புத்தகம் பேசுது‍

இதோ அந்த ரோஜா … இப்போது நடனமிடு!

இரா. சிந்தன்

இப்போது எல்லாம் சுலபமாகிவிட்டது. தெரியாத ஊரில் நின்றுகொண்டு ‘ஜஸ்ட் டயல்’ மூலம் ஹோட்டலை தேடுகிறோம். ஆட்டோவில் அமர்ந்தபடி, அவர் சரியான பாதையில்தான் போகிறாரா? என்று ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தில்  பார்த்துக் கொள்கிறோம். வீட்டில் சாவி தொலைந்து போனால் கூகுளில் தேட முடியுமா? என்று கேட்கும் அளவிற்கு தொழில்நுட்பம் நமக்கு வசதிகளைக் கொடுக்கிறது. ஆனாலும், இந்த சூழலில்கூட நாம் எல்லா நேரத்திலும் சரியான தகவல்களால் வழி நடத்தப்படுவதில்லை.

உண்மையை அடையவதற்கு சுலபமான வழிகள் இருந்தாலும், எல்லோரும் அதைக் கண்டுபிடித்து விடுவதில்லை. இந்த சிக்கல் கார்ல் மார்க்ஸ் சிந்தனைகளுக்கும்  பொருந்துகிறது, இதுதான் மார்க்ஸ் எழுதியது என அறிந்துகொள்ள மிக எளிய வழிமுறைகள் வந்த பிறகும் அவர் குறித்த தவறான விளக்கங்கள் எல்லா இடத்திலும் பரவியிருக்கின்றன. மார்க்சின் எதிரிகள் மட்டுமல்லாது, அவரது நண்பர்களில் சிலருமே தவறான விளக்கங்களின் பெட்டிக்குள் மார்க்சை அடைத்துவிடுகின்றனர்.

கார்ல் மார்க்ஸ் ஒரு பொருள்முதல்வாதி. இயக்கவியல் ஆராய்ச்சியின் முன்னோடி. சமூகத்தின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகான  – தனது சிந்தனையையும், தர்க்க விவாத முறைகளையும் தந்து சென்றிருக்கிறார். கார்ல் மார்க்சை புரிந்துகொள்வதில் எழுந்திருக்கும் இன்றைய பிரச்சனைக்கும் –அவர் கொடுத்துச் சென்றுள்ள மார்க்சிய ஆய்வு முறையிலேயே தீர்வைக் காண முடிய வேண்டும். அதைத்தான் பிரான்ஸ் மாரெக்கின் உதவியுடன் எர்னெஸ்ட் பிஷர் செய்திருக்கிறார்.

இப்புத்தகத்திற்கு வரலாற்று குறிப்புகளுடன் விரிவான முன்னுரை அளித்திருக்கும் ஜான் பெலமி போஸ்டரும், அவசியமான பிற்சேர்க்கைகளைக் கொடுத்திருக்கும் பால் எம்.ஸ்வீசி மற்றும் ஜெர்மானிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில் கொடுத்த அன்னா போஸ்டாக் ஆகியோரும் – இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த புத்தகத்தை, எளிய தமிழில் – நாம் புரிந்துகொள்ளும் வகையில் கொடுத்திருக்கும் திருப்பூர் மிலிட்டரி பொன்னுசாமியும் நமது நன்றிக்குரியவர்கள்.

மார்க்சின் கல்லூரிக் கால கட்டுரை தொடங்கி, அவரின் ஆகப்பெரும் படைப்பான மூலதனம் வரையில் உள்வாங்கியிருக்கிறார் எர்னெஸ்ட் பிஷர். ஆஸ்த்ரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான எர்னெஸ்ட் பிஷர். அந்த நாட்டின் கல்வி அமைச்சராக பணியாற்றினார். பின் கட்சி சார்பற்ற மார்க்சிய அறிஞராக தன் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டார். அவர் எழுதிய ‘கலையின் தேவை’ என்ற புத்தகம் இன்றளவும் கலை இலக்கியம் குறித்த மார்க்சிய அணுகுமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.

எர்னெஸ்ட் பிஷர் எழுதிய ‘மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன?” என்ற இந்தப் புத்தகம், மார்க்சியத்தின் முழுமையை எடுத்துறைக்கும் குறிப்பிடத்தகுந்த படைப்பாக விளங்குகிறது.

மார்க்சின் வாழ்நாள் தேடல்:

இளம் வயதிலிருந்தே ‘கார்ல் மார்க்சின்’ தேடல் ஒன்றுதான். அது மனிதன் தனது முழுமையை அடைவதாகும். மார்க்ஸ் தனது காதலிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தின் சில வரிகள்

காதல் – அது ஃபாயர் பர்க்கின் மனிதனுடையதல்ல. மோல்ஸ்கார்ட்டின் – உயிர்த் தத்துவ பரிணாமம் அல்ல – இன்னும் அது பாட்டாளி வர்க்கத்தின் காதலும் அல்ல – மாறாக காதலிக்கப்படுபவளின் காதல் – அதிலும் குறிப்பாக உன்னால் காதலிக்கப்படுவது ஒரு மனிதனை (அதாவது கார்ல் மார்சை) மீண்டும் மனிதனாக்கிவிடுகிறது.

பாயபர்க் தனது கோட்பாடுகளில் சொல்லியிருக்கும் மனிதன், மோல்ஸ்கார்ட்டின் உயிர் தத்துவ பரிணாமம் என்ன தத்துவங்களோடு காதலை ஒப்பிடும் கார்ல் மார்க்ஸ் காதலிக்கப்படும் ஒருத்தியின் காதல் ஒருவனை மனிதனாக்குகிறது. அதுதான் காதலின் உன்னதம் என்கிறார். கடிதத்தின் இந்த வரிகள் காதலியை பரவசப்படுத்துவதற்காக மட்டும் எழுதப்பட்டதல்ல. மாறாக, மார்க்சின் இளமைப் பருவத்திலிருந்து தொடரும் இடைவிடாத தேடலையே அது வெளிப்படுத்துகிறது. அவர் மனிதன் தன் மனிதத் தன்மையை இழப்பதைக் கண்டு வருத்தமடைகிறார்.

மேலும், ஜனநாயகம் குறித்த மார்க்சின் விளக்கம், அவரின் எதிர்பார்ப்பைக் காட்டுக்கிறது.

(உண்மையான)” ஜனநாயகம் மனிதனில் இருந்து தொடங்குகிறது… சட்டத்திற்காக மனிதன் இல்லை. மனிதனுக்காக சட்டம் இருக்கிறது. அது மனித இருப்பின் நீட்சி. அதுதான் (முந்தைய சமுதாயங்களில் இருந்து) ஜனநாயகத்தின் அடிப்படை வேறுபாடு”

உழைப்பு, மனிதனின் தோற்றம் தொட்டே அவனின் மேம்பாட்டுக்கு அடிப்படையாக இருந்தது. அதே உழைப்பு – சரக்கை உற்பத்தி செய்யும் நிகழ்வாக மாறியதும், மனிதன் அதிலிருந்து அந்நியப் படத் தொடங்குகிறான். தனக்கு அவகாசமும், தாக்குப்பிடிக்க கொஞ்சம் செல்வமும் கிடைத்தால் – எந்த மனிதனும் இந்த சமூகத்தை விட்டு ஒதுங்கி, தன்னளவில் வாழவேண்டுமென்றே விரும்புகிறான். ‘எல்லாத்தையும் விட்டுட்டு கொஞ்ச நாள் எங்கயாச்சும் போயிடணும்’ என்ற ஒவ்வொரு மனிதனின் புலம்பலும், மனிதனுக்கான ஒரு சமுதாயத்தை படைப்பதற்கான கனவும், அவரின் சிந்தனைகளின் அடி நாதமாக அமைந்துள்ளன. முதல் 4 அத்தியாயங்கள் இவற்றை விளக்குகின்றன.

‘வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும்’ என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ள அத்தியாயம், புரட்சிகர செயல்பாட்டாளர்களுக்கு அவசியமானதாகும். வர்க்கப் புரட்சிக்காக செயலாற்றுபவர்கள் – வர்க்கங்களை எப்படி வரையறை செய்கிறார்கள், வர்கங்களின் குணாம்சத்தை எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் என்பதில்தான் அவர்களின் வெற்றியே அடங்கியிருக்கிறது. இந்த அத்தியாயம், அதற்கான ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தும்.

மார்க்சுக்கும் அடி சருக்கும்:

‘மனித குல வரலாற்றை’ குறித்து கற்கும் எவரும் சமூக அமைப்புகளை ஒரு வரிசையில் மனப்பாடம் செய்திருப்போம். முதலில் ஆதிப் பொதுவுடைமைச் சமூகம், பின்னர் ஆண்டான் அடிமைச் சமூகம், நிலபிரபுத்துவம் அதன் பிறகு முதலாளித்துவம், இடைக்காலத்தில் சோசலிசம் இறுதியில் கம்யூனிசம். இந்த வரிசை நினைவுக் குறிப்புகளுக்கு ஏதுவாக இருந்தாலும் – கீழ்க்காணும்  ஆபத்துக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பிருக்கிறது. ‘சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் – எப்படியாயினும் நாம் கம்யூனிசத்தை அடைந்துவிடுவோம், வரலாறு அந்தப் போக்கில்தான் செல்கிறது. எனவே, வாருங்கள் வேறு எதாவது வேலை இருந்தால் பார்க்கலாம்.’ ஆம்! எதற்காக மார்க்சை மெனக்கெட்டு வாசிக்கிறீர்கள்?? …

இப்படி, தானாகவே வரலாறு சமூக மாற்றங்களைப் படைக்கிறது என்பது போன்ற எளிமைப்படுத்துதலுக்கும், தவறான புரிதல்களுக்கும் மார்க்சின் சில மேற்கோள்களே காரணமாகிவிடுவதை 6 வது அத்தியாயம் எடுத்துக் காட்டுகிறது. இந்த விளக்கங்கள் சமூகத்தை மாற்றியமைப்பதில், மனிதர்களுக்கும், புரட்சிகர இயக்கத்திற்கும் உள்ள கடைமையை பின்னுக்குத் தள்ளுவதை பிஷர் சுட்டுகிறார். மேலும், கார்ல் மார்க்ஸ் எழுதிய புனிதக் குடும்பம் நூலின் மேற்கோளை எடுத்தாள்வதன் மூலம் ‘வரலாற்று விதிகள் மனிதர்களை இயக்குவதில்லை, மாறாக மனிதர்களின் இயக்கத்திற்கு ஏற்பவே வரலாறு படைக்கப்படுகிறது என்ற’ சரியான மார்க்சிய பார்வையையும் வாசகனிடம் பதியச் செய்கிறார்.

அதே போல, ‘வறுமை அதிகரிப்புப் பிரச்சனை’யைக் குறிப்பிடும் பிஷர், முதலாளித்துவ செல்வக் குவிப்பின் பொது விதியின் காரணமாக இது முன்னுக்கு வருவதை மார்க்ஸ் குறிப்பிடாமல் விட்டதையும், உழைக்கும் வர்க்கத்தின் வர்க்க அடுக்குகள் கலைத்து மாற்றியமைக்கப்படுவதை எதிர்கொள்ளும் விசயத்தில் மார்க்ஸ் தவறியுள்ளதையும் – இருப்பினும் அவரது சீடர்கள், இப்பிரச்சனையை அணுகி, மார்க்சியத்தை வளர்த்துள்ளதையும் குறிப்பிடுகிறார்.

மார்க்ஸ் முதலில் ஜெர்மனி, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் புரட்சி ஏற்படலாம் என எதிர்பார்ப்பதும், பின் குறைந்த வலர்ச்சியடைந்த நாடுகளில், சமூகப் புரட்சிக்கான சாத்தியக் கூறுகள் இருப்பதான முடிவுக்குச் செல்வதும் பற்றி ‘புரட்சியின் தத்துவம்’ பேசுகிறது. இந்த அத்தியாயங்களில் பிஷர் தனது மேதைமையை நிலைநிறுத்துவதைக் காட்டிலும் – மார்க்சுக்காக, அவரையே பேச விடுவதாகவே அமைத்துக் கொண்டிருக்கிறார். ஜான் பெலமி போஸ்டர், தனது முன்னுரையில் குறிப்பிடும் வாசகங்களை இங்கே குறிப்பிடலாம். ‘இருக்கும் ஒவ்வொன்றையும் ஈவிரக்கமற்ற விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டும்’ என்பதே மார்க்சுக்கு பிடித்தமானது. ஈவிரக்கமற்று என்று சொன்னால் தன் சொந்த வார்த்தைகளையும், முடிவுகளையுமே விமர்சிக்க ஒருவர் எந்தத் தயவும் காட்டக் கூடாது என்று பொருள்.

லாபமும், மூலதனமும்:

மார்க்சியத் தத்துவம்தான் – தனி நபர்களை மிகக் குறைந்த அளவு பொறுப்பாக்குகிற தத்துவமாக அமைந்திருக்கிறது. முதலாளிகளின் தனிப்பட்ட நோக்கங்களையும், மூலதனத்தின் செயல்பாடுகளையும் அது வேறுபடுத்திக் காட்டுகிறது. “ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியிலும் மூலதனம் உற்பத்தி சக்திகளுக்கு
வரம்பிட்டு விடுகிறது. ஆனால் முதலாளி வர்க்கம் சில படிப்பினைகளை கற்றிருக்கிறது. தடைச்சுவரை அதனால் தகர்க்க முடியவதில்லை. ஆனால் வெகுதூரம் பின்னால் தள்ளிவைக்க முடியும். நெருக்கடிகளை அதனால் தடுக்க இயலாது. ஆனால் அவற்றைத் தணிக்க முடியும்” என எர்னெஸ்ட் பிஷர்
குறிப்பிடுகிறார்.
முதலாளித்துவ சமூகம் தனது சுரண்டலுக்கான வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்ள – எத்தகைய பேரழிவுகளையும் மேற்கொள்ள தயங்குவதில்லை என்பதை பல தருணங்களில் கண்டிருக்கிறோம். முதலாளித்துவ சமூகம் உள்ள வரையிலும், இது தொடரும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே, நெருக்கடிகலின் பிடியிலிருந்து மனித சமூகத்தை மீட்க – வர்க்கப் புரட்சி தவிர்க்க இயலாதது என்ற உண்மையையே நாம் முடிவில் வந்தடைகிறோம்.

புரட்சியும் வன்முறையும்:

இந்த நேரத்தில் மார்க்ஸ் வன்முறைப் புரட்சியை விரும்பியவரா? என்ற கேள்வி எழுவது இயல்பு. இதனை விளக்கும் வகையில் மார்க்சின் கீழ்க்காணும் உரை, ஜான் பெலமி போஸ்டரின் முன்னுரையிலும், புரட்சியின் தத்துவம் அத்தியாயத்திலும் எடுத்தாளப்படுகிறது. “நாம் அரசாங்கங்களுக்கு பிரகடனம் செய்தாக வேண்டும். பாட்டாளி வர்கத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கிய சக்தி நீங்கள்தான் என்பதை நாங்கள் அறிவோம். எங்கு சாத்தியமாகிறதோ அங்கு அமைதியான வழிமுறைகளில் உங்களை எதிர்த்து நாங்கள் முன்னெறுவோம்” என்று குறிப்பிடும் மார்க்ஸ் “தேவைப்படுமானால்  ஆயுதங்களை ஏந்தியும் முன்னேறுவோம்” என முடிவாக அவர் தெரிவிக்கிறார். மார்க்ஸ் வன்முறையை, வன்முறை மீதான விருப்பத்தில் ஆதரித்ததில்லை, மாறாக அவர் சமூகப் புரட்சியை விரும்பினார். முன்னுக்கு வரும் சூழலில், வன்முறையும் சமுகப் புரட்சியின் பல்வேறு சாத்தியங்களில் ஒன்று என்று கருதினார்.

பாரிசின் நடைபெற்ற முதல் புரட்சி அரசாங்கம் குறித்த அத்தியாயம் சுவாரசியமான ஏராளமான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. மிகக் குறுகியகாலமே நீடித்த ‘பாரிஸ் கம்யூன்’ அரசாங்கத்தை மார்க்ஸ், தொழிலாளி வர்க்க அரசின் தொடக்க வடிவமாக விவரிக்கிறார். இந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே தொழிலாளி வர்கம் பழைய அரசாங்க இயந்திரத்தை மாற்றி அதனிடத்தில் புதிய ஒன்றை நிர்மானிக்க வேண்டும் என்ற முடிவுக்கு மார்க்ஸ் வந்தடைகிறார். இருப்பினும் பாரிஸ் கம்யூனில் நீதிபதிகளும், கல்வித்துறை அதிகாரிகளும் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதும், சேவையை முதன்மையாகக் கொண்டவர்களே அப்பதவிகளில் அமர்த்தப் பட்டதும். அதற்கான அவசியம் இருப்பதையும் இந்த அத்தியாயம் காட்டுகிறது.

இந்த புத்தகத்துக்கு ஜான் பெலமி போஸ்டர் கொடுத்திருக்கும் முன்னுரைகளும் – பிஷர் மேற்கொண்டிருக்கும் ஆய்வு வழிமுறையும் – அவர்களின் அக்கரையை நமக்குக் காட்டுகின்றன. போஸ்டரின் முன்னுரை, மார்க்சியம் குறித்து இன்றளவும் உலவிவரும் கொச்சையான விமர்சனங்களின் உண்மை சொரூபத்தை தோலுரித்து, அவ்விடத்தில் மார்க்சின் உன்னதத்தை நிலைநிறுத்துகிறது. உதாரணமாக பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்கிற சொல்லை மார்க்ஸ் பயன்படுத்திய காலத்தில் ‘சர்வாதிகாரம்’ என்பதன் பொருள் என்னவாக இருந்தது, அது பிற்காலத்தில் எப்படிப்பட்ட மாற்றங்களை அடைந்தது என்ற ஆய்வைக் குறிப்பிடலாம். இந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கும் வாசகர், இறுதிக் கட்டுரையான ‘வரலாற்றின் தத்துவத்தில்’ இருந்து தொடங்கி – பின் பிஷரின் கட்டுரைகளை வாசித்து முடித்துவிட்டு – கடைசியாக ஜான் பெலமி போஸ்டரின் முன்னுரையை வாசித்தால் – தடங்கல் இல்லாத வாசிப்பையும், ஆழ்ந்த புரிதலையும் கொடுக்கும்.

மார்க்சியம் மார்க்சுடன் தொடங்குகிறது, ஆனால் அவருடன் முடிந்துவிடுவதில்லை – என அறுதியிட்டுக் கூறும் இந்தப் புத்தகம். மார்க்சியத்தின் நவீன கால வளர்ச்சி வரையிலும் – பருந்துப் பார்வையில் விளக்குகிறது. குறிப்பாக, சமூக மாற்றம் என்பது நடந்தே தீரவேண்டிய ‘சாசுவதம்’ என்ற நம்பிக்கையை மறுதலித்து, ஒவ்வொரு புதிய நிலைமைகளுக்கும் ஏற்ப, மார்க்சியத்தை மேம்படுத்தி, புதிய சமூகத்தை கட்டமைக்க வேண்டும் என்ற ‘கட்டளையை’ நமக்கு விதிக்கிறது. மிகவும் செரிவான கருத்துகளை உள்வாங்கி, அவற்றின் சாரத்தை மட்டும் நமக்கு வழங்க வேண்டும் என்பதே இந்த நூல் ஆசிரியரின் உள விருப்பமாக உள்ளது. அதே சமயம், எளிமைப்படுத்துவதன் மூலம் தவறான விளக்கங்களுக்கு இட்டுச் செல்லும் அபாயத்தை அவர் புரிந்தே தவிர்த்திருக்கிறார்.

மார்க்ஸ் என்ன சொன்னார் என்பதன் சாரத்தை எடுத்துரைக்கும் இந்தப் புத்தகம் தமிழ் வாசகர்களுக்கு கிடைக்க 46 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இந்திய சூழலின் திட்டவட்டமான நிலைமைகளுக்கு ஏற்ப மார்க்சிய சிந்தனைகளை பொருத்துவதற்கு தேவையான கல்வியை வளர்த்துக் கொள்ள இந்த நூல் உதவும். கடைசியில் நம் கைகளில் இப்படியொரு புத்தகம் வந்து சேர்ந்துவிட்டது. ரோடிஸ் நதியை ஒரே பிரம்மாண்டமான தாவலில் தாண்டிக் குதித்ததாக சொல்லித் திருந்த தற்பெருமைக் காரனை அழைத்து, சவால் விடும் விதத்தில் ‘இதோ ரோடிஸ், இங்கே தாவு’ என்று சொன்னதை குறிக்கும் ஒரு பொன்மொழி, கார்ல் மார்க்சுக்கு மிகவும் பிடித்தமானது. அந்த வரிகள் நம்மை நோக்கி எழுப்பப் படுவதாகவும் கொள்ளலாம்.

அந்தப் பொன்மொழி: “இதோ அந்த ரோஜா … இப்போது நடனமிடு”

மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன?

எர்னஸ்ட் பிஷர்

தமிழில்: திருப்பூர் மிலிட்டரி பொன்னுசாமி

பாரதி புத்தகாலயம்

விலை: ரூ.200

Related Posts