அரசியல்

பிஜேபி விசக்கொடுக்கும் ஜோதிமணி எம்பியும்…….


கொரோனா கொரோனா நீ உயிர்க் கொல்லி நோயா .. எமைத் தேடி ஏன் வந்தாயோ .. என்று பாடும் வகையில் கடந்த மூன்று மாதங்களாக அனைத்து ஊடகங்களிலும் கொரோனா செய்திகள் தான் !

பிப்ரவரி முதலே உலகில் பரவலாக இது பேசு பொருள் ஆனபின்னும் , நாட்டின் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி இந்திய விழிப்புணர்வின் அவசியம் குறித்து பதிவிட்ட பிறகும் மத்திய அரசு அமெரிக்க அதிபரை வரவேற்பதில் மூழ்கியிருந்தது .

நாடாளும் கட்சியின் பிரதமர் எந்தவித முன் தயாரிப்பும் இன்றி ஒரு விரலில் இந்த நாட்டை சுழல வைப்பது போல் ஊரடங்கை அறிவிக்கிறார். மருத்துவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டே வந்துள்ள மத்திய அரசு கொரோனாவை எதிர்கொள்ளத் தயாராகவில்லை .

நாடு முழுமையும் மருத்துவ உள்கட்டுமானங்கள் வலுப்படாததால் பாதிக்கப்பட்ட மக்கள் நாடு முழுதும் பலவகைகளில் அலைமோதுவதை ஊடகங்களில் கண்டோம் .

ஊரடங்கின் நாட்கள் அதிகரித்துக் கொண்டிருக்க வேலையும் சரியான வருமானமும் இன்றி கையிருப்பும் கரைய உணவின்றித் திண்டாடும் நிலை ஏற்பட்டு பனியன், பட்டாசு , தீப்பெட்டி ,பீடி ,கட்டுமானம் உள்ளிட்ட பல்துறை சேர்ந்த முறைசாராத் தொழிலாளர்கள் ,வாடகை வண்டி ஓட்டுநர்கள், என பலரும் உணவுக்கு கை ஏந்தி அல்லல்படுவதையும் காண்கிறோம் .

இது தவிர நாடு முழுவதும் சொந்த மண்ணை விட்டு பிழைப்பு தேடி வந்த புலம்பெயர்ந்த தொழிலாளிகள் குறிப்பாக வட இந்திய தொழிலாளிகள் (மத்திய ஆளும் கட்சியின் மீது முழு நம்பிக்கை கொண்ட மக்கள் உட்பட) வாழ வழியற்ற நிலையில், முறையான வாகன ஏற்பாடுகள் இன்றி , ரயிலுக்கு கட்டணம் செலுத்த முடியாமல் குடும்பத்துடன் பாதங்களில் இரத்தம் வடிய கால்நடையாய் சொந்த ஊர் நோக்கி கிளம்பிச் செல்கிற துயர்மிகு அனுபவங்களையும் அன்றாடம் காண்கிறோம்.

பயணத்தின் இடையில் உடலில் நீர்சத்து அற்றும், பசிக் கொடுமை தாளாமலும் , களைப்பிலும் , தற்கொலை செய்தும் ,வாகன விபத்திலும், ரயில் தண்டவாளத்திலும் கொத்துக் கொத்தாய் மக்கள் மடிவதைக் காணும் மக்களின் மனம் தீப்பிழம்பாய் மாறியுள்ளது .

கைதட்டவும் ,விளக்கேற்றவும் அறிவித்த பிரதமர் இந்தக் கடுமையான நிலையிலாவது ஏதாவது உதவி அறிவிப்பார் என கானல் நீர் கனவில் நாட்டு மக்கள் ஏங்கினர்.

மாயா ஜால மந்திர ஜாலக் கதை போல் இருபது லட்சம் கோடி என்று அறிவித்து மக்களை ’ஆ’ வென வாய் பிளக்க வைத்தார். திறந்த வாய் மூடும் முன் அவையனைத்தும் வாய்ப்பந்தல் என்பதை நிதியமைச்சர் மூலம் வெளிப்படுத்தி ஏமாற வைத்தார் .

எதிர்கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவர் திருமதி சோனியா காந்தி அம்மையார் புலம்பெயர் மக்களுக்கு கட்சி மூலம் கட்டண உதவி செய்ய முடிவு செய்து பொறுப்பாளர்களுக்கு அறிவித்ததையும் , ராகுல்காந்தி அந்த ஏழை மக்களுடன் பரிவுடன் உரையாடியதையும் பொறுக்க முடியாத நிதி அமைச்சர் மிக கீழ்த்தரமாக பேசியதைக் கேட்டோம் .

இப்போது சூட்கேஸ் தூக்கச் சொன்னவர் தான் ஜிஎஸ்டி அறிமுகத்தின் போது வீட்டில் இட்லி சாப்பிட மக்களுக்கு ஆலோசனை சொல்லி , தன்னை வெங்காயம் பூண்டு பற்றி கவலைப்படாத பேரரசி என நாடாளுமன்றத்தில் திமிராக பதில் சொல்லி மக்களை அவமதித்தார்.

அவரின் வாரிசுகள் டிவியில், முகநூலில் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தங்களது தரம் தாழ்ந்த சிந்தனையை , கேவலமான சொற்களைப் பதிய வைக்கிறார்கள் .

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி புலம்பெயர் மக்களைப் பற்றிய கவலையுடன் , நிதானமாக நிலைமைகளை வெளிப்படுத்தி ,எதிர்க்கட்சியாக தங்கள் கட்சி என்ன செய்தது என்பதைக் கூறி அதில் எது குற்றம் எனக்கேட்டு பிரதமரின் மீதான மக்களின் கொந்தளித்த மனநிலையைப் பதிவு செய்தார்.

இவரைக் கேவலமான பொம்பளை எனக்கூறி இழிவுபடுத்திய அதே விசப்பாம்புத் தலைவரின் வாய்தான் ஏற்கனவே திருமுருகன் காந்தியை டேனியல் என்று சொல்லி விவாதத்தை திசைமாற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் சிந்தனை தேவையற்ற வார்த்தையை பிரயோகித்து கேவலப்படுத்துவதாக எண்ணி தன் சுயத்தை வெளிக்காட்டிக்கொண்டது.

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் ,நெஞ்சுறுதியும் கொண்ட பாரதியின் புதுமைப் பெண் என தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள திருமிகு ஜோதிமணி (எம்.பி ) யைப் போல் தான் அறிவார்ந்து விவாதிக்கும் மற்றவர்களும் பொது வெளியில் பீடுநடை போட்டுக் கொண்டுள்ளனர் .

வாதத்திற்கு மருந்துண்டு விதண்டாவாதத்துக்கு மருந்தில்லை என்பர் . மக்களுக்கு நேர்மையாக செயலாற்ற முடியாத மத்திய ஆளும் பிஜேபி கட்சி இந்தக் கொரோனா காலகட்டத்திலும் பெருமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகள் நலனைப் பேணும் விதத்தில் செயல்படுவதைக் காண்கிறோம் . எனவே மக்களின் நம்பிக்கை பொய்த்துப் போயுள்ள , இந்த நிலையில் ஆளுங்கட்சி சார்பில் பங்கேற்போர் தங்களின் நேரடி அடையாளம் மறைத்து அரசியல் விமர்சகர் , பொருளாதார நிபுணர் , பத்திரிக்கையாளர் , கல்வியாளர், பட்டயக்கணக்காளர் ,முன்னாள் படைவீரர் என்று பல முகமூடிகளுடன் வந்து ஐந்தில் மூவராய் பேசி நகாசு வேலை செய்கின்றனர் .

அது எடுபடாத சமயத்தில் தங்களின் கீழ்த்தரமான அழுகிப்போன மூளையைப் பயன்படுத்தி எதிரில் இருப்பவரை நிலைகுலையச் செய்யும் வகையில் வாயாடுவது, மிரட்டுவது போன்ற பலவித தந்திரங்களைக் கையாள்கின்றனர்.

ஊடக முதலாளிகள் மத்திய அரசின் மூலம் மாபெரும் பலன்களை அடைந்து கொண்டிருக்கும் வரை அவர்கள் ஊடக ஊழியர்களையும் காக்க மாட்டார்கள் .விவாதத்தில் கலந்து கொள்ளும் மற்ற அரசியல் கட்சியினர் அவமானப்படுவதைப் பற்றி கவலைகொள்ளவும் மாட்டார்கள்.

மத்திய அரசும் ஊடக முதலாளிகளும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சூழலில் , முகமூடிக்காரர்களை ஊடகங்கள் அழைக்கக் கூடாது என்பதும், இவர்களின் வாயாடலை அனுமதிக்கக் கூடாது என்பதும் வெற்றுக் கோரிக்கையின் மூலம் நடக்காது .

மக்கள் சக்தியின் வலுவான ஓங்கிய குரலால் தான் சாத்தியமாகும்.
அத்திசையில் வேகமாய் பயணிப்பதே நமது முழுமுதல் கடமையாகும் !

  • செம்மலர்.

Related Posts