அரசியல்

குடியுரிமை பறிப்பு சட்டமும் பாசிச பயங்கரவாதமும்

“இந்துத்துவம் இந்தியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலும்போது இந்நாடு பல்வேறு துண்டுகளாக சிதறி வெடிக்கும்”.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

இந்தியாவில் வாழும் இசுலாமியர்கள் அரேபியர்கள் அல்லர். இந்நாட்டின் பூர்வ குடிகள், அவர்கள் அரேபியர்களின் இந்திய வருகையால் இசுலாமியர்கள் ஆனவர்கள் . எப்படி ஆங்கேலேயர்களின் வருகையால் இங்குள்ள மக்களில் பலர் கிருத்தவர்களானார்களோ அதைப்போலவே..!  ஆனால் இப்பாசிச அரசுகள் மதவெறுப்பரசியல் மூலம் இசுலாமியர்களை நாடற்றவர்களாக்கும் முயற்சிதான் இந்த CAB 2019.

CAB மற்றும் NRC இதனால் என்ன பாதிப்புகள் நிகழும்?

CAB – Citizenship Amendment bill இசுலாமியர்களைத் தவிர்த்து 6 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு குடியிருப்பவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என இத்திருத்தம் சொல்கிறது. பிறகு, இந்தியக் குடியுரிமைப் பெற்ற எந்த மதத்தவரும் NRC – National Register of Citizenship எனும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற்றால்  மட்டுமே இந்திய குடிமக்கள் என்ற அங்கீகாரம் பெறுவார்கள். மற்றவர்களனைவரும் சட்டவிரோதமாக குடியேறியேறியவர்கள் என சொல்கிறது இச்சட்டம்.

இந்த NRC முறைப்படி இந்திய  குடிமக்கள் ஒவ்வொருவரும் தாம்  இந்தியர்கள்தான் என்று அரசிடம் நிரூபிக்க வேண்டும். அதற்கான ஆவணங்களாக பாஸ்போர்ட் மற்றும்  ஆதார் கார்டு கொடுத்தால் மட்டும் போதாது என்கிறது இச்சட்டம். குடிமக்கள் என்பதற்கான நிரூபணமாக அதை பயன்படுத்த முடியாது. அந்த ஆவணங்கள் அடையாள அட்டை மாத்திரமே,  குடிமக்களுக்கான அங்கீகாரம் என கருத முடியாது என்கிறது. நான் இந்த ஊரில் இன்னாருக்கு மகன் (ள்) இன்னாரது பேரன் என்பதோடு இரண்டு தலைமுறைவரை ஆவணங்களோடு நிரூபிக்க சொல்கிறது. நாம் இங்கு இந்த NRC யில் இடம்பெறுவதற்கு  சொத்துக்காண ஆவணம் , அரசு அதிகாரி சான்றிதழ் ஆகியவற்றை காண்பிக்க வேண்டும். மீறி இச்சான்றிதழ்களை பெற முடியாதவர்கள் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக இங்கு குடியிருந்தவர்களாக இருந்தாலும் அவர்களை இந்திய குடிமக்களாக அரசு ஏற்காது . சொத்துக்களை பறிக்கும் , ஓட்டுரிமையை ரத்து செய்து, குடியுரிமையைப் பறித்து நாட்டைவிட்டு விரட்டும் அல்லது அகதி முகாமில் தூக்கி போடும், ஒடுக்கப்பட்ட மக்கள்மீது தம் வெறுப்பை ஏவும். 

இந்த CAB எனப்படும் citizenship Amendment bill என்பதன் மூலம் மத்திய மோடி அரசு இசுலாமியர்களையும், இந்தியாவில் புலம்பெயர் தமிழர்களாய் வாழும் ஈழத் தமிழ் அகதிகளையும் நாடற்றவர்களாக்கத் திட்டமிட்டு  இம்மசோதாவை கொண்டுவந்துள்ளது. நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையின் மூலம் இக்கொடுங்கோல் சட்டத்தைத் தன்னிச்சையாக நிறைவேற்றியுள்ளது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு, உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு ஆகியவற்றைக் கொண்டு வந்தபோது இங்கு எந்தச் சலனமும் ஏற்படவில்லை. இப்படி மக்களின் உணர்வுகளை ஆழம் பார்த்த கொடுங்கோலர்கள் எதைப்பற்றியும் , யாரைப்பற்றியும் துளியும் கவலை கொள்ளாமல் இந்த குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளனர்.

Indian muslims protesting against the discriminatory Citizenship amendment bill 2019

இந்திய அரசமைப்பு சட்டத்தின் முகவுரையில் மதசார்பற்ற சனநாயக சோசலிசக் குடியரசு என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அரசியலைப்பு சட்டத்தின்படி பதவியேற்ற  பிரதமரோ, இன்னபிற நாடாளுமன்ற உறுப்பினர்களோ ஒரு தலைபட்சமாக இந்து ராஷ்டிரம் அமைக்க இசுலாமியர்களையும் , பௌத்தர்களையும், கிருத்தவர்களை என இன்னபிற மதத்தவர்கள் மீது மத துவேஷத்தைக் காட்டும் விதமாகவே இச்சட்டத்தை இயற்றியுள்ளனர். 

அங்கு நாடாளுமன்றத்தில் அச்சட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தைச்சார்ந்த அதிமுக , பாமக உறுப்பினர்கள் முதற்கொண்டு அச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து வந்துவிட்டு இங்கே வந்து மக்களிடம் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அளவுக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்துவைத்து அதை ரெய்டுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மிகக்  கேவலமான நிலைக்கும் இறங்கி வாழும் சுயநலப் பதர்களை அவர்களது கட்சி பிரமுகர்கள் எதை நம்பி அவர்கள் பின் நிற்கிறார்கள் என்றும் தெரியவில்லை.! அதற்கு முழுமுதற்க் காரணம் இச்சட்டம் குறித்து பொது மக்களுக்கு எத்தகையதொரு விழிப்புணர்வும் ஏற்படாதவண்ணம் ஊடகங்களும் பத்திரமாக பார்த்துக்கொள்கின்றன. 

இந்திய அரசமைப்பு சட்டத்தின் பாதுகாவலர்களாக இருக்க வேண்டிய உச்சநீதி மன்றமோ இந்த அநீதிகளை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றது. இந்நிலைத் தொடர்ந்தால் மக்கள் நீதிமன்றங்களின்பால் உள்ள கொஞ்சநஞ்ச நம்பிக்கைகளையும் இழந்து நாளை கட்டப்பஞ்சாயத்துகளைத்தான் நாடி ஓடவேண்டிய நிலை உருவாகும்.  சனநாயகத்தின் அனைத்து தூண்களும் இந்நாட்டின் ஓடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே இயங்குகிறது. மக்கள் யாரையும் நாட முடியாத நிலையை உருவாக்கி இவ்வரசு தன் பாசிச கரங்களால் சனநாயகத்தின் குரல்வளையை நெரித்துக் கொல்கிறது.

இதில் அமெரிக்க நாடுகளில் கிரீன்கார்டு வாங்கி செட்டில் ஆன பல ஒயிட்கிராஸ் கூட்டங்களெல்லாம் இந்தியாவில் யார் வாழனும் யார் வாழக்கூடாது என்பதையும்,  யார் ஆளனும் யார் ஆளக்கூடாது .? என்பதை தீர்மானிப்பதுதான் உலகமகா கொடுமை! இந்தியாவில் வாழும் வங்க தேசத்து முஸ்லீம்களைத்தானே சொல்கிறார்கள் என்று எண்ணிவிடாதீர்கள்! இப்போது மதரீதியாக வடிகட்டி வெளியேற்றுகிறார்கள் நாம் இந்துக்கள் தானே என்று ஆசுவாசப்படாதீர்கள் நாளை சாதிரீதியாக நம்மை அப்புறப்படுத்த வருவான் , பிறகு சாதிக்குள்ளும் பிச்சைக்காரனின் உயிர் துச்சமாக மதித்து கழுவேற்றப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எப்படி யூதர்களற்ற ஜெர்மனி என்று ஹிட்லர் யூதர்களுக்கான குடியுரிமையை மறுத்து, அந்த மக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டுக்கு அகதியாய் தப்பிக்க கூட விடாமல் இவ்வளவு ஆண்டுகள் ஜெர்மனியில் இருந்ததற்காக வரி கட்ட வேண்டும் என்று அவர்களின் சொத்துக்களை சூறையாடி நாட்டைவிட்டு துரத்தி அந்த இனத்தையே அழித்தானோ..! அதற்கான முன்னோட்டமாகத்தான் இந்தியாவின் குடியுரிமை மறுப்பும் நாளை ஒடுக்கப்பட்ட மக்களை நாடற்றவர்களாக்கும்.

இந்த அநீதிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது. பாசிச ஆட்சியாளர்களே..! ஒன்றைப் புரிந்துக் கொள்ளுங்கள்.  “எந்த மக்கள் வரலாற்றிலிருந்து புறக்கணிக்கப்படுகிறார்களோ அந்த மக்களைக் கொண்டே இந்நாட்டின் வரலாறு எழுதப்படும்”, என்ற அண்ணல் அம்பேத்கரின் இந்த வரிகளை இந்நேரத்தில்  நினைவுபடுத்துகிறேன். 

தோழமையுடன்

சவிதா முனுசாமி

Related Posts