அரசியல்

ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு நேர்ந்த மக்கள் எழுச்சி போல் ஏன் இங்கு சாத்தான்குளத்தில் நேர்ந்த கொலைகளுக்கு எழுச்சி ஏற்படவில்லை?

ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு நேர்ந்த மக்கள் எழுச்சி போல் ஏன் இங்கு சாத்தான்குளத்தில் நேர்ந்த கொலைகளுக்கு எழுச்சி ஏற்படவில்லை? அமெரிக்க மாகாணங்கள் பலவற்றில் காவல்துறையே வந்து மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது போல் ஏன் இங்கு ஒரு காவலர் கூட வந்து பேசவில்லை? அமெரிக்கக் கொடுமைக்கு ஓர் எதிர்வினை, தமிழகக் கொடுமைக்கு ஓர் எதிர்வினையா?

நிறைய கேள்விகள் பார்க்கிறோம். மெய்யான கோபம் பல பேரிடம் புலப்படுகிறது. இன்னும் பலரிடம் அமெரிக்க போராட்டத்தை வரித்துக் கொள்ள வேண்டிய முனைப்பு தென்படுகிறது. பலரிடம் இவர்களை எதிர்த்திட முடியாத கோபம் புலப்படுகிறது. ஆனால் உண்மை என்ன தெரியுமா? இது எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்கிறது.

எப்படித்தான் சரி செய்வது என கேள்வி கேட்டால், அதற்கான நிதானத்துடன் அணுகினால் மட்டுமே செல்ல வேண்டிய திசையையேனும் தீர்மானிக்க முடியும். இல்லையெனில், கவனம் அற்புதமாக சிதறடிக்கப்பட்டு இப்பிரச்சினை நீர்த்துப் போக வைக்கப்படும். இல்லையெனில் அழுத்தம் அதிகரித்து அதிக பட்சமாக ஓரிரண்டு போலீஸாரின் பதவி பறிப்பில் முடியும். அதுவும் அதிகபட்சமாகத்தான்.

முதலில் அமெரிக்காவை பார்த்து கோடு வரைவதை நிறுத்த வேண்டியிருக்கிறது. அந்த அணுகுமுறை பிரச்சினையை நீர்த்துப் போகவே வைக்கும். அமெரிக்காவிலேயே அப்பிரச்சினையை செவ்வனே சிவில் சமூக அமைப்புகள் நீர்த்துப் போக வைத்திருக்கிறார்கள். நாமெல்லாம் எம்மாத்திரம்?

அமெரிக்கச் சமூகத்துக்கும் நம் சமூகத்துக்கும் இடையே பல வேறுபாடுகள் இருக்கின்றன அல்லது வேறுபாடுகள் மட்டுமே இருக்கின்றன. அதிகாரம் வழங்கப்படுவது தொடங்கி, ஒடுக்கப்படுபவருக்கு இருக்கும் போர்க்குணம் மற்றும் அரசியலறிவு வரை பற்பல வேறுபாடுகள். ஆகவே அவர்களை பார்த்துக் கொண்டு தொடையை தட்டி தாண்டி குதிப்பது வேலைக்கு ஆகாத வேலை.

சாத்தான்குள சம்பவத்துக்குள் பல கூறுகள் ஒளிந்திருக்கின்றன. ஜுன் 18ம் தேதி ஜெயராஜ் போலீஸை பற்றிக் கூறிய விமர்சனத்துக்காக அடுத்த நாள் வந்த காவலர்களால் காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார் என ஒரு தகவல். ஒரு மாதத்துக்கு முன்னமே காவலருக்கும் ஜெயராஜ்ஜுக்கும் செல்ஃபோன் காரணமாக ஒரு தகராறு இருந்ததாகவும் தகவல். இவற்றில் ஏதோவொன்றால் ஜெயராஜ் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். தொடர்ந்து சென்ற அவரது மகன் தந்தை கொடூர சித்ரவதைக்குள்ளாக்கப்படுவதை எதிர்த்து பேசுகிறார். உடனே அவரையும் அடித்து சித்ரவதைக்குள்ளாக்குகிறார்கள். இருவரையும் நிர்வாணப்படுத்தி அடிக்கிறார்கள். சித்ரவதை செய்கிறார்கள்.

இதில் நம் பண்பாட்டு ஆட்கள் வந்து தந்தையையும் மகனையும் ஒரே லாக்கப்புக்குள் நிர்வாணமாக… இதெல்லாம் கொடுமை அல்லவா என கேட்கிறார்கள். உங்களுக்கு காவலர்களின் ஒடுக்குமுறை பிரச்சினையா அல்லது தந்தையையும் மகனையும் நிர்வாணமாக ஒரே லாக்கப்புக்கு வைத்து அடித்தது பிரச்சினையா? இருவரையும் நிர்வாணப்படுத்தி வெவ்வேறு லாக்கப்புகளுக்குள் வைத்து அடித்தால் பிரச்சினை கிடையாதா?

அடுத்த நாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். ரத்தத்தை மறைக்க அடர் நிறங்களில் லுங்கிகளை எடுத்து வர வீட்டார் அறிவுறுத்தப்படுகிறார்கள். பிறகு மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறார். இங்கு ஒரு முக்கியமான விஷயம் நடக்கிறது. வழக்கு விசாரணை நடத்தவிருந்த மாஜிஸ்திரேட் காத்திருக்கும் காவல்துறையை பார்த்ததுமே முதல் மாடியிலிருந்து கையசைக்கிறார். அத்தனை பரிச்சயம் அவர்களுக்குள் இருக்கிறது.

அது என்ன பரிச்சயம் என்பதெல்லாம் பேசப்பட வேண்டிய விஷயங்கள்.

சில கணங்களிலேயே மாஜிஸ்திரேட்டால் சப் ஜெயிலுக்கு தந்தையும் மகனும் அனுப்பப்படுகிறார். பிறகு ரத்தக்கசிவு அதிகமாகிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருவரும் உயிரிழக்கிறார்கள்.

பிறகு நடந்த சம்பவங்கள் இன்னும் நிறைய விஷயங்களை உணர்த்தும்.

இறந்துபோன இருவரும் கிறித்துவர்கள் எனினும் நாடார்கள் என குறிப்பிட்டு நியாயம் கேட்கும் சுவரோட்டிகள் ஒட்டப்படுகின்றன. பிறகு அமெரிக்க பாணியில் போராட்டங்களை முன்னெடுக்க விரும்பி பல சிவில் சமூக இயக்கங்களும் உதிரி போராளிகளும் இதை சமூக வலைத்தளத்தில் முக்கியமாக பேசப்படும் வாய்ப்புகளை உருவாக்கினர். சுசித்ரா தொடங்கி சூர்யா வரை பல சினிமா பிரபலங்களும் கிரிக்கெட் பிரபலங்களும் கட்சித் தலைவர்களும் என பல பிரபலங்கள் ட்விட்டரில் பதிவிடத் தொடங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் சாத்தான்குள கொலைகளை கண்டித்து தெருவிலிறங்கி போராடி கைதும் ஆன ஒரே கட்சி. அதனாலேயே ஊடகங்கள் பொருட்படுத்தவும் இல்லை.

இவற்றுக்கு இடையில் கொரோனா அழிவது கடவுளின் கையில்தான் இருக்கிறது என கைவிரித்த மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி படபடவென குதித்தோடி வந்து தந்தையும் மகனும் ஆரோக்கியக் குறைபாட்டால் உயிரிழந்தனர் என மருத்துவ அறிக்கை படித்தார்.

பிறகு friends of police இளைஞர்கள் இருவர் பேசிக் கொள்ளும் தொலைபேசி அழைப்பு வந்தது. எத்தகைய அன்றாட நிகழ்வாக ஒடுக்குமுறை காவல்துறையில் இருக்கிறது என்பதை புத்தியில் அடிக்கும் வகையில் சரளமாக பேசிக் கொண்டிருந்தனர். அதில்லாமல் இன்னொரு ஒடுக்குமுறை சம்பவத்தையும் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். சாத்தான்குள கொலைகளை பேசிக் கொண்டிருக்கும்போதே நேற்று இன்னொரு லாக்கப் மரணமும் நேர்ந்திருக்கிறது.

திருநெல்வேலியில் அழகான வடிவமைப்புடன் மக்களுக்கு கொரொனா அறிவுரை வழங்கும் friends of police சுவரோட்டி ஒன்றும் பகிரப்பட்டது. அதில் Friends of Police என்ற எழுத்துகளுக்கு கீழ் சேவா பாரதி என்ற எழுத்துகள். சேவாபாரதி ஆர்எஸ்எஸ்ஸின் அமைப்பு.

மறுபக்கத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியிடை நீக்கமும் ஒருவர் பணியிட மாற்றமும் செய்யப்பட்டிருக்கின்றனர். எல்லாருக்கும் வேலை பாதுகாப்பு இருக்கிறது. இதே போல்தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிறகு அடுத்த நாளே சம்பந்தப்பட்ட காவலர்களும் ஆட்சியரும் பத்திரமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மக்களை சுட உத்தரவிட்ட காவலர் இங்குதான் எங்கோ வடசென்னையில் ட்ராபிக் காவலராக மாற்றம் பெற்றிருந்தார். இந்நேரத்துக்கு அவர் யாரின் வாழ்க்கையை நாசம் செய்து கொண்டிருக்கிறாரோ?

ஆக இப்பிரச்சினைக்குள் எல்லா இந்தியப் பிரச்சினைகளிலும் இருப்பதை போலவே பல நுணுக்கங்கள் இருக்கின்றன. கொல்லப்பட்டவர்கள் நாடார் சாதி என்கையில் கொலையில் பங்குபெற்ற காவலர்களில் உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷும் பாலகிருஷ்ணனும் கோனார் சாதியை சேர்ந்தவர்களாக கண்டறியப்பட்டிருக்கிறது. ஊருக்குள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சாதி வரி போடுமளவுக்கு காவலர்களின் சாதி அணுக்கம் இருந்திருக்கிறது. கூடுதலாக கொல்லப்பட்டவர்கள் சிறுபான்மையினர் என்னும்போது பிரச்சினையின் சாரம் இன்னொரு பரிமாணத்தை பெறுகிறது. திருநெல்வேலி போலிஸை ஊடுருவியிருக்கும் ஆர்எஸ்எஸ் தூத்துக்குடியை விட்டுவைத்திருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

இவற்றுக்குள் முதல் மாடியிலிருந்து கை காட்டிய மாஜிஸ்திரேட் என்ன சாதியை, என்ன மதத்தை, எந்த அதிகாரக் குழுவை சார்ந்தவர் என்பதும் ஆராயப்பட வேண்டியிருக்கிறது. இந்த சாதியினரை மாநிலத்தின் முதல்வரே கிளம்பி வந்து காப்பாற்றுவதற்கு என்ன காரணம் என்பதும் தெரிய வேண்டும். மேலும் காவல்துறைக்குள் சாதிப் பிரதிநிதித்துவம் எப்படி இருக்கிறது என கண்டறியப்பட வேண்டும். ஒரே காவல்நிலையத்துக்குள் ஒரே சாதியை சேர்ந்த எத்தனை பேர் தமிழகமெங்கும் இருக்கிறார்கள் என்பதும் கணக்கெடுக்கப்பட வேண்டும். இவற்றுக்குள் ஆர்எஸ்எஸ் தமிழக அரசு இயந்திரத்துக்குள் நுழைக்கப்படுவதை கேள்வி கேட்க வேண்டும்.

இத்தகைய கேள்விகளை அமெரிக்காவின் கறுப்பினத்தவர்கள் ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு ஆதரவான போராட்டங்களில் கேட்டார்கள். குறைந்தபட்சம் போராட்டம் தொடங்கிய காலத்தில் அக்கேள்விகள் இருந்தன. வெள்ளை ஆதிக்க காவலர்களையும் காவலர்களில் இருக்கும் கறுப்பினத்தவர் பிரதிநிதித்துவத்தையும் காவல்துறையே வெள்ளை மேலாதிக்கத்துக்கான கைப்பாவையாக இருக்கிறது என்ற கேள்விகளிலிருந்தே போராட்டம் எழுந்தது. அக்காரணங்களின் விளைவுகளிலேயே காவல்துறை என்கிற அமைப்பே அழித்தொழிக்கப்பட வேண்டும் என்ற சிந்தையில் மிநியோப்போலிஸ் காவல் நிலையம் எரிக்கப்பட்டது. வெள்ளை மாளிகையே சுற்றி வளைக்கப்பட்டது. பிறகு சிவில் சமூக அமைப்புகள் வந்து செவ்வனே கடமையாற்றி போராட்டத்தை ஊற்றி மூடிக் கொண்டிருக்கின்றன. அதுவே இங்கு நடக்கும்.

அடிப்படையாக காவல்துறை என்பது அரசின் ஒடுக்குமுறை கருவி என்கிற உண்மையிலிருந்து நம்முடைய சிந்தை எழ வேண்டும், அதில்லாமல் ‘எல்லா காவலர்களையும் நாங்கள் குறை சொல்லவில்லை’ என்கிற லிபரல்வாத பேச்சுகளை தூக்கி எறியப்பட வேண்டும். நல்ல காவலர்களே உள்ளே இருந்தாலும் அவர்களின் இடம் அது இல்லை. அதை அம்பலப்படுத்துவதும் சீர்திருத்தும் வேலையுமே அவர்கள் செய்திருக்க வேண்டும். இவை எதையும் செய்யாமல் எல்லா அட்டூழியங்களை வெறுமனே வேடிக்கை பார்த்து அனுமதித்துக் கொண்டிருப்பவர்களை குறை சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

தமிழ்நாட்டின் ஒவ்வொரு அரசுப்பதவியும் அரசு வேலையும் முதலமைச்சர் வரை நீளக்கூடிய சாதிய மற்றும் மத ஊழல்களில் நிரம்பியது. இவை எதையும் கேள்வி கேட்காமல், காவல்துறையின் கட்டற்ற சுதந்திரத்தை அடக்காமல், ஒரு சம்பவத்துக்கு மட்டும் தூங்கி எழுந்து குதித்து நியாயம் கேட்டு நரம்பு புடைக்க பேசுவதென்பது ஏதோவொரு மூலையிலிருக்கும் இன்னொரு சாமானியன் ஒருவனை இன்னொரு நல்ல நாளில் காவல்துறை கொல்லும் சூழலுக்கு மட்டுமே வழி வகுக்கும்.

காவல்துறை என்பது மக்களை ஒடுக்கி கொன்று புதைக்க அரசாலும் ஆளும் வர்க்கத்தாலும் உருவாக்கப்பட்டிருக்கும் நிறுவனம். இதை நன்றாக மனதில் பதிய வைத்துவிட்டு, தீர்வை பற்றி யோசியுங்கள். தீர்வு கிடைக்கலாம்.

  • ராஜசங்கீதன்.

Related Posts