அறிவியல்

அடுத்த கட்டத்தில் ஃபெடோரா 21 !

கம்ப்யூட்டர் என்றால் அது விண்டோஸ் மட்டும்தான் என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், கணிணி அறிவியலை ஓரளவு அறிந்தவர்களுக்கு ஆப்பிள் கணிணியின் MAC (மேக்) பற்றி தெரிந்திருக்கும். மனிதன் மென்பொருள் அறிவைத் தொகுத்து அதனை ஒரு தொழிலாக நடத்தும் இத்தகைய தனியுரிமை இயங்குதளங்களுக்கு அப்பால், லினக்ஸ் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டு, உலகின் பல பகுதிகளில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. கணிணி மென்பொருள் அறிவு ஒரு தனி நிறுவனத்தின் விற்பனை உரிமை அல்ல, மாறாக அது மனித அறிவின் அடுத்த கட்ட வளர்ச்சி அது அனைவருக்கும் சொந்தமானது என்ற கோணத்திலேயே லினக்ஸ் இயங்குதளங்கள் உருவாக்கப்படுகின்றன.

பெடோரா (Fedora) என அறியப்படும் இயங்குதளம் (Operating System) ஒரு லினக்ஸ் (Linux Distribution) வழங்கல். இது ரெட் ஹாட் (Red Hat) குழுமத்தின் ஆதரவோடு தன்னார்வளர்களால் உருவாக்கப்படும் திட்டமாகும். எண்ணற்ற தன்னார்வலர்களால் இது மேம்படுத்தப்பட்டும், எண்ணற்ற பயனர்கள் பயன்படுத்தியும் வரக்கூடியதாகும்.

இந்த பெடோராவின் புதிய பதிப்புக்கள் (New Version) எப்போதும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளியாகும். ஆனால் இந்த ஆண்டில் புதிய பதிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இந்த ஆண்டில் முதல் மற்றும் ஒரே பதிப்பாக பெடோரா 21 வெளியாகிறது. ஏன் இவ்வளவு தாமதம்? என்ற கேள்வி பயனர்கள் தரப்பில் இருந்து வந்தது. அந்தக் காத்திருப்பு வீண்போகவில்லை. ஃபெடோரா 21 வது பதிப்பு பற்றி அறியவும் பயன்படுத்தவும் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில் பெடோரா அதிகாரப்பூர்வமாக நாளை (10.12.14) வெளியாகும் என்று அறிவிப்பு வந்துள்ளது. இது பயனர்கள் மற்றும் மேம்பாட்டாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அது இவ்வளவு ஆர்வத்தைத் தூண்டுவதற்கு அதன் புதிய மூன்று அவதாரங்களே (அதாவது மூன்று முக்கிய வசதிகள்) காரணங்களாக உள்ளன. அவற்றைக் காண்போம்…

அந்த 3 அவதாரங்கள் (வசதிகள்) 1. கிளவுடு (Cloud), 2. வொர்க்ஸ்டேஸன் (Workstation), 3.சர்வர் (Server) ஆகியவை.

ஃபெடோரா இயங்குதளத்தில் பயனர்கள் தங்கள் கணிணியில் ‘வொர்க்ஸ்டேசனை’ தரவிறக்கம் செய்து டெஸ்க்டாப் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் சில கூடுதல் பேக்கேஜ்களை இணைப்பதன் மூலம், அதனை சர்வராக மாற்றிக் கொள்ளவும் முடியும். சர்வரை மீண்டும் வொர்க்ஸ்டேசன் அதாவது சாதாரண பயன்பாட்டுக்கு மாற்றிக் கொள்ளவும் முடியும். அமேசான் கிளவுடு போன்றவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் கிளவுடு கணிணி வசதியும் இதில் உள்ளது.

ஏன் இத்தனை தாமதம்?

தற்போது பயன்பாட்டில் உள்ள பெரிய நிறுவனங்கள் கட்டற்ற மென்பொருட்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு கூகுலின் ஆன்ட்ராய்டு அலைபேசி இயங்குதளங்களை எடுத்துக் கொள்வோம். கூகிள் ஆன்ட்ராய்டின் வளர்ச்சிக்கும் பெடோராவின் தாமதத்திற்கும் தொடர்பு இருக்கிறது. கூகுல் (மைக்ரோசாப்ட்) தனது வன்பொருள் தயாரிப்புக் கருவிகளுக்கென்று ஆன்ட்ராய்டு போன்ற திறந்த மென்பொருட்களை உருவாக்கி வருகிறது. அந்த வன்பொருட்களில் மற்ற கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்த முடியாத அளவிற்கான வேலைகளையும் சேர்த்தே செய்து வருகின்றது. இந்த உருவாக்கத்தில் எண்ணற்ற புதிய பங்களிப்பாளர்களை தன்வசமாக்கிக் கொண்டுள்ளது. இதனால் புதிதாக வரும் பங்களிப்பாளர்கள் பெடோரா பக்கம் திரும்பாமல் போய்விடுகின்றனர். இது பெடோரா புதிய பதிப்பில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்களில் ஒன்று.

  • இதன் காரணமாக, அதிக வசதிகளை உள்ளடக்கிய புதிய பதிப்பை வெளியிடுவதற்கான நேரம் அதிகரிக்கிறது.

கட்டற்ற நிரல் மென்பொருட்களை கூடிய வேகத்தில் கொண்டுவருவதே பெடோரா குழுமத்தின் இலக்கு. அந்த லட்சியத்திற்கு அதிகமான பங்களிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஒட்டுமொத்த சமூகமும் பயன்படும் வகையில் உருவாக்குவதற்காக செயல்படும் இதுபோன்ற சமூகக் குழுக்களில் அதிகமான பங்களிப்பு தேவைப்படுகிறது. இதை அனைவரும் உணர வேண்டும். இது கணிணி அறிவியலை, அனைவருக்கும் சொந்தமானதாக மாற்றும்.

மேலும் பெடோராவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள Fedora official announcement (Fedora 21 Schedule)

Related Posts