அரசியல்

சுதந்திர தினத்தில் முன் நிற்கும் ஒரு கேள்வி !

தேசம் 68 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகும் நிலையில் சுதந்திரத்தைப் பற்றி சில புரிதல்களை, பள்ளிகளில் சொல்லித் தரப்படும் பாடங்களில் இருந்து மட்டும் வரலாற்றை அறிந்து கொண்டுள்ள நம் நண்பர்களின் முன்வைப்பது பொறுத்தமானதாக இருக்குமென்று கருதுகிறேன்.

இந்தியாவிற்கு வியாபாரம் செய்வதற்காக வந்த ஆங்கிலேயர்கள் தங்களின் மிதமிஞ்சிய லாப வெறியால் படிப்படியாக உள்நாட்டு விவகாரங்களிலும், யுத்தங்களிலும் ஈடுபட்டு நகரங்களைப் பிடிப்பதிலும் இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இங்கு விற்பதற்காக உள்நாட்டுச் சந்தைக் கட்டமைப்புகளை அழித்து தங்களுக்கு ஏதுவானவற்றை அமைப்பதையும், இங்கு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை தங்கள் நாட்டில் விற்று அதிக லாபமீட்டுவதையுமே முழுவேலையாகக் கொண்டிருந்தனர்.

ஆங்கிலேயர்கள் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவில் கால் பதித்திருந்தாலும் கி.பி 1700’களுக்குப் பிறகுதான் வலுவான எதிர்ப்புகளைச் சந்திக்க ஆரம்பித்தனர்; கி.பி 1772’ இல் துவங்கிய பீகாரின் ”முண்டா” பழங்குடி மக்களின் போராட்டங்கள், கி.பி 1806’இல் நடந்த வேலூர்க் கோட்டை சிப்பாய்களின் கிளர்ச்சி, கி.பி 1857’இல் வட இந்தியா முழுமைக்கும் பரவிய சிப்பாய்க் கலகம், 1922’ல் நடைபெற்ற ஆந்திர மலைவாழ் மக்களின் ஆயுதப் போராட்டங்கள், 1928’இல் பகத்சிங் & மற்றும் அவரது தோழர்களால் தொடங்கப்பட்ட இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுச் சங்கம் முன்னெடுத்தப் போராட்டங்கள், 1930’இல் நடைபெற்ற சிட்டகாங் ஆயுதக் கிளர்ச்சி, 1946’ல் கம்யூனிஸ்டுக் கட்சியால் வழிநடத்தப்பட்ட புன்னப்புரா-வயலார் எழுச்சி மற்றும் 1940’ இல் கய்யூர் விவசாயிகள் போராட்டம், கதார் இயக்கம், கடற்படை வீரர்களின் எழுச்சி, போன்ற பெரும் போராட்டங்களின் பங்களிப்பின் காரணமாகவே இந்தியா சுதந்திரம் பெற்றது.

இந்திய விடுதலையில் மக்கள் போராட்டங்களின் பங்களிப்பை திட்டமிட்டு மறைத்து ஏதோ காந்தி மட்டும் வெள்ளைக்காரனோடு போராடி, கத்தியின்றி இரத்தமின்றி சுதந்திரம் வாங்கித் தந்ததாக நம் பள்ளிப் பாடங்களில் கற்றுத் தடுகின்றன. வரலாற்று அனுபவங்கள் மறைக்கப்பட்ட நிலையில் நம் இளைஞர் சமூகம் – சுதந்தரத்தை மற்றுமொரு கொண்டாட்டாமாக மாற்றியுள்ளது. சுதந்திரத்தின் வீரஞ்செறிந்த அனுபவங்களை மறந்து பேஸ்புக் புரொஃபைல் படங்களாக, சட்டையில் குத்திக் கொள்ளும் கொடிகளாக உருவகப்படுத்திக் கொள்வதிலும் நின்றுள்ளனர்.

ஆங்கிலேயரின் ஒடுக்குமுறையில் இருந்து தப்பிய இந்திய தேசம் இப்போது பெரும் முதலாளிகளின் உழைப்பு மற்றும் இயற்கைவளச் சுரண்டல்களாலும், சாதி மத வெறியர்களின் பிடியிலும் சிக்கித் தவிக்கிறது; இந்திய, அன்னிய பெரும் முதலாளிகளின் சுரண்டல்கள் ஆங்கிலேயர்களைக் காட்டிலும் படு மோசமான நிலைக்குச் சென்று நம் நாட்டை இழிவு நிலைக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளது.

ஒரு பக்கம் அத்தியாவசியப் பொருட்களின் விலை வானுயரத்திற்கு உயர்ந்திருக்கிறது; நாம் கடுமையாக உழைத்துச் சாக யாரோ சிலர் பங்குச் சந்தைச் சூதாட்டங்களில் தன் பாக்கெட்டை நிரப்பிடுவதும் நடக்கிறது. அமெரிக்க முதலாளிகள் பெட்ரோ டாலர்களால் தன் கஜானாவை நிரப்புவதற்காக நாம் தினமும் மாய்ந்து மாய்ந்து பெட்ரோல் அடிக்கிறோம்; சுற்றுப் புறத்திலிருந்து நம் வாழ்வியல் தேவைகளை நாம் பூர்த்தி செய்து வாழ்ந்தது எல்லாம் காணாமல் போய் எல்லாவற்றுக்கும் சந்தைகளையும், நிறுவனங்களையும் எதிர்பார்க்கிற நிலை இன்று உருவாயிருக்கிறது. கூலிக்கு உழைப்பதைத் தவிர வேறெதையும் அறிந்திராத, இந்திய மக்கள் பெரும் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளனர்.

இன்றைய நிலையில் இருந்து விடுபட்டு, மக்களை நேசிக்கும் இளம் சமுதாயத்தை உருவாக்குவதில்தான், நம் மெய்யான விடுதலை அடங்கியிருக்கிறது.

ஒரு மெய்யான இந்தியாவைக் கட்டமைக்க உழைக்கப் போகிறோமா? அல்லது சுதந்திர நாளில் கொடியைக் குத்திக் கொண்டு நாமும் சுதந்திரம் பெற்று விட்டதாக பெருமைபட்டுக் கொள்ளப் போகிறோமா?

இன்றைய தினம் நம் முன் நிற்கும் ஒரே கேள்வி?

Related Posts