அரசியல்

ஜி.எஸ்.டி – எனும் பொருளாதார துல்லியத் தாக்குதல்…!

இந்திய நாட்டில் இன்று பல வகை வரிகள் நடைமுறையில் உள்ளன. ஆம். ஏறத்தாழ ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சராசரியாக 10 வகையான வரிகளைச் செலுத்த வேண்டியுள்ளது. பண்டங்கள் மற்றும் சேவைகள் மீது மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி நிறுவனங்கள் ஆகியவை விதித்து வரும் வரிகள் அனைத்தும் இவற்றில் உள்ளடக்கம்.

ஒருங்கிணைக்கப்பட்ட வரி முறை :

இத்தகைய வரிகள் அனைத்தையும் பண்டங்கள் மற்றும் சேவைகள் மீதான ஒரே வரியாக மாற்றுவதற்கான முயற்சி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. 2007ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மதிப்புக் கூட்டு வரி (Value Added Tax – VAT) இந்த முயற்சியில் முதல் படியாக அமைந்தது. ஒரே உற்பத்திப் பண்டத்திற்கு அல்லது சேவைக்கு பல முறை வரி விதிக்கும் முறையினை மாற்றி, அவற்றின் மதிப்பு எங்கு கூடுகிறதோ, அந்தக் கூடுதல் மதிப்பிற்கு மட்டும் வரி விதிப்பு (Value Added Tax – VAT) என்ற வகையில் வாட் வரி விதிப்பு தொடங்கியது.

வாட் வரி விதிப்பு முறையினைத் தொடர்ந்து, இத்தனை கோடி வரிகளுக்கும் மாற்றாக ஒரே வரி என்பது சாத்தியம் ஆகவில்லை எனினும், பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகள்  (Goods and Services Tax – GST)  மூன்று வகையாக சுருக்கப் பட்டுள்ளன.  மத்திய வரி (Central GST – CGST), மாநில வரி (State GST – SGST) இது தவிர மாநிலங்களுக்கு இடையிலான விற்பனையில் விதிக்கப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி (Integrated GST – IGST) என்பவையே அவை. (யூனியன் பிரதேசங்களுக்கான வரி UGST என அழைக்கப்படுகிறது.)

இழுபறி :

ஜி.எஸ்.டிக்கு மாறிச் செல்வதற்காக நடைபெற்ற அரசியல் விவாதங்களில், எந்தவொரு கட்சிக்கும் கோட்பாடு ரீதியான எதிர்ப்பு இருந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், மூன்று விஷயங்களில் மத்திய மாநில அரசுகளுக்கிடையிலும், மாநிலங்கள் தங்களுக்கு இடையிலும் ஒரு இழுபறி இருந்தது.

  1. மத்திய மாநில அரசுகளுக்கிடையில் வரி விதிப்பு அதிகாரங்களின் ஏற்படும் அரிப்பு.
  2. வசூலான வரிகளில் மத்திய மாநில அரசுகளுக்கிடையிலும், மாநில அரசுகள் தங்களுக்கிடையிலும் பகிர்மானம் செய்வதில் உள்ள பிரச்சினை.
  3. ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்குப் பின்னர், அனைத்து அல்லது சில மாநிலங்களில் வரி வருமானம் குறைவதால் ஏற்படும் பிரச்சினைகள்.

சமரசம் :

இப்போது இந்தப் பிரச்சினைகளில் ஓரளவு சமரசம் செய்யப்பட்டு, ஜி.எஸ்.டி முறையும், அதனை அமலாக்குவதற்கான ஜி.எஸ்.டி கவுன்சிலும் உருவாக்கப்பட்டு விட்டன. இருப்பினும் இந்த சமரசங்கள் காரணமாக பழைய வாட் முறையில், கட்டுக்குள் நிறுத்தப்பட்டிருந்த மத்திய அரசின் வரி விதிப்பின் எல்லை விரிவு படுத்தப்பட்டு, அந்த அளவிற்கு மாநில வரி விதிப்பின் எல்லை சுருக்கப்பட்டு விட்டது.

ஜி.எஸ்.டி முறையில் உள்ள மற்றொரு பிரச்சினை என்னவெனில், வரி விதிப்பு, விற்பனை முனையில் மட்டுமே என்பதால் பண்டங்கள் மற்றும் சேவைகள் உற்பத்தியாகும் மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, அந்த மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பிற்கு இழப்பீடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்ட நிலையில், முதல் ஐந்து ஆண்டுகளுக்கு அதற்கான இழப்பீட்டினை மத்திய அரசு வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி வரி விகிதங்களுக்கு உச்சவரம்புகள் முடிவு செய்யப் பட்டிருக்கின்றன. பொதுவாக, அது 40 சதவீதம்  (மத்திய அரசு  20% + மாநில அரசு 20%) என  ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு செய்துள்ளது. எதிர்காலத்தில் உச்சவரம்புகளை உயர்த்துவதற்கு கவுன்சிலுக்கு உரிமை உண்டு.

தவிர, ஜி.எஸ்.டி வரிக்கு மேல், சில பொருட்களுக்கு செஸ் வரி (கூடுதல் தீர்வை) விதிப்பதென்பதும் முடிவு. கோலா பானங்கள், கார்கள் போன்ற ஆடம்பரப் பொருட்களுக்கு 15% சதவீதம் வரையிலும் செஸ் வரி செலுத்த வேண்டும்.   சிகரெட் மற்றும் புகையிலைப் பண்டங்களுக்கு 290% (1000 எண்ணிக்கைக்கு ரூ.4170) வரையிலும் கூடுதல் செஸ் வரி உண்டு. பான் மசாலாவிற்கு 135% சதவீதம் செஸ் வரி. புகையிலைப் பண்டங்கள், மது பானங்கள் போன்றவை ‘பாவப் பண்டங்கள்’ (Sin goods) என அழைக்கப்படுகின்றன. எனினும், பல மாநில அரசுகளின் எதிர்ப்பின் காரணமாக, பீடிக்கு செஸ் வரி எதுவும் விதிக்கப்படவில்லை.

விலக்கு :

பெட்ரோல், டீசல் மற்றும் மது பானங்கள் மீதான வரி விதிப்பினை ஜி.எஸ்.டி எல்லைக்குள் கொண்டு வருவதில்லை என்பது மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான மற்றொரு சமரசம்.  மறைமுக வரிகளிலேயே கறவைப் பசுவாக இருக்கும் இந்த மத்திய சுங்க வரி, எக்சைஸ் வரி, மாநில விற்பனை வரி போன்றவற்றை விட்டுக் கொடுப்பதற்கு இரண்டு தரப்புமே தயாராக இல்லை. மக்களை ஒட்டச் சுரண்டும் வாய்ப்பு வேறு எந்த வரியிலும் இந்த அளவு இல்லை.

பெட்ரோல், டீசல் மீதான வரிகள் மட்டும் மாநில அரசுகளின் சராசரி வருவாயில் 33 சதவீதம் என்ற நிலையில் மாநில அரசுகள் அதை வலியுறுத்தின. அதே போன்று, மது பானத்திற்கான ஆல்கஹால் மீதான வரிகள் மாநில அரசுகளின் சராசரி வருவாயில்  25 சதவீதமாக இருக்கும் நிலையில்  அதுவும் மாநிலங்களின் கோரிக்கையாக மாறியது. எனவே அதற்கும் விலக்கு அளிக்கப்பட்டது. மாநில அரசியல்வாதிகள் சிலர் இந்தத் தொழிலில் இருப்பதும்,  ஜி.எஸ்.டியின் வெளிப்படைத்தன்மை தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி விடக்கூடாது என்று அவர்கள் நினைப்பதும் அதற்கு காரணம் என்பது  இதில் கூடுதல் செய்தி.

உயரும் சுமை :

இந்த ஜி.எஸ்.டி வரிகளைப் பற்றிப் பேசும் போது, ஒரு விஷயத்தை மறந்து விடக் கூடாது. இந்த வரிகள் அனைத்தும் மறைமுக வரிகளே என்பதையும், அந்த வரிகளை உயர்த்துவதற்கான ஏற்பாடே ஜி.எஸ்.டி முறை என்பதும் நம் நினைவில் இருக்க வேண்டும். இதில் மத்திய அரசு,  மாநில அரசுகளையும் தனது பங்காளிகளாக மாற்றியுள்ளது.

நமது நாட்டின் வரி வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு மறைமுக வரிகளே. இந்தியாவின் ஒட்டு மொத்தப் பொருளாதாரத்தில் நேரடி வரிகளின் பங்கினை ஆய்வு செய்தால் 2007 – 08ல் ஜி.டி.பி மதிப்பில் அது 6.3% ஆக இருந்தது. 2015 – 16ல் அது 5.47% ஆகக் குறைந்துள்ளது.

நேரடி வரிகளின் பங்கினை உயர்த்துவதற்கு தயாராக இல்லாத மத்திய அரசிற்கு,  மறைமுக வரிகளின் பங்கினை உயர்த்துவதற்கும், வரி வசூலை உறுதிப்படுத்துவதற்கும் ஜி.எஸ்.டி வரி முறை நன்கு உதவுகிறது.

 பறி போகும் சுதந்திரம் :

வரி விகிதங்கள் உள்ளிட்ட ஜி.எஸ்.டி குறித்த அம்சங்களைத் தீர்மனிப்பதற்கான ஜி.எஸ்.டி கவுன்சில் உருவாக்கப்பட்டு செயல்படத் தொடங்கி விட்டது. மத்திய நிதி அமைச்சர், வருமானம் குறித்த பிரிவிற்குப் பொறுப்பாக உள்ள மத்திய இணை அமைச்சர், மாநில நிதி அமைச்சர் அல்லது வரிவிதிப்பிற்குப் பொறுப்பான  அமைச்சர்கள் அல்லது அவற்றிற்குப் பதிலாக வேறு அமைச்சர்கள் அந்தக் கவுன்சிலில் இடம் பெறுவர். மத்திய அமைச்சர்களின் வாக்குகளுக்கு 33 சதவீத மதிப்பும், மாநில அமைச்சர்களின் ஒட்டுமொத்த வாக்குகளுக்கு 66 சதவீத மதிப்பும் அளிக்கப்படும். முடிவுகள் அனைத்தும் வாக்கெடுப்பின் மூலமே தீர்மானிக்கப்படும். பண்டங்களுக்கும், சேவைகளுக்கும் உரிய வரி விகிதங்களை எல்லாம் இந்தக் கவுன்சில் தான் தீர்மானிக்கும். எவற்றிற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பதனையும் இந்தக் கவுன்சிலே தீர்மானிக்கும். இத்தகையதொரு பின்னணியில், வரியின்  அளவு உள்ளிட்ட வரி விதிப்பில் ஒரு மாநில அரசின் சுதந்திரம் எந்த அளவு பறி போகும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை விட, ஆடம்பரப் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கலாம் என்று ஒரு மாநில அரசு முடிவு செய்தால் ஜி.எஸ்.டி வரி முறை அதற்கு குறுக்கே நிற்கிறது. ஏனெனில், அந்த அம்சங்களை ஜி.எஸ்.டி கவுன்சில் தான் முடிவு செய்ய அதிகாரம் படைத்தது. தங்க பிஸ்கட் என்றால் 3 சதவீத வரி, திங்க பிஸ்கட் என்றால் 18 சதவீத வரி என அண்மையில் சமூக வலைதளங்களில் உலவி வரும் பதிவுகள் இந்த நிலைமையினை படம் பிடித்துக் காட்டுபவையேயாகும்.

மத்திய அரசு எனினும், மாநில அரசுகள் எனினும் அவைகள் விதிக்கும் வரிகளும், அவற்றின் அளவுகளும் அவற்றின் அரசியல் கொள்கை தொடர்பான அம்சங்கள். அந்த வரிகளை நிறுவனப்படுத்துவதன் மூலம் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதில் மாற்றம் இருக்காது என்று ஆகிவிட்டால்,  அரசியல் ரீதியாக கட்சிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மக்களுக்கு எங்கே இருக்கிறது? துணி துவைக்கும் சோப்புகளில் தங்களுக்குப் பிடித்ததை சந்தையில் மக்கள் வாங்கிச் செல்வது போன்று நிலை அரசியல் கட்சிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் உருவாகி விடும் என பொருளியல் அறிஞர் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் அண்மையில் எச்சரித்திருக்கிறார்.

முடிவாக…

ஜி.எஸ்.டி குறித்து அதீதமான பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தின் அத்தனை நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணியாக இது முன்னிறுத்தப்படுகிறது. இந்த வரிவிதிப்பு முறை காரணமாக விலைகள் குறையும், பணவீக்கம் குறையும் ,  ஜி.டி.பி மதிப்பு உயரும் என்றெல்லாம் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களையும், ஒரு வரி விதிப்பு முறை மாற்றி விடும் என்பதற்கு எவ்வித தர்க்க நியாயங்களும் இல்லை.

இது தேசியச் சந்தையினை உருவாக்கும் என்பது மற்றொரு வாதம். உண்மை என்னவெனில், தேசியச் சந்தை ஏற்கனவே நடைமுறையில் இருப்பது தான். ஜி.எஸ்.டி புதிதாக எந்தச் சந்தையினை உருவாக்கப் போவதில்லை.

இந்த ஜி.எஸ்.டி திட்டம் முழுமையாக அமலுக்கு வரும் போது, மத்திய – மாநில முரண்கள் மேலும் பல முன்னுக்கு வரும். அது தவிர, சில  மாநிலங்களில், குறிப்பாக உற்பத்தி மாநிலங்களில் அவர்களுக்கு ஜி.எஸ்.டி மூலம் அதிக பலன் இல்லாத நிலையில், ஜி.எஸ்.டி காரணமாக விதிக்கப்படும் புதிய வரிகள் அல்லது வரியேற்றங்கள் புதிய கோரிக்கைகளையும், போராட்டங்களையும் உருவாக்கும். குஜராத் மாநிலத்தில் அந்தப் போராட்டங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டன.

வரிகளை மையப்படுத்துவதிலும், வரி வசூலை கட்டுக்குள் கொண்டு வந்து ஒழுங்கு படுத்துவதிலும் இந்த ஜி.எஸ்.டி வரி முறை சற்று உதவும்   என்பதைத் தாண்டி வேறு பெரிதாக ஒன்றும் நடந்து விடாது.

இ.எம் ஜோசப்

Related Posts