அரசியல்

பண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (2)

தொழில்முனைவோர் சில்லரை வர்த்தகர்கள் பயன் பெறுவார் என்பதில் ஓரளவு உண்மையிருக்கிறது. மூன்று மாதத்திற்கொருமுறை கணக்கை சரிசெய்தால் போதும் என்கிறது இந்த வரிவிதிப்பு முறை. மூன்று மாதம் வரை அவர்கள் வாங்கிய பொருட்கள்/சேவைகளுக்கு செலுத்திய வரிக்கான ஆதாரத்தை தயார் செய்து வைத்துவிட்டு விற்ற பொருட்களுக்கு அரசுக்கு செலுத்த வேண்டிய வரியிலிருந்து கழித்துவிட்டு மீதியை செலுத்தினால் போதுமானது. ஆகவே பயனீட்டாளரிடம் வசூலித்த வரி தொழில் முனைவோர் வர்த்தகர்கள் கையிலிருக்கும் அவர்களின் பணப் புழக்கத்திற்கு இது உதவிகரமாக இருக்கும்.

சராசரி நுகர்வோர் பயனடைவார் என்பதில் எந்த ஆதாரமும் இல்லை. காரணம் அவர் முழுவரியையும் செலுத்திவிட்டுதான் பொருளை/சேவையை நுகர முடியும். வரியின் அளவை அரசு தீர்மானிக்கும்.

இன்று நமது நாட்டில் விதிக்கப்படும் வரிகள் என்பது உலக சராசரியைவிடக் குறைவு. நமது நாட்டில் வரிக்கும் ஜிடிபிக்கும் உள்ள விகிதமான உலக சராசரியை மிகக் குறைவு. ஆனால் சராசரி லாபம் உலக சராசரி லாபத்தை விட அதிகமாக இருப்பதால் பொருட்களின் விலை அதிகம். இந்த குறைவான நிலையிலேயே வேண்டல் குறைவாக இருக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். வரியின் அளவு புதிய சட்டம் அமலுக்கு வந்தால் மாறப் போவது இல்லை. அரசின் நிதியாதாரங்களில் இந்த மறைமுக வரிகள் முக்கிய பங்கு வகிப்பதால் வரியைக் குறைத்து வருமானத்தை இழக்காது. உலகமயமாக்கல் கட்டத்தில் அரசின் அதிகாரம் குறைக்கப்பட்ட சூழலில் நிதியாதாரத்திற்காக புதிய முயற்சிகள் எடுக்க முடியாது ஆகவே வரியை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை. மாறிய கணக்கிடும் முறையால் நுகர்வோருக்கு எந்த பயனும் கிடையாது. பணவீக்கம் குறையாது, அதிகரிக்கும் என்பதே எனது கணிப்பு. எப்படி அதிகரிக்கும் என்பதை பின்னால் குறிப்பிடுகிறேன்.

இப்படி ஒரு வரிச் சீர்திருதத்திற்கான மூலகாரணம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். 1991ம் ஆண்டு முதல் உலகப் பொருளாதாரம் ஒரு புதிய சட்டகத்தின் (New Paradigm) வாயிலாக ஒழுங்கமைக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. பனிப்போர் முடிந்து சோசலிசம் வீழ்த்தப்பட்டவுடன் முன்னுக்கு வந்து புதிய ஒழுங்கமைவின் ஒரு அங்கமே இது. இதன் அடிப்படை தாத்பர்யம் “தடையில்லா வாணிபம்“ (Free Trade) இந்தக் கருத்தோட்டம் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியதல்ல. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டது. ஆம் ஐரோப்பாவில் முதலாளித்துவம் வேரூன்றி செழித்து வளர ஆரம்பித்த பொழுது தோன்றிய கருத்தே இது. இங்கிலாந்தில் கிட்டத்தட்ட பதினேழாம் நூற்றாண்டு முதல் இருந்த தானியச் சட்டத்தை (Corn Laws) ரத்து செய்ய வேண்டுமென வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படைக்கு “தடையில்லா வாணிபம்“ என்ற கோட்பாடே காரணமாகும். விவசாயம் முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் வெளிநாட்டு தானியங்களுடன் போட்டியிட முடியாத்தால் முதலாளித்துவ விவசாய உற்பத்தியாளர்கள் இறக்குமதி தானியத்திற்கு தடைவிதிக்க கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் தானியச் சட்டம் வந்தது. ஜவுளித் தொழில் செழித்து வளர்ந்த பின்னர் இந்தச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரிக்கை எழுந்தது. குறிப்பாக 1860களில் இங்கிலாந்தில் ஏற்பட்ட பருத்திப் பஞ்சத்தில் ரத்து செய்யப்பட்டது. இதை அன்றைக்கு தடையில்லா வாணிபத்தின் வெற்றி என்று கொண்டாடினர். அதன் உள் பொதிந்திருக்கும் விஷயம் இதுதான். பருத்தி நூலை விறைப்பாக்க அதன் மேல் தடவப்படும் பசையானது தானிய மாவிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு வந்த காலத்தில் தானிய வரியை ரத்து செய்தால் நூற்பு ஆலை அதிபர்களுக்கு 1860களில் 200,000 ஸ்டெர்லிங் பவுண்ட் மிச்சமாகும் என்பதை மனதில் வைத்தால் இந்தக் கோரிக்கை ஏன் எழுந்தது என்பதும் புரியும் கோரிக்கையை பொதுவாக்க கண்டுபிடிக்கப்பட்ட கோட்பாடான தடையில்லா வாணிபத்தின் பின்னணியும் புரியும்.

ஆகவே “தொழில் வளர்ச்சி“, “முன்னேற்றம்“, “வேலைவாய்ப்பு“ போன்ற கவர்ச்சிகரமான கோஷங்களை முன்வைத்து இவைகளை அடைய வேண்டுமானால் தடையில்லா வாணிபம் என்ற கோட்பாடு அமலுக்கு வரவேண்டும் என்ற வாதம் முன்னுக்கு வந்தது. முதலாளித்துவத்தின் போட்டி அமைப்பு பலவீனமானவுடன் முதலாளித்துவத்தின் அடிப்படை கோஷங்களான தடையில்லா வாணிபம், குறைந்த அரசாங்கம் (Minimum Government) போன்றவைகள் வந்துவிட்டன. தடையில்லா வாணிபத்திற்கு தடையாக இருப்பது வரியமைப்பு முறைகள். இந்த வரியமைப்பு முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவந்து அரசின் தலையீட்டை குறைக்க வேண்டும் என்பதே நவீன தாராளமயமாக்கத்தின் கோரிக்கையாக இருந்தது. வரியமைப்பு முறையில் மதிப்புக் கூட்டல் அடிப்படையில் வரிவிதிக்க வேண்டும் என்ற ஆலோசனை 1990களில் ஆரம்பத்தில் உலக நிதி நிறுவனங்களால் முன்வைக்கப்பட்டு கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் வரிச் சீர்திருத்தம் அமலுக்கு வந்தது. நமது நாட்டில் நிதியமைப்பு முறையைப் பற்றி ஆய்வு செய்த ராஜா செல்லையா கமிட்டியும் 1992லேயே பரிந்துரைத்த விஷயம்தான் இது. முதலில், அதாவது 1990களில் மத்திய கலால் வரியானது மதிப்பு கூட்டல் கோட்பாட்டின் அடிப்படையில் சென்வாட் ஆகி பிறகு விற்பனை வரிக்கும் மதிப்புக் கூட்டல் கோட்பாட்டை புகுத்தி 2000களில் மதிப்புக் கூட்டல் வரி வந்துவிட்டது.

பசே வரி (GST) ராஜ்யம் ஏற்படுத்தப்பட்டால் மாநிலங்களுக்கு வருமான இழப்பு ஏற்படாது என்று ஓங்கி அடித்துப பேசிக்கொண்டிருந்த பொழுது தற்காலிகமாகவேனும் கடுமையான இழப்பு ஏற்படும் என்று புள்ளியல் அடிப்படையில் அஇஅதிமுக தன்னுடைய வாதத்தை முன்வைத்தவுடன் மாநிலங்களின் இழப்பை மத்திய அரசு ஈடுகட்டும் என்று பேசி வருகிறது. வெறும் பொருளாதார நோக்கிலும் மாநில அரசின் உரிமைகள் என்ற நோக்கிலும் மட்டும் அஇஅதிமுக இதுவரை எதிர்த்து வருகிறது. நான் இந்த கோட்பாடே மக்கள் நலனுக்கு எதிரானது என்று வாதிட விரும்புகிறேன். என்னைப் பொருத்தவரை பசே வரியின் கோட்பாட்டு அதிகாரக் குவியலை ஆதரிக்கும் கோட்பாடாகும். அதிகாரக் குவியல் அடிப்படையில் ஜனநாயக விரோதமானது. ஒரு வரிவிதிப்பு முறையானது எப்படி அதிகாரக் குவியலை குறிக்கிறது என்பதை விளக்குவதை என்னுடைய பின்வரும் பக்கங்கள் முயற்சிக்கும்.

ரிச்சர்ட் உல்ஃப் என்ற அமெரிக்கப் பொருளாதாரப் பேராசிரியர் கூறுகிறார்: எங்களது நாட்டில் எங்களது மக்கள் ஒரு மளிகைக்கடைக்குச் சென்று திடீர் சூப் வாங்க நினைத்தால் அவர்களுக்கு 41 தெரிவுகள் உள்ளது. ஆம் 41 வணிகச் சின்னங்களில் (Brand) உற்பத்தியான திடீர் சூப் பாக்கெட்டுகள் அருகருகிலேயே மளிகைக் கடையில் அமர்ந்திருக்கிறது. ஆனால் நாட்டை ஆளுவதற்கான அரசியல் கட்சி விஷயத்தில் இரண்டே இரண்டு தெரிவுகளே உள்ளது. அந்த இரண்டு அரசியல் கட்சிகளும் ஒரே பொருளாதாரக் கோட்பாடுகளை பின்பற்றுபவை. பக்குவப்பட்ட உற்பத்தியமைப்பு முறையில் நுகர்வோருக்கு பல்வேறு தெரிவுகள் (41 வணிகச்சின்ன சூப்புகள் போல்) இருப்பது போல் பக்குவப்பட்ட ஜனநாயகத்தில் பல்வேறு தெரிவுகள் இருக்க வேண்டாமா?. ஆனால் யார் வந்தாலும் ஒரே பொருளாதாரக் கொள்கை என்பதை எப்படி ஜனநாயகம் என்று கோரமுடியும் என்று கேள்வி எழுப்புகிறார். இந்த நிலையை எப்படி எட்டியது என்று ஆய்வு செய்தால் அவர்களின் சட்டதிட்ட முறைகள் இதைத்தாண்டி மாற்று அரசியல் பொருளாதாரக் கோட்பாடுகள் வரமுடியாதபடி மாற்றப்பட்டு விட்டன.

நமது நாட்டிலும் 2002ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் நிர்வாகச் சட்டம் (FRBM Act – Fiscal Responsibility and Budgetary Management Act) எந்த அரசு பட்ஜெட் போட்டாலும் அதில் பற்றாக்குறையானது நாட்டின் மொத்த உற்பத்தியில் 3 சதவீதத்திற்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது. இந்த மாதிரியான சட்டம் இந்தியாவில் மட்டுமல்ல ஐஎம்எஃப் வகுத்தளித்த பொருளாதார இலக்கணத்தை பின்பற்றும் நாடுகளிலெல்லாம் வந்துவிட்டது. ஆக ஆட்சி செய்பவர் குறிப்பிட்ட வகை பொருளாதாரக் கோட்பாடுகளையே பின்பற்ற வேண்டும் என்ற மறைமுக நிர்ப்பந்தம் உருவாகிய பிறகு மாற்று பொருளாதாரக் கோட்பாடுகளை வலியுறுத்திப் பேசுபவர்கள் அருகி ஒழிந்து போவது நடக்கும். இது பொருளாதாரக் கோட்பாட்டு நிறமாலையில் (Economic Policy Spectrum) ஒரு ஓரத்தின் ஒரு சிறு பகுதிக்குள் உன்னுடைய தெரிவை வைத்துக் கொள் என்று கட்டளையிடுவதற்கு சமம். அந்த சிறு பகுதிக்குள் தன்னுடைய விடிவுகாலத்தை தேட முடியாத மக்கள் மறு பகுதியைச் சென்று பரிசோதிக்கும் தெரிவு மறுக்கப்படுவதே ஜனநாயக மறுப்பாகும். பல்வேறு தெரிவுகளை முடக்கி ஒரே தெரிவை திணிப்பது அதிகாரக் குவியலின் வெளிப்பாடே. ஆக பசே வரியமைப்பு முறைக்குள் நாடு வந்துவிட்டால் உள்ளூர் அரசாங்கமானது தன்னுடைய வருமானத்தை தெரிவு செய்யும் உரிமை இழந்துவிடுகிறது. இதன் அடிப்படைச் சாரம் என்பது ஜனநாயக மறுப்பாகும்.

நாடுமுழுவதும் ஒரே மாதிரியான வரி என்பது பொருளுற்பத்தி மற்றும் விநியோகம் சீராக இருப்பதற்காக முதலாளிகளுக்கு சாதகமான வரிக் கொள்கையாகும். மக்களுக்கு இதனால் எந்தப் பயனும் கிடையாது. அவர்கள் பண்டங்களுக்கும் சேவைகளுக்கும் செலுத்த வேண்டிய வரியானது குறையப் போவது இல்லை. மாறாக ஒவ்வொரு தனிப்பட்ட முதலாளியும் செலுத்த வேண்டிய வரியானது குறைந்து அவர்களின் நிதிச் சுற்றோட்டம் எளிதில் நடைபெற வழிவகுக்கும். மறுபுறம் இந்த சலுகையானது மாநிலங்கள் நிதியாதாரத்திற்கான தெரிவிற்கு கடிவாளமிடுகிறது. மாநில அரசானது பசே வரிவிகிதத்தில் மாற்றம் கோரினால் அது பசே மன்றத்திற்கு (GST Council) விண்ணப்பிக்கலாமாம். தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தின் கீழ் நிர்வாகம் இயங்குவதற்கு பதில், நிர்வாகிகள் குழுவிற்கு கீழ் அரசாங்கத்தை இயக்கும் கோட்பாடு இது. எனவேதான் மீண்டும் சொல்கிறேன் இது ஜனநாயக விரோதமானது.

தடையில்லா வாணிபக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரே பொருளுக்கு அரசுக்கு பலமுறை வரிசெலுத்துவது தவறு (இந்த வாதத்தில் எனக்கு உடன்பாடு உண்டு) என்ற வாதத்தை முன்வைப்பவர்கள் அது முதலாளிகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பொதுமக்களுக்கும் பொருத்த வேண்டும் என்கிறார்களா என்றால் அது இல்லை. இதற்கான சிறந்த உதாரணம் தனியார் மயமாக்கப்பட்ட சாலைகள். ஒரு வாகனத்தை நாம் விலைக்கு வாங்கினால் அது 15 வருடம் ஓடும் என்று தீர்மானித்து அது ஓடுவதால் தேயும் சாலையை மறு சீரமைக்க அதன் பங்கைச் செலுத்த வேண்டும் என்று கூறி அதற்காக ஒரு வரியை மத்திய அரசு வாகனம் வாங்கும் பொழுதே எடுத்துக் கொள்கிறது. பதிவு செய்ய செல்லும் பொழுது 15 வருட சாலை வரியை செலுத்திய பிறகே மாநில அரசு பதிவு செய்து கொடுக்கிறது. நாம் வாங்கும் பெட்ரோலில் ஒவ்வொரு லிட்டருக்கும் சாலை பராமரிப்புக்காக 2 ரூபாயை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. இவ்வளவு முறை நாம் சாலை வரியைச் செலுத்திய பின் கட்டணச் சாலையில் பயணித்தால் ஒவ்வொரு 100 கிமீட்டருக்கும் 35 முதல் 140 வரை வாகனத்திற்கு தகுந்தாற்போல் சாலை தண்டல் காரர் எடுத்துக் கொள்கிறார். பல்முனை வரியை தடுக்கும் நோக்கம் கொண்ட தடையில்லா வாணிபக் கோட்பாடு இங்கே எங்கே அமலாகிறது?

விவாதப் பொருளை விட்டு விலகிச் சென்றாலும் இதை நான் குறிப்பிட்டாக வேண்டும். கட்டணச் சாலைகளின் கொள்ளையை நம்மால் ஜீரணிக்க முடியாது. உதாரணத்திற்கு சென்னையிலிருந்து விழுப்புரம் செல்வதற்குள் இரு முறை சுங்கச் சாவடியை கடந்து செல்ல வேண்டும். ஒரு கட்டணச் சாலையை அமைப்பதற்கு 80 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக சுங்கவரி வசூல் உரிமையாளர் கூறுகிறார். இன்று நாளொன்றுக்கு 63000 வாகனங்கள் கடந்து செல்கிறது இதை குறைந்தபட்ச கட்டணமான 35வைத்து கணக்கிட்டால் கூட ஆண்டுக்கு 200 கோடி வசூல் செய்கிறது பத்தாண்டுகளில் 2000 கோடி வசூல் செய்துவிட்டது.

இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் நாடு முழுவதும் ஒரே சமச்சீரான சந்தை உருவாகும் என்கிறார்கள் தடையில்லா வாணிப கோட்பாட்டாளர்கள். இந்த வாதத்தில் இருவிதமான ஆபத்துகள் உள்ளடங்கியிருக்கிறது. நாடு முழுவது ஒரே சமச்சீரான முன்னேற்றம் என்றால் அதை புரிந்துகொள்ள முடிகிறது. ஒரே சமச்சீரான சந்தை என்றால் அது யாருக்கு என்பதே நமக்கு எழுகிற கேள்வி. ஏன் ஒரே சமச்சிரான சந்தை இருக்க வேண்டும்? சந்தைக்காக மனிதர்களா மனிதர்களுக்காக சந்தையா என்ற கேள்வியும் எழுகிறது. சமச்சீராக இல்லாத ஒரு சமூகத்தில் சமச்சீரான சந்தையை மட்டும் உருவாக்க நினைப்பது அறிவுக்குகந்த விஷயமல்ல. சமச்சீராக இல்லாத சமூகத்தின் நிர்வாக அமைப்புகள் சமச்சிரில்லாத நிதியாதாரத்தை உடைய பூகோளப் பகுதிகள் தங்களது வளர்ச்சிக்காக சமச்சீரில்லாத வரிவிதிப்பு முறைகளை கையாள்வது நியாயம்தான். இதை அடித்து தரைமட்டமாக்கி சமப்படுத்துவது சமூக சமச்சீரின்மையை மேலும் ஆழப்படுத்தும் செயலாகும். இப்படி உள்ளூர் மட்டத்தில் முடிவெடுக்க வேண்டிய விஷயங்களை தேசிய அரசு தலையிட்டு தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொள்வது அதிகாரக் குவியலைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. முதலாளித்துவ நலன்களுக்காக உள்ளூர் மக்களின் அபிலாஷைகளை காவு கொடுப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயமல்ல.

தடையில்லா வாணிபக் கோட்பாட்டாளர்கள் மற்ற நாடுகளில் இதுபோன்ற வரிச் சீர்திருத்தம் வந்துவிட்ட பிறகு இந்தியா பின்தங்கியிருக்க முடியாது. என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்கள். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டால், இது மற்றவர்களுக்காக நமது முக அமைப்பை நாம் செதுக்கிக் கொள்ளும் செயலாகும். எல்லா நாடுகளிலும் இதே வாதத்தை முன்வைக்கும் பிரிட்டன்வுட் அமைப்புகள் தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் வைத்தி, சண்முக சுந்தரத்தையும் மோகனாவையும் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுவதற்கு நிர்ப்பந்தித்த தகிடுதத்த செயலை அரங்கேற்றுகிறது. மற்றவர்கள் இந்த வரியமைப்பு முறைக்குள் சென்றுவிட்டார்கள் நாமும் செல்லவில்லை என்றால் நம்மை நோக்கி அன்னிய முதலீடு வராது என்று அடுத்த வாதத்தையும் வைக்கிறார்கள். அன்னிய மூலதனத்திற்காக நமது கொள்கை உரிமையை விட்டுக்கொடுப்பது எப்படி நமக்கு லாபத்தில் முடியும்? வந்த அன்னிய மூலதனம் இடும் கட்டளைகளை அரசுகள் நிறைவேற்றிக் கொண்டிருக்க முடியுமே தவிர சொந்தமாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இத்துடன் எஞ்சி நிற்கும் மற்றொரு விஷயமும் உண்டு. நாடு முழுவதும் சமச்சீரான வரியமைப்பு முறை என்ற அன்னிய மூலதனத்தின் கோரிக்கையானது நீட்சியடைந்து அனைத்து பொருட்களுக்கும் சமச்சீரான வரி என்ற இடத்துக்கு வந்து சேரும். ஆம் பசே வரியமைப்பு முறைக்குள் வந்த நாடுகள் ஒரு சிலவற்றில் இந்தக் கோரிக்கை எழுத்து ஒவ்வொரு பொருளுக்கும் இன்னின்ன வரி என்பது குறைந்து வரிவீதங்கள் மூன்று அல்லது நான்கு வீதங்களுக்குள் வைக்கப்பட்டு அதற்கு கீழ் பொருட்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

எல்லாப் பொருட்களுக்கும் ஒரே வரிவீதம் என்பது (குறைந்த அரசாங்கம் நிறைந்த நிர்வாகம்!) என்ன பிரச்சனையை உண்டாக்கும் என்று சற்று கூர்ந்து நோக்க வேண்டும். இந்தச் சட்டம் அமலுக்கு வந்தபின் அரசாங்கங்கள் தங்களது வரிவருமானத்தை இழக்காமல் இருக்கும் வகையில்தான் வரி வீதங்கள் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்படும். அப்படி அறிவிக்கையில் ஒவ்வொரு பொருளுக்கும் இன்னின்ன வரிவீதம் என்று நிர்ணயிக்கப்படும். இது இயல்பாகவே சொகுசுப் பொருட்களுக்கு அதிக வரியும் அவசியப் பொருட்களுக்கு குறைந்த வரியும் உள்ள நிலைமைக்குத்தான் இட்டுச் செல்லும். சொகுசுப் பொருள் உற்பத்தியாளர்கள் வரிவீதத்தை சமமாக்க கோரிகை (Level Playing field!) வைத்து அது கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அரசு வருமானம் இழக்காமல் இருக்க வேண்டுமானால் அது அவசியப் பொருட்களின் வரியை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை. அது ஏழைகள் மேல் சுமையை அதிகரித்து மேலும் பணவீக்க அதிகரிப்பை உண்டாக்கும்.

மறைமுகவரியை குறைத்து நேர்முக வரியை அதிகரிக்க வேண்டும் (மறைமுக வரி என்பது உபயோகிப்பாளர் மட்டும் செலுத்துவது, நேர்முக வரி என்பது வருமானம் அதிகமாக ஈட்டுப்பவர்கள் மட்டும் செலுத்துவது) என்ற கோரிக்கை சுற்றடி வழியில் நிறைவேறும் என்ற எண்ணத்தில் இடதுசாரிகளும் கூட இதனை ஆதரிக்க நினைக்கலாம். நேர்முகவரியை அதிகரிக்கும் எண்ணமோ வரி ஜிடிபி விகிதத்தை அதிகரிக்கும் எண்ணமோ, வரிவருமானத்தைப் பெருக்கி தூண்டல் நடவடிக்கைகாக செலவழிக்கும் எண்ணமோ இல்லாத ஒரு அரசாங்கம், மறைமுக வரியை மட்டும் குறைப்பதால் அந்தப் பலன் ஏற்படாது. இறுதியில் இக்கோட்பாடுகள் தவறு என்ற பிரசாரத்திற்கே இது உதவி செய்திடும்.

பலமுனை வரிகள் இருக்கக் கூடாது என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால் சிலர் இதனை ஆதரிக்கலாம். எனினும் இது நவீன-தாராளமய இயந்திரத்தில் செதுக்கப்பட்டு வெளிவருகிறது . இந்த இயந்திரத்திலிருந்து வெளிப்படும் விஷயம் அவர்கள் கோரிக்கையின் ஆன்மாவிற்கு எதிரானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மாநில உரிமைகள் மாநில நிதியாதாரத்தில் கைவைப்பது போன்ற விஷயங்களுக்காக அஇஅதிமுக எதிர்ப்பது வரவேற்கத்தக்கதே. எனினும் நவீன-தாராளமயமாக்கல் என்ற புயல் அடித்துக் கொண்டிருக்கும் வேளையில இதை எதிர்த்து எவ்வளவு நாளைக்கு அஇஅதிமுக நிற்கும். நிதியமைச்சரும் பிரதம அமைச்சரும் தோட்டத்திற்கு சென்று பார்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் அஇஅதிமுகவும் ஏதோ ஒரு சமரசத்திற்கு உடன்படுவதற்கே இது வழிவகுக்கும்.

Related Posts