதிரைகளாக மட்டுமே பார்த்த ஹிலாரியின் பார்வை இன்று அமெரிக்கா முழுமைக்குமாக மாறிவிட்டிருக்கிறது. அதுவே இன்று “காசிருந்தால்தான் கல்வி” என்கிற வியாபார நிலைக்கும் கல்வியைக் கொண்டுசேர்த்திருக்கிறது. இந்நிலையை அடைவதற்கு, ஏழை கருப்பின பெண் ஆசிரியர்களின் வாழ்க்கையை ஹிலாரி பலிகொடுத்தார்.

3. கருப்பின மக்களுக்கு எதிராக…

அமெரிக்க வரலாற்றிலேயே கருப்பின மக்களின் வேலையின்மை சதவிகிதம் 1990களில் தான் அதிகரித்துக்கொண்டிருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்த காரணத்தினால், சிறிய திருட்டுகள் உள்ளிட்ட குற்றங்களும் அதிகரித்தன.

குற்றங்களின் மூலகாரணம் அனைவரும் அறிந்ததே என்றாலும், அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் அதனைக் கண்டுகொள்ளாமல், குற்றங்களைத் தடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார். தண்டனைகளை அதிகப்படுத்தினாலே எல்லா குற்றங்களும் குறைந்துவிடும் என்றார். பசிக்குத் திருடியவனுக்கும் கடுமையான தண்டனைகளை வழங்கும் பலவற்றை உள்ளடக்கிய “கிரைம் பில் 1994” என்ற பெயரில் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

இப்புதிய சட்டங்களினால், மக்களின் வரியும் 1% வரை உயர்ந்தது. அப்படியாகக் கிடைத்த மக்கள் பணத்தில், 1,00,000 புதிய காவலர்களை நியமிப்பது என்றும், 9000000000 டாலர் செலவில் புதிய சிறைகள் கட்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. மரணதண்டனை வழங்குவதற்கான குற்றப்பட்டியலில் பல்வேறு சிறிய குற்றங்களையும் இணைக்கவேண்டும் என்றும் பில் கிளிண்டன் பரிந்துரைத்தார்.

இவையெல்லாமுமாக சேர்ந்து, சிறைக்கு செல்லும் வேலையில்லாத ஏழை கருப்பின மக்களின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்தது.

சிறிய குற்றங்களுக்காக பெரிய தண்டனைகள் வழங்குவதோடு நிறுத்திக்கொள்ளாமல், சிறையிலிருந்து வெளியேவரும் முன்னாள் குற்றவாளிகளை சமூகத்திலிருந்து விலக்கிவைக்கும் வேலையையும் புதிய சட்டங்கள் செய்தன. அதனால் இலட்சக்கணக்கான மக்களை, தொடர்ந்து வறுமையிலேயே இருக்கவைத்தன அச்சட்டங்கள்.

முன்னாள் குற்றவாளிகளுக்கு வீடு உள்ளிட்ட பல அரசு உதவிகள் மறுக்கப்பட்டன. ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவர் எப்படிப்பட்ட சிறுகுற்றத்திற்காக சிறைசென்று வந்திருந்தாலும், அக்குடும்பத்துக்கே வீடு வாடகைக்குவிடக்கூடாது என்றும் சொல்லப்பட்டது.

சிறையிலிருந்து திருந்தி வெளியேவரும் ஒருவருக்கு, பணமிருக்காது; வேலை இருக்காது; வேலை கிடைக்கவும் கிடைக்காது; தங்குவதற்கு இடமும் இருக்காது; உறவினர்களே கூட சேர்த்துக்கொள்ள முடியாத சூழல். அதனால் அவர்கள் மீண்டும் குற்றங்களை செய்வதற்குத்தான் அச்சட்டங்கள் தூண்டின.

பில் கிளிண்டனின் அதிபர் காலம் முடிவுறும் நேரத்தில், உழைக்கும் வயதில் இருந்த கருப்பின மக்களின் எண்ணிக்கையில் 50%த்திற்கும் மேற்பட்டோர் மீது குற்றப்பதிவேடுகள் இருந்தன. அவர்களின் எதிர்கால வாழ்க்கையே அது கேள்விக்குறியாகியது.

பில் கிளிண்டனின் தவறுக்கெல்லாம் ஹிலாரியை எப்படி குற்றஞ்ச்சாட்ட முடியும் என்கிற கேள்வி சிலருக்கு எழலாம்.

பொதுவாக அமெரிக்க அதிபரின் இணையராக இருப்பவர் அரசியல் தலையீடுகள் ஏதும் செய்வதில்லை. ஆனால் ஹிலாரி அதில் மாறுபட்டிருந்தார். “கிரைம் பில்” சட்டங்களை ஹிலாரி ஆதரித்ததோடு மட்டுமில்லாமல், அச்சட்டங்களை உருவாக்குவதிலும் முக்கியப்பங்காற்றினார். கிரைம் பில் சட்டங்களை ஆதரித்து தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

தனக்கான எதிரியை முடிவுசெய்துகொண்டே எந்தப் பிரச்சாரத்தையும் செய்யும் பழக்கமுடையவர் ஹிலார் என்பதால், இம்முறை கருப்பினக் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்தார். கருப்பினச் சிறுவர்களை “மிருகங்களுக்கு ஒப்பானவர்கள்” என்று மறைமுகமாகச் சொன்னார் ஹிலாரி.

“அவர்கள் சிறுவர்கள் அல்ல. கொடும் விலங்குகள். மனசாட்சி இல்லாதவர்கள். அவர்கள் ஏன் இவ்வாறு ஆனார்கள் என்பதைப் பிறகு பேசிக்கொள்ளலாம். அதற்கு முன்பாக அவர்களை மண்டியிடவைக்க வேண்டும்”

வேலையின்மையால் அதிகரித்த குற்றங்களை தடுப்பதற்காக கிளிண்டன்-ஹிலாரி ஆகியோரால் உருவாக்கப்பட்ட சட்டங்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை கருப்பின மக்கள்தான். ஆனால் அச்சட்டங்களால் பயனடைந்தவர்கள் யார் தெரியுமா? புதிதாக உருவான கார்ப்பரேட் தனியார் சிறை முதலாளிகள். இதற்காகவே ஏராளமான தனியார் சிறைகள் உருவாக்கப்பட்டன. மக்களின் வரிப்பணத்தில் மக்களையே சிறைக்குள் தள்ளி அதிலிருந்து காசு பார்க்கும் திட்டம்தான் அது. இன்று உலகிலேயே அதிகளவிலான கைதிகள் உள்ள நாடு எது தெரியுமா? அமெரிக்காதான். உலகின் ஒட்டுமொத்த கைதிகளின் எண்ணிக்கையில் 25% கைதிகள் அமெரிக்க சிறைகளில்தான் இருக்கின்றனர்.

4. பாலஸ்தீனப் பிரச்சனையில் ஒருதலைப்பட்சமாக…

மத்திய கிழக்கில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் பாலஸ்தீனப் பிரச்சனை இருந்துவருகிறது. புதிதாக ஒரு நாடு உருவாகி அதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவேண்டுமென்றால், அதற்கு ஐநா சபையின் பாதுகாப்புக் கவுன்சிலின் ஒப்புதல் வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் பாலஸ்தீனம் அமைக்கும் திட்டத்தினை ஐநா சபையில் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா முறியடித்துவிடுகிறது.

மத்திய கிழக்கைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி இஸ்ரேல்தான். அதனாலேயே பாலஸ்தீனர்களின் அனைத்துவித அடிப்படை உரிமைகளையும் புறக்கணிப்பதற்கு அமெரிக்கா உதவி வருகிறது.

நடுநிலையாளர் பட்டம் தேவைப்படுவதாலேயே, இஸ்ரேலுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் பெரும்பாலான அமெரிக்க அதிபர்கள், அதனை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். தற்போதைய அமெரிக்க அதிபரான ஒபாமாவும் அப்படியானவர்தான். ஆனால், ஹிலாரி அப்படிப்பட்ட நடுநிலை வேடம்கூட போடத்தயாராக இல்லாதவர். இஸ்ரேலின் எல்லா நடவடிக்கைகளையும், அட்டூழியங்களையும், திட்டங்களையும் வெளிப்படையாக ஆதரிப்பவர்.

“இஸ்ரேலிய-அமெரிக்க பொதுவிவகார கூட்டமைப்பு – (ஐபாக்)” என்கிற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாநாட்டினை நடத்தி வருகிறது. அம்மாநாட்டில் கலந்துகொள்ளாத அமெரிக்க வேட்பாளர்களோ அதிபர்களோ இல்லை என்றே சொல்லலாம் (முதன்முறையாக அதில் கலந்துகொள்ள மறுத்தவர் பெர்னி சாண்டர்ஸ்தான்).

சமீபத்தில் நடந்த ஐபாக் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஹிலாரி,

“இஸ்ரேலுக்கு அதிநவீன இராணுவ பாதுகாப்பு உபகரணங்களை அமெரிக்கா தொடர்ந்து வழங்கும்”

என்று உறுதியளித்தார்.

தான் அதிபரானால், இஸ்ரேலிய பிரதமரைத்தான் முதலில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அழைப்பேன் என்று சொன்னார் ஹிலாரி.

இஸ்ரேலைக் கண்டித்து பொருளாதாரப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவதற்காக உலகின் பல முற்போக்காளர்கள் இணைந்து உருவாக்கிய இயக்கம்தான் “பிடிஎஸ் – BDS”. இவ்வியக்கத்தின் வெற்றி, இஸ்ரேலை கவலையுறவைத்திருக்கிறது. அதனால் அவ்வியக்கத்தை எதிர்க்க இஸ்ரேலுடன் தான் எப்போதும் கைகோர்த்திருப்பதாக ஹிலாரி தெரிவித்திருக்கிறார்.

“கடந்த வருடம் அமெரிக்க யூத அமைப்புகளுக்கு நான் எழுதிய கடிதங்களின்படி, பிடிஎஸ் இயக்கத்தை எதிர்க்க நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும்”

“அமெரிக்க அதிபரானபின்னர், இஸ்ரேலின் இராணுவம் சிறந்த இராணுவமாகத் திகழ நான் எல்லாவித உதவிகளையும் செய்வேன்”

“எங்களுடைய இராணுவத்திற்கு நவீன ஏவுகணைப் பாதுகாப்பு முறையினை உருவாக்குவதற்கு நீங்கள் (இஸ்ரேல்) செய்த உதவிக்கு நன்றி. இதன்மூலம் ஈரானுக்கு கடுமையான நெருக்கடியினை கொடுக்கமுடியும்”

“அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெப்போதையும்விட நெருக்கமான உறவினைப்பேணவேண்டும். அதன்மூலம் நம்முடைய பொது எதிரிகளை எதிர்க்கமுடியும்”

பாலஸ்தீனர்களின் நியாயமான கோரிக்கைகளையும், இலட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கைப்போராட்டங்களையும் ஹிலாரி எப்போதும் கண்டுகொள்ளவேயில்லை.

இன்னும் ஒருபடி மேலேசென்று, 2013இல் காசாவில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை (பெரும்பாலும் பெண்களும், குழந்தைதளும்) இஸ்ரேல் கொன்றுகுவித்தபோது, அதனை வெகுவாகப் பாராட்டினார் ஹிலாரி.

“நான் அமெரிக்காவின் அதிபரானால், அமெரிக்கா உங்களோடு இருக்கிறதா இல்லையா என்று நீங்கள் ஒருபோதும் சந்தேகப்படவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், அமெரிக்கா எப்போதும் உங்களோடுதான்…”

என்றார் ஹிலாரி.

(தொடரும்…)

-இ.பா.சிந்தன்

Related Posts