அரசியல்

அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புத் தரத்தை மேம்படுத்த வேண்டும்……..

பிரதமர் உரையை முடித்தவுடனே தமிழக முதல்வர் உத்தரவை கொடுத்துவிட்டார். தமிழகம் முழுவதும் முக்கிய பொது ஸ்தலங்கள் மூடல், பத்தாம் வகுப்பு தேர்வு தேதிமாற்றம், ஒருநாள் ஊரடங்கு என உத்தரவுக்கு பஞ்சமில்லை. மறுபுறம் சுகாதார துறை அமைச்சரான விஜயபாஸ்கரும் தன் பங்கிற்கு சுகாதாரத்துறை சூப்பராக செயல்படுகிறது, மருத்துவமனைகளில் வசதிகள் தரமாக உள்ளது என தனக்கு தோன்றியதெல்லாம் ஊடகங்களுக்கு செய்தியாக வழங்கிக்கொண்டிருக்கிறார்.. ஆனால் களத்தின் உண்மைத்தன்மை என்ன? உண்மையில் சுகாதாரத்தன்மையுடன்தான் அரசு மருத்துவமனைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றனவா? அங்கு பணிபுரியும் மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்கள் தேவையான பாதுகாப்பு வசதிகளுடன்தான் பணிபுரிகின்றனரா?

எட்டு மாதங்களுக்கு முன் சாதாரண காய்ச்சல் என்று இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அரசு மருத்துவமனை என்றால் தரமான மருத்துவம் கிடைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், சுகாதாரம் சுத்தமாக கிடைக்காது என்று அன்றுதான் தெரிந்தது. காரணம் நான் இருந்த ஆண்கள் வார்டில் இரண்டு குளியலறையும் இரண்டு கழிவறையும் இருந்தது. அதில் ஒரு கழிவறையின் பாதி கதவை காணவில்லை, இன்னொன்றின் மேல்கூரையோ மண்டையில் எப்போது வேண்டுமானாலும் விழலாம் நிலை. குளியலறையிலோ பாதி தரையையே காணவில்லை. அங்கு நடந்த சம்பவம் என்றுமே மறக்கமுடியாதது.. ஒரு நோயாளியுடன் துணைக்கு வந்த வயது முதிர்ந்த தாய் அந்த கழிவறையில் வழுக்கி விழுந்து மண்டை உடைந்து இரத்தம் பீறிட்டது. அரசு மருத்துவமனைகள் அட்டன்டர்களை கூட நோயாளியாக்கும் திறமை கொண்டவை போல!? . காரணம் முதல் முறை கட்டுவதோடு சரி மீண்டும் அதை பழது பார்ப்பதோ, மறுகட்டுமானம் செய்வதோ கிடையாது. தூய்மை பணியாளர்கள் எவ்வளவு தூய்மை படுத்தினாலும் கட்டுமான ஒழுங்கின்மையால் அவை சுகாதாரமற்றே காட்சியளிக்கிறது. குறிப்பாக இராயப்பேட்டை, கோசா, ஓமந்தூரார், தாம்பரம் நெஞ்சக மருத்துவமனை என பல அரசு மருத்துவமனைகளின் பாதி கழிவறைகள் மனிதப்பயன்பாட்டிற்கே தகுதியற்றதாகவும், வைரஸ் தொற்றுகளுக்கு ஏற்ற இடமாகவும் உள்ளது..

சுருக்கமாக சொல்லின் அரசு மருத்துவமனை கழிவறைகளை “மரணத்தின் வாசலாகவே” மக்கள் கருதுகின்றனர். இப்படி ஒரு மருத்துவமனை கட்டமைப்பும் பராமரிப்புமே இவ்வளவு மோசம் என்றால், மற்ற அரசு மருத்துவமனைகளின் நிலையை ஆராய துவங்கியதன் இறுதி முடிவு அரசின் அழுக்கு பகுதிகளை படம்பிடித்து காட்டியது.

மருத்துவமனைகளில் விநியோகிக்கப்படும் உணவுகள் தரமானதாக இருக்கிறதா என்ற தரசோதனை அரசால் உடனடியாக நடத்தப்பட வேண்டும். ஏனெனில், கேரளா போன்ற மாநிலங்களில் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நடத்தப்படும் விதம் குறித்தும் அவர்களுக்களிக்கப்படும் சத்துணவு குறித்தும் நல்ல கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால், தமிழக அரசு மருத்துவமனைகளில் உணவு தரமற்று உள்ளதன் உதாரணம் கொடுத்த அரை மணி நேரத்தில் பாதிக்கும் மேற்பட்ட உணவு குப்பைத்தொட்டிகளில் மிதக்கிறது.

சென்னையில் உள்ள பெரும்பாலான முக்கிய மருத்துவமனைகளில் மனிதர்களை தவிர மிருகங்களும் கூட அநாயசமாக வந்துவிட்டு போகலாம். குறிப்பாக கோசா, தாம்பரம் நெஞ்சக மருத்துவமனைகளில் நாய்கள் நோயாளிகள் வார்டுக்குள்ளேயே உறங்கிக் கொண்டிருக்கின்றன. பல கட்டிடங்கள் பழமையாகி இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதற்கே பல மருத்துவர்கள் பயந்து பணிபுரிகின்றனர். இதில் அவர்களுக்கு வேலை பளு என்ற பிரச்சினையும் உள்ளது.. தூய்மை பணியாளர்களுக்கு தொடர்ச்சியாக கான்ட்ரேக்ட் நபரிடமிருந்து சம்பளம் வருவதில் பிரச்சினை.. அதுமட்டுமின்றி பல நேரங்களில் அறுவைசிகிச்சை கழிவுகளை அகற்றும்போதும் மற்ற மருத்துவ கழிவுகளை அகற்றும்போதும் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் அவர்களுக்கு தரப்படுவது கிடையாது.

சாராயக்கடைகள் தெருவுக்கொன்று அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதும், தெருவுக்கு ஒரு மருத்துவமனை தனியார் கட்டுப்பாட்டில் இயங்குவதுமே இப்பிரச்சினைகளுக்கு முதற்புள்ளி. பல அரசியல் புள்ளிகள் சொந்த மருத்துவமனைகளையும் மருத்துவ கல்லூரிகளையும் வைத்திருப்பதால் அவற்றின் தரத்தை உயர்த்தி காட்டி மக்களை ஈர்ப்பதற்காகவே திட்டமிட்டு அரசு மருத்துவமனைகளின் தரம் குறைக்கப்படுகிறது. இந்தியாவில் 80% மருத்துவதுறை தனியார் கையில்தான் உள்ளது. ஆனால், அதிகப்படியான அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டது இந்தியா. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் அனைத்து வகையான மருத்துவ கல்லூரிகளையும் சேர்த்தால் 45க்கும் மேல் வரும். ஆனால், இந்தியாவில் 1445 நோயாளிகளுக்கு 1 மருத்துவர் என்ற நிலை (1:1445), 483 நோயாளிகளுக்கு 1 செவிலியர் என்ற நிலை (1:483) இது மிகப்பெரும் முரண்பாடு ஆகும். நம்மை விட சிறிய நாடான கியூபாவோ 9:1000 என்ற விகிதத்தை பின்பற்றுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) வின் வழிகாட்டுதலே 1:1000 ம் தான். அதிக மருத்துவ கல்லூரிகளை கொண்ட நம்மால் இன்னும் இந்த விகிதத்தை எட்ட முடியவில்லை. காரணம் கல்வியை முழுக்க வியாபாரமாக மாற்றியதன் விளைவு இங்கு படிப்பவர்கள் வெளிநாடுகளுக்கு கிளம்பிவிடுகின்றனர்.
இந்தியாவில் மருத்துவத்திற்கு மொத்த gdpயில் இருந்து ஒதுக்கப்படும் நிதி வெறும் 1% தான். அதிலும் குறிப்பாக BIOTECHNOLOGY RESEARCH துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் காட்டப்படும் பாரபட்சம் அந்த துறையையே சவக்குழிக்கு அனுப்புகிறது. அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் தங்கள் GDP யில் இந்த ஆய்வுகளுக்காக 3% ஒதுக்குகின்றனர். ஆனால், இந்தியாவோ 0.89% லிருந்து 0.69% குறைத்து அத்துறையையே அழித்துவிட்டது என வேதனைப்படுகிறார் அப்துல் கலாமின் அறிவியல் உதவியாளர் பொன்ராஜ். நாம் ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொள்கிற இந்த சூழலிலாவது வரும் இடர்பாடுகளை எதிர்கொள்ள வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என்று கேட்டால் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு தேவைப்படும் வென்டிலேட்டர்கள் சென்னையில் மட்டும் வெறும் 200 தான் இருக்கிறதாம். நாடு முழுவதும் 138 கோடி மக்களை சோதிக்க 1.30இலட்சம் kit மட்டுமே உள்ளது. இது போதவே போதாது. இது ஏதோ நிலைமை கையை விட்டு போனால் பார்த்துக்கொள்ளலாம் என அரசே அலட்சியமாக செயல்படுகிறதோ என சிந்திக்க வைக்கிறது. ஏனெனில் நோய் எதிர்ப்பு மருந்துகளும் நம்மிடம் குறைவாகவே உள்ளது. நோய் தடுப்பு மருந்தோ சுத்தமாக கிடையாது.

இப்போதும் அரசு விழித்துக்கொண்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி பாதுகாப்பு வசதிகளை தரமுயர்த்தவில்லையானால் கொத்து கொத்தாக ஏழை மக்கள் செத்து மடிவதை யாராலும் தடுக்க முடியாது.. ஆயுதங்கள் வாங்குவதை விட மருத்துவமும் சுகாதாரமும் ஒரு நாட்டின் அடிப்படை தேவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஏழைகள் என்றால் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற சிந்தனையே இவ்வளவு அலட்சியமான செயல்பாடுகளுக்கு காரணமாகும். அவர்கள் கட்டும் வரிக்கு தரமான சுகாதாரமான மருத்துவம் கொடுப்பது அரசின் கடமை என்பதை ஒரு போதும் மறந்துவிட கூடாது. அதே போல் வீதியில் நின்று கைத்தட்டுவதால் மருத்துவர்களுக்கோ, தூய்மை பணியாளர்களுக்கோ எந்த பயனும் இல்லை. மாறாக அவர்களுக்கு தேவையான சரியான வசதிகளை பாகுபாடின்றி செய்து கொடுத்தலே நல்ல பயனளிக்கும். அறிவியல்பூர்வமான அத்தகைய செயல்களையை அவர்களும் விரும்புகின்றனர். முதலில் மற்ற நாடுகளை போல இந்தியாவும் கொரோனா தாக்குதலை எதிர்கொள்ள அதிகப்படியான நிதியை ஒதுக்க வேண்டும். அதன் பகுதியாகவே இவ்வளவு பிரச்சினைகள் உள்ள அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பை தரத்தை மேம்படுத்த வேண்டும்.

– சுபாஷ்.

Related Posts