அரசியல்

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 9

சொந்த ஊரை நோக்கி…

    எர்ணாகுளத்திலிருந்து ஊருக்குச் சென்றேன். விபாக் பிரச்சாரகர் வினோத் அண்ணன் கூறியபடி, கண்ணூர் விபாக் அலுவலகத்திற்கு வந்தேன். ஊரிலுள்ள நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதாக அவர் என்னிடம் கூறினார். ஊரில் சுயம் சேவகர்கள் நடத்திவந்த ஃபண்ட், சீட்டு போன்றவை முடங்கி விட்டதாகவும், தற்போது என்ன செய்வதென்று புரியாத நிலையிலிருப்பதாகவும் அவர் என்னிடம் கூறினார். சவினேஷ் என்ற சுயம் சேவகன் பேராவூரில் கணிணி மையம் துவங்கவும், அவனுடன் கொஞ்ச நாட்கள் இருந்து மையத்தை நடத்தவும் உதவ வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அத்துடன் ஊரிலுள்ள கணக்குகளை இருவரும் சேர்ந்து உன்னிப்பாக ஆய்வு செய்து இறுதிப்படுத்திய பிறகு, பணம் கொடுத்து கணக்கு தீர்க்கப்பட வேண்டியவர்கள், பணம் தர வேண்டியவர்கள் ஆகியோரின் பெயர், தொகை என்பது போன்ற விவரங்களைச் சரியாக பதிவு செய்து அறிக்கை தரவும் கேட்டுக்கொண்டார். பேராவூரில் “ஜோதிர்கமய” என்ற பெயரில் கணிணி மையம் ஆரம்பித்தோம். கணக்கு கேட்டு ஊருக்குச்சென்ற போது, “அதுபற்றி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை, நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம்” என்று மிரட்டும் தொனியில் கூறினார்கள். விபாக் பிரச்சாரகர் சொன்னதன் அடிப்படையிலேயே வந்திருப்பதாகக் கூறினேன். அதன் பிறகு ஃபண்ட், சீட்டு ஆகியவற்றின் கணக்குப் பதிவேட்டை சவினேஷின் கையில் ஒப்படைத்தார்கள். மறுநாள் இரவு நாங்கள் பதிவேட்டைத் திறந்து பார்த்தோம். வாங்கியது மட்டுமே அதிலிருந்தது. கொடுத்த கணக்கு ஏதுமில்லை. ஃபண்ட், சீட்டு ஆகியவற்றைச் சேர்த்து மொத்தமாக 1.45 லட்ச ரூபாயின் கடன் சுமை இருந்தது. ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தவர்கள் மற்றும் சீட்டு கணக்கில் சேர்ந்தவர்களின் புகார் கடிதங்களுக்கு என்ன தீர்வு சொல்லுவது எனத் தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் போது, விபாக் பிரச்சாரக்கும் வல்சன் தில்லங்கேரியும் இருட்டி என்ற இடத்திற்கு வந்திருந்தனர். நிலைமை என்னவென்று அவர்களிடம் கூறினோம். வழக்குகள் நடத்துவதற்கும், மற்ற செலவுகளுக்குமாக சங்கம் பெரிய அளவில், லட்சக்கணக்கான தொகையை செலவு செய்து வருகிறதென்றும், இத்தகைய தான்தோன்றித்தனங்களுக்கு உடந்தையாக முடியாதென்றும் அவர்கள் பதிலளித்தார்கள். இதற்கு என்ன தான் தீர்வு என வல்சன் அண்ணன் என்னிடம் கேட்டார். ஊரில் இப்போது செங்கல் சூளை நடத்துவது நல்ல லாபகரமானது என்றும், தம்புரானுக்கு சொந்தமான இடத்தில், சிறிய தொகையை வாடகையாகக் கொடுத்தால் செங்கல் சூளை நடத்தமுடியும் என்றும், இதிலிருந்து வரும் லாபத்தைக் கொண்டு சீக்கிரமே பணம் கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து விடலாம் என்றும் கூறினேன். சரி பார்க்கலாம் என்று கூறி அவர்கள் போனார்கள். நான் கூறிய ஆலோசனையின் பேரில் ஒரு செங்கல் சூளையை துவக்கி புருஷு அண்ணனிடம் ஒப்படைக்கவும் செய்தோம். சூளை நல்ல லாபத்தில் தான் நடந்தது. தரமான செங்கல், தினமும் நல்ல வருமானமும் வந்தது. பலருக்கும் கொடுக்க வேண்டிய பணத்தைத் திருப்பிக்கொடுத்தோம். பின்னர் இந்த வியாபாரத்தின் தன்மை மாறியதோடு, அது சங்கத்திற்கு ஒரு தலைவலியாகவும் மாறியது. சுயம் சேவகர்கள் கூட்டம் படிப்பகத்தில் நடந்தது. விபாக் பிராச்சாரக் வருவதாக ஒத்துக்கொள்ளவும் செய்தார். காலையில் என்னிடம் கணக்கு பார்க்கும் வேலையையும் ஒப்படைத்தார்கள். புருஷு அண்ணன் கணக்கு எழுதிய விதத்தைப் பார்த்த எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒன்றரை மாதத்தின் கணக்கு வழக்குகள் மிகவும் தெளிவாக இருந்தது. அதன் பிறகு, ராஜன் வந்தார் ………….. வாங்கினார், தாசன் வந்தார் ……………. வாங்கினார். எவ்வளவு வாங்கினார் என்று குறிப்பிடப்படவில்லை. எல்லாமே டேஷ் தான். டேஷ்+டேஷ் = பெரிய டேஷ். புருஷு அண்ணனிடம், இது என்ன டேஷ் என்று கேட்ட போது, அது பற்றி தாசன் அண்ணனிடம் தான் கேட்க வேண்டுமென்று கூறினார். மடப்புரை கட்டிட நிதிக் கணக்கிலும் இதே டேஷ் கணக்கு தான் சங்கத்திற்கு  வில்லனாகியதென்று புருஷு அண்ணன் கூறினார்.

     ஹெட்கேவார் நினைவகம் கட்டுவதற்கு சங்கம் 4 லட்சம் வசூல் செய்தது தெரிய வந்தது. அங்கேயும், இறுதியில் கணக்கு கேட்ட போது, பதில் டேஷாகத் தான் இருந்தது என்றும், இந்த காரணத்தால் தான் சுகுமாரன் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்தார் என்றும் கூறினார். சுகுமாரன் கட்டிடம் கட்டுவதற்கான குழுவில் பொருளாளராக இருந்தார். இவரை பயமுறுத்தி ஏராளமான பணத்தை தாசன், ராஜன் ஆகியோர் வாங்கியிருந்தார்கள். கட்டிடம் காட்டியதற்கான கணக்கை சமர்பிக்க சுகுமாரனிடம் சங்கம் கூறியது. அன்றிரவு சுகுமாரன் தற்கொலை செய்தார். ரயில் தலை மீது ஏறி தலை சிதறிய நிலையிலேயே உடல் காணப்பட்டது. இந்த டேஷை, விபாக் காரியவாக் இடம் காண்பித்தேன். இப்பொழுதெல்லாம் பல இடங்களிலும் பொருளாதார மோசடி அமைப்புக்குள் இயல்பானதாகி விட்டதாகவும், பனூரிலும், தலசேரியிலும் உள்ள அவலநிலைக்கு காரணம் இந்த டேஷ் தானென்றும் கூறினார். நாங்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கினோம். அந்த பைடக்கில்(கூட்டம்) அவர் மௌனமாக இருந்தார். பிரச்சனையைக் கிளப்ப யாரும் தைரியம் கொள்ளவில்லை. யாரும் ஃபண்ட் திட்டத்திலோ, சீட்டிலோ கலந்துகொள்ளவில்லை என்று கருதி, அமைப்பை பலப்படுத்த செயல்படவேண்டும் என்ற வேண்டுகோளுடன் கூட்டம் நிறைவு பெற்றது. கிடைக்க வேண்டியவர்களுக்கு…………கிடைத்தது. லாபம் கிட்டியவர்களுக்கு…………….கிடைத்தது.

அஸ்வினி குமாரின் கொலை 

   நான் பேராவூரில் கணிணி மையத்தில் செயலாற்றிக்கொண்டிருந்த நேரத்தில் தான் அஸ்வினி குமார் கொலை செய்யப்பட்டார். விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாநிலத் தலைவர், சிறந்த ஆன்மீகப் பேச்சாளர், பகவத்கீதை, பிரச்சாரகர் என்றெல்லாம் பன்முகத் திறமை பெற்ற பிரபலாமான தலைவர் தான் அஸ்வினி குமார். சாதாரண மனிதராக வாழ்ந்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராவார். அவரை என்.டி.எஃப் தீவிரவாதிகள் பேருந்திலிருந்து இறக்கி வெட்டிக் கொலை செய்தனர்.  பத்தாயிரம் ஊழியர்கள் அந்தத் துக்கச் செய்தியை அறிந்து ஒன்றாகத் திரண்டார்கள். எதிர்ப்புகள் பல இடங்களிலும் தீயாகப் பரவியது. பல கடைகளும் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. தலைவரின் மறைவால் ஏற்பட்ட துக்கம்  எதிர்ப்பின் தீக்கனலாக மாறியது. சுரேஷ் ராஜ் புரோகித் என்ற காவல்த்துறை கண்காணிப்பாளரின் நேரடியான கட்டுப்பாட்டில் மாவட்டத்திலுள்ள எல்லா காவலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள். இறுதிச் சடங்கில் பங்கேற்க நானும் சென்றேன். முஸ்லீமுக்கு சொந்தமானது என்று தோன்றிய எல்லா உடைமைகளும் எரிக்கப்பட்டன. பல முஸ்லிம் வீடுகளின் முன்னாலும் சுயம் சேவகர்கள் காவலாக நின்றார்கள். யாரும் உள்ளே செல்லக் கூடாதென்றும், தாக்குதல் நடத்தக் கூடாதென்றும் அறிவுறுத்திக் கொண்டிருந்தார்கள். புன்னாட்டிலுள்ள  ஜோஜ் அண்ணனிடம் விஷயம் குறித்து விசாரித்தேன். அஸ்வினியைக் கொன்றது முஸ்லிம்கள் அல்லவா, அப்படியிருக்க அவர்களின் வீடுகளுக்கு ஏன் காவல்  நிற்கிறீர்கள் என்று கேட்டேன். அதெல்லாம் விஷயம் இருக்கிறது என்று மட்டும் ஜோஜ் அண்ணன் பதிலளித்தார். அதன் அர்த்தம் அன்று எனக்கு புரியவில்லை. அவர்கள் காவல்  நின்ற வீடுகளில் யாருமே இல்லை என்றும், அந்த வீட்டிலிருந்தவர்கள் எல்லாம் தப்பி ஓடியிருந்தார்கள் என்றும், யார் பாதுகாவலர்களாக நின்றார்களோ, அவர்களே காவல்துறையினர் போன பிறகு எல்லா வீடுகளையும் கொள்ளையடித்ததும் எனக்கு பின்னர் புரிந்தது. மோட்டார், பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி, இஸ்திரிப் பெட்டி, தங்க நகைகள், பணம், டார்ச் லைட், நாற்காலி என அனைத்தும் கொள்ளையடிக்கப் பட்டன என்பதே உண்மை. எனக்கு இந்த உண்மை புரிய இரண்டு வருடங்கள் ஆனது. அந்த இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் நான் மீண்டும் எர்ணாகுளத்திற்கு சென்றேன்.

துவிதிய சங்க சிக்ஷா வரக்:

    அன்றைய பிராந்திய பிரச்சாரக் ஆக இருந்த சேது அண்ணனின் பரிந்துரையில் சக பிராந்திய பிரச்சாரக் கோபால கிருஷ்ணன் அண்ணனின் வேண்டுகோளுக்கு இணங்க எர்ணாகுளம் மாவட்டத்திலிருந்து பயிற்சியாளராக துவித்ய சங்க சிக்ஷா வர்க் என்னும் பயிற்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. திருச்சூர் சேர்ப்பில் என்னும் இடத்திலுள்ள சி.என்.என் பள்ளியில் 28 நாட்கள் பயிற்சி நடந்தது. ஒரு சுயம் சேவகனைப் பொறுத்த வரையில் மிகவும் அதிர்ஷ்டமென நினைக்கத் தகுந்த பயிற்சிக்கு செல்கிறோம் என்ற மகிழ்ச்சியை நான் அடைந்த   நிமிடங்கள். மிகக்குறைவானவர்களுக்கே இந்த பயிற்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். அவ்வாறு, எனக்கு துவிதிய சங்க சிக்ஷா வர்க் பயிற்சியில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. சேர்ப்பில் பயிற்சியும் துவங்கியது.  பிரதம சங்க சிக்ஷா வர்க் பயிற்சியைப் போலவே தான், ஆனால் இன்னும் கொஞ்சம் அதிகமான விஷயங்கள் துவிதிய சங்க சிக்ஷா வர்க் பயிற்சியில் இருக்கும். ஒவ்வொரு துறைகள் வாரியாக வகைப்படுத்தி வைத்திருப்பார்கள். அதன் அடிப்படையில் தங்களுக்குப் பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

நியுத்த:

    பதவின்னியாஸ்:   ஒவ்வொரு யுத்த முறை பயிற்சிக்கும் உபயோகிக்கும் கால் அசைவுகள்.

    தண்டாயுத்தா:      தண்டாவினால் செய்யும் யுத்தமுறை.

என்பனவாக விஷயங்கள் வரிசைப் படுத்தப்பட்டிருந்தது. நான் பதவின்னியாஸ் பயிற்சியைத் தேர்ந்தெடுத்தேன். மற்ற விஷயங்களைப் பற்றியும் சிறிது கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். இந்த வகுப்பில் புவியியல் ரீதியாக ஒவ்வொரு பகுதியைப் பற்றிய விவரங்கள், மற்ற மதங்களின் அத்துமீறல்கள், கம்யூனிஸ்டுகளின் பரவல் என்பவைகள் வரைபடங்கள் மூலம் காண்பித்துத் தரப்படும். இந்தியாவின் பிரதான நகரங்கள், புண்ணிய தலங்கள், போன்ற இடங்களில் மற்ற மதக்காரர்களின் அத்துமீறல்கள், சங்கத்தின் பலம், போன்றவைகளையும் காட்சிப்படுத்தி விளக்குவார்கள். அகண்ட பாரதம், புண்ணிய நகரங்களில் உள்ள சிறப்புகள், அரசியல் பார்வைகள், ஹிந்து சீர்திருத்தத்திற்கு நாம் என்னென்ன வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும், காந்திஜியின் இந்து எதிர்ப்பு, ஏ.கே.ஜியின் மார்க்சிய, இந்துத்துவா பார்வை போன்றவை பயிற்சியில் உண்டு. சங்க பொறுப்பாளர்களாக ஆவதற்கான தெளிவான பார்வை இங்கிருந்து கிடைக்கும்.  கேரளத்தில் இந்துக்கள் மற்ற மதத்தவரால் மிதித்து  வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள் என்றும், இந்துக்களை சிங்கங்கள் போலாக்கி, இந்த நாட்டை இந்துத்துவத்தின் மூலம் உணர்ந்தெழச் செய்ய அறைகூவல் விடுத்த உணர்சிகரமான சில கணங்களைப் பெற்றேன். இந்த பயிற்சியில் சர் சங் சாலக் பிரணாமம் செய்யப்படும். அன்றைய சர் சங் சாலக் பொறுப்பில் சுதர்சனன் இருந்தார். அவர் அந்த நிகழ்ச்சியில் நடுநாயகராக வீற்றிருந்தார். பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்த பிறகு சாலக்குடி பதஞ்சலி யோகா வித்யா பீடத்தில் செயல்பாட்டை தொடர வேண்டுமென சங்கம் என்னிடம் கேட்டுக் கொண்டது.

  பயிற்சி முடிந்தவுடன் அங்கேயே இருந்த பிராச்சாரகர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று பணியைத் துவங்கினேன்.

சாலக்குடி பதஞ்சலி யோகா வித்யா பீட்:

    சாலக்குடி அரசு மருதுவமனைக்கருகில் சங்கத்தின் செயல்பாடுகளுக்காக புத்தன் காட்டூர் லட்சுமிக்குட்டி என்பவர் தானமாக கொடுத்த 60 சென்ட் இடத்தில் தான் பதஞ்சலி யோகா வித்யா பீடம் அமைந்துள்ளது. சங்கத்தின் கவனிப்பின் கீழ் உள்ள ஜகத்குரு அறக்கட்டளை தான் இந்த அமைப்பை நடத்துகிறது. இங்கே பால சேவா கேத்திரம், யோகா வித்யா கேந்திரம் என்னும் இரு நிறுவனங்கள் உண்டு. இதில் யோகா வித்யா கேந்திரத்தில் மோகனன் என்ற பிரச்சாரகனும் பால விகாச கேந்திரத்தில் நானும் பொறுப்பாளர்களாக இருந்தோம். சங்கத்தின் இருஞ்ஞாலக்குடை மாவட்டத்தில், சாலக்குடி சங்க தாலூக்கில் “ஆசிரம சாகா” என்ற பெயரில் குழந்தைகள் சாகா இருந்தது.

பதஞ்சலி யோகா வித்யா பீட்:

   ஜகத்குரு அறக்கட்டளை தான் இதனை மேற்பார்வை செய்கிறது. அறக்கட்டளைக்கு வியாச வித்யா நிகேதன், என்ற பள்ளியும் (அன்று 4-ம் வகுப்பு வரை இருந்தது) ஜீவன் ரக்ஷா வேதி, விபத்தில் அகப்பட்டவர்களை காப்பற்றுவதற்கான ஆம்புலன்ஸ் என்பவற்றோடு யோகாவின் மூலமாக இந்துத்துவம் என்னும் செயல்திட்டத்தை  நடைமுறை படுத்துவதற்காகவும் தான் பதஞ்சலி யோகா வித்யா பீடம் உருவாக்கப்பட்டது. கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் யோகா ஆசிரியர்கள் ஆவதற்கு விருப்பமுள்ள சுயம் சேவகர்கள் பயிற்சிகளில் பங்கேற்பார்கள். மற்றவர்களும் பங்கேற்கலாம். கேசரி, ஜென்ம பூமி போன்ற பத்திரிகைகளில் இதைப்பற்றிய செய்திகள் வெளி வரும். பயிற்சி படிப்பு பூர்த்தி செய்தவர்களுக்கு கன்னியாகுமாரி விவேகானந்தா யோகா கேந்திரத்தின் சான்றிதழ் கொடுப்பார்கள். ராஜேஷ் என்பவர் தான் யோகாச்சரியார். அன்றைய தினம் அப்பகுதியின் தாலுகா பிரச்சாரக்கின் பெயரும் ராஜேஷ் என்பது தான். மாவட்டப் பிரச்சாரக் பொறுப்பில் ராஜன் அண்ணன் என்பவர் இருந்தார்.

விவேகானந்தா-பால விகாச கேந்திரம்:

   எனது பொறுப்புகள் மிகவும் கடினமானதாகும்.  அதிரப்பள்ளி வாழக்கல், மலக்கப்பாறை, அடிச்சித் தொட்டிலில் போன்ற ஆதிவாசிகள் வாழும் ஊர்களிலிருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் (1-ம் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்புகள் வரை) அங்கு உண்டு சாலக்குடி அரசு உயர் நிலைப் பள்ளியில் தான் பெரும்பாலானவர்கள் படித்து வந்தனர். இங்கு கல்வி உணவு, உடைகள் என்பனவற்றின் முழு பொறுப்பும் என்னுடையதாகும். எல்லா தினமும் தேசிய தினசரி பத்திரிகைகளில் வரும் மரண அறிவிப்பு பகுதியைப் படித்து, மாணவர்களைக் கொண்டு கடிதங்கள் எழுத வைப்பேன்.

    “நாங்கள் சாலக்குடி விவேகானந்தா பால விகாச கேந்திரத்தில் உள்ள ஆதிவாசி மாணவர்கள். பல ஊர்களிலிருந்தும், படிக்க வசதி இல்லாத சூழ்நிலையில் தான் நாங்கள் இந்த நிறுவனத்திற்கு  வந்துள்ளோம். தங்களது உறவினர் மரணமடைந்ததில் வருந்துகிறோம். தங்களது துக்கத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம். அதுபோலவே மரணத்தைத் தொடர்ந்து நடக்கும் சடங்குகளில் கலந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம். வெளியூர்களுக்கு பயணம் செய்வதில் எங்களுக்கு சிரமம் உள்ளது. அதனால் தாங்கள் எங்களுக்கு அன்னதானமளித்து, மரணமடைந்த தங்கள் உறவினரின் ஆத்மா மோட்சமடைய பங்களிப்பை செலுத்தலாம்.” இவ்வாறு ஒருநாள் 100 கடிதங்கள் அஞ்சல் செய்வோம். ஒரு மாதத்தில் 2500 கடிதங்கள் வரை அனுப்புவோம். இதில் 60 பேராவது, குறைந்தபட்சம் 1000 ரூபாய் வங்கி மூலம் அனுப்புவார்கள். ஒரு மாதத்தில் ஆகும் செலவில் 30,000 ரூபாய் வரை இப்படித்தான் சமாளிப்பேன். கொஞ்சம் நாட்களுக்குப் பிறகு பிரான்சிலிருந்து ஒரு குடும்பத்தினர் தற்செயலாக எங்கள் பள்ளிக்கு வந்தனர். மலையாளி சுற்றுலா வழிகாட்டியான ராஜசேகரன் தான் அவர்களை அழைத்து வந்தார். சுற்றுலா வழிகாட்டிகளிலும் சங்க பிரச்சாரகர்கள் உண்டு என்ற விபரம் அப்போது தான் எனக்கு தெரிய வந்தது. அவர் அப்பகுதியிலுள்ள இந்துசபையின் உறுப்பினராவார். ஜீவகாருண்ய செயல்பாடுகள் தான் அந்த அமைப்பின் லட்சியம். அந்த வேளையில் அறக்கட்டளை தலைவர் பத்மநாப சுவாமியும் வந்திருந்தார். மாணவர்கள் ஒவ்வொருவரின் பரிதாபகரமான நிலையை வீடியோ படமாக எடுத்து அனுப்பினால் 25 லட்சம் வரையிலும் நனகொடையாகத் தரமுடியும் என்று அந்த வெளிநாட்டினர் கூறினார்கள்.  அதற்காக அட்டப்பாடியில், ஒரு சினிமா செட் போன்று மூங்கில்களால் 40 வீடுகள்(முள்ளி என்னும் ஊரில்) உருவாக்கினோம். குடிநீர் இல்லாத, வாகனப் போக்குவரத்து வசதியற்ற இப்பகுதியில், வாழ்க்கை மிகவும் சிரமம் வாய்ந்தது என்று நம்ப வைத்து ஏமாற்றுவதற்குத் தான் இந்த ஏற்பாடு.  அட்டப்பாடி பகுதியிலுள்ள தாய் தந்தையரை, நோயாளிகளை எல்லாம் பணம் கொடுத்து அழைத்து வந்தோம். நம்முடைய பால விகாச கேந்திரத்திலுள்ள மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தான் இவர்கள் என்று நம்ப வைத்தோம். ஒரு திரைப்படம் போல, யார் பார்த்தாலும் அழுது விடும் அளவுக்கு கதை, திரைக்கதை எழுதி படப்பிடிப்பு நடத்தினோம். படத்தொகுப்பு செய்து ஒரு சி.டி யாக மாற்றி அவர்களுக்கு அனுப்பி வைத்தோம். 1.5 லட்சம் செலவானது. மூன்று மாதங்களுக்குப் பிறகு 30 லட்சம் ரூபாயும் ஒரு கடிதமும் வந்ததாக ஹரி அண்ணன் கூறி, தெரிந்து கொண்டேன். பத்து குழுக்கள் (வேறு வேறு நபர்கள்) இந்த பணத்தை அனுப்பியிருந்தார்கள். “40 வீடுகளுக்கு அடிப்படை வசதி செய்து கொடுப்பதற்காக இந்த பணம் அனுப்பப்பட்டுள்ளது”, என்பது தான் கடிதத்தின் சுருக்கம். வித்யா பீட கட்டுமான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டது. இந்த சி.டி வேறு பல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டது. பதில் வரும் வேளையில் நான் அந்த பொறுப்பிலிருந்து விலகியிருந்தேன். அந்த வரவு செலவு கணக்குகள் எங்கேயென்று எனக்கு தெரியாது. அந்த கல்வி நிலையத்தில் தான் வேத கணித வகுப்புகள் நடத்தி வந்தேன். பேராசிரியர். சாவித்திரி லட்சுமணன்(சட்டமன்ற உறுப்பினர்) தான் துவங்கி வைத்தார். ஒரு வருடத்திற்கு பிறகு நான் அங்கிருந்து அட்டப்பாடிக்கு மாற்றப்பட்டேன்.

   அட்டப்பாடிக்கு போகும் முன்பு நான் சொந்த ஊருக்கு வந்தேன். ஊரில் கலவர சூழ்நிலை நிலவியதால் தலசேரி அலுவலகத்தில் தான் தங்கியிருந்தேன். அங்கு வைத்து ஏற்பட்ட ஒரு அறிமுகம் மூலமாக, இருட்டியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றேன்.(ஒய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரிக்கு சொந்தமானது). அவரது மகளுக்கு கணக்கு வகுப்பு எடுக்க வீட்டு மாடியின் வராண்டாவில் நின்று கொண்டிருக்கும் போது, சேர்ந்தார் போல் இரண்டு கார்கள், அந்த வீட்டுக்கு வந்தது. முதலாவது காரில், வல்சன் ஜி, சங்கரன் ஜி, பிரஷாந்த் ஜி, வினோத் ஜி ஆகியோரும் இரண்டாவது காரில் ஓட்டுனர் மற்றும் வெள்ளைத் தொப்பியுடன் தாடி வைத்த வேறொருவரும் வந்தார்கள்.  எல்லோரும் வீட்டுக்குள் சென்று விவாதித்து முடித்தவுடன் வெள்ளைத் தொப்பி அணிந்திருந்த நபர் காரிலேறி சென்று விட்டார். பிறகு மேலே இருந்த என்னை கீழே அழைத்துவரச் செய்தனர். வல்சன் ஜி என்னிடம் பேசத் தயங்கினார். “சுதீஷ் ஜி வணக்கம். எப்போது வந்தீர்கள்?” நான் சிறிது நேரம் முன்னர் வந்ததாக பதிலளித்தேன். பின்னர் அந்த நிகழ்ச்சி என்னவென்று விளக்கிப் புரியவைத்தார். அஸ்வினியின் கொலை மற்றும் தொடர்ச்சியாக வந்த பிரச்சனைகளுக்கும் வழக்குகளுக்கும் பழிவாங்கும் செயல் போன்ற வேறொரு கலவரம் நடத்தாமல் இருப்பதற்கான ஒப்புதலை, ஆர்.எஸ்.எஸ் அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் கொடுத்துள்ளதாகவும், அதற்கு பிரதிபலனாக கிடைத்த, ஒரு பெட்டி நிறைய உள்ள பணத்தைக் காண்பித்தார். மாவட்டத்தில் அமைப்புக்கு மிகுந்த பொருளாதார நெருக்கடி உள்ளதாகவும், இதைத் தவிர வேறு வழியேதுமில்லை என்றும் கூறினார். அவர்கள் அன்றிரவு அங்கே தங்கிவிட்டு மறுநாள் காலையில் சங்கத்தின் சஹகார் பாரதி என்ற அமைப்பின் திருவனந்தபுரத்திலுள்ள வங்கி கணக்கில் சேர்ப்பதற்கு செல்வதாக கூறிப் புறப்பட்டனர். அவர்களுடன் நான் தலசேரி வரை வந்து, காரியாலயத்திற்கு திரும்பினேன். அங்கிருந்து இரஞ்சித் அண்ணனுடன் கண்ணூர் விபாக் காரியாலயத்திற்கு சென்றேன். அங்கிருந்து வினோத் ஜி, சதீஸ் அண்ணனும், இரஞ்சித் அண்ணன் ஆகியோருடன் மங்கலாபுரத்தை நோக்கி ரயிலில் பயணமானேன். மங்கலாபுரத்தை அடைந்ததும், அங்கே ஒரு அறை எடுத்துத் தங்கினோம். அப்போது தான் எதற்காக இங்கே வந்திருக்கிறோம் என்பதை நான் அறிந்து கொண்டேன். புன்னாடு கலவரத்தில் முஸ்லிம்களின் வீடுகளிலிருந்து கொள்ளையடித்த தங்க நகைகளும் பணமும் மங்கலாபுரத்திலுள்ள பிஜேபி வணிகரிடம் தான் கொடுத்திருந்தனர். அந்தப் பணம் வங்கியிருப்பில் பத்திரப்படுத்தப்பட்டிருந்தது. அவருக்காகத் தான் காத்திருப்பதாகக் கூறினார்கள். “பாலாழி கடைதல்” என்பது தர்மம் நிறைந்த செயல், ஆனால் அது அசுரர்களையும் இணைத்துக் கொண்டு தான் செய்யப்பட்டது. அதுபோலத் தான் இச்செயலும் என்று ஒரு பிரச்சாரகன் கூறினார். மீன்பிடிப்புத் துறையில், உள்ள இந்து மீனவர்களின் நிலை பற்றி எடுத்துச் சொன்னார்கள். மற்ற மதக்காரர்கள் அவர்களது மதத்தவருக்கு உதவிகள் செய்ய வரும் போது, இந்துக்களாகிய மீன்பிடித் தொழிலாளர்களின் துன்பத்தைப் போக்குவதற்கு நாம் மட்டுமே உள்ளோம். அரசின் பண உதவிகள் மற்ற மதத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்கும் அதே வேளையில் நமது சகோதரர்கள் துக்கத்திலாழ்ந்து போகும் நிலையே உள்ளது. இதற்கு ஒரு தீர்வை உருவாக்கவே நாம் இங்கே நின்று கொண்டிருக்கிறோம். 4 மீன்பிடிப் படகுகளும், 4 வலைகளும் இந்த பணத்தைப் பயன்படுத்தி வாங்க வேண்டுமென்று சங்கம் முடிவு செய்திருப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள். அப்போது கன்னட மொழி பேசும் சிலர் அங்கே வந்தார்கள். ஏதேதோ பேசிக்கொண்டார்கள். அன்று நாங்கள் அங்கே தங்கினோம். படகுகள் வாங்குவதற்கான முன்பணம் கொடுக்கப்பட்டு விட்டதாகக் கூறினார்கள். இரவு இரஞ்சித் அண்ணன் படகுத்துறைக்கு சென்றார். மிகத் தாமதமாகவே திரும்பி வந்தார். படகின் வடிவமைப்பு எவ்வாறு இருக்க வேண்டுமென்று முடிவெடுக்கப் போனதாகக் கூறினார். மறுநாள் காலையில் நாங்கள் கண்ணூருக்குத் திரும்பி வந்தோம். படகுகளை மங்கலாபுரத்திலிருந்து கடல்பாதை வழியாக தலசேரிக்குக் கொண்டுவந்து, பூஜை முடித்து கண்ணூரில் உள்ள அழிக்கால் துறைமுகத்தில் கொண்டு சேர்க்கவும் திட்டமிடப்பட்டது.

சுதீஷ் மின்னி

(தமிழில்: K.சதாசிவன்)

Related Posts