பிற

போர் இன்னும் முடியவில்லை …

freedom article maattru”தங்களிடம் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு விரோதம் இல்லை எனினும் எங்கள் தாயகத்தின் விடுதலைக்காக தங்களை கொலை செய்ய நேரிடுகிறது” இப்படி ஒரு கடிதம் எழுதி சாவிற்கு தயாராக இருங்கள் என்று அயர்லாந்து நாட்டு வைசிராயை எச்சரித்து பின் கொலை செய்தவர்கள் ஐரிஷ் புரட்சி வீரர்கள். படிக்கும் போதே சிலிர்த்துக் கொள்ளும் ஐரிஷ் புரட்சியாளர்களின் வீரத்திற்கு இணையான எத்தனையோ தீரர்களை பெற்றெடுத்த மண் இந்திய மண்.

முதல் தற்கொலை போராளி:

சிவகங்கை கோட்டையை கைப்பற்ற வாளும், வேலும் கொண்டே போராடிக் கொண்டிருந்த வேலுநாச்சியாரின் பெண்கள் படைகளுக்கு, வெள்ளையரின் ஆயுதங்கள் பெரும் சவாலாய் அமைந்தன. ஆயுத பலத்தைக் குறைக்காமல் வெற்றிக்கான சாத்தியம் குறைவு என்று உணர்ந்தவர்கள், இனி என்ன செய்வதென திகைத்த நின்ற போது, தன் உடல் முழுக்க நெய்யை ஊற்றிக் கொண்டு வெள்ளையரின் ஆயுத கிடங்கை நெருங்கி தனக்குத் தானே நெருப்பை பற்றவைத்து ஆயுத கிடங்கில் குதித்து வீர மரணமடைகிறாள் வேலுநாச்சியாரின் படைப்பிரிவில் இருந்த ஒரு பெண்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் குப்பைகளாய் மலங்களாய் தொட்டால் தீட்டு என்று தூர ஒதுக்கி வைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்திருந்தாலும், வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எல்லாச் சாதி, மத, மொழி, இன விடுதலைக்கும் அவள் உயிர் சமர்ப்பணமானது.

அவள் உலகின் முதல் தற்கொலைப் போராளி குயிலி. வேலுநாச்சியாரின் மெய்காப்பாளர் மற்றும் ”உடையாள்” பெண்கள் படைப்பிரிவின் தலைவியுமான குயிலி வெள்ளையரை நடுநடுங்க வைத்து தன்னை நெருப்புக்கு தீனி கொடுத்த போது அவளுக்கு வயது 18.

பிரித்தாளும் சூழ்ச்சியை எதிர்த்தவர்:

வங்கத்தை இரண்டாக பிரித்து இந்து-முஸ்லிம்  பிரிவினை சூழ்ச்சியை தொடங்கி வைத்த கர்ஸான் வில்லியை அவன் மண்ணிலேயே சுட்டுக்கொன்று தூக்கு மேடையேறிய மதன்லால் திங்கரா.

வெள்ளை அரசிடம் தன்னை விடுவித்து விடும் படி மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்திருக்காவிடில் இவரின் பெயர் இந்திய சுதந்திர வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த பெயர் வீர சாவர்க்கர். சுதந்திரப்போரில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு இங்கிலாந்திலிருந்து இந்தியா கொண்டு வரும் வழியில் 12 அங்குல கழிவறை கண்ணாடியை உடைத்து தன் 36 அங்குல உடலை நுழைத்து உடலெங்கும் ரத்தக்கீறல்களோடு கடல் நீரில் நீந்தி வெர்செயில்ஸ் துறைமுகத்தை அடைந்து மீண்டும் பிடிபட்டு அந்தமான் சிறையில் 12 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த ”அன்றைய இளைஞர்களின்” ஆதர்ஷ நாயகன் வீர சாவர்க்கர்.

தேவை புரட்சிகர வீரர்கள்:

சான்பிரான்ஸ்கோ நகரில் வெளியான ”கதர்” பத்திரிக்கையில் ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது

தேவை: புரட்சி செய்ய விருப்பமுள்ள வீரர்கள்

ஊதியம்: சாவு

பரிசு: வீரத்தியாகி பட்டம்

பென்ஷன்: இந்திய சுதந்திரம்

பணியாற்ற வேண்டிய இடம்: இந்தியா

படித்தாலே உடம்பின் மயிர்க்கால்கள் சில்லிட்டு எழுந்து நிற்கும் இந்த புரட்சிகரமான விளம்பரத்தை கதர் பத்திரிக்கையில் படித்து விண்ணப்பித்த இளைஞர்கள் பல ஆயிரம் பேர். பிழைப்பு தேடி ஹாங்காங்க், பர்மா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா சென்ற பல்வேறு இந்தியர்கள் இந்தியாவில் நடத்திய வீர சாகசங்களுக்கு இணையே இல்லை.

அந்த கதர் கட்சியின் ஒரு உறுப்பினர்தான் கர்த்தார் சிங் சரபா. இந்திய இளைஞர்களின் கனவுகளை திருடிக்கொண்ட புரட்சி வீரன் பகத்சிங்கின் ஆதர்ஷ நாயகன் கர்த்தார் சிங். துளியும் பயமறியாத, விடுதலை ஒன்றே லட்சியமாக கொண்ட புரட்சி வீரன் கர்த்தார் சிங்.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள்...

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள்…

வெள்ளையரின் ராணுவ முகாமுக்குள்ளேயே ஊடுருவி அங்கு பணியாற்றும் இந்திய வீரர்களை புரட்சிக்காக தயார்படுத்தியவன். இந்திய புரட்சி இயக்கத்தவரும் அமெரிக்கா கனடாவிலிருந்து திரும்பிய 4000 வீரர்களும் சேர்ந்து ஏககாலத்தில் புரட்சியை நடத்தி சுதந்திர இந்திய அரசை நிறுவ வேண்டும் என்ற கனவு துரோகியால் காட்டிக்கொடுக்கப்பட்டு கிள்ளி எறியப்பட்டு இரண்டாம் சுதந்திரப்போர் முடிவுக்கு வர தூக்கு மேடையேறிய 17 கதர் வீரர்களில் ஒருவன் கர்த்தார் சிங்.

1915 நவம்பர் 17-ம் நாள் தூக்கு மேடை முன் நின்று “ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்பு தரப்பட்டாலும் நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காகவே அர்ப்பணம் செய்வேன் – என்ற இந்த வார்த்தைகளை முழங்கிய போது அவனுக்கு வயது வெறும் 19. தூக்கு தண்டனை கைதிகளின் வரலாற்றில் 4 கிலோ எடை அதிகரித்து தன் தாய் நாட்டின் விடுதலைக்காக சாவை மகிழ்வுடன் ஏற்ற மாவீரன்.

ராஷ் பிஹாரி போஸ், சுசீந்திர சன்யால், உத்தம் சிங், சந்திரசேகர ஆசாத், பகத்சிங்க், ராஜகுரு, சுகதேவ், சிட்டகாங்க் வீராங்கனை கல்பனா தத், சுபாஸ் சந்திர போஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவ வீரர்கள், கப்பற்படை புரட்சி வீரர்கள் என பல்வேறு தன்னலமற்ற தலைவர்களின் குருதியில் நனைந்து ஏற்றப்பட்டது இந்திய சுதந்திர கொடி.

பிளாசிபோரில் வங்காளத்தை வென்ற பிரிட்டிஷார் இந்தியாவை கைப்பற்றி அடிமைப்படுத்தினார்கள் என்று வரலாறு பதிவிட்டாலும் 16ம் நூற்றாண்டில் வணிகத்திற்காக வந்தவர்கள் இந்திய மன்னர்களையும், ஜமீன்தார்களையும் அண்டிப்பிழைத்து மக்களை சாதி, மத, இன ரீதியாக பிரித்து சிறுக சிறுக இந்திய நிலப்பகுதிகளை கைப்பற்றினார்கள் என்பதே வரலாறு.

வெறும் 1 ½ லட்சம் வெள்ளையர்களை 30 கோடி மக்கள் சேர்ந்து கல்லால் அடித்தே துரத்தியிருக்க வேண்டியதை தவற விட்டதற்கான காரணம் நமக்குள் இருந்த பிரிவினைகள் சாதியாக, மதமாக, இனமாக, மொழியாக நாம் பிரிந்திருந்தது நம்மை அடிமைப்படுத்த ஏதுவாக அமைந்தது. 7786029044_70bb5438d0_c

இன்று மீண்டுமோர் சுதந்திரப்போர் தொடங்கியிருக்கிறது சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடாகவும், இயற்கை விவசாயத்தை பாழ்படுத்தும் விஷ உரங்களாகவும், தண்ணீரின் மீதான உரிமையை இழக்கும் தேசிய நீர் கொள்கையாகவும் தனியார்மய தாராளமய உலகமய கோட்பாடுகளாக மீண்டுமோர் அடிமை வாழ்க்கை கண்ணுக்கு தெரியாமல் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இனியும் விழித்துக்கொள்ளாவிட்டால் விளைவுகள் விபரீதமாகும் என்பதை உணர்ந்து களமிறங்கி போராட இந்த சுதந்திர தருணத்தில் உறுதியேற்போம்.

Related Posts