அரசியல்

பண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)

(பண்டங்கள் மற்றும் சேவை வரி – சுறுக்கமாக பசே) (GST) வரி பற்றிய இந்தக் கட்டுரைத் தொடர் இந்தியாவில் அமலில் உள்ள வரிகள் குறித்த கழுகுப் பார்வை புரிதலைக் கொடுப்பதுடன், இந்த அரசியல் சட்டத் திருத்தத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை விவாதிக்கிறது. ஆழ்ந்த வாசிப்புக்கும், விவாதத்திற்குமான இந்தக் கட்டுரையை நீளம் கருதி இரண்டு பகுதிகளாகத் தருகிறோம். – ஆசிரியர் குழு)

பண்டங்கள் மற்றும் சேவை வரிக்கான மசோதா பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தியாவில் கொண்டுவரப்படும் ஒரு பெரிய வரிச் சீர்திருத்த மசோதா இது. மாநிலங்களின் உரிமைகள் மீது கைவைக்கும் மசோதா என்பதால் இது அரசியல் சட்டத் திருத்த மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் நமது அரசியல் சட்டம் 122வது முறையாக திருத்தப்படும். அரசியல் சட்ட திருத்தம் வேண்டும் என்றால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) தனித்தனியாக நிறைவேற்றப்பட வேண்டும். ஒருஅவை நிறைவேற்றிவிட்டு இன்னொரு அவை நிறைவேற்றவில்லை என்றால் அது அரசியல் சட்டத்திருத்தமாகாது. ஒரு அவையால் முடியாவிட்டால் கூட்டுக் கூட்டம் நடத்தி அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவர முடியாது. அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், நிறைவேற்றும் அன்று நிறைவேற்றப்படும் அவையில் குறைந்தது மூன்றில் இரு பங்கு உறுப்பினர் கலந்து கொள்ள வேண்டும் அதில் மூன்றில் இரு பங்கினர் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதாவது குறைந்தது ஒவ்வொரு அவையிலும் 45 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.

நான் இந்த மசோதாவை எதிர்க்கிறேன்.. இந்த மசோதாவை அஇஅதிமுக எதிர்க்கிறது. கடந்த டிசம்பரில் நிதியமைச்சர் இந்த சட்டத்தை பாராளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்த பொழுது எதிர்த்து விழுந்த வாக்குகள் 37 மட்டுமே. இது அஇஅதிமுக உறுப்பினர்களின் வாக்குகளாகும். இந்த மசோதாவை எதிர்க்க அஇஅதிமுக கூறும் காரணங்கள் அனைத்திலும் எனக்கு உடன்பாடு உண்டு. இதைத்தவிர கூடுதலான காரணங்களும் எனக்கு உண்டு.

நிதி விவகாரத்தில் கருத்துச் சொல்ல நம்மிடையே ஒரு“நிபுணர்“ உள்ளார். அவருடைய கருத்தே இறுதியானது. காங்கிரஸானலும் சரி, பாஜக ஆனாலும் சரி, எந்தக் கட்சி ஆண்டாலும் இவருடைய கருத்தே இறுதியானது. அவர்தான் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரங்கராஜன். நிதி விவகாரத்தில் எந்தப் பிரச்சனை எந்த அரசுக்கு வந்தாலும் சரி உடனே அது ரஙகராஜன் கமிட்டியை அமைத்துவிடும். அதே போல் வரிப்பிரச்சனை வந்தால் அரசு அமைக்கும் கமிட்டி டாக்டர் அஸிம்தாஸ் குப்தா கமிட்டிதான். டாக்டர் ரங்கராஜன் ஐஎம்எஃப் சித்தாந்தப் பள்ளியைச் சேர்ந்தவரென்றால் டாக்டர் அஸிம்தாஸ் குப்தா மார்க்சிய சித்தாந்தப் பள்ளியைச் சேர்ந்தவர். ஆகவே பெருமுதலாளிகளின் விவகாரத்தில் தலையிடும் (சலுகை கொடுத்திடும்) கொள்கை முடிவுகள் எடுக்கும் நிபுணர் கமிட்டி என்றால் அது ரங்கராஜன் கமிட்டி என்று கூறிவிடலாம்; அதே நேரத்தில அரசு நிர்வாக விஷயங்களுக்கு தேவைப்படும் நிதி விவகாரங்களுக்கான நிபுணர் கமிட்டி என்றால் அது அஸிம்தாஸ்குப்தா கமிட்டி என்று கூறிவிடலாம். VAT மற்றும் GST போன்ற வரிவிவகாரங்களைத் தீர்மானிப்பதற்கான கமிட்டிகள் டாக்டர் அஸிம்தர்ஸ் குப்தா தலைமையிலான கமிட்டிகள் என்பதிலிருந்தும், பெருமுதலாளிகளுக்கு சலுகை வழங்க வேண்டிய பெட்ரோலிய விலை நிர்ணயக் கமிட்டி டாக்டர் ரங்கராஜன் கமிட்டி என்பதிலிருந்து யார் யாரை எதற்கு பயன்படுத்தலாம் என்ற அணுகுமுறை எல்லா அரசுகளிடமும் இருக்கிறது.

விஷயத்திற்கு வருமுன் வரிகள் பற்றி சில அடிப்படை விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டியதிருக்கிறது.

இந்தியாவில் விதிக்கப்படும் வரிகளில் மூன்று விதமான வரிகள் உண்டு. ஒன்று மத்திய அரசு விதிக்கும் வரிகள் (உதாரணம் கலால் வரி). இன்னொன்று மாநில அரசு விதிக்கும் வரிகள் (உதாரணம் விற்பனை வரி) மூன்றாவது உள்ளூர் நிர்வாகம் விதிக்கும் வரி (உதாரணம் வீட்டுவரி) யார் யார் என்னென்ன விஷயங்களுக்கு வரிகள் விதிக்கலாம் என்ற அதிகாரப் பகிர்வு நமது அரசியல் சட்டத்தில் (பிரிவு 246) உண்டு. மாநில அரசின் உரிமையான விற்பனை வரி இந்த மசோதா மூலம் மத்திய அரசின் அதிகாரத்திற்குள் செல்லவிருக்கிறது.

கலால் வரி/ஆயத்தீர்வை/உற்பத்தி வரி: இந்த வரியானது மத்திய அரசால் விதிக்கப்படுவது. உற்பத்திப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி. விவசாய உற்பத்திக்கு பொருந்தாது. உற்பத்தி செய்யும் பொருட்களுக்கேற்ப மத்திய அரசு தீர்மானிக்கும் வரிவிகித அடிப்படையில் வசூலிக்கப்படும். உற்பத்தி தளங்களின் வாயிலியே இந்த வரியை வசூலிக்கும் ஏற்பாடு உண்டு இந்த வரியைச் செலுத்தினால்தான் பொருட்கள் உற்பத்தி தளங்களின் வாயிலை விட்டு வெளியே செல்ல முடியும். இது தற்பொழுது சென்வாட் என்றழைக்கப்படும் மத்திய மதிப்புக் கூட்டுவரி என்பதாக மாறிவிட்டது. அடிப்படையில் உற்பத்தி தளத்தில் உற்பத்தியாளரால் செலுத்தப்படும் இந்த வரியில் அவர் உற்பத்தி செய்வதற்காக வாங்கிய பொருட்களுக்கு செலுத்திய மத்திய மதிப்பு கூட்டு வரியை கழித்துக் கொள்ளலாம். எனினும் ஒவ்வொரு வாங்குபவரும் முழு வரியை செலுத்த வேண்டும். அவர் மதிப்பை கூட்டி புதிய பொருளை படைத்திருந்தால் அவர் கூட்டிய மதிப்புக்கு மட்டும் வரி செலுத்தும் வகையில் மொத்த வரியை செலுத்திவிட்டு அவர் வாங்கிய பொருளுக்கான வரியை அரசிடமிருந்து பின்னால் பெற்றுக் கொள்ளலாம்.

சுங்கவரி : இது இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி. இது மத்திய அரசு விதிக்கும் வரியாகும். இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு நாம் அன்னியச் செலவாணியைக் கொடுக்க வேண்டும். அன்னியச் செலவாணி ஏற்றுமதி மூலமாகவும் வெளிநாட்டு வாழ் உழைக்கும் இந்தியர்கள் தங்கள் ஊதியத்தை அனுப்புவதன் மூலமாகவும், வெளிநாட்டில் முதலீடு செய்த முதலாளிகள் கொண்டு வரும் லாபம் மூலமாகவும், கடன் வாங்குவது மூலமாகவும் இந்திய சொத்துக்களை அன்னியர்களுக்கு விற்பதன் மூலமாகவும், இந்தியாவில் முதலீடு செய் என்று ரத்தின கம்பளம் விரித்து அழைப்பதன் மூலம் வருவது அன்னியச் செலவாணி. அன்னியச் செலவாணி கையிருப்பு இல்லையென்றால் நம்மால் இறக்குமதி செய்ய முடியாது. இறக்குமதியை கட்டுப்படுத்த ஒருகாலத்தில் அரசு இந்த வரியை ஒரு கருவியாக பயன்படுத்தியது. கடுமையான சுங்கவரி விதித்தால் இறக்குமதி செய்வது குறையும். உள்ளூர் சந்தையை கபளீகரம் செய்யும் நோக்கத்தில் வரும் பொருட்களுக்கு அதிக சுங்கவரி விதித்தால் அது உள்ளூர் சந்தையில் மடிந்து போகும் என்பதையும் ஒருகாலத்தில் அரசு பயன்படுத்தி வந்தது. தாராளமயமாக்கல் கட்டத்தில் இப்படியெல்லாம் செய்ய முடியாது என்பதால், பொதுவாக அதிகபட்ச சுங்கவரி என்பது 15 சதம் வரைக்கும் விதிக்கப்படுகிறது. அதாவது சுங்க வரியும் கலால் வரியும் சமப்படுத்தப்பட்டுவிட்டது. இந்த வரியைச் செலுத்தி இறக்குமதி செய்து பொருள் உற்பத்தி செய்பவர் சென்வாட் விதிமுறைப்படி இதற்கான வரிவிலக்கைப் தற்போது பெறமுடியும்.

மத்திய விற்பனை வரி : ஒரு மாநிலத்திலிருந்து பொருள் இன்னொரு மாநிலத்திற்கு விற்கப்பட்டால் விதிக்கப்படும் விற்பனை வரி மத்திய விற்பனை வரியாகும்,

மாநில விற்பனை வரி : ஒரு மாநிலத்திற்குள்ளேயே விற்கப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி மாநில விற்பனை வரியாகும். மாநில அரசு தீரிமானிக்கு வரி என்பதால் இது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். ஒரே பொருள் இருமுறை விற்கப்பட்டால் ஒருமுறை விற்பனை வரி செலுத்தினால் போதுமானது. 2004 முதல் இந்த வரிக்கு மதிப்புக் கூட்டு வரி என்று பெயர் மாற்றப்பட்டுவிட்டது, என்னைப் பொருத்தவரை அதே விதிமுறைகள்தான் பெயர்தான் மாற்றம். விற்பதால் மதிப்பு எதுவும் கூடுவதில்லை. எனினும் வங்கிய விலையை விட அதிகவிலைக்கு ஒருவர் விற்றால் அவர் அதன் மதிப்பைக் கூட்டிவிட்டார் என்று அர்த்தப்படுத்திக் கொண்டு அதிக்ப்படுத்திய தொகைக்கான வரி என்று புரிந்து கொள்ள வேண்டும். இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது என்னவென்றால் “மதிப்பைக்“ கூட்டுவது விற்பவராக இருந்தாலும் சரி வாங்குபவராக இருந்தாலும் சரி வரிச் செலுத்த வேண்டியவர் வாங்குபவரே. இதையும சில மாநிலங்கள் எதிர்த்தன. இன்னும் சில மாநிலங்களில் விற்பனை வரியே தொடருகிறது.

விற்பனை வரி என்பது மாநில உரிமையாகும். எனவே மத்திய விற்பனை வரி என்ற பெயரில் உள்ள மத்திய என்பது மத்திய அரசின் சட்டம் என்ற அளவில் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும். வசூலிக்கப்படும் மத்திய விற்பனை வரி எந்த மாநிலத்திலிருந்து வசூலிக்கப்படுகிறதோ அந்த மாநிலமே அதை எடுத்துக் கொள்ளும். விற்பனை வரி சம்பந்தமாக மத்திய அரசு சட்டம் இயற்ற முடியாது என்பதால் அதற்கான விதிவிலக்கை பெற ஆறாவது அரசியல் சட்ட திருத்தம் 1956ல் வந்தது ஒன்று மட்டும் நிச்சயமாக குறிப்பிட வேண்டும் மத்திய விற்பனை வரி என்பது எல்லா மாநிலங்களுக்கும் சம்மானது. மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடாது. எனவே இதை மாற்ற வேண்டுமென்றால் மத்திய விற்பனை வரிச்சட்டத்திருத்தம் வேண்டும் எனவே இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சட்டம் ஆனால் பலன் மாநிலங்களுக்கானது.

சேவை வரி : இது மத்திய அரசு வசூலிக்கும் வரியாகும். சேவைகள் என்பதற்கான விளக்கமும் எவையெல்லாம் சேவைகள் என்பதையும் இந்திய நிதிச்சட்டம் 1994லும் அதில் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ளது. எனினும் புதிதாக இப்படி ஒரு வரி விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரத்தை கொண்டுவர தேவைப்பட்டது 92வது அரசியல் சட்ட திருத்தம். ஆம் ஆளும் கூட்டணிக்கு மூன்றில் இருபங்கு மெஜாரிட்டி இல்லாத நிலையிலும் 2003ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்ட திருத்தம் இது. எனவே இதில் ஒரு பகுதி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்ற உத்தரவாத்தில் திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்காக அரசியல் சட்டத்தின் புதிய பிரிவான 268A உருவாக்கப்பட்டது. எனவே இது மத்திய அரசின் சட்டமாகும் மத்திய அரசின் உரிமையாகவும் ஆகிவிட்டது.

இதுதவிர அரசு அவ்வப்போது அறிவிக்கும் கூடுதல் கலால் வரி, கூடுதல் சுங்கவரி. சர்சார்ஜ் போன்றவைகள் ம்த்திய அரசின் வரிகளாகும். இவைகள் அந்தந்த வரிகளின் தொங்கு சதைகளாக அவ்வப்போது பட்ஜெட் அறிவிப்பில் வெளிவரும். ஆம் இவை பொருட்களின் மீது நேரடியாக விதிக்கப்படாமல் வரியின் மீதான வரிகளாக உள்ளவை. இதுவரை பார்த்த வரிகள் எல்லாம் மறைமுக வரிகளே. அதாவது நுகர்வோர் அரசுக்கு நேரடியாக செலுத்தாமல் விற்பனை செய்பவரிடமோ, உற்பத்தி செய்பவரிடமோ, சேவை அளிப்பவரிடமோ செலுத்தும் வரியாகும். இந்த வரி அமைப்பு முறையில் கொண்டுவர இருக்கும் மாற்றமே பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கான வரி (Good and Services Tax). எளிமையின் பொருட்டு இதை பசே வரி என்று அழைக்கிறேன். இந்த சட்டம் நிறைவேறிவிட்டால் கலால்வரி, சென்வாட், விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி சேவை வரி ஆகியவைகள் இந்த பசே வரிக்குள் சென்றுவிடும். இனிமேல் பசே வரி என்ற ஒரே ஒரு வரி மட்டுமே உண்டு. பசே வரியின் அணுகுமுறை என்ன என்பதை பார்ப்பதற்கு முன் மாநிலங்களுக்கு பட்டை நாமமா என்றால் இல்லை என்று கூறலாம். காரணம் பசே வரிக்குள் இரண்டு வரிகள் உண்டு. ஒன்று மத்திய பசே வரி இன்னொன்று மாநில பசே வரி. ஆனால் நாடு முழுவது ஒரே வரி எனவே மாநிலங்கள் மாநில பசே வரியளவை தீர்மானிக்க முடியாது

இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை கீழ்க்காணும் பட்டியல் விளக்கும். இது ஒரு உதாரணம் மட்டுமே. இங்கே நாம் பசே வரி பத்து சதவீதம் என்று அனுமானித்துக் கொள்கிறோம்.

 

வழங்கல் சங்கியியின் அங்கம் உள்ளீட்டின் கொள்முதல் விலை கூடும் மதிப்பு வழங்கல் சங்கியில் அடுத்த கட்ட மதிப்பு பசே வரி(GST) வீதம் வெளியீட்டில் வசூலிக்கப்படும் பசே வரி (GST) உள்ளீட்டு வரிக்கான விலக்கு இறுதி பசே (GST)
உற்பத்தியாளர் 100 30 130 10% 13 10 13-10=3
மொத்த வியாபாரி 130 20 150 10% 15 13 15-13=2
சில்லரை வியாபாரி 150 10 160 10% 16 15 16-15=1

ஆக கடைசியாக வாங்குபவர் முழு வரியையும் செலுத்த வேண்டும். அதற்கு முந்தியவர் செலுத்திய வரிகள் எல்லாம் அரசிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம். இந்த வரி இருமுறை கணக்கிடப்படும். முதல் முறை கணக்கிடப்பட்ட வரி மத்திய அரசுக்கென்றால் அது மத்திய பசே வரி என்றும் இரண்டாம் முறை கணக்கிடப்பட்ட வரி மாநில அரசுக்கானதாகும். அது மாநில பசே வரி. ஆக மாநில அரசு தன்னுடைய விற்பனை வரி வருமானத்தை இழக்காது என்கிறது இந்தச் சட்டத்தை முன்மொழியும் மத்திய அரசு. இன்னொரு புறம் சேவை வரியானது மத்திய அரசால் விதிக்கப்பட்டு அதில் ஒரு பகுதி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது போய். சேவை வரியிலும் இருமுறை பசே கணக்கிட்டு முதலாவது மத்திய அரசிற்கென்றால் இரண்டாவது மாநில அரசிற்கானதாகும். வரியை வசூலிக்க வேண்டியவர் பொருளை விற்பவரே. வரியைச் செலுத்த வேண்டியவர் பொருளை வாங்குபவரே. வரியை வசூலித்து செலுத்திவிட்டு தன்னுடைய உள்ளீட்டிற்கு செலுத்திய வரியை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். மாநில பசே வரியை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பமும் மத்திய பசே வரியை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பமும் குழப்படி செய்ய முடியாது அந்தந்த வரியை அந்தந்த அமைப்பிடமிருந்தே திருப்ப பெறமுடியும். பசேயின் கீழ் அனைத்துப் பொருட்களும் வரும் என்றாலும், சில விதிவிலக்கான பொருட்களும் உண்டு.

உதாரணம்: சிகரெட் மதுபானம் போன்றவைகள். இதை உபயோகிப்பாளர்களை ஊக்குவிக்கக் கூடாது என்பதற்காக மாநில அரசு இந்தப் பொருட்களுக்கு எவ்வளவு வரி வேண்டுமானலும் வைத்துக் கொள்ளலாம் என்ற நிலை இப்பொழுது இருக்கிறது. உதாரணத்திற்கு மதுபானங்களுக்கு வெண்ட் ஃபீ (Vend Fee) எனறொரு வரி உண்டு.

இந்த வரிச் சீர்திருத்தத்திற்கு அரசு கூறும் காரணங்கள்:

  1. பொருட்கள் மீதான வரிகள் குறைந்து பொருட்களின் விலை குறையும்
  2. தொழில், வணிகம், விவசாயம் ஆகியவை வளர்ச்சி பெறும்
  3. ஏற்றுமதி அதிகரிக்கும்
  4. தொழில்முனைவோர் மற்றும் சில்லரை வர்த்தகர்கள் பயன் பெறுவர்.
  5. பணவீக்கம் குறையும்
  6. சராசரி நுகர்வோர் பயனடைவர்

நான் இதுவரை கூறியது முன்னுரையே.

இனிமேல்தான் இதைப் பற்றிய எனது கருத்தைக் கூறவிருக்கிறேன். அரசு கூறிவரும் இந்த ஐந்து காரணங்களிலும் உண்மை கிடையாது.

பொருட்கள் விலை குறையாது. காரணம் இறுதியாக பொருள்/.சேவை வாங்குபவர் முழு வரியையும் செலுத்திவிட்டுதான் வாங்க வேண்டும். பொருட்கள்/சேவைகள் விலை குறையாது.

தொழில், வணிகம், விவசாயம் ஆகியவை வளர்ச்சி பெறும் என்ற கோரலுக்கு எந்த அடிப்படையும் கிடையாது.

ஏற்றுமதி அதிகரிப்பது சர்வதேச சந்தையின் வேண்டல் நிலவரத்தைப் பொறுத்தது. வேண்டல் விஷயத்தில் பொருட்கள்/சேவைகளின் விலை தாக்கம் செலுத்துகிறது என்பது உண்மைதான். மாறிவிட்ட வரிக் கணக்கிடும் முறையால் பொருளின்/.சேவையின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

தொடரும் … https://maattru.com/gst-2

Related Posts