அரசியல்

குர்மீத் ராம் ரஹீம் சிங் எனும் பாலியல் குற்றவாளி . . . . . . . !

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருக்கும் குர்மீத் ராம் ரஹீம் சிங் வெறும் சாமியார் மட்டுமில்லை என்பதுதான் இந்தக் கலவரங்களுக்கான மிக முக்கியக் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆம் அவரைப் பற்றிய தகவல்கள் நமக்கே பிரமாண்டமாகவும், பிரமிப்பாகவும் இருக்கிறது.

1948ம் ஆண்டு மஸ்தானா பலோசிஸ்தானி என்பவரால் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. மஸ்தானா இறந்த பிறகு 1990ம் ஆண்டு தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவரானார் குர்மீத் ராம் ரஹீம் சிங். அவருக்கு இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, ஐக்கிய ராஜ்ஜியம் என உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளார்கள் என அந்த அமைப்பு தெரிவிக்கிறது.மேலும் இந்த அமைப்புக்கு இன்று உலகெங்கும் 46 ஆஸ்ரமங்ககளும்  உள்ளன.

மரம் நடுதல், ரத்த தானம், சுகாதார சூழல், ஆதரவற்றோருக்கு உதவி, பூர்வ இனக் குடியினருக்கும் திருநங்கைகளுக்கும் ஆதரவு என்று  மக்களிடையே தன் தொடர்பை அழுத்தமாகப் பதித்திருக்கிறது  இந்த அமைப்பு.பேரிடர் மீட்பு காலங்களில் நிவாரணப் பணியில் ஈடுபடுவதற்காக மருத்துவர்கள், பொறியாளர்கள், வர்த்தர்கள், மீட்புக் குழுவினர் உள்பட சுமார் 70 ஆயிரம் பேரை தன்னார்வலர்களாகக் கொண்ட  படையை குர்மீத் சிங் நிறுவியுள்ளார்.பாலியலுக்கு எதிராகவும், அடிமைப்படுத்தப்படும் பாலியல் தொழிலாளர்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார்.அதைத்தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களை திருமணம் செய்து கொள்ள அவரது அமைப்பைச் சேர்ந்த ஏராமான தன்னார்வலர்கள் முன்வந்தனர்.

சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள இவர் முற்றும் துறந்த துறவி இல்லை. சம காலத்தின் நவீன சாமியாரான இவர்  ஆன்மீக குரு, கொடையாளர், பாடகர், விளையாட்டு வீரர், திரைப்பட இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர் என தன்னை ட்விட்டர் பக்கத்தில்  அறிமுகம் செய்துள்ளார்.

குர்மீத் ராம் ரஹீம் சிங் அரசியல் செல்வாக்கு மிக்கவர். இஸட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டவர். குர்மீத் ராமின் எங்கு சென்றாலும்  அவருக்கு பாதுகாப்பாக 100 வாகனங்கள் பின்தொடர்ந்து செல்லும்.இவர் 2014 ஹரியாணா தேர்தலின்போது பாஜகவை ஆதரித்துள்ளார். இந்த ஆதரவு நாடாளுமன்றத் தேர்தலில்  தொடர்ந்துள்ளது.அதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வந்திருக்கிறார்.

அதிக பேருக்கு, இதய நோய்களைக் கண்டுபிடிக்க உதவும் எக்கோ சோதனை முகாம் நடத்தியது.ஒரு மருத்துவக் கல்லூரியை ஆறே நாட்களில், ஒரு கிரிக்கெட் மைதானத்தை 42 நாட்களில், 175 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையை 17 நாட்களில் என்று மிகக் குறைந்த காலத்தில் இவர் கட்டி முடிக்க, அவையெல்லாம்  ஆசிய சாதனையாகிருக்கிறது. இவருடைய சமூகப் பணிகள் பல  கின்னஸ் சாதனையிலும்  இடம் பெற்றுள்ளது.இதுவரை 17 கின்னஸ் சாதனைகள், 27 ஆசிய சாதனைகள் உட்பட 53 சாதனைகளை தாம் நிகழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆன்மிகம் மட்டுமில்லாமல் மெஸஞ்சர் ஆஃப் காட்’ என்ற தலைப்பில் 5 திரைப்படங்களை எடுத்து அனைவரையும் ஆச்சர்யப் படுத்தியுள்ளார்.படத்தின் ஹீரோ,இயக்கம், கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு மற்றும்  பாடல்கள் என அனைத்திலும் அவரே முத்திரை பதித்துள்ளார்.அதோடு மட்டுமில்லாமல்  திடீர் ‘ஸ்டண்ட்’கள் சிலவற்றையும் திரைப் படத்தில் செய்திருக்கிறார்.2016-ல் தாதா சாஹேப் பால்கே விருது வாங்கியுள்ள இவருக்கு சிறந்த நடிகர், தலைசிறந்த பன்முகக் கலைஞர் ஆகிய விருதுகளை மகாராஷ்டிர அரசு வழங்கியள்ளது. மேலும் இவர் துரோணாச்சார்யா விருதுக்கு சமீபத்தில் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான சீடர்களை கொண்ட குர்மீத் ராம் ரஹிம் சிங், பல சர்ச்சைகளுக்கும், வழக்குகளுக்கும் சொந்தக்காரராகவும்  இருக்கிறார். 2002-ல் கொலைக்  குற்றத்தில் தொடர்பு, 2014-ல் தனது சீடர்கள் 400 பேருக்கு ஆண்மை நீக்கம் செய்ய வைத்தது போன்ற சர்ச்சைகளில் சிக்கிய குர்மீத், 2002-ல் பெண் சீடர்கள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது.பாலியல் பலாத்கார சர்ச்சை எழுந்தபோது ஆசிரமத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் மர்ம மான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார். ஆசிரமம் குறித்து எழுதிய பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி என்பவரும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

பெண் சிஷ்யைகள் 2 பேரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், ஐபிசி பிரிவு 376 (வல்லுறவு) மற்றும் 506 (குற்றவியல் அச்சுறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என கடந்த 25ஆம் தேதி  சிபிஐ சிறப்பு நீதிபதி ஜக்தீப் சிங் தீர்ப்பு வழங்கி உள்ளார்.

தீர்ப்பைத் தொடர்ந்து  அவரது ஆதரவாளர்கள் ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் மிகப்பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.டில்லியிலும் கலவரம் வெடிக்காமல் இருக்க புதுடெல்லி மற்றும் டெல்லியின் பிறபகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் அருகில் உள்ள உத்தரபிரதேசம் மாநில போலீசார் உஷார் நிலையில் இருக்குமாறு உத்திரவிடப் பட்டுள்ளது. தொடர் பதற்றம், ஊரடங்கு உத்தரவுக்கு இடையே பஞ்ச்குலா நகரில் 24 ஆண்களும், 3 பெண்களும், ஒரு குழந்தையும் கொல்லப்பட்டதாகவும், சிர்சா நகரில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் ஆக மொத்தம் 31 பேரை இக்கலவரம் பலிவாங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தீர்ப்புக்கு முன்னர் இதனிடையே வானொலி மூலம் தமது ஆதரவாளர்களுக்கு அமைதி காக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார்  ராம் ரஹீம், தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லும்படியும், தீர்ப்பை சட்டப்படி தாம் எதிர்கொள்ளப்போவதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

தீர்ப்பு அறிவிக்கும் முன்னரே கலவரம் நடக்கலாம் என உளவுத்துறை எச்சரித்து இருந்ததாகவும் , அதனைத் தொடர்ந்தே  துணை ராணுவமும் ,ராணுவமும்கூட வரவழைக்கப்பட்டிருந்தது. மேலும் அதற்கு முன்பே கைபேசிகளையும் இணையத் தொடர்புகளையும், அரசு தற்காலிகமாக ரத்து செய்து வைத்திருந்தது. அந்தப் பகுதியில்  பள்ளிகளுக்கு விடுமுறை, கடைகள் அடைப்பும்   செய்யப் பட்டிருந்தது ,அதோடு 230 தொடர் வண்டிகளும் பேருந்துகளும் ஆகஸ்ட் 24 முதல் 27 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தன.இருந்தும் கலவரம் மூண்டதற்கு அரசு அந்தப் பகுதியில் சாமியாரின் ஆதரவாளர்களை அதிக அளவில் அனுமதித்ததே முதன்மைக் காரணம் என சொல்லப் படுதுகிறது.

சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததும், பஞ்சாப், ஹரியானா ஆகிய இரண்டு மாநில அரசுக்களுக்கும் கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம், வன்முறையின்போது சேதப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துக்களுக்கான இழப்பீட்டை, சாமியார் குர்மீத் சிங்கிடமிருந்தே வசூலிக்க உத்தரவிட்டது; குர்மீத்தின் சொத்துக்களை முடக்கவும் உத்தரவிட்டது.

இதனிடையே 14 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் குர்மீத் ராம் ரஹிம் சிங்குக்கு அளிக்கப்படும் தண்டனை தொடர்பான தீர்ப்பு வரும் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் குர்மீத் ராமிற்கு குறைந்த பட்சம் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படாலம் எனத்  தெரிகிறது.

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவருக்கு எப்படி இவ்வளவு ஆதரவு, வன்முறை என்ற கேள்வி இதைப் படிக்கையில் நமக்கெல்லாம் எழுவது இயல்வே. நம் நாட்டில், ஆன்மீகத்திற்கு என்று ஒரு கூட்டமும் ,அரசியலுக்கு என்று ஒரு கூட்டமும்,சமூக சேவைக்கு என்று ஒரு கூட்டமும்,சினிமாவிற்கு என்று ஒரு கூட்டமும் இருப்பதை நீங்கள் அறியலாம். இத்தனை துறைகளிலும் கால் பதித்த குர்மீத் ராம் ரஹிம் சிங்குக்கு இவ்வளவு ஆதரவாளர்கள் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. மேலும் இவர் ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பல சமூகப் பணிகளை தனி அமைப்பாக செய்துள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை.

படித்தவர்களும், அரசியல் தலைவர்களுமே இவருக்குப் பின்னால் அணி திரண்டு நின்றிருக்கும் போது, சாதாரண மக்கள் இவர் பின்னால் அணி திரளாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். அதே நேரத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும். இனி வரும் காலங்களில் அரசாங்கங்கள் இது போன்ற  சாமியார்களின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், கூடவே மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் இது போன்ற நிகழ்வுகள் தடுக்கப் படும். இல்லாவிட்டால் வழக்கம் போல  இது ஒரு தொடர் கதையாகிவிடும்.

 

  – வியன் பிரதீப்.

 radheepece@gamil.com

Related Posts