சினிமா தமிழ் சினிமா

எதுவுமே இல்லாதவனின் அடையாளத் தேடல் – கோலி சோடா

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. அந்த அடையாளத்தை அடைவதற்கும், தக்க வைப்பதற்குமான போராட்டமே வாழ்க்கை என்பதுதான் கோலி சோடாவின் ஒற்றை வரி கதை.

கோயம்பேடு மார்க்கெட்டில் சொன்ன வேலையை செய்து, கிடைத்த இடத்தில் தூங்கி, ஒரு பெண்ணை காதலிப்பது என்பதை தவிர்த்து எந்த லட்சியமுமின்றி சுற்றித் திரியும் 4 அநாதை சிறுவர்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுக்க உத்வேகமளித்து, உதவியும் செய்கிறார் காய்கறி கடை நடத்தும் ஆச்சி.

ஆச்சியின் வழிகாட்டுதலின் படி ஒரு மெஸ் ஆரம்பிக்க முடிவெடுக்கின்றார்கள். பணத்திற்காக மார்க்கெட் தாதா + கந்து வட்டி நாயுடுவை அணுகும் போது அவர் தன்னுடைய கோடவுனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அனுமதிக்கிறார். அதுவரையிலும் அநாதை சிறுவர்களென அழைக்கப்பட்டவர்களுக்கான அடையாளமாக “ஆச்சி மெஸ்” மாறுகிறது.

நாயுடுவின் மச்சான் மற்றும் ரவுடிகளால் அவர்களின் அடையாளம் சிதைக்கப்படும் போது அதை எப்படி எதிர் கொண்டு தங்கள் அடையாளத்தை நிலை நிறுத்த போராடி ஜெயிக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.

மாஸ் ஹீரோ, குத்துப்பாட்டு, இரட்டை அர்த்த வசனங்கள், சாகச சண்டைக் காட்சிகள் இன்றி மார்க்கெட், 4 சிறுவர்கள், தாதா என திரைக்கதையை நகர்த்த முடியும் என்கிற இயக்குநரின் தன்னம்பிக்கைக்கே ஒரு ஸ்பெஷல் சபாஷ்.

அதே போன்று படத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று

“எதுவுமே இல்லாதவன, எல்லாம் இருக்கிறவன், என்ன வேணாலும் பண்ணலாங்கிற நெலமய மாத்தணும்”

என்பது மாதிரியான நறுக் தெறிக்கும் வசனங்கள். மேலும் “நஷ்டத்துல விக்கிற ஆவின் பால வீடு வீடா போடுறீங்க, லாபத்துல விக்கிற டாஸ்மாக்கு நாங்க வந்து வாங்கி குடிக்கணுமா” என்று க்ளாப்ஸ் பறக்கும் நகைச்சுவையிலும் ஒரு கருத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினாற் போல பதிவு செய்ய முடியும் என்று நிரூபித்து படம் நெடுகிலும் வசனங்களால் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் ”வசனகர்த்தா” பாண்டிராஜ்-க்கு வாழ்த்துகள்.

2.30 மணி நேரம் திரைக்கதை நகர்த்த வேண்டிய தேவை இருப்பதால் திரைக்கதையை ஜவ்வாக இழுக்க வேண்டும் என்கிற எந்த கட்டாயமுமின்றி கதையின் தேவைக்கேற்ப 2 மணி நேரத்திற்குள்ளாக காதல், காமெடி, சோகம், தன்னம்பிக்கை என சகலமும் கலந்து திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர்.

கோயம்பேட்டை தத்ரூபமாக தன் ஒளிப்பதில் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர், கலை வடிவமைப்பு, பின்னணி இசை, என பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்.

சிட்டுக்குருவிகள் ஒன்று சேர்ந்து வல்லூறை எதிர்த்து ஜெயிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையை கொடுத்திருக்கும் திரைப்படம். லாஜிக்கை கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு, ஓரிரு சிறிய பிழைகளை தவிர்த்து படம் அருமை.

ஒரு கலை படைப்பு சமூகத்தில் என்ன மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறது என்பதை பொறுத்தே அந்த படைப்பின் தரம் என்பது நிர்ணயிக்கப்படுகிறது. அந்த விதத்தில் ”கோலி சோடா” ஒரு ஆக்கப்பூர்வமான முயற்சியே.

Related Posts