பிற

உயர்கல்வி நிறுவனங்கள் மீதான தொடர் தாக்குதல்களை தொடுத்து வரும் பி.ஜெ.பி அரசு . . . . . . . . . . . . . !

இந்தியாவில் செயல்பட்டு வரும் சுமார் 800 பல்கலைகழகங்களையும், 40,000 கல்லூரிகளையும் வழிகாட்டும் அமைப்பாக பல்கலைகழக மானிய குழு (UGC) கடந்த 62 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் செயல்பாடுகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பினும், அரசின் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வந்துள்ளது. 2014-ம் ஆண்டு பதவியேற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வழிகாட்டும், மோடி தலைமையிலான பி.ஜெ.பி அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மீது தொடர் தாக்குதல்களை தொடுத்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையம் (CSIR), புனே திரைப்பட கல்லூரி, ஜவர்கர்லால் நேரு பல்கலைகழகம், ஹைதரபாத் மத்திய பல்கலைகழகம் என நீளும் இப்பட்டியலில் தற்போது UGC-யும் இணைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்பான விஞ்ஞன பாரதி போன்ற அமைப்புகள் உயர்கல்வி நிற்வங்களை ஆக்கிரமிக்க துவங்கி விட்டன. அதிதீவிர தேச பக்தியை இளைஞர்களிடம் பரப்ப தேசிய இளைஞர் அதிகாரமளித்தல் திட்டமும் (N-YES) மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

UGC மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) அமைப்புகளை கலைத்து விட்டு இந்திய உயர்கல்வி குழு(HIGHER EDUCATION COUNCIL OF INDIA – HECI )-வை உருவாக்க மத்திய அரசு மசோதா தாக்கல் செய்ய உள்ளது. HECI-ன் முகவுரையில் `அனைவருக்கும் சமமான அணுக முடிந்த கல்வி வழங்குதல்` என்பது கூறப்பட்டுள்ளது. UGC அமைப்பை மாற்றி அமைக்க முன்னரும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோத்தாடி கமிஷன் (1964-66), தேசிய கல்வி கொள்கை(NEP) (1992), தேசிய அறிவுசார் கொள்கை (NKC) (2007), யாஷ்பால் கமிஷன் (2009)ஆகியன பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளன. அவற்றில் முக்கியமாக UGC அமைப்பின் தலைவராக செயல்பட்ட யாஷ்பால் குழு விவசாயம், மருத்துவம் தவிர்த்து மற்ற உயர்கல்வி நிலையங்களை வழிகாட்ட `உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கமிசன்` (NCHER) அமைப்பை உருவாக்க பரிந்துரை வழங்கியது. இதில் உயர்கல்வி நிறுவங்கள் ஜனநாயகப் பூர்வமாக செயல்படவும், தன்னாட்சி உரிமைகளை நிலை நாட்டவும் அரசியல் தலையீட்டை தவிர்க்கவும் வழிவகைகளை வழங்கியிருந்தது. UGC அமைப்பு இந்த அறிக்கை மீது பல்வேறு விமர்சனகளை தெரிவித்த்து. ஆனால், அவை சரி செய்ய முடிந்த விமர்சங்களாகவே இருந்தன. தொடர்ந்து 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இக்குழுவின் அறிக்கையை மத்திய அரசு கைவிட்டது.

தற்போதைய உயர்கல்வியின் நிலை:

இந்தியாவில் உயர்கல்வி வழங்கும் முக்கிய நிறுவங்களாக இந்திய தொழில் நுட்ப கல்லூரிகள் (IIT) உள்ளன. தற்போது செயல்படும் 23 IIT க்களில் 6 IIT-க்கள் 2015-16 கல்வி ஆண்டில் செயல்பாட்டிற்கு வந்தவை. இவற்றிற்க்கு இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் முக்கிய முடிவுகள் எடுக்கும் இயக்குநர் குழு (Board of Governors)  இன்னும் நியமிக்கப் படவில்லை. இந்த புதிய IIT-க்களிலும் போதிய ஆசிரியர் நியமனங்கள் இல்லை. அவை செயல்பட தேவையான நிதியும் ஒடுக்கப்பட வில்லை. இவை செயல்பட தேவையான நிதியை தாங்களே உருவாக்கி கொள்ளவோ அல்லது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், கனரா வங்கியும் இணைந்து நடத்தும் அமைப்பான `உயர்கல்வி நிதி முகமை`(Higher Education Financing Agency)யிடம் கடனாகவோ பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், ஆசிரியர் பற்றாகுறையை தீர்க்க புதிய IIT-க்களுக்கு வழிகாட்டியாக செயல்படும் பழைய IIT-ல் பணிபுரியும் பேராசிரியர்கள் புதிய IIT-களிலும் பணியாற்ற வேண்டும் என்ற நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது.

HIGHER EDUCATION COUNCIL OF INDIA:

புதிதாக உருவாக்கப்படவுள்ள HECI-க்கு ஒரு தலைவர், ஒரு துணை தலைவரை மத்திய அமைச்சரவை செயலாளர், மனித வள மேம்பாட்டுத் துறை செயலாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழு தேர்வு செய்யும். இவர்களோடு `சம்பந்தப்பட்ட துறை அமைச்சக அதிகாரிகள், இரண்டு துணை வேந்தர்கள், ஒரு தொழிலதிபர், இரண்டு பேராசிரியர்கள் என மொத்தம் 14 பேர் இக்குழுவில் இடம் பெறுவர். இரண்டு பேராசிரியர்கள், இரண்டு துணை வேந்தர்கள்(இவர்கள் கட்டாயம் கல்வியாளர்களாக இருக்க வேண்டிய தேவையில்லை) என நான்கு பேர் மட்டுமே அதிகபட்சமாக கல்வியாளர்களாக இருப்பர். இது, இக்குழுவில் அரசின் நேரடி தலையீட்டிற்க்கு முழுமையாக வழிவகுக்கும். அரசோடு கருத்து வேறுபாடு உள்ளவர்களை குழுவிலிருந்து நீக்கவும் புதிய மசோதாவில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் மேலாக இந்த குழுவிற்கு வழிகாட்டவும், ஆலோசனைகள் கூறவும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தலைமையில் மற்றொரு குழு இயங்கும்.ஆண்டிற்க்கு இரண்டு முறை கூடும் இக்குழுவில் மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்ற போதிலும் அது வெறும் கண்துடைப்பாகவே இருக்கும். இதன் மூலம் HECI அமைப்பு மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டிலேயே இயங்கும். HECI என்னும் அமைப்பு சுயேட்சையாக இயங்கும் என கூறிக் கொண்டே அரசின் கட்டுப்பாட்டில் இயங்குமாறு செய்யும் செயல் கச்சிதமாக நடத்தப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் அல்லாதோரை அதிகமாக கொண்டு செயல்பட இருக்கும் இக்குழு, அதிவிரைவில் கல்வியில் அரசின் பங்களிப்பை முற்றிலுமாக கைவிட்டு, லாபம் ஈட்டும் நோக்கில் செயல்படும் தனியார் வசம் ஒப்படைக்கும் செயலை விரைவாக செய்து முடிக்கும் ஆபத்து உள்ளது. இதனால் சமூக, பொருளாதார சூழலில் பிந்தங்கியிருக்கும் பெரும்பாலானோர் உயர்கல்வி பெறும் வாய்ப்பை இழப்பர்.

2017-ம் ஆண்டு Higher Education Empowerment Regulatory Authority (HEERA) மூலம் UGC, AICTE அமைப்புகளுக்கு பதிலாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது குறித்த ஆவணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இரண்டே மாதங்களில் இத்திட்டம் கைவிடவும் பட்டது. அப்போது பேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் புதிய சட்டத்திற்காக காத்திராமல், பழைய சட்டத்தை புனரமைத்து சிறப்பால செயல்பட வைக்கலாம் என கூறிக் கொண்டு, குறுகிய காலத்தில் UGCயை கலைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

HECI வரைவு திட்டத்தின் மீது பொதுமக்களிடம் கருத்து கேட்ட மத்திய அரசு, அவை எவற்றையும் கணக்கில் கொள்ளாமலும், பாராளுமன்ற நிலைக் குழுவின் முடிவுக்கு காத்திராமலும் UGCயை கலைக்கும் முடிவுக்கு வந்து விட்டது.

உதவித் தொகை:

உயர்கல்வி பயிவோருக்கான உதவித் தொகையானது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் துவங்கி, தற்போதைய அரசால் பெருமளவிற்க்கு குறைக்கப்பட்டே வந்துள்ளது. UGCயால் வழங்கப்படும் உதவித் தொகை (Felloship), நெட் தேர்வரல்லாதோருக்கான (Non-NET scholorship) உதவித் தொகை ஆகியன குறைக்கப்பட்டும், நிறுத்தலாக்கப்படும் நிலைக்கும் வந்துள்ளன. ஆராய்ச்சிக்காக நிதி உதவி கோரி அறிக்கை சமர்பிக்கும் பலருக்கும், ஆராய்ச்சி முடிந்த பின்னரும் நிதி உதவி கிடைக்காத நிலையே உள்ளது. UGC அமைப்பு ஆராய்ச்சி பணிகளுக்கும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நிதி வழங்கும் அமைப்பாக செயல்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.  இச்சூழலில் HECI அமைப்பிற்க்கு நிதி வழங்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. இதனால் மத்திய அரசின் கொள்கைகளை தாங்கிப் பிடிக்கும் கல்வி நிறுவங்களுக்கு மட்டுமே நிதி உதவிகள் வழங்கப்படும் நிலையும் உருவாகும். உதாரணமாக UGC செயல்படும் போதும் கூட IIT-டில்லியில் செயல்படும் ஊரக வளர்ச்சி மையம், பஞ்சகவ்ய(பசு அறிவியல்) ஆராய்ச்சிக்காக மிக எளிதில் நிதி உதவி பெறும் நிலை உள்ளது.

HECI முகவுரையில் கூறப்பட்டுள்ளது போல சமமான தரத்தில் அனைவருக்கும் கல்வி வழங்குவது என்பது இந்தியாவின் சமூக, பொருளாதார, பன்முக தன்மையை கருத்தில் கொண்டால் இயலாத ஒன்றாகும். நமது நாட்டிற்கு அனைவரையும் உள்ளடக்கிய நெகிழ்வுத்தன்மையும், வேற்றுமை தன்மை கொண்டதுமான உயர்கல்வியே அவசியமானதாகும்.

– நீலாம்பரன்.

Related Posts