அரசியல்

காந்தி குல்லாயும் சுந்தரய்யாவும்

1930 ஜனவரி 26ஐ சுதந்திர தினமாக கொண்டாட காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதனை ஒட்டி லயோலா கல்லூரியில் ஒரு மாணவன் காந்தி குல்லாய் அணிந்து கல்லூரிக்கு வந்திருந்தான். ஒரு சில பேராசிரியர்கள் காந்தி குல்லாய் அணிந்து கல்லூரிக்கு வரக் கூடாதெனக் கூறி அம்மாணவனை வகுப்பினை விட்டு வெளியேற்றி விட்டனர். மேலும் காந்தி குல்லாய் அணிந்து கல்லூரிக்கு வரக் கூடாதென அறிவிப்பு பலகையில் நோட்டீசும் ஒட்டி விட்டனர். சுந்தரய்யாவும் அவரோடு ஒரு சில மாணவர்களும் இணைந்து இரவோடு இரவாக 500 குல்லாய்களை தைத்து மறுநாள் மாணவர்களிடம் அளித்தனர். அவர்களும் அதனை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். கல்லூரி முதல்வர் தன் அறையை விட்டு வெளியே வந்துப் பார்த்தால் கல்லூரி மைதானம் முழுக்க காந்தி குல்லாய்கள். உடனே அவர் தலையிட்டு காந்தி குல்லாய் அணிந்து வர எவ்வித தடையும் இல்லை எனத் தெரிவித்து விட்டார்.

ஆந்திர மகா சபையும் கம்யூனிஸ்ட் கட்சியும்

1940 களில் இந்தியா முழுக்க கம்யூனிஸ்ட் கட்சியின் மீது தடை நீக்கப்பட்டிருந்தது. ஆனால் ஹைதாராபாத் சமஸ்தானத்தில் மட்டும் தடை நீக்கப்படாமல் இருந்ததால் கட்சி தலைமறைவாகவே செயல்பட்டு வந்தது. ஆனால் கம்யூனிஸ்ட்கள் வெளிப்படையாக செயல்படும் அரங்கமாக ஆந்திர மகா சபா இருந்தது. மகா சபைக்குள் வந்த பலர் கம்யூனிஸ்ட்களாக மாற்றப்பட்டனர். நிலப்பிரபுக்களின் பிள்ளைகளான ரவி நாராயண ரெட்டி, பி.எல்லா ரெட்டி, சி.லட்சுமி நரசய்யா, எஸ்.ராமநாதம், ஏ.லட்சுமி நரசிம்மா ரெட்டி, டி.வெங்கடேஸ்வர ராவ் போன்றோர் கூட கம்யூனிஸ்ட்களாயினர். மக்தும் முகைதீன் போன்ற உருது கவிஞர்களும் ஆந்திர மகா சபா மூலம் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வந்தனர். நிறைய வாலிபர்கள் இதே போல் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாயினர். ஆந்திர மகா சபையில் கம்யூனிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகரிப்பது அங்கிருந்த மிதவாத தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் முரண்பட்டனர். எனவே மகா சபை பிளவை சந்தித்தது. இரு அணிகளும் தனித்தனியே மாநாடு நடத்தின. கம்யூனிஸ்ட்கள் தலைமை தாங்கிய அணிக்கே மக்கள் செல்வாக்கிருந்தது. அவர்கள் பக்கமே மக்கள் அதிக எண்ணிக்கையில் அணி திரண்டனர். இந்நிலையில் நம் தலைமையிலான அணி கம்மம் நகரில் ஆந்திர மகா சபை மாநாட்டினையும் அதனை ஒட்டி மாபெரும் பொதுக் கூட்டத்தினையும் நடத்தியது. இப்பொதுக் கூட்டத்தில் சுந்தரய்யாவை பேசுமாறு எல்லாரும் கூறினார்கள். ஆனால் சுந்தரய்யா பேசவில்லை. காரணம் ஆந்திர மகா சபைக்கு பின்னால் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது என்பதனை பகிரங்கப்படுத்த விரும்பாதது தான்.

கண்ணின் ஒளியாக சுந்தரய்யா…

தலைமறைவுக் காலம் துவங்கி விட்டது. புரட்சிக்காரர் வீட்டுப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை . அதே நேரத்தில் பெண் தோழர்களின் உதவியும் தேவைப்பட்டது. எனவே மறைவிடத்திற்கு ஒரு சிலப் பெண்களை அழைத்துச் செல்ல நேரிட்டது. அதில் கருவுற்ற பெண்களும் ஒரு சிலர் இருந்தனர். பிடிப்பட்டலோ தப்பிச் சென்றாலோ கருவுற்ற பெண்கள் தடையாக இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு கருக் கலைப்பு செய்யப்பட்டது. அப்படி கருக்கலைப்பு செய்யப்பட்ட தோழர்களில் ஒருவர் கொண்டப்பல்லி கோடீஸ்வரம்மா. கருக்கலைப்பினால் அவரின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. அப்பொழுது பலப் பணிகளில் மூழ்கியிருந்த சுந்தரய்யா கோடீஸ்வரம்மா உடல்நலத்தை கவனிப்பதற்கு என நேரத்தை ஒதுக்கினார். “பாலும் முட்டையும் சாப்பிடுகிறாயா? நம்மிடம் பணம் இல்லையென்று நிறுத்தி விட்டாயா? பெண்கள் உடல்நலத்தை பொருட்படுத்தாமல் வேலையில் மூழ்கி விடுவீர்களே… என்று பரிவுடன் விசாரித்து அவற்றை வரவழைத்து தருவார் என கொண்டபல்லி கோடீஸ்வரம்மா நினைவுக் கூறியுள்ளார் தனது ஆளற்ற பாலம் எனும் நூலில். அக்கட்டுரைக்கு அவர் தந்துள்ள தலைப்பே “என் கண்ணின் ஒளி சுந்தரய்யா”

இள வயது முதலே எந்த இடத்தில் இருந்தாலும் வீறு மிக்க போராட்டத்தை கட்டமைக்கக்கூடிய திறன் மிக்க தோழராக, எப்பொழுதும் வெகுஜன தன்மையை உணர்ந்த தலைமையாக, எச்சூழலிலும் தோழர்களின் மீது தனித்த கவனத்தையும் அக்கறையையும் செலுத்தக் கூடிய தோழராக சுந்தரய்யா இருந்துள்ளார். இப்படி எண்ணற்ற நிகழ்வுகள் தோழர் சுந்தரய்யா அவர்களின் வாழ்வில்… நாம் கற்க வேண்டிய பாடங்களாக…

-அ.கோவிந்தராசன்

Related Posts