அறிவியல்

கட்டற்ற மென்பொருள் – அறிமுகம்

கடந்த மூன்று தசாப்தங்களில் கணினித்துறை பிரமாண்ட வளர்ச்சியை எட்டியுள்ளது. அந்த கணினி தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி உலகையே உளவு பார்த்த கதையை நாம் அனைவரும் அறிவோம். இந்த நிலையில் நாம் அதிலுள்ள ஏகபோகம், ஏகபோகத்திற்கு எதிராக-மாற்றாக உள்ள சில கணினி தொழிநுட்பங்கள் மற்றும் தத்துவங்கள் பற்றி  தெரிந்து கொள்வோம்.

கணினித்  தொழில்நுட்பத்  துறையில் உள்ள ஏகபோகம்

கணினி என்று சொன்னதும் இதுவரை விண்டோஸ் (Windows) இயங்குதளம் (Operating System) ஒன்றே ஒன்று தான் இருக்கிறது என்று நமக்கு தெரிந்திருக்கும். சிலருக்கு மேக் (Mac) மற்றும் இதர தனியுரிம இயங்குதளங்களைத் தெரிந்திருக்கலாம். இதில் தவறொன்றும் நமதில்லை. ஏனென்றால், சந்தையில் நாம் எதை நுகர வேண்டும் என்று பெருநிறுவனங்களும் இணைய மற்றும் ஏனைய அனைத்து ஊடகங்களும் தானே தீர்மானிக்கின்றன.

பெரும்பாலானோர் பயன்படுத்துவதும் விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளங்களைத்தான். இந்த இயங்குதளங்களை நமது கணினியில் பதிப்புரிமைப்படி நிறுவிக் (Install) கொள்வதற்கும், மேலும் அதில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு துணை மென்பொருள்களுக்கும் ஒரு குறிப்பிட்ட விலை கொடுத்துதான் பயன்படுத்த முடியும். இதுபோக கணினியில் ஏற்படும் வைரஸ் தாக்குதல்களையும் திருடுகளையும் தடுக்க அதற்கென்று தனியாக நச்சு நிரல் தடுப்பி (Antivirus) நிறுவுவதற்கும் ஒரு குறிப்பிட்ட தொகை நாம் அளிக்க வேண்டும். ஆனால், நம்மில் பலர் இந்த இயங்குதளங்களைப் பயன்படுத்துவது எப்படி என்று பார்த்தால், பதிப்புரிமையை மீறிய திருட்டு நகல்களைத்தான் (Pirated Copies).

சுதந்திரத் தடைகள் ?!

ஒரு பொருளை நாம் வாங்கிவிட்டால் நாம் தானே அதற்கு அதிபதி. சரி நாம் விலை கொடுத்தே வாங்கினாலும் நம்மைத் தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியுமா என்றால், அனுமதி கிடையாது. நமக்கே அதில் நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. இந்த தனியுரிம மென்பொருட்களில் நாம் கற்றுக் கொள்வதற்கு தடை ஏற்படுத்தும் “சுதந்திரத் தடைகள் உள்ளன.

இறுதி பயனர் உரிம ஒப்பந்தம்

இறுதிப் பயனர் உரிம ஒப்பந்தம் (EULA–End User License Agreement) நம் சுதந்திரத்தைப் பறிக்கும். நாம் மென்பொருள்களை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை உள்ளடக்கியதே அது.

இறுதி பயனர் உரிம ஒப்பந்தத்தின் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அந்த இயங்குதள முறைமைகளை காசு கொடுத்து வாங்கிய நமக்கே கூட அதைப் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது.

ஏகபோகத்திற்கு எதிரான மாற்று

உலகின் அத்துனை கண்டுபிடிப்புக்களும் பலரின் உழைப்பால் விளைந்தது.. இப்படி பலரின் உழைப்பால் உருவாக்கப்பட்ட கணினி, இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்களின் பயனை எல்லோரும் பயன்படுத்துவது எப்படி என்கிற கேள்வி வரத்தான் செய்யும்? மாற்று என்ற ஒன்று எப்போதும் இருக்கத்தான் செய்யும். ஆனால், அவைகள் சாமானிய மக்களை சென்றடைவதில் நிறைய சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

அனைவரும் பயன்பெறும் வகையில் கணினிப் பயன்பாட்டில் ஒரு மாற்று உள்ளது. சுதந்திர அறிவுப் பரிமாற்றத்தை கட்டுபடுத்தும் தனியுரிம மென்பொருளுக்கு மாற்றாக கட்டற்ற மென்பொருட்கள் உள்ளது. இந்த மாற்றை உலகமுழுவதுமுள்ள எண்ணற்ற மாற்றம் விரும்பிகள் சேர்ந்து கூட்டுழைப்பினால் உருவாக்கியும் தொடர்ந்து மேம்படுத்தியும் வருகிறார்கள். அப்படிப்பட்ட மாற்று என்ன என்பதை காண்போம். அதற்கு முன்னால் அந்த மாற்று எப்படி பரிணாமம் அடைந்தது  என்பதைத் தெரிந்து கொள்வோம்.

1969-களின் இறுதியில் யுனிக்ஸ் என்ற தனியுரிம இயங்குதள முறைமை கென் தாம்சன், டென்னிஸ் ரிட்சி, டக்ளஸ் மேக்ள்ராய் மற்றும் ஜோ ஒச்சன்னா மூலம் அமெரிக்காவில் AT&T பெல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு 1971 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வணிக ரீதியான தனியுரிம இயங்குதள முறைமைகள் உருவாகத் தொடங்கின.

1970–1980 களில் ஆப்பிள் நிறுவனத்தின் மெக்கின்டோஸ் (இன்று மேக் (Mac)) அழைக்கப்படுகிறது) மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளங்கள் பயனர் இடைமுகம் (User Interface) மற்றும் கணக்கீட்டு முறைகளுடன் (Computing) மேம்படுத்தப்பட்டு வெளியானது. 1990 களில் கமெண்ட் லைனில் இதே இயங்குதள முறைமைகளின் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதே காலகட்டங்களில் இதைவிட மேலான, எல்லோரும் பயன்படுத்தக் கூடிய அளவில் கூட்டுழைப்பினால் தனியுரிம மென்பொருள்களுக்கு சரிநிகர் சமமாக வளர்ந்து வந்துள்ளது கட்டற்ற மென்பொருள். அது உருவான வரலாறையும் பார்ப்போம்.

குனு GNU/Linux

ரிச்சர்ட் ஸ்டால்மேன் கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையை (Free Software Foundation-FSF) நிறுவியவர்களில் ஒருவர். இவரைப் பற்றி இந்த இடத்தில் குறிப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது.

1970-களின் இறுதியிலும் 1980-களின் ஆரம்பத்திலும் யுனிக்ஸ் மற்றும் இதர எந்த மென்பொருளாகட்டும் இயங்குதளங்களாகட்டும் எதனுடைய நிரல் (அதாவது ஆங்கிலத்தில் Source Code)ஐ கற்றுக் கொள்வதற்கான உரிமை பயனாளருக்கு கொடுக்க்ப்படவில்லை. இன்று வரை தனியுரிம மென்பொருள்களுக்கு அந்த நிலைமைதான்.

Richard_Stallman_at_Pittsburgh_University

ரிச்சர்ட் ஸ்டால்மேன் எம்.ஐ.டி (MIT Massachusetts Institute of Technology) இல் பணிபுரியும் போது லேசர் பிரின்ட்டரில் சிறுகோளாறு ஏற்பட்டது. அதைச் சரிசெய்ய அவர் முற்படும்போது அந்த பிரின்ட்டருக்கு நிரல் (Source Code) தரப்படவில்லை. நிரல் இருந்தால் சரி செய்துவிடலாம் என்ற நிலையில் நிரல் கிடைக்காததால் அவரே ஒரு இயங்குதளத்தை நிறுவ முடிவு செய்தார்.

குனு (GNU), குனு யுனிக்ஸ் அல்ல (Gnu is Not Unix) என்பதே இதன் பொருளாகும். குனு திட்டம் கூட்டுழைப்புத் திட்டமாகும். இந்த திட்டத்தை ரிச்சர்ட் ஸ்டால்மேன் என்பவர் 27 செப்டம்பர் 1983 எம்ஐடி (MIT Massachusetts Institute of Technology) இல் அறிவித்தார். 1985 ஆம் ஆண்டில், ஸ்டால்மேன் குனு பிரகடனத்தை (GNU Manifesto) வெளியிட்டார். 1989 இல் பொது மக்கள் உரிம குனு (GNU General Public License (GNU GPL or GPL)) ஐ எழுதினார். 1990 இல் குனு செயல்திட்டம் ஏறத்தாழ நிறைவடையும் நிலையிலிருந்தது.

லினக்ஸ் அல்லது ஜிஎன்யு லினக்ஸ் (Linux (or GNU/Linux) இயங்குதளம்

Linus_Torvaldsகுனு திட்டத்தின் நோக்கம், ஒரு முழுமையான கட்டற்ற இயங்குதளத்தை உருவாக்குது தான். கருவைத் (kernel) தவிர இயங்குதளத்துக்கு தேவையான மற்ற அனைத்தும் உருவாக்கப்பட்டுவிட்டது. கருவை உருவாக்கும் பணி மட்டும் நிறைவடையவில்லை.1991 ஆம் ஆண்டு  லினஸ் டோர்வால்ட்ஸ் (Linus Torvalds) என்பவர் கருவை (Linux kernel) தனியாக உருவாக்கி வெளியிட்டார். ஆனால், அதை 1992 ஆம் ஆண்டுதான் பொது மக்கள் உரிம குனு பதிப்பு 0.12 ஆக  முதன் முதலில் வெளியிட முடிந்தது.

மேலே கூறப்பட்டதிலிருந்த ஒரு முடிவுக்கு வர முடிகிறதா. நாம் எதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்று. ஆம் கட்டற்ற மென்பொருளைப் பற்றி தான்.

கட்டற்ற மென்பொருள் (Free Software)!

GNU_white.svg

கட்டற்ற மென்பொருள் என்பது விலையைப் பற்றியதல்ல சுதந்திரத்தைப் பற்றியது. கட்டற்ற  மென்பொருள் (Free Software) என்பதில் உள்ள Free என்பது இலவசம் என்று பொருள் அல்ல, சுதந்திரத்தை (Freedom) குறிக்கும். இதை இலவசம் என்ற பொருளில் குறிப்பிடுவது கொச்சைப்படுத்தும் செயலாகும்.

கட்டற்ற மென்பொருளை பயன்படுத்துபவருக்கு கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரங்கள்:-

  1. இயக்குவதற்கு (To Run the Programme),
  2. நகலெடுக்க (Copy),
  3. பகிர்ந்தளிக்க (Share),
  4. கற்றுக் கொள்ள (Learn),
  5. மாற்ற / மேம்படுத்த (Change / Develop),
  6. மேம்படுத்தியதை பகிர்ந்து கொள்ள வேண்டும் (Sharing of modified source code).

ஒரு மென்பொருளை கட்டற்ற மென்பொருளாக கருதத் தேவையான அம்சங்கள்:-

GPLv3_Logo.svg

ஒரு மென்பொருளை கீழ்க்காணும் 4 கோட்பாடுகளைக் கொண்டு அது கட்டற்ற மென்பொருளா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கலாம்.

சுதந்திரம் 0:-

மென்பொருளின் நிரலினை இயக்கக் கூடிய சுதந்தரம் மற்றும் எந்தவிதப் பயன்பாட்டிற்கும் உபயோகப்படுத்த சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.

சுதந்திரம் 1:-

மென்பொருளின் நிரல் பணியாற்றும் விதத்தைக் கற்றுக் கொள்வதற்கும், தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளவும் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும்.

சுதந்திரம் 2:-

மென்பொருளை பகிர்ந்து கொள்வதற்கு எந்தவிதக் கட்டுப்பாடும் அற்ற சுதந்திரம் மற்றும் பிரதி எடுத்து விநியோகிப்பதற்கான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.

சுதந்திரம் 3:-

ஒட்டுமொத்த சமூகமும் பயனுற வேண்டி, மென்பொருளை மேம்படுத்திக் கொள்வதற்கும், மேம்படுத்திய மென்பொருளை பகிர்ந்து கொள்ளவும் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். மேம்படுத்திய மென்பொருளையும் அதன் நிரலையும் மீண்டும் கண்டிப்பாக கட்டற்ற மென்பொருளாக  பகிர வேண்டும்.

இச்சுதந்தரங்கள் அனைத்தையும் அடங்கிய மென்பொருள் கட்டற்ற மென்பொருள் ஆகும்.

வைரஸ் தாக்குதல்களிலிருந்து விடுதலை:

கட்டற்ற மென்பொருளை பயன்படுத்துவதால் கணினி பாதுகாப்பு மற்றும் வைரஸ் தாக்குதலுக்கு என்று தனியாக எந்த மென்பொருளும் நிறுவத்தேவையில்லை. அதற்கேற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கட்டற்ற மென்பொருள் மற்றும் இயங்குதளத்தை கீழ்க்காணும் இணையதளத்தில் தரவிறக்கிக் (Download) கொள்ளலாம்.

  1. Fedora
  2. BLAG Linux
  3. Ubuntu
  4. Linux Mint

மேலும், நாம் பயன்படுத்தும் இதர மென்பொருள்களையும் கீழ்க்காணும் இணையதளத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம்.

http://www.osalt.com/

நாம் புதியதாக மாறும் போது சில சிரமங்களையும் பயன்படுத்தும் விதமும் புதிதாக இருக்கும் என்பதால் பலர் கட்டற்ற மென்பொருளுக்கு மாறத் தயங்குகிறார்கள். நமக்கு ஏற்படும் அத்தனை சந்தேகங்களைத் தீர்க்கும் வடிவில் எப்படி அதை பயன்படுத்துவது நிறுவுவது என்ற அனைத்துத் தீர்வுகளை அடங்கிய காணொளி (videos) களும் இணையதளத்தில் காணக் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தி நாம் நம் சந்தேகங்களையும் எப்படிப் பயன்படுத்துவது என்றும் கற்றுக் கொள்ளலாம்.

கட்டற்ற மென்பொருளின் நோக்கம் தனியுரிம மென்பொருட்களின் (Proprietary Software Monopoly) ஏகபோகத்தை உடைப்பது என்பது தான்.

–      தொடரும்

Related Posts