அறிவியல்

உருகும் புவியின் மீது தொடரும் சூதாட்டம் !

                                                                                      லெனின் நெடுஞ்செழியன்

“உலகிலுள்ள பெரும்பாலான கடல்களும் இன்னபிற இயற்கை அமைப்புகளும் பருவநிலை மாற்றத்தால் கடும் விளைவுகளைச் சந்தித்து வருவதை உலகின் அனைத்து கண்டங்களிலும் மேற்கொண்ட அறிவியல்பூர்வ ஆய்வுமுடிவுகள் ஆதரங்களுடன் உறுதி செய்கின்றன. புவியின் வெப்பநிலை உயர்வே இப்பாதிப்புகள் அனைத்திற்கும் காரணமாக இருக்கின்றன” – ஐ.பி.சி.சி. (பருவநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழு – Intergovernmental Panel on Climate Change, 2007)

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உலகெங்கிலும் சர்வ சாதரணமாக நிகழ்ந்துவருகிற வெள்ளங்கள், சூறாவளிகள், வறட்சி நிலைமைகள், நில நடுக்கங்கள், கடல்மட்ட உயர்வால் மூழ்குகிற குட்டித்தீவுகள் என இன்னும் ஏனைய இயற்கைப் பேரிடர்கள் புவிக்கோளத்தின் உயிர்ப்பிழைப்பு குறித்த அபாயகரமான கேள்வியை நம்முன் எழுப்பிவருகிறது. இப்பூவுலகில் தற்போது வாழ்ந்துவரும் கோடான கோடி உயிரினங்கள்(மனிதர்களும்)இன்னும் ஐம்பது ஆண்டுகள் வரை தாக்குப்பிடித்து வாழ இயலுமா என்று கேட்டால் முடியாது என்று சொல்லும் விதமாக இருக்கிறது மேற்சொன்ன ஐ.பி.சி.சி. யின் ஆய்வறிக்கை. இந்நிலையில் புவிக்கோளத்திற்கு பேராபத்தை விளைவித்துவரும் “புவி வெப்பமயமாக்கல்” எனும் சிக்கல் குறித்த புரிதலும் அதனால் ஏற்படுகிற விளைவுகளும் விளைவுகளுக்கான காரணிகளை குறித்த முன்வைப்புகள் அனைத்தும் பெரும்பாண்மையான மக்களாலும் அறிவுஜீவிகளாலும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிற (அ) புரியவைக்கப்பட்டுகிற சூழலில், நமக்கு எல்லாமுமாக இருக்கிற புவிக்கோளத்தை பாதுகாக்கக் கிளம்புகிற கரிசன குரல்கள் வெற்றுப்புலம்பல்களாகவே ஓய்ந்துவிடுகிறன! இதன் காரணமாக நமது பூவுலகின் அழிவுக்குக் காரணமாக இருக்கிற முதலாளித்துவ சமூகமே, அழிவுகளைத் தடுத்து நிறுத்தும் ஆதர்ச புருஷனாக கிளம்பி, அழிவைத் தடுக்கும் முயற்சியிலும் ஆதாயம் அடைகிறது. ஆகவே புவிவெப்பமயமாக்கலின் விளைவு குறித்தும் அதற்கு காரணமாக இருக்கிற முதலாளித்துவத்தின் லாப நோக்க உற்பத்தி முறை குறித்தும் அதைத் தடுக்க முன்வைக்கப்படும் மாற்றுத் திட்டங்கள் எவ்வாறு முதலாளித்துவ சக்திகளுக்கு லாபத்தை குவிக்கும் விதமாக முதலாளித்துவ நாடுகளால் மடைமாற்றம் செய்யப்படுகிறது என்பதை சற்று நெருங்கிப் பார்க்கலாம்.

புவிவெப்பமயமாக்கலின் விளைவுகள்:

கடந்த 131 ஆண்டுகளில் 2010 ஆம் ஆண்டுதான்அதிக வெப்பம் வாய்த்த ஆண்டென உலக வெப்ப அளவீட்டு கருவிகள் மற்றும் ஆவணங்கள் தெரிவிக்கிறன. பருவநிலை மாற்றத்தோடு நேரடியாக தொடர்புள்ள இத்தீவிர  சிக்கல்களின்  அறிகுறிகளை  அவைகளே முன்னதாக வெளிப்படுத்த தொடங்கிவிட்டன.

1875 ஆம் ஆண்டு முதல்  வருடத்திற்கு 1.7 மில்லி மீட்டராக உயர்ந்து வந்த கடல் மட்டமானது 1993 ஆம் ஆண்டிலிருந்து வருடத்திற்கு 3 மில்லி மீட்டர்அளவாக   உயரத் தொடங்கின. இதன்வீதம் எதிர்காலத்தில்இன்னும் உயரலாம்.

உலக வெப்பமயமாக்கத்தால்  உருச்சிதையும்  கிரீன்லாந்து மற்றும் ஆர்டிக் பனிப்பாளங்கள் பெரியளவில்  கடல் மட்டத்தினை  உயர வைக்கிறது.

கடல் மட்டமானது குறைந்தபட்சம்  ஒருமீட்டர் அல்லது இரண்டுமீட்டர் உயர்ந்தாலே கீழைத்தேய  நாடுகளான வியட்நாம், வங்காளதேசம் மற்றும் பிற தீவு நாடுகளில் வாழும் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் அழிவுகளை சந்திப்பார்கள். மனித இனம் இதற்கு உடனடியாக மாற்று வழியை நடைமுறைப்படுத்தத் தவறினால் இப்புவியில் உள்ள அனைத்து உயிரனங்களும் (மனிதையும் சேர்த்து) மிக விரைவில் கடும் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

புவிவெப்பமயமாக்கலுக்கான காரணம்:

இன்றைய தொழில்யுகத்தின் பொருளுற்பத்திக்கான மூல வளங்களை வழங்குவதில் பெரும் பங்களிப்பு செய்வது புதைபடிம எரிபொருள்கள் (Fossil Fuels) ஆகும். நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு போன்ற புதைபடிம எரிபொருள்கள் முதலாளித்துவ உற்பத்தி நிகழ்முறையின் லாபநோக்கத் தேவைக்காக தொழிற்சாலைகள் மற்றும் மின்சார உற்பத்தி நிலையங்களில்அதிகளவில் பயன்படுத்தப்படுகிறன. உற்பத்தி நிகழ்முறையில் பயன்படுத்தப்படும் இப்புதைபடிம எரிபொருட்கள் அதிக அளவிலான பசுமைக்குடில் வாயுக்களை (கார்பன் டை ஆக்சைடு (கரிமம்), மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்கள்) வளிமண்டலத்தில் வெளியிடுகின்றன. அதாவது கிட்டத்தட்ட ஏழு கோடி டன் பசுமைக்குடில் வாயுக்களை வளிமண்டலத்தில் ஆண்டுதோறும் திணிக்கிறது. இதில் பாதி அளவில் கூட கடல்களாலோ காடுகளாலோ மறுசுழற்சி செய்யமுடியாதவை. இவற்றோடு மூன்றாம் உலக நாடுகளில் வரைமுறையற்று (முதலாம் உலக நாடுகளில் ஓடும் வாகனங்களுக்கு உயிரி எரிபொருள் வழங்க அதிகளவில் மூன்றாம் உலக நாடுகளில் சோயா போன்ற பயிர்கள் காடுகளை அழித்து பயிரடப்படுகின்றன) அழிக்கப்படும் மழைக்காடுகளும் புவி வெப்பமடைதலுக்கு வித்திடுகிறன. வளிமண்டலத்தின் மீதான அபரிவிதமான பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வால், பசுமைக்குடில் அடுக்கானது அதிக அளவிளான சூரிய வெப்பக் கதிர்களை பூமிக்குள் ஈர்த்து அனுப்பத்தொடங்குகிறது. இதனால் புவியின் சராசரி  வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்வதோடு வளிமண்டலத்தின் தட்பவெட்ப சமநிலையை சீர்குலைய வைக்கிறது.

நுகர்வை புவிவெப்பமயமாக்கலுக்கு காரணம் காட்டுவது சரியா?

நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையானது  முதலாளியத்தின் கட்டுப்பாட்டில் முழுவதும்  வந்தபின் ,சமூகத்தின் தேவையை மட்டுமே இலக்காகக் கொண்டு அது தன் உற்பத்தி அமைப்பை ஒழுங்கமைப்பதில்லை. மாறாக அது விரைவான உற்பத்தி மற்றும் அதிகமான லாபம் என்ற மைய நீரோட்டத்தில் கீழ் தனது உற்பத்தி முறையைஒழுங்கமைக்கிறது. சமூகத்திற்கு தேவை இல்லை என்றாலும் தேவையை உருவாக்கி விளம்பரவாதத்தின் வாயிலாக லாபம் குவிக்கும் கொள்ளைக் கலையை முதலாளிய சமூகத்திற்கு சொல்லித்தர தேவையில்லை. இந்நிலையில் தொழிற்புரட்சியின் ஊடாக இயற்கை வளங்களை அழித்தும் தொழிலாளர் உழைப்பைச்சுரண்டியும் இயற்கை கட்டமைப்பில் தனது உற்பத்தி நச்சுக்கழிவுகளை திணிக்கிற முதலாளித்துவ சமூகத்தின் லாப நோக்க உற்பத்தி முறையையும் அதற்கு உவப்பான சந்தைப் பொருளாதரத்தை கட்டி எழுப்புகிற உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம், பன்னாட்டு நிதி மையம் போன்ற அதிகார மையங்களை விமர்சிக்காமல் மக்களின் நுகர்வுக் கலாச்சாரத்தை புவிவெப்பமயமாக்கல் சிக்கல்களுக்கு காரணம் காட்டுவது என்பது முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பான வர்க்க சார்பான வாதமாகும். இவ்வாதங்கள் நிலவுகிற நவதாராளவாத வாஷிடன் இசைவுப் பொருளாதாரப் பாணியை நடைமுறைப்படுத்துகிற முதலாளித்துவ அரசுகளை ஜனநாயகக் கட்டுப்பாட்டில் வைக்கக்கூட உதவாது எனலாம்! ஏனெனில் இவ்வாதங்கள் மக்களின் தனிப்பட்ட செயல்பாடுகளின் மீது சிக்கலை மடைமாற்றம் செய்வதால் அரசுக்கு ஆதரவாகவும் முதலாளித்துவ சமூகத்திற்கு உற்சாகம் ஊட்டுவதாக மட்டுமே அமைகிறது. ஒரு வாதத்திற்கு நுகர்வை ஏற்றுக் கொண்டாலும் கோடான கோடி தனி மனிதர்களிடம் சென்று நுகர்வை குறைக்குமாறு பிராச்சரங்கள் மேற்கொள்வது என்பது நடைமுறை சாத்தியமற்றது. மேலும் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் நுகர்வுச் சந்தை அனைத்தும் அந்நாட்டின் மேட்டுக்குடி வர்க்கத்தினரை சுற்றியே கட்டப்பட்படிருக்கிறதே அன்றி அடுத்த வேலை உணவுக்கே அல்லாடும் உலகின் அறுபது விழுக்காட்டிற்கும் மேலான மக்களிடம் சென்று நுகர்வை குறையுங்கள் என்பது உச்சகட்ட நகைமுரண்!.

புவிவெப்பமயமாக்கலுக்கு எதிரான “கார்பன் வணிக” மாநாடுகள்!

பருவநிலை மாற்றம் தொடர்பான சூழலியல் போராட்டங்களை 90களில், பல பசுமை இயக்கங்கள் தீவிரமாக முன்னெடுத்தன. மனித இனம்  சூழலியல் சிக்கல்களுக்கு தீர்வை நோக்கை நகர வேண்டும் என்று வற்புறுத்திய அவ்வியக்கங்கள் சமூக அரசியல் தளத்தில் அதிர்வலைகளை உண்டாக்கச்செய்தது. இதன் விளைவாகய் (UNFCCC or FCCC) பருவநிலை மாற்றத்திற்கான ஐக்கிய அமைப்பு அமர்வால் (புவி மாநாடு என்று சொல்லப்படும்)முதல் முதலில் 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனெரியொவில் பசுமைக்குடில் வாயுக்களின்  வெளியீட்டு விகிதத்தை  கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் விவாதிக்கப்பட்டது. பல்லுயிரியத்தின் தொட்டிலாக இருக்கும் அமேசான் காடுகளைக்கொண்ட பிரேசிலை ஒரு புவிசார் குறியீடாகக் கொண்டு முதல் புவி நாடு அந்நாட்டில் நடத்தப்பட்டது. அதன்பின் அதே ஆண்டில் நியூ யார்க்கில் இரண்டாவது முறையாக இம்மாநாடு நடத்தப்பட்டு சில முடிவுகள் எட்டப்பட்டது. இம்மாநாடு (Conferences of the Parties) COP-2 என்றழைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து COP 3, 4, 5 என  இதுவரை 19 முறை இம்மாநாடு  நடந்துள்ளது.

Greenhouse Effect

தொழில்மய  நாடுகளால்  வளிமண்டலத்தில் வெளியிடப்படும்  கார்பன் டை ஆக்சைடு (கரிப்புகை), மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பசுமைக்குடில் வாயுக்களின்  வெளியீட்டு விகிதத்தை  கட்டுப்படுத்தும்  நோக்கில், உலக நாடுகளிடம் ஒரு சர்வதேச உடன்படிக்கையை ஏற்படுத்தும் பொருட்டு “கியோடோ” கருத்தாக்கமானது (Kyoto protocol), பருவநிலை மாற்றத்திற்கான ஐநா மன்றத்தால் (UNCCCF) 1997 ஆம்  ஆண்டு உருவாக்கப்பட்டு 2005ஆம் ஆண்டிலிரு‍ந்து நடைமுறைக்கு வந்தது.அது CMP என அழைக்கப்படுகிறது.

கியோடோ வரைவு ஒப்பந்தம்:

உலகிலுள்ள 190 நாடுகள் (அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான் மற்றும் கனடாவைத் தவிர்த்து) மற்றும் ஐரோப்பிய யூனியன் கியோடோ வரைவு ஒப்பந்தத்தில் பங்கெடுக்கிறது.(அமெரிக்கா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடும் ஆனால் உறுதியளித்தவாறு நடைமுறைப்படுத்தாது, கனடா 2011 ஆம் ஆண்டில் இவ்வொப்பந்தத்திலிருந்து விலகிக் கொண்டது). ஒப்பந்தத்தின்படி வளர்ந்த /வளரும் நாடுகள் பசுமைக்குடில் வாயுக்களின்  வெளித்தள்ளலவை கட்டுபடுத்தவும் /குறைக்கவும் இரு பகுதிகளாக ஒப்பந்தக் காலவரைவு நிர்ணயக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டுமுதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலமும்  அதைத் தொடர்ந்து  2013-2020 ஆம் ஆண்டென இரு பிரிவாக ஒப்புக் கொண்ட உறுதிமொழியினை செயல்படுத்துவதற்கான  கால அவகாசத்தை ஐநா மன்றம் வழங்கியது. இதில் இரண்டாம் ஒப்பந்த காலக்கெடுவில் நிறைவேற்றவேண்டிய கியோடோ வரைவு ஒப்பந்த இலக்கில் சில திருத்தங்கள் சென்ற ஆண்டில் செய்யப்பட்டது. ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், பெலாரஸ், கிரோட்டியா, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நார்வே போன்ற 37 நாடுகள் கியோடோ ஒப்பந்தத்தின்  இராண்டாம் சுற்று இலக்கை எட்டும் முயற்சிகளை முன்னெடுக்கிறது. ஜப்பான், நீயூசிலாந்து மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் முதல் சுற்று இலக்கில் பங்கேற்று இராண்டாம் சுற்று இலக்கை ஏற்காமல் ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டது. சூழல் அழிவிலிருந்து இப்புவியையும்  காக்கும் ஒருமித்த ஒரே சர்வதேச நோக்கில் சுயநலமற்ற, பேராசையற்ற தீர்மானகர முடிவோடு கியோடோ வரைவு ஒப்பந்தத்தை செயல்படுத்ததயாரக  இல்லாத அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா, சீனா போன்ற வளர்ந்த/வளரும் நாடுகள் வெறும் சொல் சவடால்களை மட்டுமே இம்மாநாடுகளில் முன்வைகின்றன. நவ்சோ (COP-1 மாநாடு நடைபெற்ற இடம்) முதல் தற்போது வார்சா (இறுதியாக கடந்த நவம்பர் மாதம் COP-19 மாநாடு நடைபெற்ற இடம்) முதல் இதுவே தொடர்கிறது.

இதைவிட மோசம் என்னவென்றால் “பருவநிலை நெருக்கடிக்கான மாநாடுகள்” “கார்பன் வணிகத்தை” விவாதிக்கும் மாநாடாகவே மாற்றமடைந்துவிட்டதால் இம்மாநாடுகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன. இதுகுறித்த விரிவான செய்தியை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

குறிப்புகள்:

“What Every Environmentalist Needs to Know about Capitalism: A Citizen’s Guide to Capitalism and the Environment”Book by John Bellamy Foster

(இளைஞர் முழக்கம் இதழில் ‘புவிவெப்பமயமாக்கலும் கார்பன் வணிகச் சந்தைத் தீர்வும்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை)

Related Posts