அரசியல்

பாலின சமத்துவம் ஏற்பட வேண்டாமா?

தில்லி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இறந்த பின், உறைந்து கிடந்த பொதுப்புத்தியில் சில விமர்சனங்களும், கேள்விகளும் எழுந்தது. மக்கள் ஆவேசப்பட்டனர். அதைத் தொடர்ந்து வினோதினி, வித்யா, கோமதி என ஆசிட் வீச்சில் மரணமடைந்த செய்திகள் ஆறாவடுக்களாக, காட்சியளிக்கிறது. இப்போது மும்பையில் ஒரு இளம் பெண் பத்திரிக்கையாளர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளார். பத்திரிக்கையாளர்களும், பொதுமக்களில் சிலரும் இடதுசாரி சிந்தனையாளர்களும், போராடி வருகின்றனர். ஒருநாள் நடத்தும் ஆவேசப் போராட்டங்கள் கடந்து, சில நடவடிக்கைகளின் தேவைகள் குறித்து என்ன கருதுகிறோம்? சட்டம் செய்யும் கடமைகளையும், சட்டத்தை மீறாத மனநிலையையும் மக்கள் மனதில் உருவாக்கிட என்ன செய்யப் போகிறோம்? என்ற துணைக் கேள்விகள் விவாதிக்கப் படாமல் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது..

ஜே.எஸ் வர்மா தலைமையிலான குழு வெகுவிரைவில், தனது பரிந்துரைகளை அளித்தது. வழக்கம் போல் அரசு தனது, இயந்திரங்களான ராணுவம், காவல்த்துறை ஆகியோரின் பாலின அத்துமீறல்களை நியாயப்படுத்தும் விதத்தில், அவசரச் சட்டத்தை முன் வைத்து, வர்மா குழுவின் அறிக்கையை நீர்த்துப் போகச் செய்துவிட்டது. ஏற்கனவே குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் சட்டத்தை, 2012 முதல் பாதியில் நாடாளுமன்றம் நிறைவேற்றிய பின்பும் கூட, சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது குறையவில்லை என்பது கவலைக்குரியது. இவை சொல்லும் செய்தி இந்தியாவில் சட்டங்களைக் கடந்த அணுகுமுறைத் தேவைப்படுகிறது என்பதாகும்.

இந்திய உச்ச நீதிமன்றம் ராஜஸ்தான் அரசுக்கும், விசாகா மற்றும் குழுவினருக்கும் இடையிலான வழக்கில் தீர்ப்பு வழங்கி சில வழிகாட்டுதல்களையும் 1997 ன் போதே கொடுத்துள்ளது. பணிபுரியும் இடங்களில், பெண்கள் மீதான வன்முறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 32 வது பிரிவு வழங்கியுள்ள ”சுயமரியாதையுடன் கூடிய வேலை என்ற அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் வகையில் பாலியல் பலாத்கார நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவும், அனைத்து விதத்திலும் பெண்கள் மீதான பாரபட்சத்தை ஒழித்திடும் வகையிலும், ஐ.நா. சபை நிறைவேற்றிய தீர்மானத்திற்கு, இந்திய அரசு 1993 இல் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, பெண்கள் சம உரிமை கொண்டவர்களாக மதிக்கப் பட வேண்டும்”, என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஆனாலும் இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் பணிபுரியும் இடங்களிலோ, இதர பகுதிகளிலோ குறையவில்லை, மாறாக அதிகரித்துள்ளது என்பதையே தொடர்ந்து வரும் செய்திகள் வெளிப்படுத்துகின்றன.

இதற்குக் காரணம், சட்டங்கள் குறித்தும், தண்டனையின் காலம் மற்றும் தன்மை குறித்தும் நம் சமூகத்தில், பெரும்பான்மை மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதை, திரைஅரங்குகளில் அரசு செய்திப்பிரிவின்  விளம்பரமாகவோ அல்லது தொலைக்காட்சி மற்றும் எஃப். எம் ரேடியோக்களில் விளம்பரங்கள் செய்தோ மக்களைச் சென்றடையச் செய்திருக்க முடியும். அடுத்தடுத்த ஆண்டுகளில் பாடத்திட்டங்களில் சேர்ப்பதன் மூலமும் இளம் தலைமுறையை நெறிப்படுத்த முயன்றிருக்க முடியும்.

அரசுகள் இவை குறித்து கவலை கொள்வதில்லை. இதனால் ஒருநாள் செய்தி என்ற அளவில் மட்டும் பல சட்டங்கள் குறித்த விவாதம் நின்றுவிடுகிறது. தொடர்ந்து மக்கள் மனதில் நீடித்து நிற்கும் வகையில் இடம் பெறாமல் ஒதுக்கப்பட்டு விடுகிறது. குறிப்பாக பண்பாட்டு ரீதியில் பெண் ஆணுக்குக் கீழான, இரண்டாம் பாலினம் என்பதும், அவள் ஒரு நுகர்வுப் பொருள் என்ற கருத்தும் ஆழமாக வேர்பரப்பி நிற்கும் இந்திய சமூகத்தில், அரசுகள் எடுக்கும் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளுடன், மேலும் இரண்டு வித நடவடிக்கைகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன. ஒன்று பெண் ஆணுக்கு இணையானவள் என்ற கருத்தை நிலை நிறுத்துவது. இரண்டு ஆண், பெண் உடல் குறித்த பாலின புரிதலுக்கானக் கல்வி.

இது குறித்து இன்றளவும் முழுமையான ஏற்பு மனப்பான்மை உருவாகவில்லை. அவ்வளவு எளிதானதும் அல்ல. ஆனால், உடல் கவர்ச்சி குறித்து விளம்பரங்கள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் குறைய, பாலினம் குறித்த அறிவு தேவைப் படுகிறது. விளம்பரம் மற்றும் திரைக்காட்சி அமைப்பு, தனிநபரின் அந்தரங்கங்களை, காட்சிப் படமாக்கி கையில் உள்ள செல்போன் மூலம் ஒளிபரப்புகிற ஏற்பாடு ஆகியவை அதிகரித்துள்ளதை அனைவரும் அறிவோம். ரெய்டில் ஆபாச சி.டிக்கள் பிடிபட்டன, என்பதை ஊடகங்களில் தொடர்ந்து செய்தியாவதையும் கவனித்து வருகிறோம். இந்தச் செயல்களை மாற்றுவதற்கும், ஆரோக்கிய உறவை உருவாக்கவும், மனவிருப்பங்கள் எதிர்பாலின கவர்ச்சியைக் கடந்து நீடித்து நிற்கும் உறவு என்பதைப் புரிந்து கொள்வதற்கும், பாலியல் குறித்த கல்வித் தேவைப்படுகிறது.

ஆண், பெண் உடல் குறித்து, உடலியல் இயக்கம் குறித்து தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கல்விமுறையின் மூலம் தான் அதிகரிக்கும் என்பதே அனுபவம். ஆப்பிரிக்கக் கண்டத்தின் சகாரா பகுதி நாடுகளில் 33 சதமான பெண்கள் 18 வயதை அடைவதற்குள்ளாகவே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகினர் என்றும், பாலியல் கல்வி கொடுக்கத் துவங்கிய பின் ஓரளவு குறைந்துள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வளர்ந்த நாடுகளில் எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக துவங்கிய பாலியல் கல்வி தற்போது, பல்வேறு வகையில் பதின்பருவ இளைஞர்களைப் பயிற்றுவிக்கப் பயன்படுகிறது, எனக் குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக பாலினம் குறித்த புரிதலை மேம்படுத்துவதற்கான கல்வி கற்றுக் கொடுக்கப் படுகிறது. கேரியன் லிங்டோ என்ற அமெரிக்க ஆசிரியர், ”பெண் என்ற முறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஒரு பெண் உள்ளாகிறாள். ஆண் என்ற முறையில் அந்த துன்புறுத்தலை செய்பவனாக ஒரு ஆண் உள்ளான். இதில் இருவரும் சமமான மனிதர்கள் என்ற புரிதல் இல்லாததன் விளைவே மேற்படி தவறுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது, என்பதை எனது மாணவர்களுக்கு போதிக்கிறேன்” என்று கூறுகிறார்.

இது உடனடி பலனைத்தரவில்லை என்றாலும், ஒருசில ஆண்டுகளில் நல்ல பலனைத் தரும் என எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார். மேலும் மது இன்று பெண்கள் மீதான தாக்குதலுக்கு ஒரு காரணமாக இருப்பதையும் கணக்கில் கொண்டு செயலாற்ற வேண்டியுள்ளது, எனக் குறிப்பிடுகிறார். மும்பை பத்திரிக்கையாளர் மீதான தாக்குதலுக்கும் போதை ஒருகாரணம் எனக் கூறப்படுகிறது. புத்தாண்டுக் கொண்டாட்டத்தில், பண்டிகை நாள்களில், குடும்ப விழாக்களில், கோவில் திருவிழாக்களில் என எல்லா பொது நிகழ்வுகளிலும், மது பானம் விற்பனை அதிகரித்துள்ளது. இக்கொண்டாட்டங்களில், பெண்கள் காணாமல் போவதும், வன்கொடுமைகளுக்கு ஆளாவதும் இடம் பெறுகிறது. இதில் இளைஞர்கள் பெரும்பாலும் ஈடுபடுவது, எதிர்காலத்தை மிகுந்த துயரத்திற்கு கொண்டு செல்லும். எனவே பாலியல் வன்முறைகளையும், மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பதையும், இணைத்துப் பார்த்து செயல்பட வேண்டியதை அரசுகள் உணர வேண்டும்.

பாலியல் கல்வி மற்றும் ஆலோசனை மையங்கள், வளர்ந்த நாடுகளில் பதின் பருவ இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது, என சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நடுத்தர குடும்பங்கள் மற்றும் பெற்றோர் இருவரும் வேலை செய்யும் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள், வீடுகளில் பெரும் பாலும் தனியாக இருப்பதும் ஒருவகையில் வக்கிர மனநிலையை ஏற்படுத்தத் துணை செய்கிறது, என்ற தகவலையும் கணக்கில் கொண்டு செயலாற்ற வேண்டியுள்ளது. சீனாவின் பள்ளிகளில் பாலியல் கல்வி போதிக்கப் படுகிறது. இதன் மூலம் பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் 1972 காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட சில சட்ட நடவடிக்கைகள் 1997 காலங்களில் திருத்தப்பட்டு அமலாகிய நிலையிலும், பாலியல் கல்வி மற்றும் கவுன்சிலிங் காரணமாகவும், பாலியல் வன்கொடுமைகள், எண்ணிக்கை சீனாவில் குறைந்தது, என்பதைத் தெளிவுபடுத்துகின்றனர். ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் 1970 களுக்குப் பின் தான் பாலியல் கல்வி பள்ளிகளில் அறிமுகம் செய்யப் பட்டதாகவும், அது பாலியல் பலாத்கார நடவடிக்கைகளைக் குறைத்திட உதவி செய்ததாகவும், சொல்கின்றனர். இதே போன்று வேறு சில நாடுகளும் தங்கள் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளன.

இத்தகைய அனுபவங்களில் இருந்தே, பாலியல் கல்வி மற்றும் ஆலோசனை மையங்கள் பள்ளிகளில் தேவைப் படுகிறது. இந்தியாவில், இதுவரை எய்ட்ஸ் தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்து அறிவதற்கான முறையில் தான் பாலியல் கல்வி குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. 2010 ல் மும்பையில் நடந்த ஆய்வு மூலம் 15 – 29 வயதுக்குற்பட்ட இளைஞர் பிரிவினரிடம் குறிப்பிடத் தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டதாக தெரிவிக்கின்றனர். அதாவது இந்தியாவில் எய்ட்ஸ் பாதிக்கப் பட்டோரில் 31 சதமானோர் 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர் என்ற செய்தி தந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. ஆனாலும் ஆய்வின் அடிப்படையில் மேற்கொண்ட கவுன்சிலிங் (ஆலோசனைகள்) நல்ல பலனைத் தந்துள்ளது என்பது ஆறுதலான செய்தி.. விரிவான முறையில் உளவியல் வளர்ச்சிக்கான வகையில் பாலியல் கல்வி மற்றும் ஆலோசனைக்கான சூழலைப் பதின் பருவ இளைஞர்களுக்கு உருவாக்குவது அவசியம் என்பதையும் ஆய்வு குறிப்பிடுகிறது.

அதேபோல் விசாகா வழக்கில் கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்படி பாலின சமத்துவத்திற்கான நட்பு ரீதியிலான செயல்பாட்டை அனைத்து மட்டங்களிலும் அமலாக்குவது குறித்தும், மக்களின் எழுச்சிகள் உருவாகியுள்ள இன்றைய சூழலில் திட்டமிட வேண்டும். இல்லையென்றால் எதிர்பாலின கவர்ச்சியை உருவாக்கும் விளம்பரங்களும், பெண் ஒரு நுகர்வுப் பண்டம் என்ற எண்ணமும் மட்டுமே மேலோங்கி நிற்கும்.

Related Posts