பிற

ஆண்டாள் – பெருந்தெய்வத்தின் கதை . . . . . . . . . . . . !

திருப்பாவை முப்பதும், நாச்சியார் திருமொழி 143 ஆக, கோதை, யாத்த பாடல்கள் காணக்கிடக்கின்றன. தமிழமுதம் ஆறாக, ஊற்றாகப் பெருகிக் கரையுடைக்கும் சொற்பூவனம் இப்பாக்கள்! பேசாமொழியைப் பேசிடும் நாச்சியாரின் பெண்மொழி, மிகவும் எதார்த்தமானது! பன்னிரு ஆழ்வார்களுள் ஒரே பெண் ஆழ்வாரான கோதை, ஆண்டவனையே கவியால் ஆட்கொண்டதால் “ஆண்டாள்” எனப்படுகிறாள்!

வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிய ஆண்டில் பிறந்ததாகச் சொல்லப்படும் கோதையின் வரலாற்றைக் காண்போம்.

வில்லிபுத்தூர், வடபத்ரசாயி பெருமாள் ஆலயத்தின் துளசி மாடத்தில், விஷ்ணு பிரியர் எனப்பட்ட பெரியாழ்வார் ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுக்கிறார். ‘கோதை’ எனப் பெயரிட்டு வளர்க்கிறார். பக்திக்குப் பாத்திரமான பெரியாழ்வார், பெருமாளுக்கு,  பாமாலையோடு தொடுத்த பூமாலையைக், கோதை தான் சூடி பின் பெருமாளுக்குச் சூட்டுகிறாள்! இதைக் கண்ணுற்ற பெரியாழ்வார் கோதையைக் கடிந்துகொள்ள, பெருமாள் ‘தனக்கு கோதை சூடிய பூமாலையே உகந்தது’ என பெரியாழ்வாரின் கனாவில் உரைக்க, ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ ஆகிறாள் கோதை! கண்ணனையே, காதலனாக வரித்த, நாச்சியாரை,  மணக்க       திருவரங்கத்துக்கு  வரவழைக்கும்படி, கனாவில் பெரியாழ்வாரிடம் அரங்கன் சொல்ல, திருவரங்கம் கொண்டுவரப்பட்ட ஆண்டாள், அரங்கனுடன் கலந்துவிடுகிறாள்!

இது ஆண்டாளின் கதையாகச் சொல்லப்படுவது!

‘அரங்கடனுடன் கலந்துவிட்டாள் ஆண்டாள்’, என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது? அதற்கு பக்தி இயக்கப் போக்குகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பக்தி என்பது சிந்தனையை ஒருமுகப்படுத்துவது. இறைவன் மீதுள்ள பற்றினால் சேவை செய்வது. ‘சரியை, கிரியை, யோகம், ஞானம்’ ஆகிய நால்வகைகளுள், தாசமார்க்கமெனப்படுவது பக்தி!

பக்தி, பூத்தொடுத்தல், கோயில் பிரகாரங்களைச் சுத்தம் செய்தல் போன்ற வேலைகளையும், இறைவனை நெக்குருகிப் பாடியும், தொண்டாற்றும்! ‘சாலோகம்'(இறை உலகம்) , ‘சாமீபம்’ (இறை அருகே), ‘சாரூபம்’ (இறை ரூபம்), ‘சாலோக்கியம்’ (இறை ஒன்றிப்பு) ஆகிய நால்வகை முக்தி வகையினங்களுள் ‘சாலோகம்’ எனப்படும் இறைவனின் திருலோகத்தில் இடம் கிடைக்கும் பேறு, பக்தியினால் உண்டாகும்!

“முக்தி அடைவதற்கு, உடலை வருத்தி, துறவு பூண்டு, தவமேற்று, ஞானம் பெறுவதை விட , மன ஒருமையினால் இறைவனை எண்ணி, பாடி, ஆடி சேவை ஆற்றுவதும் முக்திக்கு வழியாகும்”   என்கிறது பக்தி மார்க்கம்!

தத்துவங்கள், சமயங்களுடன்  இணையும் போது,  சமூகத்தேவையினால் பல பரிமாணங்களைப் பெற்று,  பொருளீயச் சேவை ஆற்றுகின்றன!

சைவம் சிவனுடன் கலப்பதை முக்தியின் வகையினமாகப் பேசுகிறது. வைணவம் இறைவனுக்குத் தொண்டு செய்தலே முக்தி என்கிறது. இதில் இறையுடன் கலத்தல் என்பது இல்லை!

அத்வைதச் செல்வாக்கில் சைவமும், விஷிஷ்டாத்வைதச் செல்வாக்கில் வைணவமும் மெருகூட்டிக்கொண்டன.

பக்தி நெறி என்ற தளமும், அதில் ஏன் இப்படியான நெகிழ்தல்களும், சமரசங்களும் என்பதை விளங்கிக்கொள்ள அதன் காலத்தை, அவைதீக சமயங்களான சமண, பௌத்த வளர்ச்சியையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

வேத சமயங்கள் மலிந்திருந்த காலத்தில் அவற்றின் எதிர்ப்போக்குகளாக உக்கிர உச்சம் பெற்ற சமண, பௌத்த சமயங்கள், அடித்தட்டு மக்களையும் அதற்கு மேலே படிநிலையில் உள்ள மக்களையும் வென்றெடுத்தன!

‘கைவல்யம்’ எனப்படுகிற முக்தியைச் சமணமும், ‘நிர்வாணம்’ என்பதைப் பௌத்தமும் முன்வைத்தன!  “உண்மை ஒன்றல்ல ; பல என்கிற அநேகாந்தவாதத்தையும், அனைத்துக்கும் ஆன்மா உண்டு” எனச்  சமணமும், “மையவாதம் மற்றும் அனாத்மவாதத்தைப்” பௌத்தமும் முன்வைத்தன!

“மும்மணிகளைச்” சமணமும், “எண்மார்க்கத்தைப்” பௌத்தமும் முன்வைத்து,  அறக்கோட்பாடுகளுடன் வணிகப் பெருஞ்சமயங்களாகின!

“பெண்கள் முக்தி அடையவே முடியாது” எனச் சமணமும், அதைப்பற்றிய பெரிய விவாதம் இல்லாத பௌத்தமும், சமயத் தளங்களில், ‘இயக்கிகளையும்,  பிக்குனிகளையும்’ அனுமதிக்கும் வகையில் தான் வெகுசனத்தளம் இருந்தது. கடும் அறக்கோட்பாடுகளை உடைய இந்த அவைதிக மதங்கள் மக்களிடம் செல்வாக்குப் பெறவும், பெற்ற பின்பும் பல சமரசங்களுக்குத் தள்ளப்பட்டன!

சமணம், சைவத்துடனும், பௌத்தம் வைணவத்துடனும் பெருஞ்சமர் நடத்தின. இடையில் சமண பௌத்த மோதல்களும், சைவ வைணவ மோதல்களும், பிற சமயங்களான காபாலிகம் உள்ளிட்ட தந்திர சமயங்களுடனும், வாமாச்சாரம் உள்ளிட்ட வழிபாட்டு முறைகளுடனும், சாங்கியம் உள்ளிட்ட தத்துவங்களுடனும் முரண்பட்டு தங்களுக்குள் கணக்குகளைத் தீர்த்துக்கொண்டன!

அறுவகைத் தரிசனங்களை வென்றெடுத்த முழுமை தரிசனமான வேதாந்தம், துவைதம் அதுவைதம் விஷிஷ்டாத்வைதம் ஆகியவற்றை உள்ளடக்கியது. ‘துவைதம்’ எனப்படும் ‘மாத்வமும்’, ‘விஷிஷ்டாத்வைதமும்’ வைணவத்துடனும், ‘அத்வைதம்’ சைவத்துடனும் இணைந்து வர்க்கச் சேவை ஆற்றின!

கிமு ஆறாம் நூற்றாண்டில் எழுந்த சமண பௌத்தம்,  தமிழகத்தில் இருந்த அறமரபுகளோடு ஒட்டியும் வெட்டியும் வைதிக சமயங்களை, வீழ்த்தி அரச சமயங்களாகவும் இருந்து கோலோச்சின! காப்பியங்கள் பத்தும் சமண பௌத்த சமயங்களின் படைப்புகளே. இவற்றை எதிர்கொள்ள வைதீக சமயம் தன்னை மீட்டுருவாக்கம் செய்யவேண்டி இருந்தது.

வைதீக மரபின் மீட்டெழுச்சியாக, இந்தப் ‘பக்தி இயக்கம்’ ஏழாம் நூற்றாண்டில் உருக்கொள்கிறது! பக்தி இயக்கத்தின் முன்னோடி தமிழகமே!  நாயன்மார்கள் அறுபத்து மூவரும், ஆழ்வார்கள் பன்னிருவரும் பக்திநெறியைப் பலவாறும் செதுக்கி, சைவ வைணவத்தை உயர்த்தினர்.

சமண பௌத்த கோட்பாடுகளை, அவற்றின் நடைமுறைகளை மறுத்தும், உள்வாங்கியும் வைதீகம், தன் இறுகிய பிடியைத் தளர்த்த வேண்டிய சூழலில் பக்தி இயக்கம் வளர்க்கப்படுகிறது!

திருமழிசை ஆழ்வார் வைணவத்திலும், சைவத்தில் திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருநாளைப்போவாராகிய நந்தனார் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களும் சமயப் பெரியோர் வரிசையில் வைக்கப்படுகிறார்கள்! ஆண்டாள், காலத்தால் முந்தைய புனிதவதியார், மங்கையர்க்கரசியார் போன்ற பெண்களும் இவ்வரிசையில் அரசியலாக, சமூகத் தேவையாக, அரசு வளர்ச்சிக்காக இணைக்கப்படுகிறார்கள்!

பெண்களை, ஒடுக்கப்பட்டவர்களை இணைத்துக் கொள்வதன் மூலம் வேளாண் சமயங்களான சைவமும் வைணவமும் தங்களைச் சனநாயகத்தன்மையுடன் காட்டிக்கொண்டன! இதன் வழியாக சமண பௌத்த சமயங்களை வீழ்த்தின! அடித்தட்டு மக்களை வென்றெடுத்தன! அதன்மூலம் பேரரசு வளர்ச்சிக்கு பெருஞ்சேவை ஆற்றின!

ஆண்டாள் கதை :

பெண் என்பவள் அரசுருவாக்கத்தின் முக்கிய கருவி! தாய்வழிச்சமூகமான ஆதிப்பொதுவுடைமைச் சமூகம், தனியுடைமைச் சமூகமாக மாற்றப்பட, ஆண்வழிச் சமூக மரபும், இனக்குழு வளர்ச்சியும், திணை மரபும், சாதியச் சமூகமாகவும் மாற்றம் பெறுகிறது! நிலவுடைமையிலிருந்து அரசு உருவாக்க காலகட்டமாக சங்க இலக்கிய காலத்தைக் கருதினால், காப்பிய காலகட்டம் அரசுருவாக்கத்தின் தொடர்ச்சியாகவும், பக்தி இலக்கிய காலகட்டம் பேரரசு உருவாக்கக் காலகட்டம் எனவும் கருதலாம்!

பேரரசு உருவாக்கப் பெரும்போர்களில்  சூறையாடப்பட்டு கொண்டுவரப்பட்ட அரசிகள், உயர்குடிப் பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் ஆளும்வர்க்கம் எந்த எதிர்ப்பும் இன்றி, பரத்தமையில் ஈடுபடுத்தவோ,  போகிக்கவோ இயலாத நிலை இருக்கையில், அவர்களைக் கோயில்களில்,  பொதுமடந்தைகளாக ஆக்கும் நடைமுறை வழக்கத்தில் வந்தது! அவர்கள் தேவனுக்கு அடியவர்கள்! அவர்கள் பாலியல் சேவையாற்றுபவர்களாக இருக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை! ராஜதாசிகள் எனப்படும் ஒற்று மகளிருக்கும் இது கட்டாயமில்லை! சமூகதாசிகளுக்கு இதுவே கடமை!

தேவரடியார்ச் சமூகத்தை நிறுவனமயமாக்குவதால், ‘கோயில்கள் அதிகார மையங்களாக மாறுதல், பார்ப்பனர்கள் கோயில்களுக்குள் செல்வாக்குப் பெறுதல், வெகுசன எதிர்ப்பை ஆளும்வர்க்கம் நீர்க்கச் செய்தல், துறவு வாழ்க்கைக்கு எதிராக இன்ப வாழ்க்கையை முன்னிறுத்தி, அதற்குத் தெய்வீகத் தன்மையைத் தருதல்’ ஆகியன எளிதாகின.

இறைவனை மறுக்கக்கூடிய பௌத்தம், இறை பன்மை என்கிற சமணம் ஆகியவற்றின் எதிர்த்தரப்பாக ‘ஓரிறைக்’ கொள்கையை முன்னிறுத்துவது வைதீகச் சமயங்களுக்கு ஆளும்வர்க்கக் கடமையாகிறது! சமணமும் பௌத்தமும் ஆளும்வர்க்க சமயங்கள் தாம்! வைணவம்

மாயோனையும், சைவம் சிவனையும் பெருந்தெய்வமாக்கின. மேலும் வேதக் கடவுள்களைப் பின்னுக்குத்தள்ளியும், சக்திவழிபாடான தந்திரத்தையும், முருகன் உள்ளிட்ட இனக்குழு தெய்வங்களை ஸ்வீகாரம் செய்துகொண்டன!

சமண ‘வாக்கு தேவியை’, சரஸ்வதியாகவும், பௌத்த ‘தாராதேவியை’க் காமாட்சியாகவும்  வரித்துக்கொண்டன!

சைவ வைணவ வேளாண் சமயங்கள், ஆண்மையச் சமூகத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த இவை பெரிதும் உதவின!

முக்தி அடைய, இறை உணர்வும், சரணாகதியும் போதும் என்ற வெகுசனப் பிரச்சாரத்தோடு, இந்த வளர்ச்சிக்கு உதவிய பக்தி இயக்கம் தன்பங்குக்கு, இறைவனை ஆணாக பாவித்து, பாடுவோரைப் பெண்ணாகப் பாவித்து ‘நாயகநாயகி பாவனையுடன்’ பக்தியைக் காமம் வழியாக வடித்துக்கொட்டியது!

மாணிக்கவாசகர் உள்ளிட்ட நாயன்மார்களும், பெரியாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களும் இதில் முக்கியமானவர்கள்! அவற்றின் ஒருவகைத் தொடர்ச்சியாக, பரத்தமையைக் கண்டித்த அவைதீகச் சமயங்களுக்கு எதிராக, பரத்தமையை சமூகமயமாக்குவதையும் வைதீகச் சமயங்கள் விட்டுவைக்கவில்லை! சுந்தர நாயனார் பரவையாரையும், தொண்டரடிப்பொடியாழ்வார் தேவதேவியையும் மணந்துகொண்டனர்! இவர்கள் இருவரும் சமூகத்தாசிகள் வம்சத்தினர்.

இந்தப் பக்திச் சூழலில் வளர்ந்தவள் ஆண்டாள்! ‘நாயகநாயகி பாவனை’, பெண்ணாகிய ஆண்டாளுக்கு, ‘பள்ளமடையாகப்’ பெருகிப்பொங்கியதில் ஆச்சரியம் ஏதுமில்லை!

கண்ணன் கதைகளைக் கேட்டு வளர்ந்த கோதை, கண்ணனைக் கொண்டாடுகிறாள்! ஆண்டாளை ஆழ்வார்களுள் இணைக்க, எதிர்ப்புகளும் இல்லாமல் இல்லை! எண்ணிக்கையில் குறைந்த பாசுரங்களை இயற்றிய ஆண்டாளின் அரசியலைப் பேசாமல், அவளை வெறும் பேதையாகக் கண்டு, ‘காமரசம் சொட்டியவள்’, ‘கண்ணனை வரித்தவள்’, ‘காதலால் பிதற்றியவள்’ என்று மட்டும் கட்டுவித்தால், பக்தி இயக்க அரசியலின் வெற்றி இதுவன்றி வேறில்லை!

முப்பது திருப்பாவையில், ஊர்ச்சிறுமிகள், ஆயர்மகளிரை எழுப்புகிறாள். கண்ணனின் கோயில் வாயிலில் வாயிற்காப்போனை எழுப்புகிறாள். கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்புகிறாள். முடிவில் கண்ணனை எழுப்புகிறாள்! கண்ணனைக் கவிதையால் குரல் உயர்த்தி அதட்டவும் செய்கிறாள்!

திருமொழி,  “கண்ணனைச் சேரக் காமனை வேண்டுதல், சிற்றில் சிதைக்க வேண்டாம் என வேண்டுதல், கண்ணனிடம் ஆடைகளைத் தருமாறு வேண்டுதல், கூடல் இழைத்தல், குயிற்பத்து, திருமணக்கனவு, சங்கை விதந்தோதுதல், மேகத்தைத் தூதுவிடுதல், மாலிருஞ்சோலை அழகனைப் பாடுதல், பிரிவினால் வருந்துதல், அரங்கனை மையலுறுதல், கண்ணனைச் சேர வேண்டுதல், பசலையைத் தணிக்க வேண்டுதல், கண்ணனைக் கண்டது உரைத்தல் என பதினான்காகக் கிடக்கிறது!(143 பாசுரங்கள்)

இந்த 173 பாடல்களிலும் ஆண்டாள் புதியதாக ஒன்றையும்  பெரிதாகச்  சொல்லிவிடவில்லை! இதிகாசங்கள் இரண்டையும் மீளச் சொல்கிறாள். வாமனனை, உலகளந்த பெருமாளைப் பாடு கிறாள்! கூடற்பதியான மாலிருஞ்சோலை அழகனை, சோழத்திருப்பதியான அரங்கனை, வட திருப்பதியான  வேங்கட மாமலையானைக் குறிப்பாகப் பாடுகிறாள்!

“சிற்றில்லைச் சிதைக்க வேண்டாமென வேண்டுதலும், காமநோய்த் தணிக்க வேண்டுதலும்” ஆண்டாளின் அனுபவ வாதைகளாக இருக்கலாம் என்பதும், அவைப் பெண்ணிய உடலரசியல் மொழிகளாக இருக்கின்றன என்பதும் ஒருவகையில் முக்கியமான பார்வைகள்! “மனையுறை மகளிர் பேசத்துணியாத செய்திகளை, சைவத்துறவி புனிதவதி பயந்த செய்திகளை, சைவ அரசி மானி சொல்லத் தேவைப்படாத, காமவெளியை” ஆண்டாள் பாசுரங்கள் வழியாக மடைதிறந்து, ஆர்ப்பரிக்கிறாள்! “அவை ஏற்கனவே ஆண் ஆழ்வார்கள், நாயன்மார்கள் பேசியவை தான்” என்கிற வாய்ப்பை ஆண்டாள் தனது வாய்ப்பாக்கி, பாடிப் பிரவாகம் எடுக்கிறாள்!

ஆண்மையச் சமூகம், இதனை வேறுவழியின்றி ஏற்றாகவேண்டிய சூழல் நிர்பந்தம் இது!

சக்தி வழிபாட்டின், பெண்மைய வழிபாட்டுப் பத்தினிக் கோட்டங்களை, ஆண்மையப் பெருந்தெய்வக் கோயில்கள் மூலம் தகர்க்க, ஆண்டாள், புனிதவதியார்கள் இவர்களுக்குத் தேவை!

ஆண்டாளின் பாடல்களில் குறிக்கப்படும் மாலிருஞ்சோலையும், திருவரங்கமும், வேங்கடமாமலையும் வைணவத் திருப்பதிகளாக்கப்பட்ட, பௌத்தக் கோயில்கள்! இதனை “ஆண்டாள் தெரியாமல், தன்னியல்பாகப் பாடியிருப்பாள்” என எண்ணுவது, பெண்களின் அரசியல் அறிவைக் குறைத்துப் பார்ப்பது! திருப்பாவையில் அவள், பெண்களைத் திரட்டி கண்ணனிடம் சரணாகதி அடையக் கேட்கிறாள்! வில்லிபுத்தூரின் முல்லைவனச் சூழலைப் படம்பிடித்துக்காட்டும் ஆண்டாள் எடுத்தாளும் சொற்கள் அவள் குறைவில்லாத அறிவுடனும், செல்வச்செழிப்புடன் வாழ்ந்தைக் காட்டுகிறது. அவள் புழங்குச் சொற்களில் பாலும் நெய்யும், மங்கலப் பொருட்களும் நிரம்பக்கிடக்கின்றன.

“இப்பாடல்கள்வழி வெளிப்படுவது, வெறும் அவளது அனுபவ வாதை மட்டுமே” என்பது, அரசியல் அற்ற  பார்வை.

வள்ளலார் பேசிய “ஒளியுடம்பு” தத்துவம் அவரைக் காவுகொண்டது போல, ஆண்டாள் பாடிய “கண்ணனைக் கண்டது உரைத்தது” அவளைத் திருவரங்கத்துக்குள் மூடிப்புதைத்தது!

இறைவனோடு இரண்டறக் கலத்தல் என்பது வைணவ முக்தி வழிமுறை இல்லை எனும்போது, ஆண்டாள், அரங்கனுடன் கலக்க முடியாது.

பின் எப்படி ஆண்டாள் பார்போற்றும் பெருந்தெய்வமானாள்?

அங்கே இருக்கிறது சமய அரசியல்!

அதற்கு முன்னர்…

இப்போது விவாதிக்கப்படுகின்ற ஆண்டாள் தேவரடியாரா? இல்லையா? என்கிற விவாதத்தை எப்படி அணுகுவது?

“பேசாப்பொருளான காமத்தைத் திறந்ததால் அவள் காமக்கிழத்தி” எனத் துணிவது ஆண்மையச் சிந்தனை!

“கோயிலில், தான் சூடிய ஆரத்தை, கண்ணனுக்குச் சூட்டி, கருவறை வரை செல்லும் உரிமை பெற்றிருப்பதால் இவள் தொண்டுசெய்யும் தேவரடியார்” என்று கணிப்பது, உயர்குடிப் பெண்களின் எதிர்அரசியல் போக்கை, அரசியல் உரிமைகளைப் பார்க்கத் தவறுவதால் வருவது!

“அரங்கனைக் கலந்தாள் எனச் சொல்லப்படுவதால்,  இறைவனுக்குப் பொட்டுக்கட்டிவிடப்பட்டாள்” என்று முடிவுக்கு வருவது பொருளற்றது. இது, “தேவதாசி முறையினை, சமூகத் தளத்தில் எதிர்க்கும் மூர்க்கமான போக்கு” என்பதன்றி வேறில்லை! பார்ப்பனர் வளர்ப்பான ஆண்டாள், பொட்டுக்கட்டப்பட அவசியமே இல்லை. ஒருவேளை அவ்வாறாயின், பொட்டுக்கட்டப்பட்ட தாசி ஒருத்தி, பெருந்தெய்வம் ஆனது எப்படி?

ஆண்டாள் திருவரங்கத்தில் வைத்து ‘பொட்டுக்கட்டப்பட்டாள்’ என்று பலரும் சொல்வதும், வெளிநாட்டு அறிஞர் ஒருவரின் மேற்கோளை எடுத்தாண்டு அதன் வழியாக அதனை நிறுவுவதும் தர்க்க உண்மை அற்றது.

ஆண்டாள் தேவதாசி என்பது அடிப்படை உண்மையற்றது! வலிந்து அப்படிப் பார்ப்பது, ‘ஆண்டாளின் இருப்பே இல்லை’ என்ற, ராஜாஜியின் வன்மத்திற்கு இணையானது.

அவளது பாடல்களின் வழியாக, ஆண்மைய நிறுவனப்போக்குகளை, ஆண் இட்ட வளையத்துக்குள்ளேயே தகர்க்க முற்பட்டிருக்கிறாள்!

பரத்தமையை விரும்பி ஏற்ற பெண்கள் எவருமே இல்லை! அது ஆண்மையச் சமூகத்தின் கட்டமைப்பு! அதனை எதிர்த்து கலகக்குரலை உள்ளே இருந்து எழுப்பியிருக்கிறாள்! சமய அரசியலின் சேவை, அரசுருவாக்கம் எனும்போது, ஆண்டாளின் நிபந்தனைக்குட்பட்ட கலக நடவடிக்கைகளைத் தன்வயமாக்கி, ஆளும்வர்க்கம் ஆண்டாளின் குரலைத் தனக்குச் சாதகமாக்கிவிட்டது!

ஆண்டாளின் வரலாற்றுத் தேவையும் அவ்வாறானதாகவே வாய்ப்புப் பெறும்!

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட பெண்கள், வழிபாட்டுத் தெய்வங்களாகக் கட்டப்படும் வழக்கத்தை ஒப்புநோக்கினால், பெருந்தெய்வமாக்கப்பட்ட ஆண்டாளுக்கும் இவ்வாறாக ஏதும் நடந்திருக்கலாம் என ஊகிக்கலாம்!

தெய்வமாக்கப்பட்ட ஆண்டாளின், பிறப்பான துளசிமாடக் கண்டெடுப்பு, வைதீகத் தெய்வக் கட்டமைப்பாக இருக்கலாம்! ஐயப்பன் பிறப்பு , முருகன் பிறப்பு, மதுரைவீரன் பிறப்பு, சீதையின் பிறப்பு போல ஆண்டாளின் பிறப்பும் கட்டமைக்கப்பட்டிருக்கலாம்.

“ஆண்டாளை, திருவரங்கத்துக்கு வரவழைக்க, பெரியாழ்வார் கண்ட கனவும், ஆண்டாளை வரவேற்கும்படியான திருவரங்கத்து பட்டர்களின் கனவும்”, ஆண்டாள் மறைந்ததில் உள்ள மர்மமுடிச்சுகள்!

“யார் இவர்களுக்கு ஆண்டாளை, அரங்கன் கருவறைக்குள் கொண்டுவரக் கட்டளை இட்டிருக்கக்கூடும்”, என்பதை உணர்ந்தால் ஆண்டாளின் இறுதியும், பெருந்தெய்வக்கோலமும் ஏன் என்பது விளங்கும்! இது மாபெரும் அரண்மனைச் சதி!! ராஜிய விவகாரம்!!!

ஆளும்வர்க்கச் சேவைக்கு உதவிய ஆண்டாள், அதே ஆளும்வர்க்க அதிகாரத்திற்குப் பலியாக்கப்பட் டிருக்கக்கூடும்.  தவிர்க்கவியலாமலும், மேலும் தங்களுக்கு அது பயன்படும் என்பதற்காகவும் ஆளும்வர்க்கம் ஆண்டாளைப் பெருந்தேவியாகப் பெருந்தெய்வக்கோலத்தில், ஸ்ரீமன் நாராயணனுக்கு மனைவியாக்கி இருக்கலாம்! தங்கத் தாம்பாளத்தில் பேசாமடந்தையாக, ஊமைக் கிளியுடன் மந்தகாச முறுவலுடன் சேவை சாதிக்கும் பெருந்தேவி ஆண்டாளின் கோலம் ஆளும்வர்க்க வரலாற்றால் கட்டமைக்கப்பட்டது.

– ரபீக் ராஜா.

Related Posts