அரசியல்

இதற்குத்தான் ஆசைப்பட்டாயா?

க.கனகராஜ்

மே மாதம் 16 ஆம் தேதி 11 மணிக்கு துவங்கி இன்று வரையிலும் “இந்தியாவே” மோடியின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. மெலிந்த தேகத்தோடு இருந்த ரூபாயின் மதிப்பு, ஆணழகன் போன்று புஜம் பெருத்து, நரம்பு புடைத்து எகிறிக் குதிக்கிறதாம். இந்தியாவின் பங்குச் சந்தைகள் எப்போதும் இல்லாத அளவிற்கு துள்ளி விளையாடுகிறதாம்.

மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 2013 க்கும், மே 16, 2014 க்கும் இடையே அதானி குழுமத்தின் ஒரு பங்கின் விலை 276 சதவிகிதம் உயர்ந்திருக்கிறதாம். செப்., 2013ல் ஒரு லட்சம் ரூபாய்க்கு அதானி குழுமத்தின் பங்கை ஒருவர் வாங்கியிருந்தால் அதன் இப்போதைய மதிப்பு 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயாம்.

பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் என்ற அனைத்திலும் மோடி சிரித்துக் கொண்டிருக்கிறார். மோடியின் சிரிப்பில் இந்தியா சிரிப்பதாய் ஊடகங்கள் உற்சாகக் களிப்பை பறைசாற்றிக் கொண்டே இருக்கின்றன.

31 சதவிகிதம் பேரே ஒரு கட்சிக்கு வாக்களித்த இந்தத் தேர்தலில் அந்தக் கட்சியின் அபாரமான வெற்றியை 100 சதவிகிதம் பேரும் கொண்டாடுவதாய்க் கொக்கரிக்கும் மோசடி, நவீன இந்தியா காணாத பித்தலாட்டம்.

`இதே போன்றதொரு உற்சாகத்தை 2009 ஆம் ஆண்டும் இந்தப் பத்திரிகைகள் கொண்டாடின. அப்போது அவர்கள் காங்கிரசின் வெற்றி மன்மோகன் சிங்கால் விளைந்தது. மன்மோகன் சிங் அரசியல்வாதி அல்லாத பிரதமர், பொருளாதார நிபுணத்துவர் என்றெல்லாம் பேசிக்கொண்டாடினர். ஆனால், அதை விட இப்போதைய கூச்சல் உச்சஸ்தாயியில் ஒலிக்கிறது.

வாக்களித்த 80 கோடி பேரும் மட்டுமல்லாது அவர்கள் வீட்டில் பிறக்கப் போகிற குழந்தைகள், இறந்து போன மனிதர்கள் என அனைவரும் எழுந்து வந்து மோடியின் வெற்றியைக் கொண்டாடுவதாய் இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

காலம் சென்ற கவிஞர் கந்தர்வன் ஒரு கவிதையில் இப்படிச் சொல்கிறார்

“எல்லாம் கிடக்கட்டும்
எதெதுவோ நடக்கட்டும்
கற்பில் சிறந்தவள்
கண்ணகியா மாதவியா என
பட்டி மன்றங்கள்
பரவலாய் நடக்கட்டும்
யார் ஜெயித்தாலும்,
யார் தோற்றாலும்
தமிழனுக்கு
வாயெல்லாம் பல்
பல்லெல்லாம் சொத்தை”.

இந்தியாவில் முதலாளித்துவக் கட்சிகள் யார் ஜெயித்தாலும் கார்ப்பரேட்டுகளுக்குத்தான் வெற்றி. தன்னுடைய இந்த வெற்றியை அனைத்து மக்களின் வெற்றியாய் சித்தரிப்பதில்  முன்னிறுத்துவதில் கார்ப்பரேட்டுகள் வெற்றி பெற்றுவிட்டார்கள்.

முதலாளித்துவம் எப்போதுமே தன்னுடைய கோரிக்கையை, தன்னுடைய கோரிக்கை என்று சொல்லாது. அது தேசத்தின் கோரிக்கை, பொது மக்களின் கோரிக்கை என்று சொல்லும். அதேபோன்று, தன்னுடைய வெற்றியை தேசத்தின் வெற்றி, மக்களின் வெற்றி என்று சித்தரித்திருக்கிறது. அதன் மூலம் மோடிக்கு வாக்களித்தவர்களை கொண்டாட வைத்திருக்கிறது. அந்தக் கொண்டாட்டத்தை தேசத்தின் கொண்டாட்டமாய் சித்தரித்துக் கொண்டிருக்கிறது. தமிழனுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் முதலாளித்துவக் கட்சிகள் யார் ஜெயித்தாலும், ஏழைகளின் கோரிக்கைகளை வெற்றியின் மிதப்பில் மறக்கடிக்கச் செய்வதை மாமாங்கம் மாமாங்கமாய் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

இது யாருடைய வெற்றி? இந்த வெற்றியைக் கொண்டாடுகிறவர்கள், எதை நோக்கி கொண்டாடுகிறார்கள்? என்பதை கீழ்க்கண்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் தலையங்கத்தின் பகுதி வெளிப்படுத்தும்:

“விரிவான அங்கீகாரத்தை மக்கள் மோடிக்கு அளித்திருக்கிறார்கள். மார்க்கரெட் தாட்சருக்கு இதேபோன்றதொரு அங்கீகாரம் கிடைத்தது. அங்கு வழக்கத்திலிருந்த கருத்தொற்றுமை என்கிற பாரம்பரியத்தை அவர் தகர்த்தார். அதன் மூலம் ஐரோப்பாவின் நோயாளியாக இருந்த இங்கிலாந்தை, துடிப்பு மிக்க பொருளாதாரமாக மாற்றிக் காட்டினார்”. இதேபோன்று மோடியும் செயல்பட வேண்டுமென்று, அதாவது கருத்தொற்றுமைக்காக காத்திருக்கக் கூடாது. கார்ப்பரேட்டுகளின் நலனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறது.

வெற்றி வெளிப்படுத்தும் செய்திகள்:

அலைக்கற்றையில் தொடங்கி, நிலக்கரிப் படுகை, ராடியா டேப், ஆதர்ஷ், காமன்வெல்த், கிருஷ்ணா, கோதாவரிப் படுகை எரிவாயு என்று ஊழல் சூறாவளியில் சிக்கி காங்கிரஸ் சின்னாபின்னமாகி நிற்கிறது. இந்த கொள்ளைகளோடு பொருளாதார மந்தம், வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, வாழ்வாதார பறிப்பு என்று துயரத்தில் ஆழ்த்திய கொள்கைகளுக்காகவும் காங்கிரசுக்கு மக்கள் சரியான தண்டனை அளித்திருக்கிறார்கள். ருத்ரதாண்டவமாடிய அவசர நிலைக்குப் பின்னர் காங்கிரசுக்கு கிடைத்த 154ஐ விடவும் குறைத்து எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட வழங்க மறுத்துள்ளனர். காங்கிரசை துடைத்தெறிந்த மக்களின் கோபம் நியாயமானது. இந்த வகையில் இந்திய மக்கள் மீண்டும் ஒருமுறை தங்கள் அதிகாரம் எத்தகையது என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

இரண்டாவதாக காங்கிரசின் இந்த திவால் தன்மை பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றியைத் தேடித்தந்திருக்கிறது. இந்த வெற்றி பாஜகவிற்கு வாக்குத் தளத்தில் இதுகாறும் அக்கட்சி 1998ல் பெற்ற 25.59 சதவிகிதம் என்பதிலிருந்து 31 சதவிகிதம் என்று சுமார் 6 சதவிகிதம் உயர்வை அளித்திருக்கிறது. மண் கவ்விய காங்கிரஸ், மாற்றே இல்லாத மாநிலங்கள், விலைகொடுத்து வாங்க வேண்டிய தேவையே இல்லாத அளவிற்கு விசுவாசம் காட்டிய பத்திரிகைகள் (மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 வரை ஐந்து பிரதான செய்தி தொலைக்காட்சிகளில் 30 சதவிகிதம் மோடிக்கு ஒதுக்கப்பட்டது. மே 1 முதல் 11 வரை இது 50 சதமாகும். அனைத்தும் மோடியைப் புகழ்வனவே) வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மீசையை முறுக்கிக் கொண்டு களமிறங்கிய முதலாளித்துவ பெரு நிறுவனங்கள் மாற்றென்றால் மோடி. மோடி என்றால் வளர்ச்சி. வளர்ச்சியென்றால் வல்லரசு என்பதை அடித்து அடித்துச் சொல்லி உண்மையாக்க முயற்சித்தனர். இத்தனைக்குப் பிறகும், எதிர்க்கட்சிகள் பிரிந்து நின்ற பிறகும், மூன்றாவதாய் ஒரு மாற்று முகிழ்க்கும் என்ற நம்பிக்கை இல்லாத போதும் 31 சதம் வாக்குகளை மட்டுமே அந்தக் கட்சியால் பெற முடிந்துள்ளது.
ஆனால் சீட்டுக்களில் 283ஐ பிடித்துள்ளது. இது சமீப கால வலாற்றில் (1984க்குப் பிறகு) எக்கட்சிக்கும் வாய்க்காத எண்ணிக்கை. ஆயினும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் உள்ள 123 சீட்டுக்களில் 10க்கும் குறைவான சீட்டுக்களை மட்டுமே அக்கட்சி பெற்றுள்ளது. காங்கிரசுக்கும் – பிஜேபிக்கும் மாற்றாக கட்சிகள் களமிறங்கிய இடங்களில் மாற்றாய் நின்றவர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ஆயினும் பீகார், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாற்றுக்கள் இருந்த போதும் மதவெறி பாரதிய ஜனதாவே வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஓராண்டில் கடும் மதவெறி வன்முறைகள் கோலோச்சிய மாநிலங்கள் இவை என்பதை மனதில் கொண்டால் மாற்றொன்று இருந்தால் அதை மக்கள் ஆதரித்திருக்கின்றனர் என்பதே உண்மை. எனவே சாத்தியமான மாற்றொன்றை முன்னிறுத்த முடியாமல் போனது மதச்சார்பற்ற சக்திகளின் பலவீனமே.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க இந்த தேர்தலின் மிக முக்கியமான ஒரு அம்சம் கம்யூனிஸ்ட்டுகளின் தோல்வி. நாடெல்லாம் அம்பலப்பட்டுப் போன காங்கிரஸ், கேரளாவில் அதிகப்படியான இடங்களை எப்படிப் பெற்றது? அகில இந்திய ஊழல்களோடு சூரிய சக்தி ஊழல் மூலம் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் ஊழல் கணக்கில் ‘மதிப்புக் கூட்டல்’ செய்திருந்தது. இத்தனைக்குப் பின்னும் எப்படி அவர்களால் 12 சீட்டுக்கள் பெற முடிந்தது. இடதுசாரிகள் பெற்ற சீட்டுக்கள் 2009ல் 4 இப்போது 8 என்பது ஆறுதலாக இருக்குமே தவிர ஒரு பெரும் கேள்வி அதற்குள் தொக்கி நிற்பது உண்மை.

இதேபோன்று சாரதா சிட்ஃபண்ட் ஊழல், அராஜகம், வன்முறை தான்தோன்றித் தனம் இவற்றால் அம்பலப்பட்டுப் போயிருக்க வேண்டிய திரிணாமுல் காங்கிரஸ் 34 இடங்கள் பெற்றிருப்பதும், நவகாளிப் ‘புகழ்’ வங்கம் 34 வருட இடதுசாரிகளின் ஆட்சியில் மத மோதல்களுக்கு இடம் கொடுத்திராத நிலையில் பாஜக 17 சதம் வாக்குகளைப் பெற்றிருப்பதும் இத்தனைப்

போட்டிகளுக்கு இடையில் காங்கிரஸ் 4 இடங்களைப் பெற்றிருப்பதும் துயரம் தரும் கேள்விகளே.

இந்தக் கேள்விகளுக்கான விடைகள் ஒருபுற மிருக்க இடதுசாரிகள் வலுப்பெறுவதற்கான வழி முறைகளே மிக முக்கியமானவை. இந்த வழிமுறைகளுக் கான தேடல் உடனடியாக தீர்வுகளை விடவும் மீண்டும் பல கேள்விகளையே முன்னிறுத்துகிறது.

நவீன தாராளமயக் கொள்கை, வேலைவாய்ப்பின்மை, விவசாயத்தில், தொழிலில், சமூகத்தில் சீரழிவை சேர்த்திருக்கிறது. சமத்துவத்தை நோக்கிய பயணத்திலிருந்து பின்வாங்கி ஏற்றத் தாழ்வை அதிகப்படுத்தும் நவீன தாரளமயம் தீர்வுகளின் கடவுளாய் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. சக மனித நேசிப்பிற்குப் பதிலாய் தன்நோக்கு மட்டுமே நாகரிகமாய் தலைவிரித்தாடுகிறது. முதலாளித்துவ முறையோடு கூடவே தோன்றிய கோஷங்களான சுதந்திரம், ஜனநாயகம், சகோதரத்துவத்தை நவீன தாராளமயம் எள்ளி நகையாடுகிறது. மார்க்சும், ஏங்கெல்சும் அறிக்கைகளில் குறிப்பிட்டது போல முதலாளித்துவம் ‘நாகரிகம் என்பதாய் தான் கூறிக் கொள்வதை தழுவும்படி, அதாவது முதலாளித்துவமயமாகும்படி எல்லா தேசங்களையும் பலவந்தம் செய்கிறது. சுருங்கக் கூறுமிடத்து, அப்படியே தன்னை உரித்து வைத்தாற்போன்றதோர் உலகைப் படைத்திடுகிறது அது’.

ஆம் தாராளமயம் தன்னையே உரித்து வைத்தார் போன்ற உலகைப் படைக்க முயற்சிக்கிறது. அதற்காக சமூகத்தின் அத்தனை தளங்களிலும் தான் நாகரிகமெனச் சொல்வதை ஏற்க வைத்திருக்கிறது. ஏ.டி.எம்களும், மால்களும், நான்கு வழிச்சாலைகளும், விதவிதமான புழங்கு பொருட்களுமான கனவுலகத்தை அது மனித மனங்களில் விதைத்திருக்கிறது. இருப்பனவற்றை பகிர்ந்தளிப்பதற்குப் பதிலாக இருப்பதெல்லாம் வலுத்தவனுக்கு என்பதை வெறியாக்கியிருக்கிறது. எல்லோருக்கும் பகிர்ந்தளி, எல்லோருக்கும் தேவையானவற்றை உருவாக்கு என்பதற்குப் பதிலாக இவ்வளவுதான் இருக்கிறது. முடிந்தால் எடுத்துக் கொள் என்று சவால் விடுகிறது. இத்தகைய போட்டிகள் எப்போதுமே காட்டுமிராண்டித்தனமானவை. சமூகம், ஒற்றுமை ஆகியவற்றை சீரழிப்பவை. இந்தச் சீரழிவில் சிக்கி நிற்கிறது இந்திய சமூகம். சமூகம் என்பதில் தானே வாக்காளரும் இருக்கிறார்கள்.

ஆனால், நவீன தாராளமயத்தை ஏற்றுக் கொண்டு அதற்குள்ளேயே தீர்வுகளைத் தேட வைக்கிற மனோநிலையை தாராளமயம் உருவாக்கி வைத்திருக்கிறது. இதற்கு மாற்றாக நிற்கும் கம்யூனிஸ்டுகளை வளர்ச்சிக்கு எதிரானவர்களாய் சித்தரித்து வைத்திருக்கிறது. தனது நலனை மக்கள் நலன் என்பதாய் நம்ப வைப்பதில் வெற்றி பெற்றிருப்பது போல, தனது எதிரியை மக்களின் எதிரியாய் சித்தரிப்பது முதலாளித்துவம் தற்காலிகமாகவேனும் வென்றிருக்கிறது. ஆனால், இந்தியர்கள் ஆசைப்பட்டது இந்த மாற்றமல்ல. விரைவிலேயே மக்கள் இதை உணர்வார்கள்.
நடப்புகள் மனிதனை யதார்த்தத்தை நேருக்கு நேர் சந்திக்க வைக்கும். அந்தச் சந்திப்பை முன்நிர்ணயித்துச் சொல்கிற முன்னுணர்ந்து சொல்கிறவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். வரலாறு கம்யூனிஸ்ட்டுகளுக்கு பணித்துள்ள இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற இன்னும் கூடுதல் வேகத்துடன், இன்னும் கூடுதல் செயல் திறனுடன் இன்னும் கூடுதல் படைப்புத் திறனுடன் செயல்பட வேண்டிய நேரமிது.

வெற்றி பெற்றவர்கள் பக்கம் நின்று அதை நியாயப்படுத்துவல்ல கம்யூனிஸ்டுகளின் பணி – வெற்றி பெற வேண்டியவர்களை வெற்றி பெறச் செய்வதே, சொல்லப்போனால் அது மட்டுமே அவர்கள் பணி. எத்தனை முறை தோற்பினும் வென்றவர்கள் பக்கமல்ல. எதிரியாய் வெல்ல வேண்டியவர்கள் பக்கமே அவர்கள் நிற்பார்கள். அவர்கள் பக்கம் மக்களும் வருவதற்காக தங்கள் பணிகளை துரிதப்படுத்துவதைத் தவிர வேறு மாற்று இல்லை.

Related Posts