இலக்கியம்

முதல் பெண்கள் – நிவேதிதா லூயிஸ்.

‘இந்தியாவில் வாழும் அனைத்துப் பெண்களையும் தனியாகப் பிரித்து ஒரு தேசத்தை நாம் கட்டமைப்பதாக வைத்துக்கொள்வோம். இதை, ‘இந்தியப் பெண்கள் குடியரசு’ என்போம். இந்த நாட்டில், 60 கோடி பேர் இருப்பார்கள். ஆண்களால் மோசமாக ஆளப்படும் இந்தியாவுக்கு அடுத்த, பெரிய தேசமாக அது திகழும். அந்தத் தேசத்தின் மனிதவள வளர்ச்சிக் குறியீடானது மியான்மர், ருவாண்டா முதலிய நாடுகளுக்கு இடையே மோசமான இடத்தைப் பெறும். அந்தத் தேசத்தில் பள்ளிக்குச் செல்லும் சராசரி வருடங்கள் அதிர்ச்சி தரும் அளவாக 3.2 வருடங்கள் என்கிற அளவிலேயே இருக்கும். இது, ஆப்ரிக்கத் தேசமான மொசாம்பிக்கின் மோசமான கல்விநிலையோடு போட்டியிடும் நாடாகக் காட்சியளிக்கும். தனிநபர் வருமானத்தை, விலைவாசி ஏற்றத்தை கணக்கில்கொண்டு கணக்கிட்டால்… இந்த இந்தியப் பெண்கள் நாட்டின் வருமானம், ஐவரி கோஸ்ட், பப்புவா நியூ கினியா முதலிய நாடுகளுக்கு இடையே தள்ளாடும். கடந்த 15வருடங்களில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மூன்று மடங்கு பெருகியும் பெண்களின் நிலை இவ்வளவு அவலத்துக்கு உரியதாக இருக்கிறது.

இந்தியப் பெண்களின் அளப்பரிய ஆற்றலை இந்த அளவுக்கு அடக்கி ஒடுக்காத நாடுகளின் எடுத்துக்காட்டுக்கு எங்கேயோ வெளிநாட்டைத் தேடவேண்டியதில்லை. வடக்கில் உள்ள மாநிலங்களைவிடத் தெற்கில் உள்ள மாநிலங்களில்… ஐ.நா சபையின் மனிதவளக் குறியீடு, பெண்களுக்கான அன்றாடச் சுதந்திரம் ஆகியவை மேம்பட்டே உள்ளன. எடுத்துக்காட்டாக, வடக்கில் பெரும்பாலான பெண்களுக்கு 18 வயதுக்குள் திருமணம் முடிக்கப்படுகிறது. தெற்கில் உள்ள சில மாநிலங்களில் 18 வயதுக்கு முன் திருமணம் செய்துவைக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை 15 சதவிகிதம் குறைவாக உள்ளது. இதைப்போலவே பெண்களின் கல்வியறிவு, வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் வடக்கைவிடத் தெற்கு வெகுவாக மேம்பட்டிருப்பதைக் காணமுடியும். (வடக்கில் வேலைக்குச் செல்லும் பெண்கள் 36 சதவிகிதம், தெற்கில், கிட்டத்தட்ட 50 சதவிகிதம்.) இத்தகைய முக்கியமான பொருளாதார, சமூக வேறுபாடுகளுக்குக் காரணமாக, மையமாக அமைவது எது?’ – சுனில் கில்னானி

பல்வேறு காரணங்களைப் பட்டியலிடலாம்.

நம்முடைய வரலாற்று நூல்கள், குறிப்பாகப் பாட நூல்கள் என்ன செய்கிறது என்றால் அதற்கான பெருமையைச் சீர்திருத்தவாதிகள் இடம் ஒப்படைக்கிறது. ஆண்கள் பெண்களை மீட்ட மீட்பர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். கிட்டத்தட்ட பெண்களுக்குப் பாவம் ஒன்றுமே தெரியாது. அவர்கள் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். ஒளி விளக்காய் ஆண்கள் வந்தார்கள் என்றே இந்தத் தேவதைக் கதைகள் அமைகின்றன. ஆண்கள் பெண் விடுதலைக்காகப் பாடுபடவில்லை என்று முற்றாக மறுக்கவில்லை. ஆனால், பெண்களின் இத்தகைய வளர்ச்சிக்கும், பாய்ச்சலுக்கும் ஆண்கள் மட்டும்தான் காரணமா என்று கேள்வி எழுப்பிக் கொள்ள வேண்டும். அந்த இடத்தில் தான் இந்த நிவேதிதா லூயிஸ் அவர்களுடைய “முதல் பெண்கள்” முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

பெண்களைப் பற்றிய வரலாற்றை எழுதுவது அத்தனை எளிதான காரியமில்லை. அதற்கான ஆவணங்கள், கோப்புகள், படைப்புகள் அரிதானவை. அப்படியே கிடைப்பதும் துண்டு துண்டாகவே இருக்கும். நிவேதிதாவின் முன்னுரை அந்த வலியை, இடைவெளிகளைச் சரியாகச் சுட்டிக்காட்டுகிறது. கமலா சத்தியநாதன் எனும் முதல் பெண் இதழாசிரியையின் எழுத்துகளின் வழியே அவருக்குப் பல வெளிச்சங்கள் கிடைக்கின்றன. அந்த முதல் பெண்களோடு வாழ்ந்தவர்களின் நினைவலைகள் ஓரளவிற்கு உதவுகின்றன. அதே வேளையில், அவர்களை வானத்தில் இருந்து குதித்தவர்களாக இந்நூல் கட்டமைக்கவில்லை. இதில் ஆண்வெறுப்பு இல்லை. அதே போல, கடினமான மொழி நடையோ, தேவையில்லாத ஒரு வரி கூட இல்லவே இல்லை. நாடகப்பாங்கான melodrama இல்லை. இத்தனைக்குப் பிறகும் இந்த நூல் அத்தனை கவர்ச்சி மிக்கதாக, பிரமிக்க வைப்பதாக, பெருமிதம் கொள்ள வைப்பதாக, நம் வரலாற்றை நாமே அறிய வைப்பதாக இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

இந்த நூலில் எத்தனை எத்தனை பெண்கள் அணிவகுக்கிறார்கள். மருத்துவர், தொல்லியல் ஆய்வாளர், பத்திரிகை ஆசிரியர், தாவரவியல் அறிஞர், வானியல் விஞ்ஞானி, நகைச்சுவை நடிகர், அரசியல் ஆளுமைகள் என்று பிரமிக்க வைக்கிறார்கள்.

இதில் வருகிற எந்தப் பெண்களின் வாழ்க்கையும் எளிதானதாக இருக்கவில்லை. அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதில் பங்களித்து இருக்கிறார்கள் – அம்மு சுவாமிநாதன் அவர்களைப் போல. அவரைப்பற்றிய கட்டுரையில் வருகிற அந்தக் குறிப்பு – அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியதில் முப்பது பெண்கள் பங்களித்து இருக்கிறார்கள் என்பது நாம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர்களைத் தொடர்ந்து ‘founding fathers’ என்று குறிப்பதை விட்டுவிட்டு ‘founding parents’ என்று குறிக்க வேண்டும் என்கிற தெளிவை உண்டு செய்கிறது.

சமூகச் சீர்திருத்தத்தில் பெண்கள் எவ்வளவு பரந்துபட்ட பார்வையும், வேகமும் கொண்டிருக்கிறார்கள் என்பதை அக்கம்மா, வை.மு.கோதைநாயகி அம்மாள், முத்துலட்சுமி ரெட்டி என்று பலரின் வாழ்க்கையும் இயல்பாக உணர வைக்கிறது. மிக இயல்பாகப் போய்க்கொண்டிருக்கும் எழுத்தில் சில கணங்கள் அப்படியே உறைய வைக்கின்றன. சத்தியவாணி முத்து நிறைமாத கர்ப்பிணியாக எத்தனையோ அரசியல் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றதும், சமீபத்தில் பிறந்திருந்த குழந்தையைச் சிறைக்கம்பிகளுக்கு இடையே கட்டிக்கொண்டே உறங்கியபடியே சிறைவாசம் அனுபவித்ததும் எப்படியெல்லாம் போராடி இருக்கிறார்கள் என வியக்க வைக்கிறது.

அறுவை சிகிச்சை கத்தியை கூடத் தொட விடாதவர்கள், பெண் பிள்ளையைப் படிக்க அனுமதிக்காதவர்கள், கல்விக் கூடங்களில் ஒதுக்கி வைத்தவர்கள், ஆறு முறை தொடர்ந்து தேர்வில் தோல்வியடைய வைக்க முயன்றவர்கள் என்று அத்தனையும் மீறி ஜெயித்திருக்கும் டி.எஸ். கனகாவின் வாழ்க்கையை எப்படித் துளி கூட அலட்டல் இல்லாமல் நிவேதிதாவால் எழுத முடிந்ததோ.

குடிமைப்பணி உனக்கு ஒத்து வராது என்று ஒதுக்கிய அதிகார பீடங்களையும், சட்டம் ஒழுங்கை பார்க்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய ராஜாஜியையும் தன்னுடைய செயல்திறத்தால், நிர்வாகத் திறமையால், அறிவால் அசத்திய அன்னா மேரி ராஜம் எனும் முதல் குடிமைப்பணி அதிகாரியின் வாழ்க்கை தரும் பாடம் ஒன்று தான். ‘போராடாமல் எதுவும் கிடைக்காது’. அவர் அதிகார பீடத்தின் உச்சதில் இருந்த போதும் கூட அவர் திருமண வாழ்க்கையை மேற்கொள்ள எத்தனை தடைகள் என்பதே அயர வைக்கிறது.

இந்தத் தொகுப்பின் நாயகிகள் உணர்ச்சிகள் அற்றவர்கள் இல்லை. அவர்கள் மரபை மீறும் ஆவேசம் மட்டுமே கொண்டவர்கள் அல்ல. அவர்கள் தங்களின் எல்லைகளுக்குள் சிறகசைத்து உச்சம் தொட்டவர்கள். அவர்களிடம் குழப்பங்கள் இருக்கின்றன. சிலர் காதல் வசப்படுகிறார்கள். தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.
பிரிவுகள் அவர்களை வாட்டுகின்றன. திடீரென்று அவர்களின் வரலாறு நின்று போகிறது.ஆயினும், அவர்களின் குரல் தனித்துவமானது. சமூக நீதி, சமத்துவத்தை நாடுவது. சௌந்திரம் ராமச்சந்திரனின் ஆலய நுழைவு போராட்டம், காந்திகிராமம் போல. பத்மினி ஜேசுதுரை UPSC-க்கே சமத்துவப்பாடம் எடுத்ததைப் போல.

இவர்களில் பசியோடும் அணிலோடு விளையாடும் ஜானகி அம்மாள் வருகிறார். வானை எளிதாகத் தொட்டுவிட்டு பூனைகளுக்கும், நாய்களுக்கும் கருணை சொரியும் உஷா சுந்தரம் நடமாடுகிறார். வரலாற்றின் இருட்டுகளின் இடையே ஆய்வு வெளிச்சத்தைப் பாய்ச்சி நாற்பது வயதிற்குள் மறைந்து போன கடம்பி மீனாட்சி பிரமிக்க வைக்கிறார்.

அடுப்பூதும் பெண்களுக்கு அரசியல் எதற்கு என உளறுபவர்களுக்குப் பதில் சொல்லும் அளவுக்கு முத்துலட்சுமி ரெட்டி, மீனாம்பாள் சிவராஜ், தாரா செரியன், ருக்மிணி லட்சுமிபதி என எத்தனை எத்தனை ஆளுமைகள். தெளிவும், துணிச்சலும் நிறைந்த போராட்டங்கள். இந்த நூலில் துருக்கியிலிருந்து இந்தியாவைத் தாய் மண்ணாக்கி கொண்ட பெண் கதீஜா யாகூப் ஹாசன் முதல் பல்வேறு மதங்கள், மொழிகள், சாதிகளைச் சேர்ந்த பெண்கள் வருகிறார்கள். அவர்கள் அந்தத் தளைகளைக் கடக்கிறார்கள். அவற்றின் எல்லைகளை மாற்றுகிறார்கள். எந்த ஆரவாரமும் இல்லாமல் இத்தனை ஆச்சரியங்களை அவர்கள் செய்கிறார்கள்.

இதனை ஒரு பெரும் ஆய்வு நிறுவனம், பல்கலைக்கழகம் தேடி தேடி அறிந்து நமக்குத் தெரிவித்திருக்க வேண்டும். அந்த அரும்பெரும் பணியை ஒற்றை ஆளாக, மூச்சு, ஆன்மா, தேடல் அத்தனையும் கொடுத்து நிகழ்த்தி இருக்கும் அக்கா நிவேதிதாவிற்கு அன்பும், வாழ்த்தும்.

மைத்ரி புக்ஸ்
பக்கங்கள்: 224
விலை: 200.

  • பூ.கொ.சரவணன்.

Related Posts