அறிவியல் தொழில்நுட்பம்

வளர்ச்சி , மேம்பாடு , விடுதலை – 1

வளர்ச்சி என்பது என்ன? மேம்பாடு என்பது என்ன? என்பது சமீப காலங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. ஒரு புறத்தில் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா போன்ற தாராளவாதம் பேசுவோர் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) அதிகரிப்புதான் வளர்ச்சி என்கின்றனர். மற்றவை எல்லாம் அதன் விளைவுகளாக பொருளாதாரத்தின் உள்ளார்ந்த விதிகளின்படி தானாகவே நடந்துவிடும் என்கின்றனர். மறுபுறத்தில் மீண்டும் சிறு அளவிலான விவசாயம், வேட்டை, காய் கனிகளை சேகரித்து உண்டு வாழும் ‘இயற்கையை ஒட்டிய’ வாழ்க்கை என்பதைத் தவிர மற்றவை அனைத்தும் எதிர்க்கப்பட வேண்டும் எனும் நிலை. அணைகள் கூடாது, அணு மின்சாரம் கூடாது, செயற்கை உரம் கூடாது, அல்லோபதி மருந்து கூடாது, பூச்சி கொல்லிகள் கூடாது, பால் பொருட்கள் கூடாது, மாமிசம் உண்ணக் கூடாது என்று பலவிதமான குரல்கள், கூக்குரல்கள்.

 

இரண்டு தரப்புகளுமே மார்க்சிய அணுகுமுறைகளுக்கு மாறானவை என்பதை முதலிலேயே சொல்லிவிட வேண்டியுள்ளது. மார்க்சியத்திற்கு மாறானது எனும்போது வரலாற்று ரீதியான அறிவியல் நோக்கு இல்லாதவை என்பதுதான் பொருள். வரலாற்றை அறிவியல் நோக்குடன் ஊன்றிக் கவனிக்காது பேசப்படும் தத்துவங்களும் நடைமுறைகளும் உழைக்கும் மக்களின் நலனுக்கு நலம் பயக்காது. அதே போல அறிவியல் குறித்து வரலாற்றுக் நோக்கு இல்லாது பேசப்படும் தத்துவங்களும் நடைமுறைகளும் உழைக்கும் மக்களின் நலனுக்கு நன்மை பயக்காது என்பதே உண்மை. வர்க்கங்களாய் சாதிப் படிநிலைகளாய்ப் பிரிந்து கிடக்கும் இன்றைய இந்தியாவில் பாட்டாளி வர்க்கத்தின் கரங்களை வலுப்படுத்தாத அடித்தட்டு மக்களின் மேல்நோக்கிய நகர்வுக்கு பயன் தராத கருத்துகளும் நடைமுறைகளும் ஏதோவொரு வகையில் ஆளும் வர்க்கங்கள், ஆதிக்க சாதிகள் ஆகியோரின் கரங்களைப் பலப்படுத்துவதாகவே அமையும். இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகளும் அநீதிகளும் தொடரவே உதவும்.

Marx_and_Engelsமார்க்சியம் மானுட விடுதலைக்கான சித்தாந்தம். ஆனால் மானுட விடுதலை ஒரு நாள் விடியற்காலை முழுமையாக தேவ ஆசீர்வாதமாக வந்து இறங்கப் போவதில்லை என்பதில் மார்க்சியம் தெளிவான புரிதலுடன் உள்ளது. மானுட விடுதலை என்பது ஒரு நீண்டகால மானுட சமூக இயக்கத்தின் விளைவாய் மேன்மேலும் உயர்நிலையானதாக மாறும் ஒரு நிகழ்வுப் போக்குதானே தவிர ஒரு கணத்தில் நிகழப்போகும் மாற்றங்கள் அற்ற அறுதியல்ல. மார்க்சியம், மானுட சமூகம் நாகரிகம் அடையத் துவங்கிய நாள் முதலாய், மானுடம் ஒரு விலங்கு எனும் நிலையிலிருந்து மாறத் தொடங்கிய நாள் முதலாய், ஒரு உற்பத்தியாளர் எனும் நிலையைத் துவக்கிய நாள் முதலாய் இந்த நிகழ்வுப் போக்கு நடந்து வருகின்றது எனக் கூறுகின்றது.

அத்தோடு இந்த நீண்ட பயணத்தில் சில புரட்சிகரமான மாற்றங்களும் அவற்றுக்கு முன்னும் பின்னுமாய் நீண்ட சீரான மாற்றங்களும் இருந்தன எனக் கூறுகின்றது. மானுட சமூகம் அப்படி பல நிலைகளைக் கடந்து இன்று உள்ள நிலைக்கு வந்துள்ளது எனக் கூறுகின்றது. உலகில் எல்லாப் பகுதிகளிலும் இது ஒன்று போல நடக்கவில்லை என்றாலும் சில தெளிவான கட்டங்கள் பெரும்பாலான இடங்களில் இருந்துள்ளன என மார்க்சியம் கருதுகின்றது. இந்த நிகழ்வுப் போக்கில் மானுடம் விலங்குகளோடு விலங்காக இருந்த நிலையிலிருந்து மாறி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடைந்து அதாவது மேலும் மேலும் அதிகமான விடுதலையை சாதித்து இன்றைய நிலைக்கு வந்துள்ளது; இன்றைய நிலை ஏற்புடையது அல்ல என்றாலும் இன்றைய நிலை இதற்கு முந்தைய நிலையோடு ஒப்பிடும்போது முன்னேற்றம் என்பதே மார்க்சியத்தின் தின்னமான எண்ணம்.

‘பண்டைய அடிமைச் சமுதாயம் இல்லாது நவீன சோசலிசம் இல்லை’ என்பார் ஏங்கெல்ஸ். ஆண்டான் அடிமை என்ற நிலை இல்லாத, மனிதனை மனிதன் சுரண்டுவது என்ற நிலை இல்லாத, தனிஉடமை என்பது இல்லாத, உழைப்புப் பிரிவினை என்பது இல்லாத, அந்நியமாதல் என்பது இல்லாத ஒரு நிலையில் மானுட சமூகங்கள் ஒரு கால கட்டத்தில் இருந்தன என்பது உண்மையே. மின்சாரம் இல்லாமல், தொழிற்சாலைகள் இல்லாமல், ரசாயன உரம் இல்லாமல், சூழல் மாசுபடல் இல்லாமல், விவாசாயம் இல்லாமல், குடும்பம் குழந்தை குட்டி என்ற பிக்கல் பிடுங்கள் இல்லாமல், மொத்தத்தில் விலங்குகள் போன்ற இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கையோடுதான் மானுட சமூகம் உருவானது. யாரோ சில அழிவு கொள்ளை தீமை கழக (அ.கொ.தீ.க) ஆட்களின் சதிச் செயலால் இந்த நிலையிலிருந்து மாறி அடிமைச் சமூகத்திற்கு மானுடம் வந்தது என நாம் நினைப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மானுட சமூகத்தின் உயர்வுக்கும் விடுதலைக்கும் பிழைத்துக் கிடப்பதற்கும் நடந்த இடைவிடாத போர் மானுட சமூகத்தை அடிமைச் சமுகத்திற்கு இட்டு வந்தது.

அடிமைச் சமூகமும் அதிலிருந்து தோன்றி வளர்ந்து முதிர்ச்சி அடைந்து பல காலம் நிலைத்து இருந்த நிலப்பிரபுத்துவ சமூகமும் முதலாளித்துவ சமூகமும் கூட யாரோ சில மாமேதைகள் மூளையைக் கசக்கிப் பிழிந்து வடிவமைத்துப் பின் அங்கு மானுட சமூகத்தை கையைப் பிடித்து இட்டுச் சென்று சேர்த்தல்ல. அதுவல்ல மானுட சமூகங்கள் மாற்றம் கண்ட வரலாறு. இயல்பாக அந்தந்த சமூக கட்டமைப்பில் எழுந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடி அலைந்த மானுடக் கூடங்கள் தாமாக தன்னெழுச்சியில் உருவாக்கிய மாற்றங்கள்தாம். மகா மனிதர்கள் வரலாற்றைப் படைக்கின்றனர். ஆனால் அவர்கள் ஆசைப்படுவதுபோல விரும்புவதுபோல எல்லாம் வளைத்து நெளித்து வரலாற்றைப் படைப்பதில்லை. அவர்களது காலமும் சூழலும் அனுமதிக்கும் தேர்வு சாத்தியங்களில் இருந்து தெரிவுசெய்துதான் மாற்றங்களுக்கு வினை ஊக்கிகளாக இருந்து சமைக்கின்றனர்.

இந்த வரலாற்றுப் போக்கை நெட்டித் தள்ளும் அடிநீரோட்டமாக வர்க்கப் போராட்டம் இருந்துள்ளது என்பது மார்க்சியம் சொல்லும் வரலாற்று இயக்கத்தைப் புரிந்து கொள்வதற்கான அடிப்படை கருத்து. தவிர்க்க இயலாத வகையில் மானுடத்தின் கையில் வந்து சேரும் அறிவியல் முன்னேற்றம் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றின் மூலம் உற்பத்தி முறையில் ஏற்படும் மாற்றங்கள் உற்பத்தி உறவுகளிலும் மாற்றங்களைக் கொண்டு வருகின்றது என்பதும் மார்க்சியம் கூறும் ஒரு அடிப்படையானக் கருத்து.

(தொடரும்)

Related Posts