இந்திய சினிமா சினிமா பிற

“இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” நம்பிக்கை அளிக்கிறது…

பள்ளிக்கூடத்தில் முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், எதற்கு படிக்கிறோம் என்றே தெரியாமல் மனப்பாடம் செய்து, 4 மார்க்குக்கும், 5 மார்க்குக்கும் படித்த போது தெரியாத முக்கியத்துவத்தை அதியனின் “குண்டு” உணர்த்துகிறது…

படத்தில், காயலாங்கடையில் ஏகாதிபத்தியத்தோடு சண்டை போடும் நாயகன் ஒருவனை தேர்ந்தெடுத்திருக்கிறார்…
அந்த நாயகன் பஞ்ச் டயலாக் பேசவில்லை…மலைக்கு மலை தாவ வில்லை….மனித ஆற்றலுக்கு அப்பால் அறிவியலை மிஞ்சி பறக்கவில்லை…. அவனுடைய புலன்கள் அறிவியலுக்குட்பட்டு வேலை செய்கின்றன..

காதலிக்கிறான்…

அழுகிறான்…

உழைக்கிறான்…

மனிதாபிமானத்தை உடையாக வரித்திருக்கிறான்…

தனக்கு தெரிந்த நியாய உணர்விலிருந்து சக தொழிலாளியிடம் உரையாடுகிறான்… அந்த தொழிலாளிக்கு முதலாளிக்கு விசுவாசமான தொழிலாளி…

நாம் தொழிலாளி வர்க்க உணர்வு பெற என்ன உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டுமோ அவ்வாறான உரையாடல்… நேர்த்தியான உரையாடல்… அந்த ‘விசுவாசி’யாக முனிஷ் காந்த் நடித்திருக்கிறார்.. ஒருவகையில், முனிஷ் காந்த் ஏற்றிருக்கும் கதாபத்திரம், நம்மில் பலரையும் ஒத்திருப்பதாகவே இருக்கிறது….

உண்மைகளை உணர்ந்து கொள்ளும் தருணத்தில் முனிஷ் காந்த் ஏற்று நடித்திருக்கும் தொழிலாளி கதாபாத்திரம், தானும் தொழிலாளிதான் என்று வர்க்க உணர்வு பெறுகிறானா இல்லையா?
அவனுடைய இந்த போராட்டத்தில், காதல் துணை செய்கிறதா? குறுக்கிடுகிறதா?

என பல்வேறு தளங்களில் இயக்குனர் கதையை பின்னியிருக்கிறார்…

இயக்குனரின் திரைக்கதையை, காட்சி பிரதியாக்கி கொடுத்திருக்கிற ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் இசைக் கோர்த்துள்ள டென்மா என அனைவருக்கும் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். இவை ஒருபுறமிருக்கு, குண்டு எனக்கு நிறைய நினைவலைகளை தோற்றுவித்தது, செய்திகளை நினைவூட்டியது

குண்டு திரைப்படத்தின் தலைப்பே பல்வேறு சம்பவங்களை நினைவூட்டியபடியே இருந்தது…படம் அவற்றை குறிப்பாக தட்டியெழுப்பியிருக்கிறது

குண்டு என்றதும் முதலில் நினைவுக்கு வந்தது..
1992 ஆம் ஆண்டு நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்பு, தொடர்ந்து நடந்த மதக்கலவரம், அதன்பின்னர் பாம்பேயில் நடந்த குண்டு வெடிப்பு, ஊரடங்கு உத்தரவு, கலவரத்தில் பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் குண்டுகள் ஆகியவைதான்…அந்த சிறு வயதில் நம்மீது வந்து விழுந்து விடுமோ என்ற பீதி, கையை தூக்கியபடி அகதிபோல, விக்டோரியா டெர்மினஸிலிருந்து ஊருக்கு தப்பித்தோம் என்று சென்றதுதான்….

அதற்கு அடுத்து நினைவுக்கு வந்தது 1998ம் ஆண்டு மே மாதம் நடந்த சம்பவம், கோடை விடுமுறைக்கு எங்கள் கிராமத்திற்கு சென்றிருந்த போது நடந்தது, எங்கள் ஊர், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள கோடாரங்குளம்… மே மாதத்தின் சுட்டெறிக்கும் வெயிலிருந்து தப்பிக்க, ஓலை வேயப்பட்டிருந்த மேலத்தெரு டீக்கடையில் ஒதுங்கினேன். அந்த நடுமத்தியான வேளையில்

” ஏ இங்கேரு, அமெரிக்கா காரன் கண்ணுல மண்ல கண்ணத்தூவி நம்ம நாட்டுக்காரனுவ அணு குண்டு சோதனை நடத்தி புட்டானுவ பாத்தியா?” என்று மேலூர் டீக்கடையில் அமர்ந்து தினகரன் நாளிதழை படித்தப்படி ஒரு தாத்தா வியாக்யானம் செய்து கொண்டிருந்தார்… அதை கேட்ட டீக்கடைக்கார மாமா

“ பொழுதன்னைக்கும் ஒத்த பேப்பர படிச்சிட்டு, இப்படி அரசியல் பேசிட்டே கெடயும்….டீக்கு காசு கொடுத்தீராதீரும்..தூர எழுந்திருச்சு போரும்” என்று அவரை திட்டினார்…அதை கேட்ட அந்த தாத்தா “ஓசி மயித்துலயே குடிக்கேன், மொத்தமா வாங்கிட்டுதானடே உடுவே…போ உன் டீயும் வேண்டாம், உன் பேப்பரும் வேண்டாம்” என்றபடி அங்கிருந்து கிளம்பினார்… நம்மையும் திட்டுகிறார் போல என்று நினைத்தப்படி நான் அங்கிருந்து இடத்த காலி பண்ண முயற்சி செய்தேன்…

“ஏய் மாப்பிள, நீ இரு, உன்னை ஒன்னும் சொல்லல” என்றதும் அந்த தாத்த கையில் வைத்திருந்த பேப்பரை எடுத்து படிக்க தொடங்கினேன்…

அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில், எதுவுமே பெரிதாய் மாறாத இந்தியாவில் “இந்தியா ஒளிர்கிறது” என்ற காதை கிழிக்கும்…முழக்கம்…ஆங்காங்கே கேட்க தொடங்கிற்று… இந்த இரைச்சல்களுக்கிடையே அறிமுகமான அப்துல் கலாமை பராக்கிரமங்களை தெரிந்து கொள்ள “அக்னி சிறகுகள்” நூலில் முக்கோ முக்கென முக்கி படித்து முடித்தேன்…
பெரிய பிஸ்தாதான் போல, என்று நினைத்துக் கொண்டிருந்த போது, மும்பையில் ரயில் பெட்டிகளில் குண்டு வெடிப்பு செய்தி, தாராவிக்கு மிக அருகில் இருக்கிற மாஹிம் ரயில்வே ஸ்டேசனிலும் குண்டு வெடித்தது… அந்த ரயில் நிலையத்தில் இறந்து போனவர்களுக்கு நினைவு ஸ்தூபி திறப்புவிழாவுக்கு அதே அப்துல் கலாம் ஜனாதிபதியாக வந்திருந்தார்…

அவ்ளோ தூரம் வந்தவரு தாராவில இருக்கிற தமிழர்களை பார்க்க வருவாருன்னு நினைச்சேன்…ம்ஹூம், இந்துஸ்தான் லீவர் நிறுவனத்திற்குதான் போய் வந்தார்…அப்போதுதான், அவர் நம்மாளு கிடையாது போல, ஏழைகள பத்திலாம் நினைப்பு வராது போல தோன்றியது..

பின்னாட்களில், கூடங்குளம் அணு உலை தொடர்பான செய்தி கவனம் ஈர்த்தது…போராட்டம் உச்ச வேகத்தில் நடந்து கொண்டிருந்த போது, கூடங்குளத்தை சார்ந்த பீடி சுற்றும் பெண் தோழி, அவள் பெயர் தங்கம், அவளிடம் கொஞ்சம் நக்கலாக

”அது இருந்தா உங்களுக்கென்ன, இந்த நாட்ட முன்னேத்துறதுக்காக அது இருந்ததான் என்ன?” என்று கேட்டேன்…

”ஆங்…அத எடுத்து உங்க மடில வச்சிக்க வேண்டியதுதானே” என்றாள்…

ஆனால், சில நாட்களில், மடியில் கனமில்லாத ”ஸ்ரீ ஸ்ரீ அப்துல்கலாம் ஜி”, கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று கூடங்குளம் அணுமின் நிலையத்துக்குள்ள சரட்டுனு போய்ட்டு, விருட்டுனு வந்து அணு உலை பாதுகாப்பானதுன்னு சர்ட்டிபிகேட் கொடுத்தாப்டி… இப்படி குண்டுகள் பற்றி வந்து போன நினைவுகள் எதுவும், நம்மை குண்டுகள் காக்கும் என்ற நம்பிக்கையை கொடுக்கவில்லை…

இப்படி எங்கெங்கோ போன நினைவுகள், இரண்டாம் உலகப்போர் காலத்தை பற்றிய செய்திகளுக்கும் சென்று வந்தது…

இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலத்தில் கொண்டு வரப்பட்ட Defence of India Act 1939 என்ற பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டன. தொழிலாளிகள் வர்க்கமாக அணி திரண்டு வந்த சூழலில், 1941ம் ஆண்டு உளவுத்துறை தரப்பில் பிரிட்டிஷ் அரசுக்கு

“ கம்யூனிஸ்டுகளை மேலும் முன்னேற அனுமதிப்பது அபாயகரமானது, தொழிலாளர்கள் உலகில் ஒரு முறை அமைதி குலையுமானால், மீண்டும் நிலைநாட்ட நீண்ட நாட்களாகும், யுத்த விவகாரத்திலும் பல்வேறு தடைகள் உருவாகும்” என்றது அந்த அறிக்கை…

கிட்டத்தட்ட தொழிலாளி வர்க்க பலமாக இருந்த எல்லா காலக்கட்டத்திலும், போரை காரணம் காட்டி, தேசபக்தி பூச்சாண்டி காண்பித்து, 1950, 1962, 1971ம் என பல்வேறு காலக்கட்டங்களில் அடக்குறை சட்டங்கள் போடா, தடா வெவ்வேறு பெயர்கள் எடுத்தப்படி வந்து கொண்டிருக்கின்றன…

ஆனால், இன்று நிலைமைகள் வேறு வடிவம் எடுத்திருக்கிறது…

”இந்தியா ஒளிர்கிறது” என்ற கும்பல் “Clean India” என்ற போர்வையில் இந்திய தொழிலாளர் வர்க்கத்தை முற்றாக அழித்துவிட துடிக்கிறது….

உழைக்கும் வர்க்கம் பலமாக இல்லாத சூழலில், ஜனநாயக போர்வையிலேயே தங்களுக்கு தேவையான அனைத்து அடக்குமுறைகளையும், ஆளும் வர்க்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள நிலையில்…

அதியன் தன்னுடைய திரைப்படத்தின் ஊடாக, முதலாளித்துவ சுரண்டலின் குறியீடாக குண்டை முன்வைத்து, நெருங்கி வரும் அபாயத்தை முன் உணர்ந்து உழைக்கும் வர்க்கமாக அணி திரளுங்கள், என்று காலத்தே மிக பொறுத்தமாக அறைகூவல் விடுத்திருக்கிறார்…

இயக்குனருக்கு வாழ்த்துகளும், முத்தங்களும்

மகிழ்நன் பா.ம.

Related Posts