அரசியல்

கிரேக்கம் – திவாலாக்கப்பட்ட தேசத்தின் கதை – 1

“கிரீஸ் திவாலாகப் போகுதாமே!”

“கிரீஸ் நெலமை ரொம்ப மோசமாம். இப்பவோ அப்பவோன்னு இருக்குதாம்”

“இனிமே கிரீஸ்ல யூரோவே இல்லாம போயிடும் போலே”

நம்முடைய பாரம்பரிய அரசியல் விவாதத் தளமான டீக்கடைகளிலும், நவீன விவாதத் தளமான இணையத்திலும் கடந்த சில நாட்களாகவே பரபப்பான பேச்சுப் பொருளாக கிரேக்கம் இடம் பெற்று வருகிறது.
  • கிரேக்கத்தின் வரலாறு என்ன?
  • கிரேக்கம் உண்மையிலேயே திவாலாகப் போகிறதா?
  • கிரேக்கத்தை திவாலாக்கியவர்கள் யார் யார்?
  • கிரேக்கத்தைப் போன்று இதற்கு முன்னர் வேறு எந்த நாடுகளாவது திவாலாகியிருக்கின்றனவா?
  • அவர்கள் எவ்வாறு மீண்டு வந்தார்கள்?
  • கடுமையான இன்றைய நெருக்கடியை சரிசெய்வது எப்படி?

போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முற்படுகிற கட்டுரைதான் இது.

இன்று நேற்றல்ல. இப்படித்தான், கிரேக்கத்தின் நிலை சரியில்லை என்று சொல்லி, மக்களை வாட்டிவதைத்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள் அந்நாட்டின் ஆட்சியாளர்கள்.

அந்தரேஸ் (கிரேக்கப் பிரதமர் 1981​​-90; 1993-96): “நமக்கிருக்கிற மலை போன்ற கடனை இந்த தேசம் அழிக்கவேண்டும்; இல்லையேல் அக்கடனே நம் தேசத்தை அழித்துவிடும்”
கான்ஸ்டாண்டினோல் (கிரேக்கப் பிரதமர் :1990-93): “ஊதிய உயர்வெல்லாம் எக்காரணம் கொண்டும் கொடுக்க முடியாது.”
கோஸ்டஸ் சிமிடிஸ் (கிரேக்க பிரதமர் :1996-2004): “எந்தக் கேள்வியும் கேட்காமல் உங்களுடைய பணத்தையும் உரிமையையும் விட்டுக்கொடுப்பதாக உறுதி  கொடுங்கள். அப்போதுதான் நெருக்கடியிலிருந்து விடுபட முடியும்”
ஜார்ஜ் (கிரேக்கப் பிரதமர் 2009-2011): “நாம் மிகப்பெரிய நெருக்கடியில் இருக்கிறோம்.”
கடந்த நாற்பது ஆண்டுகளில் இரண்டு அரசியல் கட்சிகளும், மூன்று அரசியல் குடும்பங்களும் சில பெரிய முதலாளிகளும் சேர்ந்து கிரேக்கத்தை திவாலாக்கியிருக்கிறார்கள். அவர்களுடைய கடனை அடைப்பதற்கு மக்களுடைய பணத்தையே எப்போதும் பயனப்படுத்தி வந்திருக்கிறார்கள். நெருக்கடி இருக்கிறது என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டிருந்தாலும், மறுபுறம் ஆட்சியாளர்களை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்காமல் இருப்பதற்கும் தேர்தல்களின்போதும், புதிய கடன்கள் வாங்குகிறபோதும், போலியான நம்பிக்கைகள் வழங்கத் தவறவில்லை.
யனேவாஸ் பப்பனடோனியோ (நிதி அமைச்சர் 1994-2001): “நாம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் . கிரேக்கத்தின் நிதி நெருக்கடியை தீர்க்கிற முதல் ஆட்சியாளர்கள் நாங்கள்தான்”
கிறிஸ்டோ டௌலகிஸ் (நிதி அமைச்சர் 2001-2004): “நம்நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பாவின் இரண்டாம் நிலை நாடுகளில் இருந்து, முதலாம் நிலை நாடாக நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்”
 ஆண்டாண்டு காலங்களாக கடனிலேயே காலத்தை ஓட்டிய அரசாங்கங்கள், தற்போது நெருக்கடி நிலையின் போது மக்களின் மீது பழிபோடுகிறார்கள்.

தியோடர்ஸ் பங்கலோஸ் (கிரேக்க துணை அதிபர்: 2009-2012): “கிரேக்கம் எப்படி இவ்வளவு பெரிய கடனாளியானது என்று மக்கள் கேட்கின்றனர். உங்களுக்கு வேலையும் கொடுத்து அதற்கான ஊதியமும் கொடுத்தோம் அப்படித்தான் கடன் வந்தது” என்றார்.

அப்படியானால் கிரேக்கம் குறித்து மற்ற ஐரோப்பிய நாடுகளில் பரப்பப்படும் குற்றச்சாட்டான, “கிரேக்க மக்கள் ஊதாரிகள்; சோம்பேறிகள்” என்ற கூற்று உண்மைதானா? அதுதான் கிரேக்கம் திவாலாகக் காரணமா?

கிரேக்கத்தின் கடன் வரலாறு:

இரண்டு உலகப் போருக்குப் பின்னர் முதலாளித்துவம் வளர்ச்சியை நோக்கி நகர்ந்தது. அடுத்த 25 ஆண்டுகளில் மக்களின் வருமானமும் உயர்ந்தது. அதன் விளைவாக மக்களிடையே நுகர்வுக் கலாச்சாரமும் வளர்ந்தது.

டேவிட்  ஹார்வி (பொருளாதார மேதை): “நெருக்கடி இல்லாத நிலை முதலாளித்துவத்தில் இல்லவே இல்லை. நெருக்கடி நிலை அவ்வப்போது இருந்து கொண்டேதான் இருக்கும். முதலாளித்துவத்தில் லாபம்தானே முதல் குறிக்கோள். ஆண்டுக்காண்டு இலாபம் அதிகரித்துக் கொண்டே இருக்க, உற்பத்திச் செலவை குறைப்பதும், விலையேற்றம் செய்வதும் இன்றியமையாததாகிறது. தொழிலாளர்களின் ஊதியம் குறைந்தபோது, அவர்களின் வாங்கும் திறனும் குறைந்தது. அது மீண்டும் முதலாளித்துவத்தை பாதித்தது. மக்களின் வருமானம் குறைந்ததால் பொருட்களின் நுகர்வும் வெகுவாக அதற்கு தீர்வாக (?!?) புதுவகையான முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுதான் கடன் பொருளாதாரம். 1980 களில் இருந்து பொருட்களை வாங்குவதற்கு போதிய பணம் கையிருப்பு இல்லையெனில், கடன் வாங்கி எதையும் வாங்கலாம் என்பன போன்ற கிரெடிட் திட்டங்கள் பிரபலமாக்கப்பட்டன. 1970 களில் தொடங்கிய நெருக்கடியை 20-30 ஆண்டுகள் தள்ளிப் போடுவதற்கு இத்திட்டங்கள் உதவின. ஆனால் 1990 களின் இறுதியில் கடனும் பெரும் சுமையாக மாறி பல்லிளித்தது.”

அமெரிக்க வீட்டுக்கடன் பிரச்சனைகள் பெரிய அளவில் தலைதூக்கி, நிதியமைப்பே தகர்ந்து போனதும் இவ்வாறுதான். 70களில் இருந்தே நெருக்கடியின் தன்மை மக்களை வேறுவேறு விதங்களில் பாதிக்கத் துவங்கியது. அப்போதிலிருந்தே மிகக்குறைவான வளர்ச்சி, தொடர் பொருளாதார நெருக்கடிகள், ஊதிய உயர்வின்மை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவை தொடர்ந்தன. ஒவ்வொரு நெருக்கடியின்போதும், வங்கிகள் திவாலாவது, மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு அவற்றை மீட்பதும், மீண்டும் கடன் வாங்குவதும், மீண்டும் நிதிநேருக்கடிகள் வருவதுமாக தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

சமீர் அமின் (பொருளாதார நிபுணர்): “டாலருக்கே இப்படியென்றால், யூரோவின் பிரச்சனைகள் சொல்லிமாளாது. யூரோ நாணயத்தைப் பொருத்த வரையில் அதற்கென ஒரு தேசம் கிடையாது. தேசமில்லாமல் ஒரு நாணயம் இருக்க முடியாது. டாலரில் பல பிரச்சனைகள் இருந்தாலும், அதற்கென “அமெரிக்கா” என்கிற தேசம் இருக்கிறது. ஆனால், யூரோவிற்கு அதில்லை. ஐரோப்பா என்பது அடிப்படையில் ஒரு அரசியல் அமைப்பாக உருவாகவில்லை. ஐரோப்பாவிற்கு அதன் உறுப்பினர்களின் மீது முறையான அரசியல் அதிகாரமும் இல்லை.”

piigsஐரோப்பாவைப் பொருத்த வரையில் சமநிலை என்பது ஐரோப்பிய ஒன்றியம் துவங்கியதிலிருந்தே இல்லை. அதனால்தான் PIIGS (போர்ச்சுகல், அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின்) போன்ற வரிய ஏழை நாடுகள் உருவாயின. பெயரளவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லா நாடுகளும் சமமென சொல்லப்பட்டாலும், “மைய நாடுகள்” என்றும் “துணை நாடுகள்” என்றும் இரண்டு வகையான நாடுகள் அதில் அங்கம் வகிக்கின்றன. துணை நாடுகளில் நெருக்கடி மிகவும் தீவிரமாகவே இருந்து வருகிறது. ஜெர்மனி போன்ற மைய நாடுகள், யூரோவாள் வளர்ச்சியும் வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் எல்லா நாடுகளும் பெரிய போட்டியனை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதில் துணை நாடுகள் எப்போதும் போட்டியில் பின்தங்கியே இருந்து வந்திருக்கின்றன. அதற்கு யூரோ மிகமுக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறது.

எரிக் துசன் (மூன்றாமுலக நாடுகளின் கடன் ஒழிப்புக்குழுவின் தலைவர்): “ஐரோப்பிய நாடுகள் இணைக்கப்பட்டவிதத்தினால்தான், ஐரோப்பிய ஒன்றியத்தில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. தெருவில் சிறிய போட்டிகளில் சண்டை போட்டுக் கொண்டிருந்தவரை அழைத்துக் கொண்டுபோய் பெரிய குத்துச் சண்டை வீரரான முகமது அலியுடன் மோத வைத்து, “உங்களில் யார் வெல்கிறார் என்று பார்ப்போம்” என்றால் எப்படி இருக்கும். அப்படியானதொரு போட்டியைத்தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரேக்கம் சந்திக்க நேரிட்டது.

“சோம்பேறிகள் கிரேக்கம்” என்றும் “அதிக உற்பத்தித்திறன் ஜெர்மனி” என்று சொல்லப்படுவதில் எவ்வளவு உண்மை இருக்கிறது? ஜெர்மன் போன்ற நாடுகளால் மட்டும் எப்படி போட்டியினை சமாளிக்க முடிகிறது? தங்கள் சொந்த நாட்டின் தொழிலாளர்கள் மீது அவர்கள் நடத்தும் கடுமையான கட்டுப்பாட்டுப் போரும் ஒரு காரணம்.

சாரா வாகன்னெக்த் (இடதுக் கட்சியின் துணைத் தலைவர்): “கடந்த சில ஆண்டுகளைக் கணக்கெடுத்துப் பார்த்தோமானால், ஜெர்மன் தொழிலாளர்களின் ஊதியம் சராசரியாக 7% உயர்ந்திருக்கிறது. ஆனால், அதே காலகட்டத்தில், ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தில் 27% உயர்ந்திருக்கிறது.”

இந்த இடைவெளியே நமக்கு பல கேள்விகளுக்கு பதில் சொல்லும். ஜெர்மனியின் வளர்ச்சியை மற்ற நாடுகளால் பின் தொடரவே முடியவில்லை. அந்தந்த நாடுகளின் உற்பத்தி, வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நாணயத்தின் மதிப்பைக் கூட்டவோ குறைக்கவோ முடியாத நிலையில் இருக்கின்றன ஐரோப்பிய நாடுகள். அதன் விளைவுகளே நெருக்கடியாக உருவாகியிருக்கிறது.

கிரேக்கத்தைப் பொறுத்த வரையில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு முக்கியமான காரணங்களை கவனிக்க வேண்டும். அந்நாட்டின் வரவை விட செலவு எப்போதும் அதிகமாகவே இருப்பதனால், பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்கப்படுகிறது. அதனால் கடன் அதிகமாகி, அதற்கான வட்டியை செலுத்த வேண்டியிருப்பதால், அடுத்து வருகிற ஆண்டில் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கிறது. அதோடு மட்டுமில்லாமல், கிரேக்கத்திற்கு வரலாற்று ரீதியாகவே கடன்கள் உள்ளன. இவையெல்லாமுமாக சேர்ந்து, கடன்களையும் பற்றாக்குறையையும் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்திருப்பதால், கிரேக்கத்தின் கடனும் பற்றாக்குறையும் மேலும் அதிகமாகியிருக்கிறது. அதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால், முழுக்கடனுக்கும் கிரேக்கமே பொறுப்பாளியாகி, அவர்களே திருப்பி செலுத்த வேண்டிய நிலை வரும். அதனால் உள்ளேயே இருக்க முடியாமல், வெளியேறவும் முடியாமல் தவிக்கிறது கிரேக்கம். இது கிரேக்கத்திற்கான நிலை மட்டுமல்ல. பிற துணை நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் இத்தாலிக்கும் பொருந்தும்.

1821 இல் கிரேக்கம் விடுதலை பெற்றதிலிருந்தே கடன் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக 1980களில் கடன் அளவு மிகப்பெரிய அளவிற்கு உயரத் துவங்கியது. கடந்த 30-40 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தவர்கள் பின்பற்றிய தவறான வரிக் கொள்கையும் அதற்கு முக்கிய காரணம். அதிக அளவிற்கு கடன் வாங்கியதற்கு, கிரேக்கத்தின் ஆட்சியாளர்கள் யாருடைய நலன் சார்ந்து இயங்கினார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 1980-90களில் பிரதமராக இருந்த அன்ட்ரியாஸ் சில மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால், பெரிய முதலாளிகளிடமும் நிறுவனங்களிடமும் நியாயமான வரியினைக் கூட வசூலிக்காததால், அரசுக்கு வருமானம் இல்லாமல் போனது, செலவு மட்டுமே அதிகரித்தது. அதோடு மட்டுமின்றி, நட்டத்தில் இயங்கி வந்த பல தனியார் நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த உத்தரவிட்டார். அதனால், அந்நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களின் வேலை பறிபோகாமால் தடுக்க முடிந்தது. ஆனால், உண்மையிலேயே மறைமுகமாக அவர் அதவியது அந்நிறுவனங்களின் முதலாளிகளுக்குதான். அவர்களின் நட்டத்தையும் அரசே ஏற்றதால், அரசின் கடன்களும் நிதிப் பற்றாக்குறையும் கிடுகிடுவென உயர்ந்தன.

அன்ட்ரியாசுக்குப் பிறகு வந்த பிரதமர் மிட்சோடகிசும் கடன் வாங்குவதைத் தொடர்ந்தார். அப்போதுதான், ஐரோப்பிய ஒன்றியம் உருவாகக் காரணமான மாஸ்திரிக்த் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி, நிதிப் பற்றாக்குறையை போக்க, தாராளமயமாக்கலை எல்லா நாடுகளிலும் அமல்படுத்த வேண்டுமென்றும், சந்தைப் பொருளாதாரத்தை பின்பற்ற வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. அடுத்து வந்த பிரதமர் கோஸ்டாசின் காலத்தில், கடன் கொஞ்சம் குறைந்திருந்தது. அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆரம்பகால மாய வளர்ச்சிகளும் காரணமாக இருந்தன. ஆனால் கோஸ்டாசோ, பெருமுதலாளிகளின் வரியை 10% குறைத்தார். அதன் மூலம் கிரேக்கத்தின் வருமானம் மீண்டும் குறைந்து, கடன் சுமை அதிகரித்தது.

கிரேக்கத்தைப் போன்று இதற்கு முன்னர் வேறு எந்த நாடுகளாவது திவாலாகியிருக்கின்றனவா?

Related Posts