அரசியல்

கிரேக்கம் – திவாலாக்கப்பட்ட தேசத்தின் கதை – 3

அடங்கமறுத்த ஈக்வடார்:
தென்னமெரிக்காவின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்திருக்க வேண்டிய நாடு ஈக்வடார். ஆனால் ஈக்வடாரில் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அந்நாட்டு மக்கள் பார்த்ததெல்லாம் சர்வாதிகாரமும், ஏழ்மையும், கடன்களும், பொருளாதார அடியாட்களையும் தான்.

ஜான் பெர்கின்ஸ் (முன்னாள் பொருளாதார அடியாள்): “என்னுடைய முக்கியமான பணி, ஈக்வடார் இந்தோனேசியா போன்ற மூன்றாமுலக நாடுகளுடன் பொருளாதார ஒப்பந்தம் போடுவதுதான். அவர்களால் திருப்பித் தரவே முடியாத அளவிற்கு பில்லியன் கணக்கில் கடன்களைத் தருவது தான் என் வேலை. ஆனால் அந்நாடுகளுக்கு  ஒரு நிபந்தனை விதிப்போம், அவர்களுக்கு அளிக்கும் கடன்தொகையில் 90%த்திற்கும் மேலான பணத்தை அமெரிக்க முதலாளிகளுக்கும், நிறுவனங்களுக்கும் குத்தகைகள் கொடுப்பதிலேயே செலவு செய்யப்படவேண்டும் என்பது தான் அது. அந்நிறுவனங்களும் கடன் வாங்கிய நாட்டிற்கு சென்று பாலங்கள் கட்டுவது, போக்குவரத்து வசதிகளை நிறுவுவது போன்றவற்றை செய்வார்கள். அவையாவும் அந்நாட்டின் பணம் படைதவர்களுக்கே பயன்படுமேயன்றி, ஏழைகளால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அந்நாட்டின் ஒட்டுமொத்த கடனில் ஏழைகளுக்கும் பங்கு இருக்கும். அந்நாடுகள் நிரந்தர கடனாளிகள் ஆகிவிடுவார்கள். ஆகா, நாங்கள் போட்ட பணத்தை எங்கள் நிறுவனங்களுக்கே வந்துசேர்ந்துவிடும். அந்த நாடும் தொடர்ந்து எங்களுக்கு வட்டி கட்டிக்கொண்டே இருக்கும்.”

இப்படித்தான் 1982இல் ஐ.எம்.எப்-ன் நிர்வாகிகள் சிலர் ஈக்வடாருக்கு பயணம் மேற்கொண்டனர். அவர்களோடு கடன்கொடுக்கத் தயாராக இருந்த சிலரும் உடன் சென்றனர். ஈக்வடாரின் தேவைகளையும், கடந்தகால கடனை திருப்பிச் செலுத்த பணம் தேவை என்கிற நிலைமையையும் குறிப்பிட்டு மேலும் கடன் வழங்கினர். கடன்தொகையின் முதல் ஏறிக்கொண்டே இருந்தது. வட்டியை செலுத்துவதற்கு, மீண்டும் கடன் வாங்கும் நிலைக்குத்தள்ளப்பட்டது ஈக்வடார். தொடர்ந்து அந்நாட்டின் வளங்களை சுரண்டிக்கொண்டிருந்தது அமெரிக்கா. 1985 இல் துவங்கி 2005 வரை ஈகுவேடாரின் 50% வருவாய், கடன்களை திருப்பி செலுத்தவும், அதற்கான வட்டியை அடைக்கவுமே செலவிடப்பட்டது. இதனால் வருடத்திற்கு 3-4 பில்லியன் டாலர்களை ஈக்வடார் இழந்தது. ஆனால் நாட்டின் அடிப்படை தேவையான மருத்துவம், சுகாதாரம் மற்றும் கல்விக்கு 4% கூட செலவிட முடியவில்லை. வறுமை தலைவிரித்தாடியது. நாடெங்கும் மக்கள் போராட்டம் வெடித்தது.

மாற்றத்திற்கான வாக்குறுதிகளை அள்ளி வீசிய லூசியோ அதிபராகிற நேரத்தில் போராட்டங்கள் அடங்கின. ஆனால் அவர் அதிபர் ஆனதும், ஐ.எம்.எப். உடன் மேலும் பல ஒப்பந்தங்கள் போட்டு, மக்களின் வரிச்சுமையை அதிகரித்தார். மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்தது. வேறு வழியின்றி ரகசிய விமானம் மூலம் அவர் நாட்டை விட்டே தப்பி ஓடினார். துணை அதிபராக இருந்த பலோசியோ அதிபரானார். அவருக்கு நல்ல நோக்கங்கள் இருந்தபோதிலும், ஐ.எம்.எப். பையும், அமெரிக்காவையும் தீவிரமாக எதிர்க்க பயந்தார். அவருடைய அமைச்சரவையில் நிதி அமைச்சராக ரஃபேல் கொரேயா என்கிற இளைஞர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் எதற்கும், யாருக்கும் அஞ்சவில்லை.

rafael

வெனிசுலா, அர்ஜெண்டினா, பிரேசில், கியூபா போன்ற நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தி அவர்களின் துணையுடன் போராட முனைந்தார் கொரேயா. அப்போது ஈக்வடாரின் வருவாயில் 70% வரை கடன்களுக்காக செலவிடப்பட்டது. மீதமுள்ள சொற்ப நிதியே மக்கள் நலத்திட்டங்களுக்காக செலவிடப்பட்டது. இது சரியில்ல  என்று வெளிப்படையாக பேசிய கொரேயா, அதை 50% குறைத்தார். மக்கள் நலத்திட்டங்களுக்கு அதிக நிதி செலவிட தீர்மானித்தார். இது ஐ.எம்.எப்-ஐ கடுப்பேற்றியது, இதனால் ஈக்வடாருக்கு கொடுக்கவிருந்த அடுத்தகட்ட கடன்களை நிறுத்தியது ஐ.எம்.எப். இப்பிரச்சனைகளுக்கு காரணம் கொரேயா தான் என அதிபர் பலோசியோ குற்றம்சாட்டினார்.

“ஐ.எம்.எப்-க்கும் அமெரிக்காவுக்கும் அடிபணிந்தெல்லாம் என்னால் இருக்கமுடியாது. அப்படிப்பட்ட பதவியே எனக்குத் தேவையில்லை”

என்று வெளிப்படையாகச் சொல்லி, நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகினார் கொரேயா.

 

அடுத்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டார் கொரேயா. முற்போக்கு, ஜனநாயக, சோசலிச, கம்யூனிசக் குழுக்களை ஒருங்கிணைத்து புதிய கூட்டணியை உருவாக்கினார். அக்கூட்டணி சார்பாக நாடாளுமன்றத்திற்கு, வேட்பாளர்கள் எவரும் போட்டியிடவில்லை. மாறாக அதிபர்தேர்தலில் மட்டும் கொரேயா போட்டியிட்டார்,

“தேர்தலுக்குப்பின் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்ற வேண்டும், சட்டங்களே மக்களுக்கு எதிராக இருந்தால் யார் ஆட்சி செய்தாலும் மக்கள் பயன்பெற முடியாது”

என்றார்.

அதனால்தான் அவர் நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை நிறுத்தவில்லை. அந்த தேர்தலில் 57% வாக்குகளைப் பெற்று ஈக்வடாரின் அதிபரானார் ரஃபேல் கொரேயா. அவர் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பொருளாதாரம் படித்த இடதுசாரி எண்ணம் கொண்டவர். அதனால் அமெரிக்காவையும் , ஐ.எம்.எப்-ஐயும் எதிர்கொள்ளும் சூட்சமத்தை அறிந்து வைத்திருந்தார்.

ரஃபேல் கொரேயா: “சர்வதேசக் கடமைகளைவிடவும் நமக்கு முக்கியமான தேசக்கடமைகள் இருக்கின்றன. சர்வதேச கடன்களை அடைக்கும் நிலைக்கு முதலில் நாம் வருவோம். அதன்பிறகு, அவர்களுக்கு பதில் சொல்வோம். நாம் உயிரோடு வாழ்வதுதான் இப்போதைக்கான முன்னுரிமை. கடன்களை திருப்பி செலுத்துவது இரண்டாம் பட்சம்தான்.”

கொரேயா பதவியேற்றதும் முதலில் ஈக்வடாரின் மத்திய வங்கியில் நிரந்தரமாகத் தங்கியிருந்த ஐ.எம்.எப். மற்றும் அமெரிக்க அதிகாரிகளை வெளியேற்றினார்.

“கடன் கொடுத்த காரணத்திற்காக எங்கள் வங்கியில் நிரந்தரமாகத் தங்கிக்கொண்டு உத்தரவுகளை போடுவதை இனியும் ஏற்க முடியாது. எங்களது நாட்டிற்கு ஏற்பட்டிருக்கிற சீரழிவுகளை சரிசெய்யவும் எங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிற முறையற்ற கடன்களை எதிர்ப்பதும் எங்கள் உரிமை”

என்றார்.

வெறும் பேச்சோடு நிற்காமல், பதவியேற்று 6 மாதகாலத்திற்குள் ஈக்வடாரின் கடன்களை மறுஆய்வு செய்வதற்கு தணிக்கைக்குழு ஒன்றை நியம்மித்தார். 22 பேர் கொண்ட அக்குழு, 14 மாதங்கள் ஆய்வு நடத்தி 1956 முதல் 2006 வரையில், ஐ எம் எப், உலக வங்கி, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கொடுத்த கடன்களும், எல்லா பரிவர்த்தனைகளும் அலசி ஆராயப்பட்டது. அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. அதற்கு எந்த நாடும் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை. பிரான்சின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகக்கூறி ஈக்வடாருக்கு கண்டனம் தெரிவித்தது பிரான்ஸ் நிதியமைச்சகம்.

எல்லா தடைகளையும் தாண்டி ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டது. கடன்தொகையின் பெரும்பாலானவை முறையற்ற, நியாயமற்ற கடன்களே என்று ஆய்வறிக்கை தீர்க்கமாக பதிவு செய்தது. திறந்த புத்தகமாக, மக்களின் முன்னிலையில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 70% கடன் முறையற்ற கடன் என்று ஈக்வடார் அரசு அறிவித்தது. இது உலக அரங்கில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ஈக்வடாரின் கடன்பத்திரங்களை வாங்கிய வெளிநாட்டவர்கள், மிகக் குறைவான விலைக்கு (20% அளவிற்கு) அதனை விற்றனர். இவற்றை மறைமுகமாக ஈகுவடார் அரசே வாங்கியது, இதனால் 3 பில்லியன் டாலர் அளவிலான பத்திரங்களை வெறும் 800 மில்லியன் டாலருக்கு ஈக்வடார் அரசு வாங்கியது. அரசின் கடனும் குறைந்து, செலுத்த வேண்டிய வட்டியும் குறைந்தது. குறைந்தபட்சம் 7 பில்லியன் டாலர்கள் வரை சேமித்தது ஈக்வடார் அரசு.

ஈக்வடாரில் கடந்தகாலங்களில் மிகப்பெரிய பணக்காரர்கள் தங்களுக்கு ஏற்றவாறு சட்டத்தையே மாற்றியமைத்து, குறைவாகத்தான் வரிசெலுத்திவந்திருக்கிறார்கள். இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு இது பொருந்தும்.
சமீபத்தில், இதனை மாற்றியமைக்க ஈக்வடார் நாட்டு அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, மிகப்பெரிய கோடீஸ்வரர்களுக்கான வரியையும், பரம்பரை பரம்பரையாக ஒரு சிலரிடமே குவிந்திருக்கும் சொத்துக்களுக்கான வரியையும் உயர்த்துவதுதான் அச்சட்டத்தின் நோக்கம். இவ்வரியினால் ஈக்வடாரின் பணக்கார 2% மக்கள்தான் அதிக வரிசெலுத்த நேரிடும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படப் போவதில்லை.

பணக்காரர்கள் போராடிப் பார்த்திருக்கிறீர்களா? வரிசெலுத்தியே பழக்கமில்லாத பணக்காரர்கள், ஈக்வடாரில் குழப்பத்தை உருவாக்க போராடத் துவங்கியிருக்கிறார்கள். வெனிசுவெல்லாவின் பணக்காரர்கள் சாவேஸ் அரசைக் கவிழ்க்க போராடியதைப்போல, ஈக்வடாரின் பணக்காரர்கள் ரஃபேல் கொரேயாவின் (ஈக்வடார் அதிபர்) அரசை கவிழ்க்க முயற்சிக்கிறார்கள்.

ஐரோப்பாவிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த ஈக்வடார் அதிபரைக் கடத்தி, மக்கள் அரசைக் கவிழ்த்து, ஆட்சியினை பறிப்பதற்கு பணக்காரர்கள் திட்டமிட்டனர். அதன்படி, விமான நிலையத்திலிருந்து அதிபர் வெளியே வந்ததும், 200க்கும் மேற்பட்ட கார்களின் மூலம் அவரைச்சூழ்ந்தும், செயற்கையான போக்குவரத்து நெரிசலை உருவாக்கியும், அவரைக் கடத்த முடிவு செய்தனர்.

ஈக்வடார் மக்களுக்கு இச்செய்தி தெரியவந்தது. அதிபர் ரபேல் கொரேயா விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது, அவரைக்கடத்த திட்டமிட்டிருந்த சில நூறு கார்களைவிட, அவரைப் பாதுகாக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர். மக்களின் பேராதரவுடன், ஈக்வடாரின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டது.

இப்படியாக பல வழிகளில் அரசிற்கு கிடைத்த வருவாயில், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரத்திற்கு அதிக அளவில் செலவிடப்பட்டன. ரஃபேல் கொரேயாவின் அரசு பதவியேற்றதற்குப் பின்னர், ஈக்வடார் வளர்ச்சியின் பாதையிலேயே வெற்றிநடைபோட்டு பயணித்துக்கொண்டிருக்கிறது.

கிரேக்கம் – இன்றும் நாளையும்….. தொடரும்…

கிரேக்கம் – திவாலாக்கப்பட்ட தேசத்தின் கதை – 1

கிரேக்கம் – திவாலாக்கப்பட்ட தேசத்தின் கதை – 2

Related Posts