பிற

சமயலறையிலிருந்து விடுதலை …

man and womenஇந்த தலைப்பில் எழுதுவது சற்று சலிப்பாக இருக்கலாம். நிலைமைகள் மாறிவிட்டனவே. பெண்ணுரிமை பேசுபவர்களுக்கு வேறு வேலை இல்லை என்று துச்சமாக நினைக்கலாம். ஆனால் இதை பேசுவதை நாமிருக்கும் சமூகச் சூழல் கட்டாயமாக்குகிறது.

அட! எத்தனை ஆண்கள் சமயலறையில் பெண்களுக்கு”உதவி” செய்கிறார்கள் தெரியுமா? என்று உங்களில் சிலர் முணுமுணுப்பது கேட்கிறது. சில மாதங்களுக்கு முன் நடந்த “நீயா நானா” நிகழ்ச்சியின் தலைப்பு: பெண்களுக்கு ஆண்கள் சமையலறையில் உதவலாமா? கூடாதா? ”நான் ஆண். என் அம்மாவிற்கு உடல் கோளாறு ஏற்பட்ட போது கூட நான் சமைக்கவில்லை” என்று வரட்டு ஆண் கௌரவம் கொண்டவர்கள் ஒரு பக்கம். “நாங்கள் பெண்களுக்கு உதவி செய்யும் பெருந்தன்மை கொண்ட நல்ல ஆண் மகன்கள்” என்று மார் தட்டிக் கொள்பவர்கள் இன்னொரு பக்கம்.

வாய்விட்டு கல கல வென சிரிக்க தான் தோன்றியது. நீங்கள் ‘உதவி என்று நினைக்கும்வரை இந்தக் கட்டுரைக்கு தேவை இருந்துகொண்டுதான் இருக்கும்.

வீட்டு வேலைகளுக்கு “உதவி” செய்யாமல் பகிர்ந்து கொள்ள பழகும் போது தான் அங்கே சமத்துவம் நிலவும். எழுத்தாளர் வாஸந்தி தனது ”யாதுமாகி” குறு நாவலில் கூறுவது போல வீட்டு வேலை செய்வதில் ”நாம்’ என்பது எப்போதும் பெண் என்றே அர்த்தம்.

பெண் வீட்டு வேலை செய்தால் கடமை. ஆண் செய்தால் அது அன்றைய முக்கியச் செய்தி. பெருந்தன்மையின் காரணமாகவோ அல்லது உண்மையான புரிதலினாலோ வீட்டு வேலை செய்யும் ஆண்களையும் சமூகம் சும்மா விடாது. ”பொம்பள மாதிரி வீட்டு வேலை செய்றான்”  என்று ஆணையும், “ஒரு ஆம்பளய எப்படி வேலை வாங்கிறாப் பார்”  என்று பெண்ணையும் ஏசும்.

”காலையில் காபி, கையில தினத்தந்தி ஒவ்வொரு நாளும் இப்படி தான் ஆரம்பம்” என்று பாடுகிறது ஒரு செய்தித் தாள் விளம்பரம். சுருக்கென்று உரைக்க வேண்டாமா அது?. எத்தனை பெண்களுக்கு இன்று நாள் செய்தித் தாளுடனும் காபியுடனும் ஆரம்பிக்கிறது?.

பெரும்பாலான பெண்களுக்கு பொழுது விடிவது சமையலைறையில், படுக்கையறையில் அல்ல. குற்றம் சொல்ல முடியாத குழந்தைகளையும் ஆண் கர்வம் கொண்ட கணவனையும் எப்படி மனசு கோணாமல் வேலைக்கும் பள்ளிக்கு அனுப்புவது என்பதே அவர்கள் முன் இருக்கும் மிக பெரிய சவால்.

இந்த விஷயத்தில் முற்போக்குவாதிகளுக்கு அதிக கடமை இருக்கிறது. பெண்ணுரிமை கருத்துக்களை பேசுவது மட்டுமே, விடுதலைக்கு உழைப்பதாக ஆகிவிடாது. ”சமையலறையுள் வந்தால் காலை உடைத்து விடுவேன்” என்று எழுத்தாளர் தமிழ்ச் செல்வன் தனது மனைவியிடம் கூறியுள்ளார் என்பது நல்ல உதாரணம். காலை உடைப்பேன் என்று சொல்லாவிட்டாலும் காலையில் வேலையை பகிர்ந்து கொள்வேன் என்று கூறுமளவிற்காவது மாற்றம் வேண்டும்.

”சமையல் என்ன பெரிய கம்ப சூத்திரமா? உணவகங்களில் ஒரே நேரத்தில் ஓராயிரம் பேருக்கு கூட சமைக்கும் ஆண்கள் இருக்கிறார்கள்.” இதில் ஒரு சின்ன, இல்லை இல்லை பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஆண்கள் வீட்டிற்கு வெளியில் சமைப்பது வருமானத்தை ஈட்டுத் தரும். அது அவர்களுக்கான தொழில். அவர்களின் உழைப்பிற்கான சமூக அங்கீகாரம். ஆனால் பெண்கள் வீட்டில் செய்யும் வேலை எங்குமே உழைப்பாக அங்கீகரிக்கப் படுவதில்லை நாட்டின் பொருளாதார உற்பத்தியிலும் கூட.

பெண்கள் செலுத்தும் உழைப்பிற்கு பண மதிப்பு இல்லை. அதனால், தன் உழைப்பின் மதிப்பை அவளே உணர விடாமல் செய்திருக்கிறது இன்றைய சமூகம். ஒரு நாட்டின் பொருளாதாரத்தில், ‘குடும்பங்களின்’ பங்கு மிக முக்கியமானது. ஆனால், குடும்பம் என்ற அமைப்பே, பெண்ணின் தோளில்தான் சுமக்கப்படுவது, வசதியாக மறக்கப்படுகிறது.

”நான் வெளியில் வேலை பார்க்கிறேன். என் மனைவி வீட்டில் வேலை பார்க்கிறாள். இது வேலை பகிர்வினை.” என்று சாமார்த்தியமாக பேசுவதாக நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு: இது ஏற்றுக் கொள்ளப்பட்ட பகிர்வினையா? திணிக்கப்பட்ட பகிர்வினையா? சிந்தனை எழுவதில்லை.

மனைவி வேலைக்கு சென்றால் தான் சம்பாதிப்பதிப்பதை விட அதிகம் பெறலாம் என்ற நிலை இருந்தால், தான் வீட்டிலிருந்து மனைவியை வேலைக்குச் செல்ல அனுமதிப்பார்களா?

சென்ற மாதம் முடிதிருத்துபவர் கூறியது: ”அடுத்த மாசம் பொண்ணுக்கு கல்யாணம். நல்லா படிக்க வச்சுட்டேன். வேலைக்கு அனுப்பறதும் அனுப்பாத்தும் அவங்க விருப்பம்” நன்கு படித்து முடித்த பல இளம் பெண்களின் வாழ்க்கை இன்று வரதட்சணை வாங்கி வங்கி இருப்பை உயர்த்திக் கொள்ள சந்தர்ப்பம் தேடும் ஆண்களின் கையில் சிக்கி கொண்டுள்ளது.

இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தாகி விட்டது. இந்தியாவில் ஆள்வோருக்கு அது முழுமையாய் இருக்கிறது. ஆனால் பெண்களின் சுதந்திரத்திற்கான போராட்டம் இன்னும் முடியவில்லை. இப்போராட்டம் பல வெற்றிகளை கண்டுள்ளது. ஆனால் அதுவே போதுமென்று ஓய்வெடுக்கலாகாது. இந்தப் போராட்டத்தில் ஆண்களும் இணையும் போது தான் கிடைக்கும் சுதந்திரம் முழு சுதந்திரமாக இருக்கும்.

Related Posts