அரசியல்

கிரேக்கம் – திவாலாக்கப்பட்ட தேசத்தின் கதை – 4

கிரேக்கத்தின் “முறையற்ற/நியாயமற்ற கடன்”:

கிரேக்கத்தின் கடனை எப்படி தீர்க்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியமும் ஐ.எம்.எஃப்-ம் கடந்த கால ஆட்சியாளர்களும் மக்களை ஆறிவுறுத்திவந்தனர். ஆனால் இவற்றில் எல்லா கடனும் மக்களால் வந்தவை தானா? மக்கள் நலனுக்காக அவை செலவிடப்பட்டதா? அவற்றுக்கு மக்கள் தான் பொறுப்பா? அக்கடன் தொகையால் பயனடைந்தவர்கள் யார் யார்? என்று கடந்த 5 ஆண்டுகளாக விசாரிக்க மறுத்திருக்கிறார்கள். தற்போது புதிதாக பதவியேற்றிருக்கிற கிரேக்க அரசுதான், இதில் புதிய முயற்சிகளை எடுக்கத் துவங்கியிருக்கிறது.

 • 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கிரேக்கத்தின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளுக்கு 1 பில்லியன் யூரோ வரையிலும் இலஞ்சம் கொடுத்து பல அரசு குத்தகைகளை பெற்றிருக்கிறது. ஒரு இலட்சம் யூரோ இலஞ்சம் வாங்கியதாக ஒரு முன்னாள் போக்குவரத்து அமைச்சரே ஒப்புக்கொண்டார். மற்றோர் அரசியல் கட்சியோ, ஒரு இலட்சம் யூரோவுக்கு மேல், கட்சி நிதியாக வாங்கினோம் என்றும் ஒப்புக்கொண்டது. பிரச்சனை பெருசாகிக்கொண்டிருந்ததால், சிறிய தொகையினை தண்டனையாகப் பெற்றுக்கொண்டு நீதிமன்றத்திற்கு வெளியே பேசி தீர்த்துக் கொண்டது.
 • இது போன்று எண்ணற்ற வழக்குகள், பல பெரிய நிறுவனங்கள் மீது இருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் கடந்த 10 ஆண்டுகளாக ஆமைவேகத்தில் நகர்கின்றன. இப்படி கொடுக்கப்பட்ட லஞ்சப்பணமும் சேர்ந்ததுதானே  கிரேக்கத்தின் கடன்கள். அவையும் மக்கள் மீதே விழுகிறது.
 • 2001-ல், கிரேக்கத்தின் கடனை குறைத்துக் காட்டினால், மேலும் கடன் வாங்கலாம் என்பதால், சர்வதேச திருடர்களான கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தை அணுகியது அப்போதைய கிரேக்க அரசு. ஜப்பான் நாணயமான யென்னிலும், டாலரிலும் இருந்த கிரேக்கத்தின் பல கடன்களை, மிகப்பழைய நாணய மாற்று விகிதத்தைக் கொண்டு மாற்றி, குறைவான கடன்கள் இருப்பதைப் போன்ற மாயையை உருவாக்கியது. இதன் மூலம், கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்திற்கு ஒரு பில்லியன் யூரோ வரை கட்டணம் செலுத்தியிருக்கிறது கிரேக்க அரசு. அதோடு மட்டுமில்லாமல், 2001-லிருந்தே வருடந்தோறும், கிட்டத்தட்ட 400 மில்லியன் யூரோ வரை அந்நிறுவனத்திற்கு வழங்கியதாக சொல்லப்படுகிறது. கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தை கிரேக்கத்தின் கடன் மேலாண்மை நிறுவனமாக நியமித்தது 2010 முந்தைய கிரேக்க அரசு. திருடன் கையில் சாவியைக் கொடுத்த கதைதான் அது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, யென்னிலிருந்து யூரோவிற்கு மாற்றப்பட்ட கடன்களிலும் நிறைய தவறு நிகழ்ந்திருப்பதால், 5 பில்லியன் யூரோவிற்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறதாம். இவையாவும் கிரேக்க மக்களின் தலையில் கடன்களாக திணிக்கப்படுகிறது.
 • ஒரு பக்கம் கிரேக்கத்திற்கு கடன் வழங்கிக் கொண்டிருந்த ஜெர்மனி, மறுபக்கம் அப்பணத்தை எல்லாம் ஆயுதங்கள் விற்று திரும்ப எடுத்துக்கொண்டது. கிரேக்க  ஊழல் அரசியல்வாதிகளுக்கு பங்கு வழங்கப்பட்டமையால், இது எளிதாக நடந்திருக்கிறது. கடனையும் கொடுத்து, அதே பணத்தில் தன்னுடைய ஆயுத வியாபாரத்தையும் நடத்தியது ஜெர்மனி. யாருடன் போருக்கு செல்வதற்கு இப்படி ஆயுதங்கள் வாங்கி குவித்தது?

சாரா வாகன்னெக்த் (ஜெர்மன் இடதுக் கட்சியின் துணைத் தலைவர்): “2010 இல் கிரேக்க நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தை நடந்தபோது, ஜெர்மனி பல நிபந்தனைகள் விதித்தது, ‘கிரேக்கத்தில் ஓய்வூதியம் குறைக்கப்படவேண்டும்; மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட வேண்டும்;’ என்றெல்லாம் சொல்லிவிட்டு, ஜெர்மனியிலிருந்து ஆயுதங்கள் வாங்குவதை மட்டும் நிறுத்தவே கூடாது என்கிற நிபந்தனையும் சேர்த்தே விதிக்கப்பட்டது.”

எவ்வளவு பெரிய நெருக்கடிகள் வந்தாலும், தங்களது ஆயுத வியாபாரம் மட்டும் தடையின்றி தொடர்ந்து நடக்கவேண்டும் என்கிற அவர்களின் எண்ணத்தை என்னவென்று சொல்வது. இவை எல்லாமும் கிரேக்க மக்களின் தலையில் கடன்களாக இறக்கப்பட்டிருக்கிறது.

 • 2010 இல் கிரேக்கத்தின் நிதி நிலை சரியில்லை என்று அறிவித்த பின்னரும், 2.5 பில்லியன் யூரோவிற்கு போர்க்கப்பல்களை கிரேக்கத்திற்கு விற்றிருக்கிறது பிரான்சு. 4greece800 மில்லியன் யூரோவிற்கு ஹெலிகாப்டர்களும், 100 மில்லியன் யூரோவிற்கு ரபல் போர்விமானமும் வாங்கியிருக்கிறது முந்தைய கிரேக்க அரசு. இன்னும் பல போர் விமானங்களை வாடகைக்கு கொடுத்திருக்கிறது. 3 பில்லியன் யூரோவிற்கு நீர்முழுகிக் கப்பல்களை கிரேக்கத்திற்கு விற்றிருக்கிறது ஜெர்மனி. இவையெல்லாம் நடந்தது 2010-க்குப் பின்தான். ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரேக்கம் இருக்கவேண்டுமென்றால், பிரான்சிடமிருந்தும் ஜெர்மனியிடமிருந்தும் தொடர்ந்து ஆயுதங்கள் வாங்கியே தீரவேண்டும் என்பது மறைமுக கட்டளை. இல்லையென்றால் கடன் பேச்சுவார்த்தைகள் சுமூகமாகச் செல்லாது.
 • உலகிலேயே அதிகமாக ஆயுத இருக்குமதி செய்கிற நாடுகளில் கிரேக்கம் 5-வது இடத்தில் இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆயுத இறக்குமதி சதவிகிதத்தைக் கணக்கில் எடுத்தால், சீனா மற்றும் இந்தியாவையும் பின்னுக்குத்தள்ளி உலகிலேயே இரண்டாம் இடத்தில் இருக்கிறது கிரேக்கம். ஆக, கிரேக்கத்தை திட்டமிட்டே ஒரு ஆயுத விற்பனை நிலமாகவே நடத்தியிருக்கின்றன ஐரோப்பிய மைய நாடுகள்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து முழுமையாக வெளியே வருவதற்கு, கிரேக்கத்திற்கு 370 பில்லியன் டாலர் தேவைப்படுகிறது என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அது பெரிய தொகையாகத் தோன்றினாலும், மற்றுமொரு புள்ளிவிவரம் நம்மையெல்லாம் ஆச்சரியப்பட வைக்கும்.

உலகின் பல நாடுகளில் உள்ள வங்கிகள், 2007-லிருந்து கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக திவாலானதாக அறிவித்தன. அதில் பெரும்பாலான வங்கிகள், அரசிடமிருந்து ஏராளமான பணத்தினை பெற்று, தங்களது நெருக்கடியைப் போக்கிக்கொண்டன. அவையனைத்தும் மக்களின் வரிப்பணம். உலகெங்கிலும் உள்ள வங்கிகள் மக்களின் பணத்தை வாரி சுருட்டிக் கொண்டன.

நிறுவனம் டாலரில் பெற்ற தொகை கிரேக்கத்தின் தேவையில்
எவ்வளவு %?
சிட்டி குழுமம் 2,513,000,000,000 680
மோர்கன் ஸ்டான்லி 2,041,000,000,000 552
மெரில் லின்ச் 1,949,000,000,000 527
பேங்க் ஆஃப் அமெரிக்கா 1,344,000,000,000 364
பார்க்லே பிஎல்சி 868,000,000,000 235
பேர் ஸ்டேர்ன்ஸ் 853,000,000,000 231
கோல்ட்மேன் சாக்ஸ் 814,000,000,000 220
ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து 541,000,000,000 147
ஜேபி மார்கன் 391,000,000,000 106
தாஷ் பேங்க் 354,000,000,000 96
யு பி எஸ் 287,000,000,000 78
கிரெடிட் சூசே 262,000,000,000 71
லேமன் பிரதர்ஸ் 183,000,000,000 50
பேங்க் ஒப் ஸ்காட்லாந்து 181,000,000,000 49
பிஎன்பி பரிபாஸ் 175,000,000,000 48
வெல்ஸ் ஃபார்கோ 159,000,000,000 43
டெக்சியா 159,000,000,000 43
வாகோவியா 142,000,000,000 39
ட்ரெஸ்ட்னெர் பேங்க் 135,000,000,000 37
மொத்தம் 13,351,000,000,000

3609

 

மேலும் சில சிறிய வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட பணத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால், 16 ட்ரில்லியன் டாலர்களையும் தாண்டுகிறதாம். பெருமுதலாளிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால், மக்களின் வரிப்பணம் வாரிவாரி இறைக்கப்படுகிறது. அதே ஒரு தேசத்திற்கே பிரச்சனை என்றால், அப்போதும் மக்களே சுரண்டப்படுகின்றனர். கிரேக்கத்தின் 370 பில்லியன் டாலரை தள்ளுபடி செய்தால், அந்நாட்டின் ஒரு கோடி மக்களும் மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையைத் தொடர முடியும்.

கிரேக்கம் – இன்றும் நாளையும்:

greece10அர்ஜெண்டினா மற்றும் ஈக்வடாரைப் போலவே மக்கள் போராட்டத்தின் வழியாக, ஒரு முற்போக்கான அரசு இவ்வாண்டு துவக்கத்தில் பதவியேற்றது. இழப்பதற்கு எதுவுமில்லாத ஏழைகள் தான் போராட வருவார்கள் என்று மார்க்ஸ் சொன்னதைப்போல, கிரேக்கம் மிகமிக மோசமான நிலையில் இருக்கும்போது தான் புதிய ஆட்சியே பொறுப்பேற்றது. அதனால், நெருக்கடியிலிருந்து மீண்டுவருவது கிரேக்கத்திற்கு அத்தனை எளிதானதல்ல என்பதை புதிய அரசு உணர்ந்தே இருந்தது. ஈக்வடாரின் பாதையைப் பின்பற்றி, கிரேக்கமும் “கடன் மறுய்வுக்குழு” அமைத்தது. ஈக்வடார் கடன்களை ஆய்வு செய்த குழுவில் பங்கெடுத்த பெல்ஜியத்தைச் சேர்ந்த எரிக் துசன் தான் இக்குழுவை தலைமையேற்று நடத்துகிறார். மூன்றாமுலக நாடுகளின் கடன் ஒழிப்புக் குழுவின் சர்வதேசத் தலைவராகவும் இருக்கிறார். அக்குழு ஜூன் மாதம் வெளியிட்ட முதல் அறிக்கையின்படி ஏராளமான கடன்கள் “முறையற்ற கடன்கள்” தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இறுதி அறிக்கை வரும்வரை காத்திருக்க வேண்டும். அதனை கிரேக்க அரசு எவ்வாறு பயன்படுத்தப் போகிறது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மக்கள் மீது அதிக வரிகளை திணிக்கச் சொல்லும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைகளை ஏற்கமாட்டோம் என்று புதிய அரசு அறிவித்தது. கிரேக்க அரசின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த யானிஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் எந்த நிபந்தனைகளுக்கும் அடிபணியமாட்டோம் என்றார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களை பொருளாதார் தீவிரவாதிகள் என்று கூட சொன்னார். கிரேக்கத்தில் ஒரு இடதுசாரி அரசு அமைந்ததை ஐரோப்பிய கமிஷனாலும், ஒன்றியத்தாலும், ஜெர்மனியாலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. முன்னெப்போதையும்விட பேச்சுவார்த்தைகளில் கடுமையாகவே நடந்துகொண்டனர். ஆனால், அவர்கள் விதிக்கிற கட்டளைகள் எதற்கும் விட்டுக்கொடுக்காமலேயே இருந்தார் கிரேக்க நிதியமைச்சர் யானிஸ். ஐரோப்பிய முதலாளிகள் எல்லோரும் கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு வர, யானிஸ் மட்டும் எளிமையாக எப்போதும் போல சாதாரண டீ சர்ட்டிலேயே மிகப்பெரிய பேச்சுவாத்தைகளில் பங்கெடுத்துவந்தார். சிக்கன நடவடிக்கைகள் என்கிற பேரில் எவ்வித நிதிநெருக்கடிகளையும் மக்கள்மீது திணிப்பதை யானிசும், சிரிசா கட்சியும் எதிர்த்தே வந்தன. ஆனால், கிரேக்க அரசு முன்வைத்த எந்தத்திட்டத்தையும் ஏற்க அவர்கள் தயாராக இல்லை. “முந்தைய அரசு ஒப்புக்கொண்டவற்றை எல்லாம் மாற்ற உங்களுக்கு உரிமையில்லை” என்று நேரடியாகவே கிரேக்கத்தின் புதிய அரசு அதிகாரமற்றது என்றனர்.

இதற்கிடையே “சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறீர்களா? இல்லையா?” என்று மக்களிடம் ஐரோப்பிய ஒன்றிய முதலாளிகளின் வற்புறுத்தலுடன் கிரேக்க அரசு வாக்கெடுப்பு நடத்த நடத்தியது. “இல்லை” என்று சொன்னால், கிரேக்கத்தை யூரோவை விட்டே துரத்திவிடுவோம் என்றெல்லாம் மறைமுகமாக மிரட்டினர் ஐரோப்பிய பொருளாதார தீவிரவாதிகள். கிரேக்கத்தின் பாரம்பரிய கட்சிகளும், முன்னாள் ஆட்சியாளர்களும் கூட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவாக “ஆம்” என்று வாக்களிக்கவே பரிந்துரைத்தன. மக்கள் எதற்கும் அஞ்சாமல், கடந்த ஜூலை 5-ம் தேதி நடந்த வாக்கெடுப்பில் பொருளாதாரப் போருக்கு “இல்லை” என்று தெளிவாக பதிலளித்திருந்தனர். இதனால் மேலும் கோபத்திற்குள்ளான ஐரோப்பிய ஒன்றியம், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்போது கிரேக்கத்தின் நிதியமைச்சரான யானிஸ் வரக்கூடாது என்று கட்டுப்பாடே விதித்தார்கள். இவர்கள் தான் ஜனநாயம் குறித்து உலகத்திற்கே புத்தி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்துதான் சிரிசா கட்சியின் தலைமையிலான புதிய அரசு மெல்ல தடுமாறத் துவங்கியது. வேறுவழியின்றி தன்னுடைய நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் யானிஸ். ஈக்வடாரின் ரஃபேல் கொரேயாவைப் போல, ஐரோப்பிய ஒன்றியத்தை கடுமையாக விமர்சித்துவந்த கிரேக்கத்தின் நிதியமைச்சரை கடும் நெருக்கடி கொடுத்து பதவி விலக வைத்திருக்கிறார்கள்.

புதிய பேச்சுவார்த்தை… புதிய நெருக்கடிகள்… புதிய பொருளாதாரப் போர்…

கிரேக்க அரசு ஒரு இடதுசாரி அரசாக இருப்பதனாலேயே, ஐரோப்பிய ஒன்றியம் மிகக்கறாராக இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்பதுபோல, கிரேக்கத்தின் பாரம்பரிய கட்சிகள் ஒதுங்கியிருப்பதையும் கவனிக்கவேண்டும். யானிசின் பதவிவிலகலைத் தொடர்ந்து புதிய பேச்சுவார்த்தைகள் துவங்கின. தங்களால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்று கிரேக்க பிரதமர் அளித்த அறிக்கையினை முற்றிலுமாக நிராகத்திருந்தது ஐரோப்பிய ஒன்றியம். அதற்கு மாற்றாக, அவர்களே சில சீர்திருத்தங்களை முன்வைத்து, அதனை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், தொடர்ந்து பேசலாம் என்று கடுமையாக நடந்துகொண்டனர். 17 மணிநேரம் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக ஜெர்மனியும், கிரேக்கமும் அறிவித்தது. இறுதியாக தயாரிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கிரேக்க பிரதமர் கையெழுத்திட்டார். வரும் புதன்கிழமைக்குள், கிரேக்க பாராளுமன்றத்தில் அவ்வொப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான ஒப்புதல் பெற்றுவிட்டு வருமாறு கிரேக்க பிரதமருக்கு காலக்கெடுவும் கொடுத்திருக்கிறார்கள். கிரேக்கத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கிற ஒப்பந்தம், மிகக்கொடூரமான பொருளாதாரப் போர் ஒப்பந்தம் என்றுதான் சொல்லவேண்டும்.

 • மதிப்புக் கூட்டு வரியினை உயர்த்த வேண்டும்.
 • ஓய்வூதியத் திட்டத்தை குறைக்கிற வகையில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
 • அரசின் அதிகாரத்தை பல துறைகளில் குறைத்திட வேண்டும். அதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியம் அமைக்கிற குழுக்களுக்கு அதிகாரம் அளித்திட வேண்டும்.
 • எல்லாவற்றையும் பார்வையிட ஐ.எம்.எஃப்.க்கு அதிகாரம் அளிக்க வேண்டும். அவர்களிடம் கேட்டுதான் எதையும் செய்யும் வேண்டும்.
 • நெருக்கடி மேலாண்மை அதிகாரத்தை ஐரோப்பிய கமிஷனுக்கு வழங்கிட வேண்டும்.
 • அரசின் வசம் இருக்கும் மின்சார துறையை, தனியார்மயமாக்க வேண்டும்.
 • முதலாளிகளுக்கு அதிகளவில் அதிகாரம் இருக்கும் வகையில், தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்த வேண்டும்.
 • நிதித் துறையில் அரசின் தலையீடு இருக்கவே கூடாது.
 • 50 பில்லியன் யூரோ வரையிலான அரசின் சொத்துக்களை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் தனியார் நிறுவனங்கள் நிர்வகிக்கும்.
 • அரசு நிர்வாகத்தில் அரசின் அதிகாரத்தைக் குறைத்து, ஐரோப்பிய கமிஷனுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும்.
 • கடந்த 6 மாத காலமாக புதிய அரசு நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்களை கிடப்பில் போட வேண்டும்.
 • எவற்றையெல்லாம் தனியார்மயமாக்கலாம் என்று ஐரோப்பிய ஒன்றியமும் அதன் துணைக்குழுக்களும் ஆராய்ந்து அறிக்கை வழங்கும். அதனை கிரேக்க அரசு நிறைவேற்ற வேண்டும்.

greece6மக்கள் மீது நிதிச்சுமைகளை ஏற்றுவதை எதிர்த்தே, புதிய அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால், அவர்களையும் கட்டாயப்படுத்தி, எல்லாவகையான நெருக்கடிகளையும் கொடுத்து, அதே கொள்கைகளை தொடர வைத்திருக்கின்றன ஐரோப்பிய ஒன்றியமும் அதன் துணைக்குழுக்களும். கிரேக்கம் பயணிக்கவேண்டிய சரியான பாதை இதுவல்ல. சிரிசா என்பது மக்களின் போராட்டத்திலிருந்து உருவான இயக்கம்தான். மக்களின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் மதிக்காவிட்டால், நாளை வேறொரு இயக்கமே உருவாகக்கூடும். நாடுதழுவிய வேலை நிறுத்தத்தை கிரேக்க தொழிற்சங்கங்கள் அறிவித்துவிட்டன. மக்கள் மீண்டும் வீதிகளில் போராடத் துவங்கிவிட்டார்கள். உலகெங்கிலும் சமூக வலைத்தளங்களில் கிரேக்கத்திற்கு ஆதரவு குவியத்துவங்கியிருக்கின்றன. “#ThisIsACoup” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கிரேக்க நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு வரும்போது, அவ்வொப்பந்தத்தையே நிராகரிக்கவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

முதலாளித்துவ பயங்கரவாதிகளால் இம்முறை அத்தனை எளிதாக கிரேக்க மக்களை வென்றுவிட முடியாது என்றே தோன்றுகிறது.  மூன்றாமுலக நாடுகளை எல்லாம் கடன்களால் கட்டிப்போட்டு, சுரண்டிக்கொண்டிருக்கிற சர்வதேச பொருளாதார பயங்கரவாதிகளான ஐ.எம்.எஃப்., உலக வங்கி போன்றவற்றுக்கு பாடம் கற்பிக்கவேண்டிய நேரமிது. கடுமையான நெருக்கடியிலும் மிகச்சிறிய நாடான கிரேக்கத்தின் மக்கள் வலுவாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவளிப்பதும், நம்முடைய நாடுகளிலும் நுழைய முற்படும் கிரேக்கத்தை சிதைத்த பொருளாதார பயங்கரவாதிகளை விரட்டியடிப்பதுமே நம்முடைய இப்போதைய கடமை.

கிரேக்கம் – திவாலாக்கப்பட்ட தேசத்தின் கதை – 1

கிரேக்கம் – திவாலாக்கப்பட்ட தேசத்தின் கதை – 2

கிரேக்கம் – திவாலாக்கப்பட்ட தேசத்தின் கதை – 3

References:

 • Greece’s ‘Odious’ Debt:  Jason Manolopoulos
 • Debt, IMF and the World Bank : Eric Toussaint
 • Debtocracy – Documentary
 • Catastroika – Documentary
 • ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் : ஜான் பெர்கின்ஸ்
 • http://www.newstatesman.com கட்டுரைகள்
 • http://www.theguardian.com கட்டுரைகள்

Related Posts