அரசியல் அறிவியல்

ஹிரோஷிமா – ஃபுக்கூஷிமா…

heroshima

ஹிரோசிமா அணு வெடிப்புக்கு பிறகும், தற்போதும்

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் நாள் ஹிரோஷிமாவில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. ஆகஸ்ட் 9 ஆம் நாள் நாகசாகி அமெரிக்க அணுகுண்டின் தாக்குதலுக்கு உள்ளானது. பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களை பலி கொண்ட ஹிரோஷிமாவின் அணுகுண்டு ’சிறு பையன்’ (Little Boy)  என அமெரிக்கர்களால் செல்லமாக அழைக்கப்பட்டது. நாகசாகியின் குண்டு அமெரிக்கர்களால் ‘கொழுத்த மனிதன்’ என அழைக்கப்பட்டது.

ஹிரோஷிமாவில் வீசப்பட்ட குண்டு 64 கிலோ U235 எனப்படும் யுரேனியம் 235 எனும் யுரேனியத்தின் ஓரகத் தனிமம் (Isotope) கொண்டு செய்யப்படது. 80% செறிவூட்டப்பட்ட யுரேனியம். நாகசாகியில் வீசப்பட்டது PL 239 எனப்படும் புளுட்டோனியம் – 239 எனும் புளுட்டோனியத்தின் ஓரகத் தனிமம் கொண்டு செய்யப்பட்டது. 96% செறிவூட்டப்பட்ட புளுட்டோனியம்.

1945 இல் அணுகுண்டுகள் வீசப்பட்டபோது உலகில் ஒரு அணுமின் உலையும் இல்லை. உலகில் எந்தமூலையிலும் அணு ஆற்றல் மூலம் மின்னுற்பத்தி என்பது ஒரு ஆய்வு உலை உற்பத்தி என்ற அளவில் கூட நடைபெற்றவில்லை.  அணு ஆற்றல் மூலம் மின் உற்பத்தி செய்து மின்திட்டத்தில் செலுத்தும் 5 மெகா வாட் உலை, ஹிரோஷிமா குண்டு வீச்சிற்குப் பிறகு 9 ஆண்டுகள்  கழித்துதான் முதன் முதலாக அன்றைய சோவியத் யூனியனில் இயங்கத் துவங்கியது. அமெரிக்காவில் முதல் அணுமின் நிலையம் 1957 இல் அதாவது ஹிரோஷிமா குண்டு வீசி 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இயங்கத் துவங்கியது.

அணுகுண்டு தயாரிக்க அணுமின் உலைகள் தேவையில்லை. இன்னும் சொன்னால் யுரேனியம் 235 கொண்ட அணு குண்டு தயாரிக்க எந்தவித அணு உலையும் தேவையில்லை. 80% க்கு மேல் செறிவூட்டக் கூடிய செண்ட்ரிஃபியூஜ் தொடர் இருந்தால் போதுமானது.புளுட்டோனிய குண்டு தயாரிக்கவும் அணுமின் உலை தேவையில்லை என்பதைத்தான் ஹிரோஷிமா, நாகசாகி காட்டுகின்றன.

மேலும் அணுகுண்டுகளில் 80% செறியூட்டப்பட்ட யுரேனியம் 235 அல்லது 96% செரிவூட்டப்பட்ட புலுட்டோனியம் தேவை. அணுமின் உலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொருள் 4% செறிவூட்டப்பட்டதுதான். அணுகுண்டு போல வெடிப்பது சாத்தியமில்லை.அணுமின் உலையில் இருந்து வரும் புளுட்டோனியம் அதிக அளவில் புளுட்டோனியம் 240 கொண்டது. இதை இந்த அளவில் வைத்துக் கொண்டு புளுட்டோனிய அணுகுண்டு செய்தால் அது ஜப்பானில் போயல்ல அமெரிக்காவிலேயே வெடித்துவிடும்.அணுகுண்டிற்கான புளுட்டோனியம் அணுமின் உலைகளில் அல்ல அதற்கான பிரத்யேகமான ஆய்வு உலைகளில் தயாரிப்பதுதான் உசிதம்.

அமெரிக்கா முதல் அணுமின் உலையை இயக்கத்திற்கு கொண்டு வருவதற்கு முன்பே உலகை பலமுறை அழிக்கப் போதுமான அணுகுண்டுகளை செய்து குவித்துவிட்டது. சோவியத்தும் அதனைத் தொடர்ந்தது. இன்று உலகில் சுமார் 17,000 அணு குண்டுகள் உள்ளன. இந்தியாவிலேயே சுமார் 100 அணுகுண்டுகள் இருக்கலாம் என கூறப்படுகின்றது. உலகில் 17,000 அணுகுண்டுகள் சுமார் 450 அணு மினுலைகள்; இந்தியாவில் சுமார் 100 அணுகுண்டுகள் 17 அணுமின் உலைகள். இது தவிர அணு உலைகளைக் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் (அணு ஆயுதங்களோடு ) சுமார் 120 உள்ளன.

பேரழிவிற்காக திட்டமிடப்பட்டு, பேரிடர் உருவாக்குவதற்காகவே வடிவமைக்கப்பட்ட அணுகுண்டு மலைகள் மேல் அமர்ந்துகொண்டு சுற்றிலும் அணுகுண்டு தாங்கிய அணு உலை இயக்கும்  நீர்மூழ்கிக் கப்பல்கள் குறுக்கும் நெடுக்குமாய் உலவிக் கொண்டு இருக்க, அணு மின் உலைகளால் ஆபத்து ஆபத்து என்பது சற்று அபத்தமாக இல்லை? குறுக்கும் நெடுக்குமாய் அணுஆற்றல் கப்பல்கள் ஓடிக் கொண்டிருக்கும் கடலின் மீன் வளம், அணுமின் நிலையத்தின் சுடுநீரைக் கொட்டுவதால் இல்லாது போய் மீனவர்கள் வாழ்வாதாராம் பாதிக்கப்படும் என்பது சற்று அபத்தமாக இல்லை??

Related Posts