இலக்கியம்

கருப்பர் நகரத்து கானா கவிஞர்கள்!

அ. பகத்சிங்

சென்னையின் அடித்தள மக்களுடைய கலை வடிவமாகக் கவனம் பெறும் ‘கானா‘, இறப்புச்சடங்கின் ஒரு பகுதி என்ற நிலையில் இருந்து புதிய பரிமாணங்கள் அடைந்து வருகிறது. சென்னையின் அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில், குறிப்பாக தலித் மக்கள் குடியிருப்புகளில் மட்டுமே கானா பிரபலமாக இருந்தது. இன்று கானாவும், அதன் கலைஞர்களும் தமிழகம் முழுக்க புகழ்பெற்றிருக்கிறார்கள். திருமணம் உள்ளிட்ட குடும்பச் சடங்குகள், ஊர்ப் பொது நிகழ்வுகள், அரசியல் மேடைகளைக் கடந்து தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனப் புதிய தடங்களில் பயணிக்கத் துவங்கியுள்ளது கானா.

தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்திலும் ஏதேனும் ஒரு வகையில் கானா கலைஞர்களின் முகம் வெளிப்படுகின்றன. கானாவின் இந்தப் பிரபலத்திற்கு ‘யூடியுப்‘ போன்ற இணைய ஊடகம் வகிக்கும் இடத்தை ஸ்மார்ட் போன் உலகில் உலவும் யாரும் மறுக்கமாட்டார்கள். சினிமாவின் மூலம் அறியப்பட்ட கானாவானது ஒருவகையான மாதிரி வடிவம் தானே தவிர இயல்புத் தன்மை கொண்டதல்ல. இணைய ஊடகத்தின் மூலமே கானா அதன் இயல்புத் தன்மையோடு மேல் பூச்சு இல்லாமல் மக்களிடம் சென்றடைந்துள்ளது எனலாம்.

கானா உலகில் புகழ்பெற்றுச் சினிமாவில் வலம் வந்த கலைஞர்களான கானா உலகநாதன், கானா பழனி, கானா விஜி துவங்கி இன்றைய இளம் தலைமுறையினரான கானா பாலா, ரோகேஷ், ராயபுரம் வினோத், வண்ணை ஜெகன், குணா, பாலசந்தர் வரை பலர் தங்களின் தனித்த குரலாலும், பாடும் திறமையாலும் மக்களைக் கவர்ந்துள்ளனர். இணைய ஊடகத்தைப் பயன்படுத்தி சுதாகர், மைக்கேல்,  சரண் போன்ற பல இளம் திறமையாளர்கள் மக்களை நேரடியாகச் சென்றடைந்து அதன் மூலம் சினிமாவின் கதவையும் தட்டித் திறந்துள்ளனர். இன்று சென்னையிலும் சரி, பிற மாவட்டங்களிலும் சரி இந்த முகங்கள் இல்லாத கச்சேரிகளே இல்லை எனலாம். ஊடகங்களை எல்லாம் கடந்து களத்தில் இன்றும் மக்கள் மத்தியில் ஆளுமை செலுத்தும் முன்னோடி கானா நட்சத்திரங்களாக புன்னியர், ரேவ் ரவி, ஸ்டான்லிநகர் நித்தியா போன்று பலர் உள்ளனர். இப்படி வெளிச்சத்திற்கு வரும் கலைஞர்களின் வெற்றிக்கு அவர்களின் தனித்திறன், குரல் வளம் ஆகியவை முக்கிய காரணம் என்றால் அவ்வெற்றிக்குப் பின்புலமாக இருப்பவர்கள் பாடலாசிரியர்களும், இசையாமைப்பாளர்களும்தான்.

கானாவை கலை வடிவமாக மாற்றிய முதல் தலைமுறை முன்னோடிகளான சிந்தை நாதன், ஆயிரம் விளக்கு செல்வம், புளியந்தோப்பு இராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் தாங்களே பாட்டெழுதி மெட்டமைத்துப் பாடுபவர்களாக இருந்தனர். பெரும்பாலும் சொந்த மெட்டிலும், சினிமா, பக்திப் பாடல்களை ஒற்றியும் இவர்களது பாடல்கள் அமைந்தன.

அப்படியான பாடல்கள் சில சினிமாவிலும் அரங்கேறியது. இறப்புச் சார்ந்த பாடலாக இருந்த கானா இவர்களால்தான் மேடைக்கான கலையாக மாறியது எனலாம். சிந்தாதரிப்பேட்டை, புளியந்தோப்பு, வியாசர்பாடி போன்ற இடங்கள் கானாவின் கோட்டையாகப் பெயர் பெற்றதற்கு இந்த முன்னோடிகள் இட்ட அடித்தளமே காரணம். அவர்களின் மீதான ஈர்ப்பால் களத்திற்கு வந்த அடுத்த தலைமுறையினரில் சிலர் பாட்டெழுதிப் பாடுவதிலும், பலர் பாடுவதிலும் மட்டும் ஆர்வம் கொண்டனர். சிலர் மட்டுமே பாட்டெழுதுவதை இலக்காக எடுத்துக்கொண்டனர். எழுத்துக்கல்வி குறைவாக உள்ள அடித்தட்டு மக்கள் திரளிடம்தான் கானா உருவாகி வளர்ந்தது. எனவே, கானா பாடகர்களைப் போல் கானா கவிஞர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பது இயல்பானதே. மேலும், ஒருசிலர் எழுதும் பாடலைத்தான் மேடைகள் தோறும் சூழலுக்கு ஏற்ற வகையில் இட்டுகட்டிப் பலரும் பாடுகின்றனர். பிரபலமான கானா பாடல்கள் அனைத்து மேடைகளிலும் தொடர்ந்து பாடப்படுகிறது. இதனால், பெரும்பாலான கானா பாடல்கள் யார் எழுதியது என்பதும், பாடலாசிரியரின் தனித்த அடையாளம் காணப்பட முடியாமல் போகிறது. கானா உலகத்திற்குள் மரியாதைக்குரிய இடத்தில் இருக்கும் கானா கவிஞர்கள் அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை. இப்படி வெளிச்சத்திற்குப் பின் பயணிக்கும் இவர்களின் வருகை, பாடல்கள் உருவாகும்  பின்னணி, அவர்களின் வாழ்க்கை பற்றிய உரையாடல் வழியே கானாக் கவிஞர்கள் பற்றிய சிறிய அறிமுகம் உங்களுடன்.

கானா கவிஞர்கள்

கானாவின் தனித்தன்மைக்கு முக்கிய காரணம் குரலும், சென்னை வழக்காறும் தான். குரல் பாடகருடையது என்றால், பல மொழிக்கலப்பிலான சென்னை மொழியின் தனித்துவமான  சொல்லாடல்களை லாவகமாக கானாவில் புகுத்துவது பாடலாசிரியர்களின் கவித்திறன் எனலாம். கானா கவிஞர்களில் அதிக கவனம் பெற்றவர்கள் முனுசாமி, ரைமன், கணேசன், வினோத், ரோகேஷ், செல்லமுத்து, அறிவு, பேனா பிரேம்ஜி என பட்டியில் மெல்ல வளர்ந்து வருகிறது. இவர்கள் அனைவரைப் பற்றியும் தனித்து குறிப்பிட வேண்டிய அவசியம் உண்டு என்றாலும் இக்கட்டுரையில் மூவர் பற்றிய அறிமுகம் மட்டும் இடம் பெறுகிறது.

கானா முனுசாமி

கானா உலகில் மிகவும் மூத்தவர்களாக மதிக்கப்படுவர்களில்  கானா முனுசாமியும் ஒருவர். கானாப்பாடல் எழுதுவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். தென்னிந்திய கானாக் கலைஞர்கள் சங்கத்தின் பெப்சி தாஸ், கானா பாடகர்கள் மூர்மார்க்கெட் ரகுமான், சிந்தை ரத்னம், சிந்தை ரஜினிகுமார் ஆகியோர் புடைசூழ முனுசாமி அவர்களுடனான உரையாடல் நிகழ்ந்தது. மூர்மார்க்கெட் அருகில் உள்ள அவர்லேடி பூங்காவின் மரம் இந்த கானா கலைஞர்களோடு உரையாட நிழல்தந்தது. சென்னை பொதுமருத்துவமனையில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் முனுசாமி. பிழைப்புக்கு அரசு வேலை என்றால், பாட்டெழுதுவது மனநிறைவுக்கு என்கிறார்.

கானா களத்திற்குள் அவர் வந்த விதம் பற்றி விவரிக்கையில் அடிப்படையில் நான் ஒரு கவிஞன், பாடல் எழுதுவது எனக்கு பிடிக்கும். விருப்பப்பட்ட தலைப்புகளில் கவிதை எழுதுவேன். நண்பர்கள் கேட்டதற்காக கானா வடிவில் ஒருமுறை எழுதிக்கொடுத்தேன். பிறகு அதுவே தொடர்ச்சியாக மாறிவிட்டது. கானா நம்ப பகுதியில்  ரொம்ப பிரபலம் என்பதால் அது நினைவோடு கலந்து இருக்கு. அதனால கானாவுக்கு பாட்டு எழுதுறது ரொம்ப ஈசி என்றார்.

அரசு ஊழியர் மத்தியில் செயல்படும் இலக்கிய வட்டத்தில் பங்கேற்று ஈரோடு தமிழன்பன், சுரதா, அப்துல்ரகுமான் போன்ற பெரியவர்கள் முன்னிலையில் கவிதை வாசித்திருப்பதை பெருமிதத்தோடு நினைவு கூந்தவர் பேச்சின் ஊடாக பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் துவங்கி கண்ணதாசன், பட்டுக்கோட்டை வரை பலரது பாடல் வரிகளை ஒப்பிட்டுப் பாடிக் காண்பித்து அவர் பாணியில் விளக்கினார். ”காதல் உணர்வை உச்சத்துல சொன்னா அது கண்ணதாசன், சமூக உணர்வை ஏத்தி சொன்ன அது பட்டுக்கோட்டை. நம்மல மாதிரி உழைக்கரவனுக்கு ரெண்டு பேரு சொன்னதும் வேணும். இவங்க ரெண்டு பேரையும் கலந்துதான் எழுதுவேன். ‘இவங்க தான் உங்களுக்கு முன்னோடிகளா‘ என்றதும், அதை மறுக்கும் வகையிலான முகபாவத்தோடு ஒவ்வொரு கவிஞர்கிட்டயும், ஒவ்வொரு வகை ஈர்ப்பு உண்டு. ஆனா எனக்குப் பிடிச்சது தமிழ்ஒளி தான். என் குருவைப்போல நினைக்கிறேன்” என்றதோடு தமிழ்ஒளியின் கவிதைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

”இன்னைக்கு கானானாலே பொம்பளங்களை திட்டி பாடுறதா நினைக்குறாங்க. அதுமட்டும் கானா இல்ல. பலதை பற்றியும் பாடுவோம். கானா என்பது வேற ஏதோ இல்ல. மக்கள் வாழக்கைய பத்திப் பேசுறதுதான். கண்ணுல எத பார்க்குறோமோ அதை தான் ஏத்த இறக்கமா மெட்டுல சொல்றோம்.  வயசு பசங்க கும்பல் சேர்ந்து பொண்ணுங்கள கிண்டல் பண்ணி பாடுறாங்க, உண்மைதான். பல பேரு அப்படிதான் கானா பாட கத்துக்குறாங்க. அந்த வயசுக்கு காதல் பெரிய விசயமா தெரியுது. கொஞ்சம் பக்குவப்பட்டா மாறிடுவாங்க. நாங்க தான் மொதல்ல திருநங்கைகளுக்காக பாட்டு பாடுனோம். நான் எட்டு பாட்டு எழுதினேன். தம்பிங்க எல்லாம் பாடுனாங்க. கேசட் ரிலீச பெரியமேட்டுல்ல பெரிய விழாவா எடுத்தோம். தமிழ்நாட்டுல முழுசா இருந்து திருநங்கைங்க வந்திருந்தாங்க. பாட்ட கேட்டு ரொம்ப சந்தோஷப் பட்டாங்க” என்றார்.

கருத்துள்ள இனிமையான நல்ல பாட்டு பாடுறவங்களும் இருக்காங்க. புன்னியர், ரேவ்ரவி, அந்தோணி பாட்டு  கேட்டவங்க யாரும் கானாவ தப்பா பேச மாட்டாங்க. புன்னியரு மெல்லிசை பாட்டு மாதிரி இனிமையா பாடுவாரு. அத கேட்டா கானானா குத்துப்பாட்டுதான்னு எவனும் சொல்லமாட்டான். பலாத்காரத்தால கற்பமாய் குழந்தபெத்த ஊமைப் பொண்ணோட வாழ்க்கை அவளத்த சொல்லி பாட்டு எழுதுனேன். புன்னியருதான் அத உறுக்கமா பாடுனாரு. அத கேட்கிறவங்க யாரும் அழமா இருக்கமுடியாது. எங்க கச்சேரிக்குப் போனாலும் அத பாடச்சொல்லி கேப்பாங்க. அப்பிடி ஒரு ஹிட்டு பாட்டு அது. என்ன சுத்தி இருக்குற  இளைஞர்ல இருந்து மூத்தவங்க வரைக்கும் எல்லாருக்கும் பாட்டு எழுதுறேன். நான் எழுதுற பாட்டுல எக்காரணம் கொண்டும் ரெட்டை அர்த்த வார்த்தை, பெண்கள கேவலப்படுத்தும் கொச்சையான கெட்டவார்த்தைகள போட மாட்டேன். என் பாட்டுல காதலும் இருக்கும், காமமும் இருக்கும். ஆனா விரசம் இருக்காது. கண்ணதாசன் மாதிரி எலமர காயா காதல, காமத்த சொல்லுவேன். காதல்ல தானப்பா கலையே ஆரம்பிக்குது! என்ன சொல்ற?” என்று சிரித்தவாறே கானாக் குறித்தத் தன் வரையறையை அழுத்தமாகச் சொல்லி முடித்தார்.

‘தமிழ்ஒளிய பத்தி சொல்லுங்க?‘ என்றதும் “என்னதான் கானா பாட்டுக்கு வரவேற்பு இருந்தாலும், அதன் மீது ஒரு கீழான பார்வை இருக்கத்தான் சார் செய்யுது. இன்னைக்கு சினிமால கானா ஜெயிச்ச பிறகும் பார்வை முழுசா மாறமாட்டுதுனா, அன்னைய நிலைமைய யோசிச்சு பாருங்க சார். சாதியல்லாம் தாண்டி பாட்டெழுதி மேல எழுந்து நின்னாருன்னா தமிழ்ஒளி எவ்வளோ பெரிய ஆளு. இன்னைக்கு நிறைய பேரு எங்காளுங்க கலைத்துறையில மேல வந்துட்டாங்க. அன்னைக்கு இது இருந்திருந்தா இன்னைக்கு பள்ளிக்கூட பாட புத்தகத்திலயே தமிழ்ஒளி இருந்திருப்பார். சும்மா காதல் பாட்டு எழுதரவர்ன்னு நினைச்சுடாதீங்க. சாதி, மதத்துக்கு எதிரா கருத்தா எழுதுவாபோல. அடுத்த முறை வாங்க, அவர் பாட்ட என்னலாம் சொல்லிகாட்டுறேன் என்றவரது கண்களில் அப்படியொரு ஒளி.

அரசு ஊழியர்கள் கவிமன்றங்களில் முதலில் தமிழ்ஒளியின் பாடல்களைப் பாட ஆரம்பித்து, பின் சொந்தமாகப் பாடல் எழுதி வாசித்தாக தெரிவித்தார். ‘இதுவரை எவ்வளவு பாடல் எழுதி இருக்கீங்க‘ என்றதும் ”நெறிய எழுதியிருக்கம்பா, அதெல்லாம் கணக்குல வச்சிகல. தோராயமா சொன்னா ஒரு 100 பாட்டுக்கு மேல எழுதியிருக்கேன்னு வச்சிக்கோ என்றார். அதில் ஹிட்டான பாடல் சொல்லுங்களேன் என்றதும் அது வேணாம்பா. என் பாட்ட பலப்பேர் பாடுறாங்க. என் பாட்டுனு சொன்னா அவங்க கஷ்டப்படுவாங்க என்றதும் உடனிருந்து பிற பாடகர்கள் அதை அமோதிப்பதை போல் தலையசைத்தனர்.

தன் பாடல்கள் அனைத்தையும் டைரிகளில்  எழுதிவைத்துள்ளார். அதை வாசிக்க கேட்டால், பகிர்வதில் ஒரு தயக்கம்  அவரிடம் உள்ளது. சினிமா இசையமைப்பாளர்களிடமும், பிற பாடல் ஆசிரியர்களிடமும் ஏற்பட்ட கசப்பான அனுபவம்தான் காரணம் என்பதைப் பிறகு தெரிந்துக்கொண்டேன்.  நல்ல கானா பாட்டு எழுதி தரசொல்லி கேட்கிறார்கள், ஆனா எழுதி வாங்கிட்டு கொஞ்ச காசு கொடுத்துட்டு பாட்ட அவங்க பேர மாத்திகிறாங்கஎன்று பொறிந்து தள்ளினார் உடனிருந்த இளம் கானா பாடகர் ஒருவர். சினிமா எப்படி கானா கலைஞர்களை சுரண்டவும் செய்கிறது என்பதை நோக்கி உரையாடல் திரும்பியது. சினிமா, அதை நோக்கிப் பயணம் சிலருக்கு வெற்றி, பணம், புகழ் கொடுத்திருந்தாலும் பலருக்குக் கசப்பான அனுபவங்களைத் தந்திருக்கிறது. வணிகமயப்பட்ட, இந்த ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பில் முனுசாமி போல் கவனம் பெறாத பல தமிழ்ஒளிகள் பலர் இருப்பார்களோ என்ற எண்ண ஓட்டத்தை இந்த உரையாடல் ஏற்படுத்தியது.

முனுசாமி கொடுத்த உற்சாகத்தில் பிற கானா கவிஞர்களைச் சந்திக்கும் ஆர்வத்தில் சென்னை கானா பாடகர் சங்க தலைவர் நாகூரான் மற்றும் பெப்சிதாஸ் உதவியுடன் பிற கானா கவிஞர்களை சந்திப்பது என்று முடிவெடுத்துப் பட்டியலைத் தாயரித்தேன். அதில் கிடைத்த பெயர்கள் தான் ரேமன்ட், கணேசன், ஆடுதொட்டி கமலநாதன், முரளி, புளியந்தோப்பு பிரபா, வினோத், ரோகேஷ், பேனா பிரேம்ஜி போன்றவர்கள். இப்படி சந்தித்த பலரில் இருவருடன் ஏற்பட்ட உரையாடலை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

கானா கவி சிந்தை ரைமன்

இவர் சிந்தாதிரிப்பேட்டையின்  பூர்வகுடி.  மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராகப் பணிபுரிகிறார். அழகுநிலா, காதல் நிலா, அன்னையின் அதிசயங்கள் போன்ற கானா உலகில் புகழ்பெற்ற பல ஆல்பங்களில் பாட்டு எழுதியவர். அவரைச் சந்திக்க அழைப்பேசியில் தொடர்புகொண்டவுடன் புதிய அனுபவமாக அமைந்தது. அழைப்பேசியில் என் பெயரையும், கானா கலைஞர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புவதாகவும் சொன்னவுடன், ”யூடியுப்பா புடிக்க போறீங்க. பாடுற பசங்கள பாருப்பா” என்றார். இல்லனா நீங்க மூத்தவரு, அதான் உங்கள முதல்ல பாக்கலாமுன்னு கூப்பிட்டேன் என்றதும், ”அப்படினா ரேவ் ரவி, புன்னியர பாருப்பா. நான் பாடுறது எல்லாம் இல்ல. எழுதரது மட்டும்தான்“ என்றார். பிறகு கொஞ்சம் குரலை உயர்த்திப் பொறுமையாக ‘கானா எழுத்தாளர்களை தான் பார்த்து பேச வேண்டும்‘ என்றேன். உடனே உற்சாகமாக நேரில் ஆஜர் ஆனார். சிந்தாதரிப்பேட்டையில் தேனீரோடு அறிமுகம் துவங்கியது. உடன் சிந்தை சேதுவும் ஆஜர் ஆகியிருந்தார். பின்பு ”வாங்க நம்ம ஏரியா பக்கம் போகலாம்” என்று சிந்தாதரிப்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

ஆரம்பத்தில் மாதாகோவிலில் ஜெப ஊர்வலங்களில் பாடத்துவங்கியவர், பின்பு மாதா பாடல்களை எழுத பழங்கிக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக கானா களத்திற்கு வந்து இன்று மூத்த பாடலாசிரியராக கவனம் பெற்றிருக்கிறார். ”நமக்கு பாட்டுதான் எழுத வரும், மெட்டெல்லாம் அவ்வளோ வராது. புடிச்ச சினிமா மெட்டுக்கு பாட்டு எழுதுவேன். பாடலின் தன்மைக்கு ஏத்தமாதிரி சில மெட்டுக்களை தேர்ந்தெடுத்துப்பேன். சிலபேர் ஒரு சினிமா பாட்டின் மெட்ட கொடுத்துப் பாட்டெழுத சொல்லுவாங்க. இல்லனா, ஏதாவது பொருள பத்தி, ஆளப் பத்தி, சம்பத்தை பத்தி தலைப்புக் குடுத்து பாட்டு எழுத சொல்வாங்க. சிலபேர்தான் புதுசா மெட்டுப்போட்டு கொண்டுவந்து பாட்டெழுத சொல்லுவாங்க. அப்படி எழுத ரொம்ப பிடிக்கும். அதுல பாட்டு நல்லா அமைஞசிடும். அப்படி செட்டான பாட்டுங்க பின்னாடி சினிமாலையும் போயி ஹிட் அடிச்சிருக்கு” என்றார் ஆர்வத்துடன்.

”எனக்கு புடிச்சமாதிரி தோன்ற தலைப்புல பாட்டு எழுதுவேன். திருப்த்தி என்ற நிலைவந்த பிறகு நண்பர்கள் யாரையாவது அழைத்து மெட்டுச்சொல்லி பாட சொல்வேன். அது அப்படியே பரவலாகி பலரும் பாடுவார்கள். நமக்கு நல்ல பெயர் கிடைக்கும். புன்னியர் என்னோட பாட்ட நிறைய பாடியிருக்கார். அவர் உச்சரிப்பு நல்லாயிருக்கும், அதனால நல்ல வார்த்தைகள் போட்டு பாட்டு எழுதலாம். புன்னியர், ரேவ்ரவி, நொச்சிநகர் குமார், சிந்தை குமார், சிந்தை அருண், சிந்தை சேது எனப் பலருக்கும் எழுதிகொடுத்து இருக்கேன். புன்னியர் போட்ட ‘காதல் நிலா‘ வரிசையில எல்லா கானா ஆல்பத்திலும் என் பாட்டு ஒன்னாச்சி இல்லாமல் இருக்காது. நான் எழுத, புன்னியர் பாட என கூட்டா பல பாட்டு போட்டு இருக்கோம். நான் எழுதி புன்னியர் பாடின ‘கண்கள் உன்னை தேடும்‘ பாட்டு யூடியூப்ல ஆறு லட்சம் பேர் பார்த்திருக்காங்க. கானா எழுதுரதுல  மனத்திருப்த்தி தானே தவிர வருமானதுக்கு ஒன்னும் இல்லை” என்று தன் எழுத்துப்பயணத்தை விவரித்தார்.

அரசியல், சமூகம், தலைவர்கள் பற்றிப் பாடல்கள் எழுதியிருக்கீங்களா என்றதும், ”நான் அரசு வேலையில இருக்கேன். அதனால அப்படி எழுதரது இல்லை. என் மனசுக்கு பட்டதை எழுதுவேன். அம்பேத்கரை வச்சு பாட்டு எழுதியிருக்கிறேன்” என்றார் பெருமையாக. கானா கலைஞர்களை பொருத்தவரை அம்பேத்கர் என்பவர் வெறும் தலைவர் அல்ல. அதற்கும் ஒரு படிமேலே வைத்துள்ளனர் என்பதை இவர்களுடனான தொடர் உரையாடலில் உணரமுடிந்தது. ரைமன் மட்டுமல்ல, பல கானா பாடகர்களும் அம்பேத்கர் மீது பாடுவதைப் பெருமையாக சொல்வதை கேட்டிருக்கிறேன். கானா பழனி அகர வரிசையில் அம்பேத்கரை பற்றி பாடிய ‘ஆனா ஆவன்னா அம்பேத்கரை பாருன்னா‘ பாடல் சென்னையின் பட்டிதொட்டிகள் எங்கும் பிரபலம்.  சமீபத்தில் மைக்கேல் பாடிய அம்பேத்கர் பாடல் கூட இணைய ஊடகத்தில் அதிகம் பகிரப்பட்டு வரவேற்பை பெற்றது குறிப்பிடத் தகுந்தது.

‘கானா அடித்தட்டு மக்களின் கலை எனும் போது அம்மக்களின் வாழ்க்கை பாதிக்கும் பிரச்சனைகளை பற்றி எழுதுவதும் அரசியல் தான். அப்படி எதாவது நீங்க எழுதியிருக்கீங்களா‘ என்று மீண்டும் அரசியல் கேள்விக்குள் சென்றவுடன், ”அப்படி அரசியலா வைச்சு எழுதுனது இல்ல. ஆனா நாங்க எழுதுற பாட்டுல, எங்க வாழ்க்கைப்பாடு கட்டாயம் இருக்கும். இப்ப ஒரு பாட்டி எழுதியிருக்கேன். கூவ ஆத்து ஓரத்துல இருந்து தூக்குன மக்களோட அவதிய  நினைச்சு எழுதுன பாட்டு” என தற்போது தயாரிப்பில் இருக்கும் ஒரு பாடலை கானா சேதுவிடன் கொடுத்து மெட்டு சொல்லிப்பாடச் சொன்னார். ரைமன் தபேலா வாசிக்க, சுருதி பிடித்து சேது பாட ஆராம்பித்தார்…

சென்னைமா நகரினிலே..

சென்னைமா நகரினிலே.. எங்களுக்கு ஊரு

வந்தாரை வாழ வைக்கும் எங்க ஜனம் பாரு

நாங்க சென்னை சிட்டி ஆளு

எங்க பாட்டை கொஞ்சம் கேளு

…………………………….. 2

கூவ நதி ஓரத்திலே எங்களுக்கு வீடு

மழை வந்தால் வீட்டுக்குள்ளே வெள்ளம் வரும் பாரு

அன்றாடம் கொசுக்காளாலே தினம் ஒரு கேடு

இதை எண்ணி அரசாங்கம் கொடுக்கனும்பா வீடு

பத்துக்கு பத்துக் கூட வீட்டின் அளவு இல்லை

கால நீட்டி படுக்கக்கூட வீட்டின் அளவு இல்லை

காலமெல்லாம் வாழ்ந்து வந்தோம் ஆத்து ஓரத்துல

காலமெல்லாம் வாழ்ந்து வந்தோம் குப்பமேட்டுல

நல்லகாலம் பொறக்கனுமையா எங்க வாழ்வில

சிட்டிக்குள்ள வாழ்ந்து வந்தோம் பல ஆண்டு காலம்

பிள்ளைகளோ நிறைஞ்சிடுச்சு நாங்க எங்க போவோம்

வருமையில் வாடுறோம், நாங்க வீடு கேட்டு ஏங்குறோம்

எங்க எல்லோருக்கும் வீடுதந்தா சந்தோஷமா போகுறோம்..

சென்னைமா நகரினிலே..

சென்னைமா நகரினிலே.. எங்களுக்கு ஊரு

வந்தாரை வாழ வைக்கும் எங்க ஜனம் பாரு..

நாங்க சென்னை சிட்டி ஆளு

எங்க பாட்டை கொஞ்சம் கேளு

சிந்தை ரைமன் எழுதும் பாட்டு

சேது பாடுறேன் நான் கேட்டு.

”இது நம்ம ஏரியால கூவ ஆத்தை ஒட்டி இருந்த 2000 குடிசைகள காலி பண்ணிட்டு, பெரும்பாக்கம் அண்ணான்ட தூக்கி போட்டுடானுங்க. போனதுல பாதிப்பேருக்கு வீடு கிடைக்கல. வேலைக்காக தினம் அல்லாடுது. அந்த மக்கள் திண்டாட்டத்தை பார்த்து மனசு வேதனயில எழுதுன பாட்டு” என்றார். சென்னையில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களில் சரிபாதி பேருக்கு இன்னும் மாற்று வீடு ஒதுக்கப்படவில்லை. பூர்வக்குடியான எங்களை  வெளியேற்றாதே என்று வலுவாக கேட்க வேண்டிய குரல், மாற்று வீடு கொடுத்தால் போதும் என்ற நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது அரசு. சென்னையின் வளர்ச்சியிக்குத் தன் உழைப்பைக் கொடுத்த மக்கள் ஒண்டுவதற்கு வீடற்று நித்தம் அவதியுறுகையில் சக மக்களின் அழுகுரலை ரைமன் தன் கானாப் பாடல் மூலம் பதிவு செய்துள்ளார். இன்னும் இது போன்ற பாடல்களை இயற்ற வலியுறுத்தி அவரிடம் இருந்து விடைபெற்றேன்.

ராயபுரம் வினோத்

”ஒரு குச்சி, ஒரு குல்பி” எனும் சினிமா பாடலின் மூலம் பல இளம் நெஞ்சங்களை தாளம் போட வைத்தவர் வினோத். இளம் கானா பாடகரான இவர் பாடல் எழுதுவதிலும் கவனம் செலுத்துகிறார். தொலைக்காட்சி பாட்டு போட்டியில் பங்கேற்றதின் மூலம் புகழ் பெற்று இன்று சினிமாவில் தன் பாடல் வரிகளாலும், குரலாலும் ஈர்த்து வருகிறார். யூடியூபில் கானாவைப் பரப்பியவர்களில் முதன்மையானவர்களில் வினோத்தும் ஒருவர். தான் சென்ற பாதையில் பல புதிய முகங்களை சினிமா நோக்கி அழைத்துச் செல்பவர். கானாவை பொழுதுபோக்கு, இரங்கல் என்ற வகைமையில் இருந்து அரசியல், சமூக விழிப்புணர்வுத் தளத்திற்கு கொண்டு செல்லும் சிலரில் வினோத்தும் ஒருவர். நீட் அனிதாவிற்கு அஞ்சலி, உழைப்பாளர் தினப்பாடல், சுனாமி நினைவுநாள் பாடல், ஜல்லிகட்டு போரட்டம், பாஸ்ட்புட் உணவு எதிர்ப்பு ஆகிய பாடல்கள் இவரது சமூக அக்கறையின் வெளிப்பாடு.

வினோத்தை ராயபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன். தற்போது யூடியூபில் முன்னணியில் இருக்கும் பிராட்வே மைக்கேலும் உடன் இருந்தார்.  பொதுவாகத் தனது கானா ஆர்வம், தொலைக்காட்சி வாய்ப்பு, சினிமா என தன் பயணத்தை விவரித்தார். ‘சினிமாவில் பயணிக்குறீங்க, உண்மையா சினிமா கானாவை அங்கீகரிக்குதா?‘ என்றேன். ”என்னதான் கானா பாட்டு எல்லாரையும் தாளம் போட வச்சாலும், அத சிறுமையாத்தான் பார்த்தாங்க. சென்னையிலயும் சில இடங்கள தாண்டி அது போகல. ஆடியோ செட் மூலமா நல்லா பிரபலம் ஆச்சு. ஆட்டோவிலும், பஸ் மூலமா நல்லா பரவுச்சு.  இன்னைக்கு நிலம வேற. சினிமாவுல முக்கிய இடத்துக்கு போயிருக்கு. தேவா சார் அப்படியொரு இடத்தை கானாவுக்கு வாங்கி கொடுத்தாரு. ஒரு படம் ஹிட்டாகனுமுன்னா கானா பாட்டு வேணுமுன்னு இப்ப எல்லா இயக்குனர்களும் கேட்குறாங்க. இசையமைப்பாளர்களும் தேடித்தேடி கானா பாட்டைப் போடுறாங்க. எதாவது புதுசா எழுத எங்கள கூப்பிடுறாங்க. புது குரல தேடுறாங்க. எங்காளுங்களே இப்ப நேரா சினிமால பாட ஆரம்பிச்சுடாங்க. எத்தனை பேருக்கு புதுசா வாய்ப்பு கிடைக்குது தெரியுமா. இறப்பு கச்சேரியில இருந்த கானா இன்னைக்கு கோயில் கச்சேரி, கல்யாணம் வரைக்கும் போயிடிச்சு. நம்ப பசங்களும் நல்லா சம்பாதிக்குறாங்க” என்று தற்கால கானாவின் பயணத்தை விளக்கித் துவங்கினார்.

புரியாத வார்த்தை எல்லாம் போட்டுதான் கானா எழுதனுமுன்னு இல்ல. ஆனா, அதுமாதிரி வார்த்தைகளைதான் மக்கள் ரசிக்குறாங்க. சினிமாவுலயும் கேட்குறாங்க. ஆலுமா டோலுமா…, தண்டாமாரி.. ” மாதிரி பாட்டுக்கு கிடச்ச வரவேற்ப பாருங்க. செம்ம ஹிட்டுல. ஆலுமா டோலுமானு சொன்னா?? இது என்ன புதுசா இருக்கேனு மக்கள் நினக்குறாங்க. இது பொதுவா மக்கள் பேச்சுல இருக்கிற வார்த்தைங்கதான். சென்னையோட பூர்வக்குடி மக்கள் எல்லாம் உழைக்கறவங்க தான். எங்க மக்களோட உங்களுக்கு தொடர்பு இல்லை. அதனால் நாங்க பாடுறது எல்லாம்  உங்களுக்கு புதுசா தெரியுது. கானா பாட்டு மக்களின் வாழ்க்கையில் இருந்து எடுக்குறது. எதார்த்தமா எடுத்து பாடுறது. அதனால நாங்க பேசுற எல்லா வார்த்தையும் ஈசியா எங்க பாட்டுல வரும். நாங்களும் பொது மொழில் பாடின மற்ற பாட்டுக்கும் கானாவுக்கும் என்ன வித்தியாசம் அப்புறம்.

நான் கானா பாடுறேன், எழுதுறேன்னா ராயபுரம் எல்லைக்குள் இருந்தா மட்டும்தான் அது முடியும். எங்க ஊரும், மக்களுமே பாட்டுக்கான வார்த்தைங்கள புதுசு புதுசா தருவாங்க” என்றவர் சினிமாவிற்கு பாட்டு எழுத  சென்ற ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். ”ஒரு முறை சினிமா பாட்டு எழுத பெரிய ஸ்டார் ஹோட்டல்ல ரூம் போட்டுக் கொடுத்தாங்க. ரெண்டு நாள் தங்கியும் பாட்டு வரல. நான் வீட்டுக்கு போறேன்னு கிளம்பிவிட்டேன். வீட்டு வாசல்ல, இதே இடத்துல கயித்துக்கட்டிலில் உட்கார்ந்த ஒரு மணி நேரத்தில் பாட்ட எழுதிட்டேன். ரோட்டுல உட்கார்ந்து மக்களோட பேசுனா போதும் எங்க மக்கள் அத கொடுப்பாங்க. பாட்டு தானா வரும்” என்றார்.

பெண்களை வம்புக்கு இழுக்கும் பாடல்களில் தனக்குள்ள உடன்பாடு இல்லை என்பதை வெளிப்படையாக கூறும் வினோத், தான் ஆண்களுக்கு அறிவுரை சொல்லி ஒரு பாடலை எழுதிப் பாடி யூடியூப்பில் உலாவவிட்டுள்ளார்.

நண்பா, லவ்வுனாலே சின்ன சின்ன சண்ட வருன்டா

என்னுடைய லவ்வுலயும் சண்ட வருன்டா

மச்சா, லவ்வுனாலே சின்ன சின்ன சண்ட வருன்டா

என்னுடைய லவ்வுலயும் சண்ட வருன்டா

சோஜா, லவ்வுனாலே சின்ன சின்ன சண்ட வருன்டா

என்னுடைய லவ்வுலயும் சண்ட வருன்டா

தப்பு பொண்ணுமேல, இல்லடா பையன்மேல

கொஞ்ச ஆனதுமே கொடுக்குது மிஸ்டுகாலா

……. 2

விட்டுகுடுத்து போனா நண்பா வெட்டுக்குத்து ஆகாதுடா

கஷ்டப்பட்டு காதலிச்சு கண்ணீருல சாகாதடா

காதல் போல புனிதம் இந்த உலகில் எதுவுமில்லை

பெண்கள் பாசத்திற்கு கடல் அளவோ இல்லை

……..

உண்மையான காதல்மட்டும் என்னைக்குமே சாகாதுடா

பாசம்வெச்ச எந்த பொண்ணும்  உன்னவிட்டு போகாதுடா

உண்மை சொல்லும் பொண்ண எந்த  பையனும் மதிப்பதில்லை

பாவம் அந்த பொண்ணுக்கு கொடுக்குறீயே தொல்லை

சந்தேகப்பட்டு நீயும் லவ்வு பண்ணா

உன்னோட காதல் போகும் மண்ணோட மண்ணா

கோவம், சண்ட வரும்

தினமும் தொல்லை தரும்

காதலுக்கு என்னைக்குமே அன்புதான்டா கூட வரும்

மச்சா, லவ்வுனாலே சின்ன சின்ன சண்ட வருன்டா

என்னுடைய லவ்வுலயும் சண்ட வருன்டா

வாட்சப்ல சண்ட வந்தா கோவமான பொம்ம ஒன்னு

கூடவே அனுப்பிடுன்டா கோணவாய் பொம்ம ஒன்னு

அடிக்கடி வருன்டா அந்த அமுக்கு மூஞ்சி பொம்ம

கடைசியில் வருண்டா அந்த கண்ணீர் விடும் பொம்ம

இப்படியே  போகுதுங்க காதலர் வாழ்க்க

எப்பதான் மாறிடுமோ அது கால்யாண வாழ்க்கை

இது நிலைக்கனும் காதலர்கள் நினைக்கனும்

காதல் பண்ணிபுட்டா கடைசியில் ஜெயிக்கனும்.

இப்பாடல் வழக்கத்திற்கு மாறாக பெண்களை வம்புக்கு இழுக்காமல், ஆண்களுக்கு அறிவுரை சொல்லும் கானாப்பாடல். சில நூறு பார்வைகள் (views) மட்டுமே யூடியூபில் கிடைத்துள்ளது இதை விட சுமாரான பாடல்கள் கூட பரவலாக கவனம் பெற்ற நிலையில் இப்பாடல் ஊடக வெளியில் தகுந்த வரவேற்புப் பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கானா பொதுவாக ஆண்களின் வெளியாக இருக்கிறது, பெண்களுக்கு எதிர்நிலையில் உள்ளது என்ற விமர்சனம் ஏற்புடையதுதான் என்றாலும், அதற்கு கானா கலைஞர்கள் மட்டும் பொறுப்பல்ல. பார்வையாளர்களாகிய நாமும் காரணம் என்பதற்கு இந்தப் பாடலுக்குக் கிடைத்துள்ள குறைந்த வரவேற்பையே எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.

இறுதியாக

தமிழ் இலக்கியச் சூழலில் கவிஞர்களுக்குத் தன் படைப்புக் குறித்து எப்போதும் ஒரு சிலாகிப்பு இருப்பதைப் பார்க்கலாம். அவர்களது கவிதையை யாரும் கண்டுக்கொள்ளாவிட்டால்கூட, தான் பெரும் கவிசக்கரவர்த்தி என்ற மிடுக்குடனேயே பிறரை அணுகுவார்கள். ”தன்னை யாரும் அங்கீகரிக்க வில்லை என்பதில் துவங்கி; என் கவிதையைப் புரிந்து கொள்ள சமூகத்திற்கு அறிவு கூர்மைப் போதாது” என்பது போன்ற பல வகையிலான சுயத்தம்பட்டங்களை கேட்டிருக்கிறேன். இப்படியான மனப்பான்மைகள் கானா கவிஞர்கள் மத்தியில் இயல்பாய் காணமுடியவில்லை. மூத்த கலைஞர்கள் முதல் இளையோர் வரை தன் செயல்பாடுகள் மீது மனநிறைவை கொண்டுள்ளனர். கலையின் மூலம் பொருளாதார ரீதியாக ஏற்றம் அடையவில்லை என்றாலும் அங்கீகாரத்திற்கான ஏக்கம் அவர்களிடம் இல்லை. தாங்கள் எழுதும் பாடலுக்கான வரவேற்பையும், கைத்தட்டல்களை மேடைகள் தோறும் பார்ப்பதனால் என்னவோ இந்த மனநிறைவு அவர்களுக்கு எளிதில் வந்துவிடுகிறது போலும். எளிய பொருளாதாரப் பின்னணியில் இருந்து வருவதால் கவிஞர்களிடம் காணப்படும் மத்தியதர வர்க்க மன்நிலையும், அதீத எதிர்ப்பார்ப்புகளும் கானா கவிஞர்களிடம்  வெளிபடுவதில்லை.

இணைய ஊடகம் ஆளுமை செலுத்தும் இன்றைய தலைமுறையில் ஊடக மேடையை சரியாக பயன்படுத்தி தனக்கான அடையாளத்தை தேடிக் கொண்டவர்களில் முதன்மையானவர் வினோத் எனலாம். இன்று பல்லாவரம் சுதாகர், சரண், பாலசந்தர், மைக்கேல் என்று பல இளம் கானா நட்சத்திரங்கள் இணைய ஊடகத்தின் வழியே தனக்கான இடத்தைக் கண்டடைந்து வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு முந்தைய தலைமுறையிலும் இவர்களைப் போல பல திறமையாளர்கள் இருந்தும், அடையாளம் தெரியவில்லை. ஆடியோ கேசட் பரவலாக வெளிவந்த காலகட்டத்தில் பல முன்னணி பாடகர்களுடன் இணைந்து கானா உலகில் பரலாக அறியப்பட்டவர் முனுசாமி, ரைமன் போன்றவர்கள் இருந்தனர். தன்னை பொருளாதார ரீதியாக தக்கவைத்துக்கொள்ள ஒரு வேலை இருக்கவே  இன்றும் களத்தில் இயங்குபவர்களாக நீடிக்கிறார்கள். ஆனால், சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் அடையாளம் தெரியாமல் மறைந்து போன கலைஞர்கள் இருகிறார்கள். கானா முனுசாமியைப் போல் எத்தனை எத்தனைத் தமிழ்ஒளிகள் சென்னையின் சேரிகள் தோறும் முடங்கி கிடக்கிறார்கள் என்பதும், அவர்கள் பொது வெளிச்சமும், அங்கீகாரமும் பெறுவார்கள் என்பதுமே சமூகத்தின் முன் உள்ள கேள்வி??

  • Indian Foundation for the Arts, Bangalore நிறுவனத்தின் Arts Research Program திட்டநிதி ஆதரவுடன் ‘கானா‘ பற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வின் பகுதியாக எழுதப்பட்ட கட்டுரை.
  • செம்மலர், அக்டோபர் 2019 இதழில் இடம்பெற்ற கட்டுரையின் முழு வடிவம் …

Related Posts