சமூகம்

ஹாசினி நந்தினி தொடரும் பாலியல் வக்கிரங்கள், என்ன செய்யப் போகிறோம் நாம்?

stop_violence_against_women

பிறப்பது ஒரு இடம், பயணிப்பது மற்றொரு இடம் என்பதனாலோ நதிகளுக்கு பெண்கள் பெயர்களை வைத்திருக்கிறார்கள். புன்னிய நதிகளாக போற்றப்படும் நாட்டில் பெண்களின் கதியோ கேள்விக்குறி. ஒவ்வொரு 53 நிமிடங்களில் பெண்ணுக்கு எதிரான ஒரு பாலியல் கொடுமை நடக்கிறது. ஒவ்வொரு 77 நிமிடங்களில் ஒரு வரதட்சனை மரணம் நிகழ்கிறது. அப்படியெனில் ஒரு நாளில் 24 மணி நேரமும் எத்தனை இடர்பாடுகள் பெண்களுக்கு. பெண்கள் மீதான வன்முறை எல்லா தளங்களிலும் பல்வேறு வடிவங்களில் நீக்கமற நிகழ்த்தப்படுகின்றன. பெண் கருக் கொலைகள், பெண் சிசுக் கொலைகள், பாலியல் ரீதியான வன்முறைகள், குடும்ப வன்முறைகள் தாழ்த்தப்பட்ட-பழங்குடி பெண்களை தாக்குகின்ற வன்முறைகள் என தினந்தோறும் பெண்கள் ஆண்களால் வேட்டையாடப்படுகின்றனர்.

அதிலும் பெண்கள் மீதான சமீபத்திய வன்கொடுமைகளும், தாக்குதல்களும் மிகவும் கொடூரமாக அரங்கேறியுள்ளன. இந்த வகையான பாலியல் வன்முறைகள் பெண் சமூகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித அழிவிற்கும் இட்டு செல்லும் என்பதை மறுக்க முடியாது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான எழுச்சிப் போராட்டங்கள் ஒரு தலித் சிறுமியின் அழுகுரல் கேட்பாறின்றி அடங்கியிருக்கிறது. அரியலூர் அருகேயுள்ள சிறுகடம்பூரை சேர்ந்த ஏழை தலித் குடும்பத்தை சேர்ந்த ந்ந்தினி என்கிற 16 வயது சிறுமியை அங்கு இருக்கும் உயர்சாதி வகுப்பை சார்ந்த மணிகண்டன் என்பவன் கடத்தி மிக்க் குரூரமாக நடத்தியிருக்கும் வன்முறை, நம்பிக்கை துரோகம், நான்கு நாட்கள் அறையில் அடைத்து வைத்து பிறகு கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு இருக்கிறார். கர்ப்பிணிப் பெண் என்று கூட பார்க்காமல் அவரைக் கொன்று பிளேடால் பிறப்புறுப்பைக் கிழித்து கருவை வெளியே எடுத்து தீ வைத்துக் கொளுத்தியதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத கொடூரம்.

நந்தினி காணாமல் போன அன்றே சரியான முறையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருந்தால் இன்று நந்தினி நம்முடன் உயிருடன் இருந்திருப்பார். காவல்துறையின் அலட்சியம், ஆதிக்க சாதியின் வக்கிரம் நந்தியினி கொலைக்கு காரணம். குற்றவாளியை மனிதனே இல்லை என்று ஒரு வரி சொல்லி விட்டு குற்றம் இழைக்கப்பட்டவர்கள் மீது இவளுக்கு அறிவு வேண்டாமா? அவன் கூட இவள் ஏன் செல்ல வேண்டும் என்று நந்தினியின் ஒழுக்கம் சம்பந்தமாக அவளின் மீதே விரல்கள் நீட்டப்படுகின்றது.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அவ்வளவு பேர் இருக்க சுவாதி மட்டும் ஏன் கொலை செய்யப்பட்ட வேண்டும். இரவில் ஆண் நண்பனோடு ஏன் நிர்பயா செல்ல வேண்டும்? பெருங்களத்தூர் சோனியா ஏன் காதலனால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட வேண்டும்? என்ற கேள்விகளின் பின்னால் என்ன? பாதிக்கப்பட்ட பெண்ணையே பலியாக்குகிற, நடந்த வன்முறையை நியாயப்படுத்துகிற போக்குதான் இவை. ஆணாதிக்கத்திற்கு பல்லாக்கு தூக்குகிற வார்த்தைகள் பெண்களின் வாயிலிருந்தே வரவழைக்கும் ஒரு அவமானநிலைதான் தற்போதும் நடந்து கொண்டு இருக்கிறது.

நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகே, குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், பெண் சிசு கொலை தடுப்பு, வரதட்சணை தடுப்பு, சம ஊதியம் என ப்லவும் பெண்களால் பெற முடிந்தது. போராட்டங்களே பெண்களின் வாழ்க்கையாக மாறிப்போனது. மதுராவைக் காவல் நிலையத்தில் கழிப்பறையில் வைத்து போலிசார் கும்பல் பாலியல் வல்லுறவு செய்த்து அவளின் உடலில் காயங்கள் இல்லை. எனவே அவளின் சம்மதத்தோடுதான் நடந்தது எனவும் மேலும் மதுராவிற்கு காதலன் இருப்பதினால் இது வன்கொடுமை இல்லை என உயர் பொறுப்பில் இருந்த ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியே கூறியது எவ்வளவு அசிங்கம். பிறகு போராட்டங்கள் வலுத்ததன் காரணமாக 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் சம்மந்தமான பாலியல் சீண்டல் மற்றும் குற்றங்கள் திருத்தம் செய்யப்பட்டது. சட்டங்களும், சமயங்களும், பெண்களை இரண்டாம் பட்சமாக பார்க்கும் மனநிலை உள்ளது.

அண்மையில் திட்டக்குடி தலித் சிறுமி பாலியல் வல்லுறவு வழக்கில் 5 பேர் குற்றவாளிகள் என்று புகார் கொடுத்தும் அந்த சிறுமியை மிரட்டி வற்புறுத்தி முக்கிய குற்றவாளிகள் இருவரை நீக்கி விட்டு, 3 பேர் வல்லுறவு செய்தார்கள் என்று எழுதி வாங்கிய கேவலமான காவலர்கள் இருக்கும் வரை பெண்கள் தைரியமாக வந்து எப்படி புகார் அளிக்க முடியும்? மணிகண்டன் சார்ந்த இந்து முன்னணியில் அமைப்புக்கு இதில் முக்கிய பங்கு இருக்கிறது. பெண்ணை உடமையாக மட்டுமே பார்க்கும் கலாச்சாரம், அவளது விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்காத கண்ணோட்டம் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் வழி நடத்தும் பா.ஜ.க அரசு தயராக இருக்கிறது அதன் பரிவாரத்தில் ஒன்றான இந்து முன்னணியின் ஒன்றிய செயலாளர் தான் இதில் குற்றவாளி என்பதை மறந்து விடக் கூடாது.

பண்வாரி தேவிக்கும் இது போன்ற ஒரு கொடுமைதான் நிகழ்ந்த்து. ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க சென்றதால் பன்வாரியை அவள் கணவன் முன்னே உயர் சாதி ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்தார்கள். இந்த வகையான பாலியல் வன்முறையின் நீட்சி, பெண் குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை. எல்லையற்ற சந்தை என்றும் தாராளமயமாக்கலையும், உலகமயமாக்கலையும் வரவேற்ற முதலாளித்துவ அரசு இயந்திரமே எல்லை கடந்த பாலியல் சந்தைப் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

பாட்டியெனும் பாராதே, சிறுமியெனும் பாராதே தேவையெனில் வன்புணர்ச்சி செய்து எடுத்துக் கொள். இது யார் கொடுத்த தைரியம்? ஒரு வாத்த்திற்கு நிர்பயா, சுவாதி, ந்ந்தினி இவர்கள் இமாலய தவறு செய்ததாக வைத்துக் கொள்வோம். இவர்களை கொல்லுவதற்கு இந்த கயவர்களுக்கு யார் அளித்தது அதிகாரம்?.

போரூரை சேர்ந்த சிறுமி ஹாசினி 6 வயதே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவளின் பிஞ்சு கழுத்தை நெரித்து சூட்கேசில் வைத்து அவளது உடலை ஒளித்ததற்கு பின்னால் என்ன? குழந்தைகளிடம் வன்கொடுமை செய்யும் அளவிற்கு மனித உணர்வற்றவர்களாக இருப்பது எவ்வளவு கேவலமான செயல்.

வர்மா குழு பரிந்துரையின் படி, பெண்கள் சிறுமிகள் பல்வேறு காரணங்களால் பொதுவெளிக்கு வருகிறார்கள் அவர்களுக்கு பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டுமே தவிர பாதுகாப்பு இல்லை என்று கூறி அவர்களின் நடமாட்ட்த்தை முடக்குவது விஷயத்தை தலைகீழாக பார்க்கும் என்றும், பெரியோர்களும், சிறியோர்களும் இது சகித்து கொள்ள கூடாத வன்முறை என நேராய் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்.

இரவு மட்டும் பிரச்சனை என்றால் பகலில் வன்கொடுமை நடப்பது ஏன்? உடைகள் மட்டும்தான் பாலியல் வன்முறைக்கு காரணம் என்றால் சிறுமிகளிடமோ, குழந்தைகளிடம் வன்புணர்ச்சி ஏன்? இரவிலும், உடையிலும் பிரச்சனையில்லை. சமூகத்தில் மட்டுமே பிரச்சனை. பெண்களின் மீதான பிற்போக்கு தனத்தை அகற்ற வேண்டும். பாலியல் சமத்துவம் படைக்க வேண்டும். பொதுவெளியில் பெண்கள் சரிநிகராக பார்க்கும் மனோபாவம் உருவாக்கப்பட வேண்டும்.

கள்ளிப்பாலில் மீண்ட பெண்கள் கயவர்கள் கையில் மாண்டு போவதை தடுக்க கடுமையான சட்டங்களும், மன மற்றும் சமூக மாற்றங்களே முக்கியம்.

– வசந்தி பாரதி.

மாநிலக் குழு உறுப்பினர், DYFI.

Related Posts