அரசியல்

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 8

மனதால் வெறுப்புற்ற முன்று உளவுப்பணிகள்:

     மாநிலமெங்கும் கணித ஆசிரியர் என்ற பெயரில் கிறிஸ்தவ முஸ்லிம் பிரிவினர் நடத்தும் கல்வி நிலையங்களில் எப்படியாவது நுழைந்து, அங்குள்ள இந்து மாணவர்களின் விபரங்களை சேகரித்து, அவர்களை இணைத்துக்கொண்டு லட்சுமி பூஜை, வித்யா கோபாலார்ச்சனை போன்ற போலி பூஜை சடங்குகளை ஏற்பாடு செய்து “நான் ஒரு ஹிந்து” என்ற உணர்வு உருவாக்கும் செயலபாடுகள் நடத்தியிருக்கிறேன் என்று குறிபிட்டிருந்தேன்  அல்லவா? ஆனால் அதைவிட  மனதை வேதனைப் படுத்திய, மிகக் கொடூரமான உளவுப் பணிகளைப் பற்றி தான் நான் இங்கே விவரிக்கப் போகிறேன்.

பிறவம் சின்மயா மிஷன் ஆசிரமத்தில்:

    கேரளம் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் “சின்மயா மிஷன்” அமைப்பு சங் பரிவாரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. கேரளத்தில் மட்டும் அவர்களால் இதைச் செய்ய முடியவில்லை. முற்றிலும் மதசார்பற்ற தன்மையோடு, சுதந்திர அமைப்பாகவே அது கேரளத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் தலைமையகம் பிறவத்தில் வெளிய நாடு என்னும் இடத்தில அமைந்துள்ளது. சுமார் 1 ஏக்கர் பரப்பில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில்  ஆசிரமம் அமைந்துள்ளது. அது தான் ஆதி சங்கரரின் பிறப்பிடம் என்பது நம்பிக்கை. அவரது அன்னையின் வீடு என்று நம்பப்படும் எட்டுகட்டு உள்ள மனை இங்குள்ளது. ஆதிசங்கரர் பிறந்ததாலேயே பிறவம் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. வேதநாடு என்ற பெயர் மருவியே வெளியத்து நாடானதாகவும் கூறப்படுகிறது. சுவாமி சின்மயானாந்தா தான் அந்த மனையை விலைக்கு வாங்கி  சின்மயா மிஷனின் தலைமையகமாக்கினார். ஆசிரமத்திற்கு ஏராளமான அயல்நாட்டவர்கள் வருவதுண்டு. இங்கு சங்கத்திற்கு தெளிவான செல்வாக்கை உருவாக்க உதவி மேலாளராக சஜித் என்ற சுயம் சேவகனை பரமேஸ்வர் ஜி தான் நியமித்தார். ஆசிரமத்திற்கு வரும் அயல் நாட்டவர்களிடம் சங்கம் நடத்துகின்ற சேவைப்பணிகளின் பகுதியாக, அனாதை இல்லங்கள், கல்வி நிலையங்கள் போன்றவைகளுக்கு அவர்களைத் தொடர்பு கொண்டு நிதியுதவி பெறும் ஏற்பாட்டைச் செய்ய எனக்கு அறிவுறுத்தப்பட்டது. நான் எனது தங்குமிடத்தை அங்கு மாற்றிக்கொண்டேன். கணிதம் பற்றிய புத்தகத்தை எழுதவென  பொய்யான காரணத்தைக்கூறி சங்கப் பிராச்சாரகரான ஜெயன் அண்ணனின் வேண்டுதலின் பேரில் சஜித் தான், அந்த ஆசிரமத்திலுள்ள “காளிதாஸ்” என்ற அறையில் என்னை தங்கவைத்தார்.  சுமார் ஒரு மாதம் நான் அங்கேயே தங்கி இருந்தேன். இதனைத் தொடர்ந்து, அங்கு வந்திருந்த ஏராளமான வெளிநாட்டினரிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாயின் பொருளாதார உதவி கிடைத்தது. அவர்களிடம் விளக்கி இவ்வளவு பணத்தையும் திரட்டியது ரிஷி அண்ணன் ஆவார். ஆசிரமத்தின் மேலாளர் இடதுசாரி சிந்தனை படைத்தவர் ஆவார்.  அவரை வெளியேற்றுவதற்கான வேலைகளை துல்லியமாகச் செய்தோம். நான் அங்கு தங்கியிருந்த வேளையில், கேரள அரசுப்பணியிலுள்ள வெவ்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்களின் கூட்டத்தை ரகசியமாக நடத்தினோம். மத்திய அரசுத் திட்டத்தை உள்ளடக்கி முடிந்தவரையிலும், அரசு சாரத தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை உருவாக்கவும், அதன்மூலம், சிறுபான்மையினருக்கு செல்வாக்கு மிகுந்த பகுதிகளையும் கம்யூனிஸ்ட் செல்வாக்கு மிகுந்த பகுதிகளையும் கைப்பற்ற முடியும் என்றும் அந்த கூட்டத்தில் வழிகாட்டப்பட்டது. டெல்லியிலுள்ள எல்லா மத்திய அரசு அலுவலகங்களிலும் உள்ள சுயம் சேவகர்களான அலுவலர்களின் பெயர், தொடர்பு எண் போன்ற விவரங்கள், அந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. சுயம் சேவகர்களின் தலைமையிலுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே திட்டப்பணிகளுக்கான அனுமதி வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இரண்டு தினங்கள் நடந்த இந்த பைடக்கிற்கு (கூட்டம்) “நிர்மிததந்து” என்று பெயரிடப்பட்டிருந்தது. இதுபோன்ற ஏராளமான போலி அமைப்புகளை உருவாக்கி பஞ்சாயத்துகள், மாநகராட்சிகள் போன்றவற்றில் ஆட்சி நிர்வாகங்களைப் பற்றிய ஆய்வு என்ற பெயரில் போலியாக ஏராளமான திட்டப்பணிகளைத் தயாரித்துத் தருவது சங் பரிவாரின் கட்டுப்பாட்டிலுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவர். நான் ஆசிரமத்தில் தங்கியிருந்த வேளையில் தான் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்தன. பிஜேபி-யை சேர்ந்த முரளிதரன் என்பவர், ஆசிரமத்தில் தங்குவதற்கான அனுமதி கேட்கப்பட்டது.  சஜித் கூறியபடி, போலிப் பெயரில் அவர் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். அன்றைய தினம் அவர் மற்றொரு திட்டத்தை என்னிடம் ஒப்படைத்தார்.

    ஆலுவா அத்வைத ஆசிரமத்தில் எப்படியாவது உள்நுழைந்து, அதனூடே நாம், சிவகிரியை (சமூக சீர்திருத்த நாயகரான ஸ்ரீ நாராயண குரு உருவாக்கிய, சிவாலயம், சாரதா மடம், மற்றும் ஸ்ரீ நாராயண குரு கல்விநிலயைங்கள் முதலானவை இங்குள்ளன. ஸ்ரீ நாராயண குருவின் சமாதியும் சிவகிரியில் உள்ளது) அடைதல் வேண்டுமென்றும், ஸ்ரீ நாராயணியருடன் இன்னும் நெருங்க வழிவகை செய்ய முயல வேண்டுமென்றும், அதற்காக செயல்பட வேண்டுமென்றும், என்னிடம் கூறினார். சிவகிரி மடத்தின் கீழுள்ள அமைப்புகளில், சங் பரிவாரின் ஊடுருவல் மிகவும் குறைவாகும். படிப்படியான செயல்பாடு மூலமாகத் தான் அங்கு செல்வாக்கை நிலைநாட்ட முடியும். அருந்ததிராயின் “காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்” என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அங்கே ஒரு விவாதத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும். சிறியதாக  அடியெடுத்து வைப்பதன் மூலம்தான் எந்தவொரு பெரிய பயணமும் துவங்கும் என்று முரளிதரன்ஜி கூறினார். “கணிதப் புத்தகம் எழுத வேண்டும் என்று கூறி அத்வைத ஆசிரமத்தில் நுழைய வேண்டும். அங்கே ரகசிய கேமரா உபயோகிக்க வேண்டும். ரகசிய கேமரா உபயோகிப்பதை நான் எதிர்த்தேன். எப்படியோ அத்வைத ஆசிரமத்தில் ஒருமாத காலம் முக்கிய விருந்தாளிகளுக்கான அறையில் தங்கியிருந்தேன். சிவகிரி மடத்திலும் ஏழு நாட்கள் தங்கியிருந்தேன். அங்குள்ள சாமியார் பற்றியும் அவர்களின் செயல்பாடு தொடர்பாகவும் சங்கத்திற்கு அறிக்கை எழுதி சமர்ப்பித்தேன். அத்வைத ஆசிரம உதவி மடாதிபதி என்னிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். அவரை மூணாறுக்கு அழைத்துச்சென்று தங்கள் பொறியில் அகப்பட வைக்க சங்கம் முடிவு செய்திருந்தது. அவர் என்னுடைய வார்த்தைகளின் மீது நம்பிக்கை வைத்து, ஆசிரமத்தின் வரவு செலவு கணக்கை என்னை வைத்து ஆய்வு செய்தார். ஏராளமான கூட்டங்களில் என்னை பங்கேற்கச் செய்தார். அந்த மகாத்மாவை நான் ஏமாற்றிக் கொண்டிருந்தேன் என்பதை, அவர் பின்னாளில் கண்டு பிடித்தார். அதனைத் தொடர்ந்து ஆசிரமத்திலிருந்து, நான் எர்ணாகுளத்திற்கு சென்றேன். எனது சவாலான அந்தப் பணி பெரிய வெற்றியடைந்ததாக ஜெயன் அண்ணன் என்னிடம் கூறினார். பல்வேறு மடங்கள் மற்றும் அவைகளின் அதிபதிகளையும், சுவாமிகளைப் பற்றிய குண சிறப்பியல்புகள், பலம்-பலவீனங்கள் ஆகியவற்றை புரிந்துகொள்வது சம்பந்தமாக அறிக்கை தயாரித்து சங்கத்திற்கு கொடுக்கவும் செய்தேன்.

ராணி பள்ளியில்… 

     என்னிடம் அளிக்கப்பட்ட மூன்றாவது பணி “ராணி பள்ளி”யிலாகும். ஒரு ஆசிரியராக நுழைந்து இடம் பிடிப்பது. அங்கு தங்கியிருந்த 300-க்கும் மேற்பட்ட வடஇந்திய குழந்தைகளின் பெயர் மற்றும் விலாசம் போன்ற விவரங்களைத் திரட்டி சங்கத்திற்கு கொடுக்க வேண்டும். அங்கே இலவசமாக கல்வி கற்பித்து சங்கத்தை பலப்படுத்துதல், பெண் குழந்தைகளை பல்வேறு அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் சேர்த்தல் போன்ற குறிக்கோள்களுடன் 9 மாதகாலம் நான் ராணி பள்ளியில் தங்கியிருந்தேன். அங்குள்ள பள்ளிகூட டயரியில் எனது பெயரும் இருந்தது. தங்குமிடமும் உணவும் இலவசமாகக் கிடைத்தது. சங்கம் கேட்டுக்கொண்டது போலவே எல்லா வடஇந்திய குழந்தைகளின் பெயர் மற்றும் விலாசங்களை சேகரித்துக் கொடுத்தேன். அதிலுள்ள பல பெண் குழந்தைகள் இன்றும் சங்கத்தின் ஊழியர்களாவர். அவர்களின் இன்றைய நிலைக்குக் காரணம் நான் தான் என்பதை எண்ணி மிகுந்த வேதனை கொள்கிறேன். மற்றவர்களின் அன்பு நிறைந்த மரியாதையை எப்படியாவது அடைவதன் மூலம், அவர்களை இடைவிடாது வஞ்சிக்கும் முறை எனக்குள் சொல்லமுடியாத அளவு மனத்துன்பத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற அனுபவங்களே ஆர்.எஸ்.எஸ் –சிலிருந்து விலகுவதற்கு, என்னைத் தூண்டிய காரணங்களாக அமைந்தன.

    கேரளத்தில் “சாணக்கியா” என்ற பெயரில் 900-க்கும் மேற்பட்ட பிராச்சாரகர்கள் இவ்விதத்தில் செயல்பட்டு வருகிறார்கள். கேரளத்தில் இது சங்கத்தின் பயிற்சிப் பிரிவாகும். ஏராளமான நிறுவனங்களையும், மரியாதைக்குரிய மகத்தான நபர்களையும், எண்ணிலடங்காத களங்கமற்ற குழந்தைகளையும் இத்தகைய உளவு பார்க்கும் வேலைகளால் வஞ்சித்துக் கொண்டிருக்கிறோம்  என்று எண்ணும் போது தீவிர சுய பச்சாதாபமும், குற்ற உணர்வும் என்னை கடுமையாக வேதனைக்கு உள்ளாக்குகின்றன.

   நேர்மையான செயல்பாடுகளுக்குப் பதிலாக வஞ்சனை, பொய் போன்ற முறைகளையே பெரும்பாலும் சங்கம் மேற்கொள்கிறது.

சுதீஷ் மின்னி

(தமிழில்: K.சதாசிவன்)

Related Posts