அரசியல்

கிரேக்கம் – திவாலாக்கப்பட்ட தேசத்தின் கதை – 2

மீண்டெழுந்த அர்ஜெண்டினா:

 

கிரேக்கத்தைப் போன்றே மற்றுமொரு நாடும் கடனில் சிக்கித் திவாலானது. அர்ஜெண்டினா என்கிற தென்னமெரிக்க நாடு தான் அது. 1824இல் பிரிட்டனிடம் கடனில் சிக்கியது அர்ஜெண்டினா. அப்போதிலிருந்து தொடர்ந்து கடன் தான். அதிலும் 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில், கடன் கழுத்தை நெரித்தது. கிரேக்கம் யூரோவில் சிக்கியதைப்போல அர்ஜெண்டினா டாலரில் சிக்கியது. புதிய தாராளமயக் கொள்கைகளை சோதிக்கிற பரிசோதனை நிலமாகவே அர்ஜெண்டினாவை நடத்தியது ஐ.எம்.எஃப். ஜெர்மனி சொல்வதைக் கேட்க வேண்டிய நிலை கிரேக்கத்திற்கு வந்ததைப்போல, அமெரிக்கா சொல்வதைக் கேட்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது அர்ஜெண்டினா.

 

protest

அர்ஜெண்டினாவிற்கு கடன்களை வழங்கிவிட்டு, அந்நாட்டில் எல்லாவற்றையும் தனியார் முதலாளிகளிடம் கொடுக்க வைத்தது ஐ.எம்.எஃப்.. அர்ஜெண்டினா அரசின் நிதிவருவாய் குறைந்தது. அரசின் கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லாமல் போயிற்று. 2001-ல் அர்ஜெண்டினாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. மக்கள் தெருவுக்கு வந்து போராட துவங்கியதும், வேறுவழியின்றி ஐ.எம்.எஃப்-க்கு உறுதுணையாக இருந்த அர்ஜெண்டினா அதிபர் கார்லஸ் மேனம் ஓடி ஒளிந்துகொண்டார்.  வாராவாரம் அதிபர்கள் மட்டும் மாறிக்கொண்டே இருந்தனர். நெருக்கடியின்போது  2003 இல் நடந்த தேர்தலில், நீதிக்கட்சி வெற்றிபெற்றது. கிர்சனர் அதிபராக பொறுப்பேற்றார். மக்கள் போராட்டங்களிலிருந்து வெற்றி பெற்ற அதிபர் என்பதால், ஐ.எம்.எஃப்-க்கு அடிபணியவில்லை.

அர்ஜெண்டினாவில் பதவியேற்ற புதிய அரசு பல முக்கியமான முடிவுகளை எடுத்தது….

 1. அர்ஜெண்டினா திவாலானதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், கிரேக்கத்திலோ கடந்த 5 ஆண்டுகளில் அதுபோன்று எதுவும் நிகழவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஐ.எம்.எஃப்., ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், ஐரோப்பிய கமிசன் தலைவர்கள் ஆகியோர் ஏதென்ஸ் நகரில் நிரந்தரமாக தங்கி, கிரேக்கத்தின் ஊழல் ஆட்சியாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தனர். 2010லேயே கிரேக்க மக்களிடமிருந்து சலுகை பறிக்கும் திட்டங்கள், விலையுயர்வு, ஊதியக்குறைப்பு போன்ற அனைத்தையும் அதிதீவிரமாக செயல்படுத்தினர்.
 2. கடன்களை மறு ஆய்வு செய்து, கடன் வழங்கியவர்களோடு விவாதித்து, கால அவகாசத்தை 2002-2008 வரையில் திருப்பித் தருவதற்கான திட்டத்தை முன்மொழிந்தது அர்ஜெண்டைனா அரசு.
 3. முதலாளிகளால் கைவிடப்பட்டு பூட்டுபோடப்பட்ட தொழிற்சாலைகளை, தொழிலாளர்களே ஆக்கிரமித்து நடத்தத் துவங்கினர். ஒன்றுக்கொன்று தொடர்புடைய தொழிற்சாலைகளின் ஊழியர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதாக முடிவெடுத்தனர். எந்த தொழிற்சாலை மூடப்பட்டாலும், விருப்பப்பட்டால் தொழிலாளர்களே ஏற்று நடத்தலாம் என்று அர்ஜெண்டினா அரசு சட்டமே இயற்றியது. அதன்மூலம் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் பணியிழப்பு தடுக்கப்பட்டது.

வெனிசுலாவும் அர்ஜெண்டினாவிற்கு தன்னாலான உதவிகளை செய்தது. அர்ஜெண்டினாவின் கடன்களுக்கான பத்திரங்களை வெனிசுலா வாங்கியது. அதன்மூலம், அர்ஜெண்டினாவிற்கு கடன்களை தீர்க்க சிறிது காலஅவகாசமும் கிடைத்தது.

ஒரு நாடு திவாலாகிறபோது இரண்டு முக்கியமான பிரச்சனைகள் அந்நாட்டின் முன் இருக்கும்:
 1. நாட்டின் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டு, உற்பத்தி தொய்வடைந்து வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து, அடுத்தவேளை சோற்றுக்கே மக்கள் அவதிப்படும் நிலை உருவாகியிருக்கும்.
 2. நாட்டின் உள்நாட்டு/வெளிநாட்டு கடன்களும் வட்டிகளும் திருப்பி செலுத்தமுடியாத அளவிற்கு உயர்ந்திருக்கும்.

இவ்விரண்டில், புதிய அர்ஜெண்டினா அரசு முதல் பிரச்சனையை தீர்ப்பதிலேயே ஆர்வம் காட்டியது. ஆனால், கிரேக்கமோ கடந்த 5 ஆண்டுகளில் இரண்டாவது பிரச்சனைக்கே முன்னுரிமை கொடுத்தது. (சமீபத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிற புதிய அரசு இதில் சற்றே விதிவிலக்கு). அர்ஜெண்டினாவைப் போல் கிரேக்கம் செயல்பட முடியாமல் போனதற்கு முதல் காரணம் அதன் ஆட்சியாளர்கள். இரண்டாவது காரணம், ஐரோப்பிய ஒன்றியம் சொல்வதைக்கேட்டு நடக்கவேண்டிய நிர்பந்தம். ஐ.எம்.எஃப். மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளைப் பின்பற்றியதால், கிரேக்கத்தில் நெருக்கடி மேலும் மேலும் அதிகரித்தது. வீடில்லா மக்களின் எண்ணிக்கை உயர்ந்தது. மருத்துவ வசதிகள் எட்டாக்கனியாக மாறின. மூன்றாமுலக நாடுகளின் பிரச்சனைகள் அனைத்தும் கிரேக்கத்தில் வரத்துவங்கின.

 

பனோஸ் பப்பனிகளோ (நரம்பியல் நிபுணர்): “உலகெங்கும் ஐ.எம்.எஃப்-ன் ஆதரவில் இருக்கும் நாடுகளிலெல்லாம், மக்களின் சராசரி ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகிறது. கிரேக்கத்திலும் இது நடக்க துவங்கியிருக்கிறது.”
அலேன் படியோ (தத்துவ அறிவியலாளர்): “நெருக்கடிகள் உருவாவதற்கு மக்கள் காரணமாக இல்லையென்றாலும், அதனை தீர்ப்பதற்கு மட்டும் அவர்கள் மீது சுமைகள் ஏற்றிவைக்கப்படுகின்றன. அப்படித்தான் முதலாளித்துவம் நெருக்கடிகளை சமாளிக்கிறது.”
ஒவ்வொரு நிதிநெருக்கடியின்போதும், தாங்கள் ஏற்கனவே பெற்றிருந்த உரிமைகளை ஒவ்வொன்றாக இழந்துவருகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை. நேற்று அதிக விலை கொடுத்து ஒரு வீட்டினை வாங்கியிருப்போம். ஆனால் இன்று நெருக்கடி ஏற்பட்டால், அதன் மதிப்போ பூஜ்ஜியத்திற்கு நெருக்கமான நிலைக்கு சென்றுவிடுகிறது. ஒரு நாட்டின் ஒட்டுமொத்த மதிப்பையே குறைத்துவிடுகிறது இது போன்ற முதலாளித்துவ நெருக்கடிகள். ஆனால், அத்தியாவசிய பொருட்களை வாங்கும் சக்தியோ மக்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது. சொத்துக்களின் மதிப்பு குறைந்தாலும் கடன்களின் மதிப்பு குறையாது. அதனால் கடன்களை அடைக்கவும் முடியாது. கடனை உருவாக்கியவர்கள் அதனை மக்கள் மீது திணித்துவிட்டு தப்பிவிடுவார்கள்.

 

முறையற்ற கடன்:

odiousdebt

1927 இல் அலெக்சாண்டர் சாக் என்பவர் “முறையற்ற/நியாயமற்ற கடன்” என்கிற புதிய கோட்பாட்டை உருவாக்கினார். அதன்படி, சில கடன்களை முறையற்றதாகவும் நியாயமற்றதாகவும் வரையறுத்து விடலாம். அவ்வாறு வரையறுக்கப்பட்ட கடன்களை, திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்றார்.

“முறையற்ற கடனாக” அறிவிக்கப்படுவதற்கு மூன்று முக்கிய காரணிகள் இருக்கவேண்டும்:
 1. மக்களின் அனுமதி பெறப்படாமல் அரசாங்கமே தன்னிச்சையாக கடன் வாங்குதல்,
 2. வாங்கிய கடனை மக்களின் நலன்களுக்குப் பயன்படுத்தாமல் இருத்தல்,
 3. கடன் கொடுத்தவருக்கும் இவ்வுண்மைகள் தெரிந்திருத்தல்

ஆகிய மூன்றும் ஒரு கடனில் தொடர்புடையவையாக இருந்தால், அக்கடனை “முறையற்ற கடன்” என அறிவித்து, திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்பதுதான் அக்கோட்பாட்டின் விதி.

சாக் முன்மொழிந்த இத்தத்துவம் முற்போக்கானதாகவும், அன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவைப்படுவதாகவும் இருந்தது.
 • முதன்முறையாக அதனைப் பயன்படுத்தியது வேறுயாருமல்ல. அமெரிக்காதான். 1898இல் ஸ்பெயினிடம் போரில் வெற்றி பெற்று, கியூபாவை தன்னுடன் இணைத்துக்கொண்டது அமெரிக்கா. கியூபாவின் பெயரில், ஸ்பெயின் வாங்கிய கடன்கள் அனைத்தையும் அமெரிக்காதான் திருப்பிச் செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், “முன்னாள் ஆட்சியாளர்கள் வாங்கிய கடன்கள் அனைத்தும் முறையற்ற கடன்கள். அதனால் அதனை திருப்பிச் செலுத்தமுடியாது” என்று அமெரிக்கா மறுத்துவிட்டது.
 • மெக்சிகோவின் மன்னராக இருந்த மேக்ஸ்மிலியனின் ஆட்சி கவிழ்ந்து, குடியரசு ஆட்சி அமைந்தது. மேக்ஸ்மிலியன் அதிக வட்டிக்கு வாங்கிய கடன்கள், மெக்சிகோவின் புதிய ஆட்சிக்கு பெரிய பாரமாக இருந்தது. மேக்ஸ்மிலியனின் கடன்களை திருப்பிச் செலுத்தமுடியாது என்று அரசு அறிவித்தது. அவருக்கு மரணதண்டனையும் வழங்கியது.
 • 2002-ல் ஈராக்கை ஆக்கிரமிக்க திட்டமிட்டது அமெரிக்கா. ஈராக் அமெரிக்காவின் வசம் வந்துவிட்டால், அதன் கடன்களுக்கும் அமெரிக்காவே பொறுப்பாகிவிடும் என்று அஞ்சியது. அதனால், போருக்கு முன்னரே ஈராக்கின் அனைத்து கடன்களும் சதாம் உசேன் வாங்கிய “முறையற்ற கடன்கள்” என்று அறிவிக்க போதுமான ஆவணங்களை தயார்செய்துவிட்டுத்தான், போருக்கே புறப்பட்டது அமெரிக்கா. 2003இல் ஈராக்கைப் பறித்துக்கொண்டபின், ஜி8 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில், அதனை அறிவித்தனர். ‘ஈராக்கின் புதிய அரசு கடனின்றி இருக்கலாம்’ என்றனர். அவர்கள் செய்தது நியாயமானதுதான் என்று உலக மக்களை நம்பவைக்க, மிகப்பெரிய பிரச்சாரம் நடத்தப்பட்டது. ‘சதாம் உசேன் காலத்தில் வாங்கப்பட்ட கடன்கள் அனைத்தும், அவரது சொந்த செலவுக்கே பயன்பட்டது’ என்றும், ‘ஆடம்பர மாடமாளிகைகள் கட்டப்பட்டன’ என்றும் ஊடகங்களை வைத்து செய்தி பரப்பப்பட்டன. உலக மக்கள் நம்பினர். ஆனால், கடன்கொடுத்த பல நாடுகளும் அமெரிக்காவிடம் முறையிட்டன. “ஈராக்கின் கடன்களை தள்ளுபடி செய்தால், வேறு பலரும் இதேபோன்று தள்ளுபடி செய்ய சொல்லிக் கேட்பார்கள். அது பெரிய பிரச்சனையாகிவிடும். காங்கோவில் மொபுட்டுவின் கடனையும், பிலிப்பைன்சில் சர்வாதிகாரி மார்கோசின் கடனையும், தென்னாப்பிரிக்காவில் முன்னாள் இனவெறி அரசின் கடனையும், தள்ளுபடி செய்யச் சொல்வார்கள்” என்று கடன்கொடுத்தவர்கள் அமெரிக்காவிடம் தெரிவித்தனர். “முறையற்ற கடன்” என்கிற வார்த்தையை வேறு யாரும் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக ஈராக்கின் கடன் விவகாரத்தை ஒளிவுமறைவாக அமெரிக்காவும் கடன் கொடுத்தவர்களும் பேசிமுடித்துக்கொண்டனர்.
 • மற்றொரு நாடு தனது சொந்த முயற்சியால், தன்னுடைய கடன்களை “முறையற்ற கடனாக” அறிவித்து நிரூபித்தும் காட்டியது. தென்னமெரிக்காவின் ஈக்வடார் தான் அந்நாடு.

அடங்கமறுத்த ஈக்வடார் – அடுத்த பகுதியில்…. தொடரும்….

கிரேக்கம் – திவாலாக்கப்பட்ட தேசத்தின் கதை – 1

கிரேக்கம் – திவாலாக்கப்பட்ட தேசத்தின் கதை – 3

Related Posts