அரசியல்

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 7

சங் பரிவார் இயக்கங்கள்:

     சங் பரிவார் இயக்கங்களைப் பற்றி வித்தியாசமான சந்தேகங்கள் இன்று பொதுமக்கள் மத்தியிலும், சுயம் சேவகர்களுக்குள்ளும் உள்ளன. பிஜேபி -யும் ஆர்.எஸ்.எஸ் -ம் ஒன்றா? பிஜேபி -யை ஆர்.எஸ்.எஸ் கட்டுப் படுத்துகிறதா? என்பது போன்ற ஏராளமான சந்தேகங்கள் நிலவி வருகின்றன.

   ‘ராமானுஜ சரணி’ என்ற போலிப் பெயரிலுள்ள இயக்கத்தில் எனக்கு பொறுப்பளிக்கப் பட்டிருந்தது. இதுவும் ஒரு ஆர்.எஸ்.எஸ் சார்பு இயக்கமாகும். இது போன்று வெளிப்படையானதோ அல்லாததாகவோ ஏராளமான சங் பரிவார் இயக்கங்கள் உண்டு. பல்வேறு இடங்களில், பல பெயர்களிலும் உருவாக்கி நடத்தப்பட்டு வரும் அறக்கட்டளைகளும் இதில் உட்படும்.

சங் பரிவார் இயக்கங்கள் என்றால் என்ன? 

   ஒரே நதியிலுள்ள நீர் வெவ்வேறு கிளை நதி மூலமாக பாய்ந்து மீண்டும் ஓன்று சேரும்போது, அது ஒரு மகா பிரவாகமாக மாறுவது போல இந்து ராஷ்ட்ரம் என்ற இலட்சியத்திற்காக ஒன்றிணைந்த நாம், சிதறுண்டு வித்தியாசமான வடிவங்களிலும் வித்தியாசமான குணங்களிலும் சஞ்சரித்து, சேகரித்து வசப்படுத்தியது அனைத்தையும் ஒன்றாக மாற்றும் பொழுது தான், ஒரு மகா சக்தியாக இயக்கம் மாறும். கங்கை என்ற புண்ணிய நதியை இதற்கு உதாரணமாக சுட்டிக் கட்டுவார்கள்.சங்கத்திற்கும் சங் பரிவார் இயக்கத்திற்கும் இடையில் உள்ள உறவு என்ன என்பதற்கு இரண்டாவது சர் சங்க சாலக் குருஜி கோல்வல்கர், சங்கம் இராமன் என்றும், அதன் பரிவார் இயக்கங்கள் ஹனுமான் போல என்றும் கூறியுள்ளார். அதாவது இராமன் மனதில் எண்ணுவதை ஹனுமான் நடைமுறைபடுத்துவது போன்றது. இதற்கு மேல் மற்றுமொரு உதாரணத்தைக் கூறிவிட முடியாது. ஒவ்வொரு சங் பரிவார் இயக்கத்தையும் அகில பாரதீய காரியகாரி, பிராந்திய காரியகாரி ஆகியவர்கள் தீர்மானிக்கும் பிரச்சாரகர்கள் தான் கட்டுபடுத்துவார்கள். ஒவ்வொரு வருடம் கடந்து செல்லும் போதும் இதுபோன்ற பிராச்சாரகர்களை வழங்குவார்கள். அவ்வாறு வழங்கப்படும் ஒவ்வொரு பிராச்சாரகர்களையும், தனித்தனி கடிவாளங்கள் மூலம் கட்டுப்படுத்துகிறார்கள். நாக்பூரிலிருந்து இழுப்பதற்கேற்ப இவர்கள் செயல்படுவார்கள். உதாரணமாக ஸ்யாம் மாதவன் என்ற பிரச்சாரகனை இப்பொழுது தான் பிஜேபி-க்கு கொடுத்திருக்கிறார்கள். முன்னர் இவர் ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளராக இருந்தார்.

    ஒவ்வொரு மாநிலத்திலுள்ள பரிவார் இயக்கங்களும் வேறுபட்ட உருவ அடையாளங்களுடன் தான் செயல்படும். இதற்கு பாதையமைக்க தனிக்குழு கூட உள்ளது. இந்தத் தனிக்குழுவின் தலைமைப் பொறுப்புகளில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ்  அதிகாரிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் போன்றவர்கள் இருப்பார்கள். இவர்களது திட்டமிடலின் மூலம், ஒவ்வொரு சங் பரிவார் இயக்கங்களுடன், சங்கம் இணைந்து கூட்டம் நடத்தியே செயல்படுத்த வேண்டியவைகளைத் தீர்மானிக்கப்படுகின்றன. இத்தகைய கூட்டங்கள் ‘சமன்வய பைடக்’ என்று அழைக்கப்படுகின்றன.

     உண்மையான, இந்து கூட்டுக்குடும்பத்தின் மாதிரியாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ் -ன் இயக்க வடிவம் ஹிட்லர், முசோலினி ஆகியவர்களின் பாசிச இயக்கங்களை தழுவியதாகும் ஆகும். சங் பரிவார் கனவு காணும் அரசியல் அமைப்புச் சட்டம் என்பது, ஒரு மையப்படுத்தப்பட்ட அதிகாரத் தன்மை உடையதும் ஆகும்.

கேரளத்திலுள்ள சங் பரிவார் இயக்கங்கள்

1. மாணவர்கள் – ABVP (அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்

2. குழந்தைகள் – பாலகோகுலம் (சிறு குழந்தைகள் மத்தியில் இயக்கத்தை வளர்ப்பதற்காக)

    பாலகோகுலத்தில் துணை அமைப்பும் உள்ளது. அமிர்த பாரதி வித்யாபீடம்(சாந்தீபனி, பிரபோதனி முதலிய தேர்வுகள் நடத்துவது இந்த இயக்கமே ஆகும்) ஒவ்வொரு வருடமும் கொடுக்கப்படும் மயில்பீலி விருது இந்த இயக்கத்தால் வழங்கபடுவதே ஆகும். ஜனநாயக இயக்கங்களின் மூலமாக இந்துக்களை அணிதிரட்டும் நோக்கத்தில் தான் பிஜேபி -யின் செயல்பாடு துவங்கப்பட்டது. இதற்கு யுவமோர்ச்சா (இளைஞர் அணி), மகிளா மோர்ச்சா (மகளிர் அணி) போன்ற துணை அமைப்புகளும் உள்ளன.

   அறிவியலையும் அறிவியலாளர்களையும் வசப்படுத்தி சங் பரிவார் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர அறிவியல் ஆர்வம் அதிகமுள்ள இளைஞர்களை உட்படுத்தி இந்து ராஷ்ட்ரத்தை நனவாக்க உருவாக்கப்பட்ட அமைப்பு தான் ‘சுதேசி சயின்ஸ் மூவ்மென்ட்’.

3. க்ஷாத்ர சதனம்-சிசு வாடிகா

   இது வட இந்தியாவில் மிகப்பிரபலமாகச் செயல்படும் இயக்கமாகும்.

“இந்த நாட்டில் சத்திரிய இரத்தமுள்ளவர்களை வார்த்தெடுத்து உருவாக்கினால் இந்துத்துவத்திற்கு சக்தி பெருகும்”

என்ற துவிதிய(இரண்டாவது) சர் சங்க சாலக் குருஜி கோல்வல்கரின் யோசனையின் அடிப்படையில்  உருவாக்கப்பட்ட இயக்கமே க்ஷாத்ர சதனம் அல்லது சிசு வாடிகா. வட இந்தியாவில் மேல்ஜாதிக்காரர்கள், தலித் பெண்களை பலாத்காரமாகவோ வசீகரித்தோ தன்வயப்படுத்தி, அதன்மூலம் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை உபநயனம் செய்து சத்திரிய வம்சத்தினராக மாற்றுவார்கள். அவர்களைப் படிக்க வைத்து, சத்திரிய முறையில் ஆயுதக் கலைகளில் நிபுணர்களாக்கி, பின்னர் சங்கம் பல கலவரங்களிலும் இவர்களை உபயோகிப்பதுண்டு. 1950 களிலேயே நாக்பூரில் இத்தகைய செயல்பாட்டை சங்கம் ஆரம்பித்துவிட்டது. பிற்காலங்களில் முஸ்லிம், கிறிஸ்தவ பிரிவுகளில் உள்ள பெண்களிலும் சத்திரிய கருவை வளர்க்க, இத்தகைய முயற்சிகளை இவர்கள் திட்டமிட்டு செய்வதுண்டு.

    உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம், போன்ற மாநிலங்களில் சங்க பரிவார் பண்பாட்டை உள்வாங்கிய மேல்ஜாதி புரோகிதர்களின் பிரிவினரே இச்செயல்பாடுகளை அதிகமாக நடத்துகிறார்கள். ஆசிரமம் போன்றிருக்கும் சுற்றுச்சூழல் நிலவும் இடங்களில், முற்றிலும் ரகசியமாக இத்தகைய சதனங்கள் செயல்படும்.

சுதேசி சயின்ஸ் மூவ்மென்ட்

4. விஞ்ஞான் பாரத்

     எல்லா வருடமும் சிறந்த அறிவியல் ஆளுமையைத் தேர்ந்தெடுக்கும்  போட்டி நடத்துவது, அறிவியல் காங்கிரஸ், அறிவியலாளர்களுடன் நேர்காணல், ஆயுர்வேத காங்கிரஸ் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதும், சயின்ஸ் இந்தியா என்ற ஆங்கில இதழை வெளியிடுவதும் இந்த அமைப்பே ஆகும். கிறிஸ்தவ முஸ்லிம் மதப்பிரிவினர் நடத்தும் பொறியியல் கல்லூரிகள், மற்ற கல்லூரிகள் போன்ற இடங்களில் தான் இவர்கள் பெரும்பாலும் செயல்படுவார்கள். இவ்வியக்கத்தின் கட்டுபாட்டில், முக்கியத்துவம் பெற்றுச் செயல்படும் அரசு சாராத தன்னார்வ நிறுவனங்களும் உண்டு. மையநிதியைப் பயன்படுத்தியே இவர்களின் செயல்பாடு அமைந்திருக்கும்.

 

5. வித்யா பாரதி

   சாகா செயல்பாட்டை மாணவர்களிடையே கொண்டு செல்வதற்கு என்ற நோக்கத்தோடு ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு கல்வி நிலையம் என்பதே இந்த இயக்கத்தின் லட்சியம். இந்தியாவில் 40,000-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்தத்துறையில் உள்ளனர். கேரளத்தில் “வித்யா நிகேதன்” என்பதே இதன் பெயராகும். “சரஸ்வதி வித்யா நிகேதன்” என்று கூறுவது போல் எல்லா பெயருடனும் “வித்யா நிகேதன்” என்பது சேர்த்து அழைக்கப்படும்.

“யகுனேந்து துஷார ஹார தவளாம்”

என்று ஆரம்பிக்கும் சரஸ்வதி துதியுடனான பிரார்த்தனையோடு ஆரம்பிக்கும், இந்த கல்விநிலையச் செயல்பாடு, சாகாவில் பயன்படுத்தப் படும் எல்லா உத்தரவுகளும், திட்டங்களும் பள்ளிகளில் அமுல்படுத்தப்படும். உறுப்பினர்கள் முகாம்களிலேயே தங்கவேண்டும். இயக்க ஆதரவாளர்கள் அல்லாதவர்களின் பிள்ளைகளை குறிவைத்து தான் இவ்வமைப்பின் செயல்பாடு அமைந்திருக்கும். “மாணவர்களின் மூலமாக இந்து ராஷ்ட்ரத்தை நோக்கி” என்பதே இவ்வியக்கத்தின் சிந்தனையாகும். இந்து ராஷ்ட்ரம் என்பதற்கு அப்பால், இம்மாணவர்களின் அன்னையருக்கு சங்கத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்த மாதுர் பூஜா(அன்னையருக்கான பூஜை- மாணவர்களைக் கொண்டு அன்னையரின் காலைக் கழுவி பூஜிக்கும் சடங்கு) நடத்துவார்கள்.

 

6. குரு பூஜை

    ஒரு பகுதியில் இயக்கத்துடன் சம்பந்தமில்லாத பிரபலமான ஒருவரை கல்வி நிலையத்திற்கு அழைத்து, அவரது காலை, மாணவர்களைக் கொண்டு கழுகி பூஜை செய்யும் சடங்கு ஆகும். இத்தகைய சடங்குகள் இனம்புரிந்து கொள்ள முடியாத ஒரு உளவியல் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த வழியில் இவர்களை சங்கம் என்ற பிரவாகத்திற்குள் கொண்டு சேர்ப்பது மிகவும் எளிதானதாகும்.  சாகாவில் நடக்கும் எல்லா கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் இக்கல்வி நிலையங்களில் நடத்தப்படும். இந்தியாவில் பரவிக்கிடக்கும் மிகப்பெரிய கல்வித்துறை சங்கிலியாக இது மாற்றப்பட்டுவிட்டது. வித்யா பாரதியின் கல்வித்திட்டத்தை மோடி அரசு இன்று எல்லா கல்வி நிலையங்களிலும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது.

7. விஷ்வ ஹிந்து பரிஷத்

    அசோக் சிங்கால், பிரவீண் தொகாடியா போன்றவர்களின்  தலைமையில் தான் இந்த அமைப்பு வழிநடத்திச் செல்லப்படுகிறது. அயோத்திப் பிரச்சனை, புன்னாடு கலவரம், மும்பை கலவரம், குஜராத் கலவரம் போன்ற கலவரங்களின் முன்வரிசையில் இவ்வமைப்பு உள்ளது என்பது யாவரும் அறிந்த ஒன்றல்லவா? நாட்டில் இந்து தீவிரவாதத்தை உறுதிப்படுத்துவது என்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும். இந்து இளைஞர்களுக்கு வெளிப்படையாக திரிசூலம் என்னும் ஆயுதத்தை, சிலகாலத்திற்கு முன்பு வினியோகம் செய்தார்கள். இந்த ஆயுதத்தை குற்றவியல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள நீளத்தைவிட சிறிதளவு குறைத்து, சட்டத்தின் பிடியிலிருந்து, தந்திரமாகத் தப்பிக்கத் திட்டமிட்டு தயாரித்து வினியோகிக்கப்பட்டது. ஆகவே  இதை ஒரு ஆயுதம் என்று நிருபிக்க முடியாதென்று விஷ்வ ஹிந்து பரிஷத் காரர்கள் கூறிவந்தார்கள். பஜ்ரங்தள் என்ற இதன் துணை அமைப்பு இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே ஆயுதப் பயிற்சியும் அளிப்பதுண்டு. கேரளத்தில் பத்தனம் திட்டையில் இதன் பயிற்சி மையம் அமைந்துள்ளது.

 

8. இந்து ஐக்கிய வேதி

    இது கேரளத்தில் மட்டும் செயல்படும் அமைப்பாகும். வெவ்வேறு ஜாதிகளை ஒன்று சேர்த்து இந்து ஒற்றுமையை நனவாக்குவதே இதன் இலட்சியமாகும். இது போன்ற அமைப்புகள்  ஆர்.எஸ்.எஸ் -ன் மேல்ஜாதி சார்பையும், கொள்கைகளையும் மறைப்பதற்கான தந்திரம் ஆகும். வட இந்தியாவில் இந்த செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது. ஏனெனில் மேல்ஜாதிக்காரர்கள் மற்ற ஜாதிகாரர்களை சேர்த்துக்கொள்வது என்பது முடியாத காரியம். சசிகலா டீச்சர், கும்மனம் ராஜசேகரன் போன்றவர்கள் இந்த அமைப்பினர் ஆவர்.. சூத்திரர்கள் வேதத்தை காதால் கேட்கக்கூடாது என்ற மனு ஸ்மிருதியின் வார்த்தைகளை இறுகப் பற்றிக்கொண்டே தாழ்த்தப்பட்ட ஜாதியினரை சங்க பரிவாருடன் நெருங்க வைக்கும் முயற்சியும் தொடர்கின்றன. இதைப்பற்றிய அம்பேத்கரின் ஆய்வு பின்வருமாறு:

    “கோல்வால்கரும் ஆர்.எஸ்.எஸ் -ம் மறுகட்டுமானம் செய்ய விரும்பும், பழைய மராட்டிய ஆட்சியின் கீழ், வேதமந்திரத்தை உச்சரிக்கும் எந்தவொரு நபரும் தனது நாவை இழக்கக் கடமைப்பட்டவர்களாக இருந்தனர். உண்மையில் பேஸ்வாவின் உத்தரவுப்படி, வைதீக சட்டத்திற்கு எதிராக வேத மந்திரங்களை உச்சரிக்கத் துணிந்த சோனார் (பொற்கொல்லர்) ஜாதியைச் சேர்ந்த ஏராளமானவர்களின் நாவை அறுத்துத் தள்ளியதுண்டு”.

 

9. பாரதீய விச்சார கேந்திரம்

    வரலாற்று ஆராய்ச்சியாளர்களையும் சிந்தனையாளர்களையும் இந்துத்துவத்தை நோக்கி ஈர்க்கும் நோக்கத்தில் பி.பரமேஸ்வர் ஜி நடைமுறைபடுத்திய இயக்கமே இது. சுரேந்திரனும் பரமேஸ்வர் ஜியும் இதன் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். திருவனந்தபுரத்தில் தலாய் லாமா துவங்கி வைத்த “ஆகோள பகவத்கீதை” (உலக பகவத்கீதை) ஆய்வை நடத்தியது இந்த அமைப்பே ஆகும். பகவத்கீதைக்கு மட்டுமேயான தனிப்பிரிவு இந்த அமைப்பில் உள்ளது. வீட்டிற்கொரு பகவத்கீதை என்ற திட்டத்தின் பகுதியாக 10 ரூபாய்க்கு இந்தியாவில் பல இடங்களிலும் பகவத்கீதையை எளிய விலையில்  விற்கும் பணியை செய்துள்ளார்கள். பகவத் கீதையை கல்வித்திட்டத்திற்குள் எவ்வாறு கொண்டுவர வேண்டும் என்பதை செயல் வடிவமாகக்க ஒரு நிபுணர் குழுவையே உருவாக்கியுள்ளார்கள். சோதனை முயற்சியாக வித்யாபாரதியின் பள்ளிகளில் இப்பொழுது கீதை கற்றுக்கொடுக்கப்படுகிறது. பல்வேறு மையங்களில் பகவத்கீதை மனப்பாடம், பகவத்கீதை வாசிப்பு, இராமாயண மனப்பாடம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பயிற்சிகளும் இவர்கள் நடத்துகிறார்கள்.

10. பி.எம்.எஸ் -பாரதீய மஸ்தூர் சங்கம் 

   “இந்துத்துவ சக்தி தொழிலாளர்களின் மூலம்” என்பதே  இந்த அமைப்பின் சிந்தனை. இது இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாளர் அமைப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது. கேரளத்தில் “மஸ்தூர் பாரதி” என்ற இதழ் இதன் வெளியீடாகும்.

11. க்ஷேத்ர சம்ரக்ஷண சமிதி (கோவில் பாதுகாப்புக் குழு)

    இது கோவிலுக்கு மட்டுமான அமைப்பாகும். கேரளத்தில் 1966-ம் ஆண்டில் துவங்கப்பட்டது. “கோவில்களின் மூலம் இந்துத்துவம்” என்பதே இதன் இலட்சியமாகும். இதற்கென நியமிக்கப்படும் பிரச்சாரகர்கள் சமஸ்கிருதத்திலும் வேதங்களிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். கோவில் விஷயங்களில் இவர்களின் தலையீடு ஆழமாக திட்டமிடப்பட்ட ஒன்றாகும். வார்த்தை ஜாலங்களிலும் கோவில்கள் பற்றிய விஷயங்களில் உள்ள நுண்ணறிவிலும், கோவில் குழுக்களில் இருப்பவர்கள், இவர்களிடம் வீழ்ந்து விடுவார்கள். இறுதியாக இந்த அமைப்புக்கு கோவிலைப் பதிவு செய்து வாங்கிய பிறகு தான், இந்த பிரச்சாரகர்கள் திரும்பிச் செல்வார்கள். 1996-ல் ஒரே ஒரு கோவில் மட்டுமே இருந்த இந்த அமைப்புக்கு 2011-ல் 500-க்கும் அதிகமான கோவில்கள் இருக்கின்றன. 2000-க்கும் அதிகமான கோவில்களில் இவர்களது தலையீடும் செயல்பாடும் உள்ளது. அதுபோலவே, வடக்கு மலபாரிலுள்ள தெய்யக் காவுகளையும் அபகரிப்பதற்கான முயற்சிகள் இப்பொழுதும் தொடர்கின்றன. கோவில்களில் மாதுர் சமிதி (அன்னையர் குழு) உருவாக்கி அன்னையரின் பஜனை, புராண வாசிப்பு, இறந்த வீடுகளில் இராமாயண வாசிப்பு, யோகா போன்றவை நடத்தி, இப்பணிகளை  சங்க பரிவார் இயக்கத்தின் பகுதியாக மாற்றுவதே நோக்கமாகும். யாகங்களும் பூஜைகளும் நடத்தியதன் மூலம் கோடிக்கணக்கில்  சொத்துக்களை வைத்திருக்கும் அமைப்பாகும்.

 

12. சேவா பாரதி

   வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கான ரூபாயின் பொருளாதார உதவி பெறும் ஏராளமான அனாதை இல்லங்களை நிறுவுதல், மருத்துவக்கல்லூரியில் அன்னதானம், மருந்து வினியோகம் போன்றவை நடத்துவது இந்த அமைப்பின் திட்டமாகும்.  விவேகானந்தா மெடிக்கல் மிஷனின் கீழ் அட்டபடியிலும் வயநாட்டிலும் மருத்துவமனைகள் உள்ளன. படித்த இளைஞர்களையும், இளம் பெண்களையும் பங்கேற்க வைத்து ஏராளமான செயல்பாடுகளை நாடெங்கிலும் இந்த அமைப்பு செய்து வருகிறது.

 

13. பாஸ்கர் ஜோதி

    ஆதிவாசிகள் வாழும் பகுதிகளுக்குச் சென்று பக்திமயமான திரைப்படங்கள் திரையிடுவது, பல முக்கிய பூஜை நிகழ்ச்சிகளை புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுப்பது போன்றவைகளே இவ்வமைப்பின் இலட்சியம்.

 

14. வனவாசி கல்யாணாஸ்ராமம்

   இந்தியாவில் உள்ள ஆதிவாசிகளை இந்து மதம் என்னும் பிரதான நீரோட்டத்தில் கொண்டு வர வெளிநாடுகளிலிருந்தும், பெரும் வர்த்தகர்களிடமிருந்தும் ஏராளமான நன்கொடைகள் இந்த அமைப்புக்கு கிடைக்கிறது . வயநாட்டில் குறிச்சியா பிரிவினரில் உள்ள பெண்களுக்கு ஆயுதப் பிரயோகக்கலையை பயிற்றுவித்து மதமாற்றத்தை தடுப்பது என்ற நோக்கத்தோடு பீப் (Peep) என்ற துணை அமைப்பு அங்கு செயல்பட்டு வருகிறது.  அப்பகுதியிலுள்ள குழந்தைகளுக்கு இந்துத்துவ சிந்தனையை இதன் மூலம் ஏற்படுத்துவார்கள்.

 

15. ஏகலவ்ய வித்யாலயம்

    இந்தியாவிலுள்ள ஆதிவாசி பகுதிகளிலும் சேரிப்பகுதிகளிலும் கல்வி கற்றுத் தருதல் என்று போலியாக கூறி, சங்கத்தில் பயிற்சி பெற்றவர்களை மாதச்சம்பளத்தில் ஆசிரியர்களாக நியமிக்கிறார்கள். அப்பகுதி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதோடு, சில குழந்தைகளுக்கு ஆயுதப் பயிற்சியும் கொடுத்து வருகிறார்கள். இந்த இயக்கத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதியாக உள்ளது. கேரளத்தில் வயநாட்டிலும் அட்டப்பாடியிலும் இடுக்கியிலும் 600 ஏகலவ்ய வித்யாலயங்கள் உள்ளன.

 

16. விவேகானந்தா கேந்திரம்-கன்னியாகுமரி

    இந்தியாவின் முக்கியமான புனித யாத்திரைத் தலமாக விவேகானந்தா பாறை உள்ளது. சுவாமி விவேகானந்தர் என்னும் யுகபுருஷனால் நனவாக்கப்பட்ட தியான மண்டப புண்ணிய தலம். இங்கு இந்தியா முழுவதும் யோகாவைப் பரப்புவதற்கு பிரச்சாரகர்களை உருவாக்குகிறார்கள். இது ஒரு சங்க பரிவார் அமைப்பு ஆகும்.

   இன்னும் கூட நாம் அறிந்ததும் அறியாததுமாக நிறைய அமைப்புகள் சங் பரிவாருக்கு உண்டு. ஐயப்ப பக்தர்களுக்கு ‘ஐயப்ப சேவா சமாஜம்’. நடனக்கலை ஆர்வலர்களுக்கும், நடன கலைஞர்களுக்கும் ‘கண்ணகி’ என்ற அமைப்பு, ‘ஜென்ம பூமி’ பத்திரிகை, கேசரி, விர்த்தாந்தம், ‘ஆகோள புஸ்தக பிரதர்சனம்’(உலக புத்தக கண்காட்சி) நடத்தும் ‘குஷேத்ர பிரகாசன்’, இப்போது ‘ஜனம்’ தொலைக்காட்சி, பாரதீய அபிபாஷக பரிஷத்(வழக்கறிஞர்களுக்கான அமைப்பு), விஸ்வ கர்மா சபா முதலான அமைப்புகள் அனைத்தும் சங் பரிவார் அமைப்புகளாகும். இவையெல்லாம் இந்த அமைப்பின் தன்மைகளைப் பற்றி புரிந்து கொள்ளும் பொருட்டு குறிப்பிடப்பட்டவைகளாகும்.

 

17. அகில பாரத மல்சியத் பிரவர்த்தக சங்கம் (அகில பாரதீய மீன் பிடிப்பாளர் சங்கம்)

    இந்தியாவில் சங்க பரிவார், செயல்பாட்டுக்கு ஏராளமான குறுக்கு வழிகள் உண்டு. 1970 -களில் தேர்ந்தெடுத்த ‘கடலோரப் பகுதி மற்றும் மலையோரப் பகுதி’ திட்டம் அதில் ஒன்றாகும். மலையோரம் என்பது ஆதிவாசிகளின் பகுதியாகும். 25 வருடங்களாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான  சேவைச் செயல்பாடுகளை இந்தியாவின் ஆதிவாசி பகுதிகளில் சங் பரிவார் நடத்தி வருகிறது. கேரளத்திலும் அது போலவே தான் செயல்படுகிறது. இந்தியாவின் மக்கள் தொகையில் ஆதிவாசிகள் கணிசமான பகுதியினர் என்று, சங்கத்திற்கு தெரியும். அது போலவே தான் கடற்கரையும். கடற்கரையில் வாழும் அதிகம் கவனிக்கப்படாத மீன்பிடித் தொழிலாளர்களை பக்தி மார்க்கத்தினூடே இந்துத்துவத்தை போதித்து மதவெறியூட்டுவதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும். மேல்ஜாதி தத்துவங்களை தூக்கிப் பிடித்தவாறு  தான் இதையும் செய்கிறார்கள். வருணங்களைப் பற்றி கோல்வல்கரின் கருத்து இவ்வாறாகும், “வருணங்கள், வருணாசிரம தத்துவங்கள் வழியாக, அதாவது சமூகத்தின் இந்து சட்டதிட்டங்களுக்கு ஏற்ப வாழ்தல், இந்து சட்டதிட்டங்களுக்கு அடிபணிதல், போன்றவையும்,  இந்து மதத்தையும் அதன் பண்பாட்டையும் போற்றுபவர்கள் தன்னைத் தானே வலுபடுத்திக் கொள்ளவும் வாய்ப்பளிக்கும் இடமே இந்து ராஷ்ட்ரம் என்பதாகும்”

   கடலன்னையிடம் அன்பு செலுத்தியும் வழிபடவும் செய்கின்ற அவர்களை, சமுத்திர பூஜை நடத்துவதன் மூலம் சங்கத்தோடு நெருங்கச் செய்வார்கள். ஏராளமான பண உதவிகளைச் செய்வார்கள். முன்பு புன்னாடு கலவரத்திற்கு பிறகு நான்கு படகுகளை வாங்கிக் கொடுத்ததும் இந்த அமைப்பின் மூலமாகத் தான். கோடிகணக்கான ரூபாயை சங் பரிவார் இந்த இருபிரிவினருக்கும் செலவு செய்து வருகிறது. சங்கத்தைப் பொறுத்தவரையில் முதல் படியல்ல சாகா. அவர்களை இத்தகைய மாய வலைக்குள் சிக்க வைத்து படிப்படியாக சாகா செயல்பாடுகளோடு நெருங்கச் செய்வார்கள்.

 

18. சம்யோஜித் பைடக்

    எர்ணாகுளத்தில் உள்ள பிராந்திய காரியாலயத்தில் தான் தங்கியிருந்தேன் என்று கூறியிருந்தேன் அல்லவா? அங்குள்ள மாலைநேர சாகா வகுப்பையும், கலூர் பாலக்குளத்திலுள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் பாலகோகுலம் வகுப்பையும், நான் தான் நடத்தி வந்தேன். ஒருநாள் சுதேசி சயின்ஸ் அமைப்பின் ஜெயன் அண்ணன் சேவா விபாக் அறைக்கு வந்தார். வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் விசேஷ பைடக் நிகழ்ச்சி, அங்குள்ள கவுட சுவாரஸ்யர் அரங்கத்தில் நடை பெறுமென்று கூறினார். அவ்வாறு நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அரண்மனை போன்று தோற்றமளிக்கும் விதத்தில் அலங்காரங்களுடன் அழகான இடமாக அந்த அரங்கம் மாற்றப்பட்டிருந்தது. பல பிரபலமானவர்களும் வந்திருந்தனர். நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டார்கள்.ஊடகங்கள் அரங்கத்தினுள் அனுமதிக்கப்படவில்லை. எனது இயக்கத்தின் ஊடுருவலும் வலிமையும் எவ்வளவு ஆழமானது  எனபதை நான் அங்கு தான் தெரிந்து கொண்டேன். துவக்க விழா நடந்த  சபை பெருமிதம் கொள்ளத்தக்க விதத்தில் கம்பீரமாக இருந்தது. அமெரிக்காவில் நவநாகரிக ஆடை வடிவமைப்புத் துறையில் பணியாற்றும் பிரபலமான பெண்மணி தான் நிகழ்ச்சிகளை, அமெரிக்க டாலரில் ஒரு கோடி ரூபாய்க்கு சமமான தொகையை நன்கொடையாகக் கொடுத்துத் துவங்கி வைத்தார். இந்திய சுவர் ஓவியங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளுக்கு சந்தையில் பெரிய வரவேற்புள்ளதாக கூறினார். இந்துத்துவம் உலகத்தின் சுவாசக்காற்று என்றும், தான் ஒரு இந்துவாக இருப்பதுவே தனது ,  அதிர்ஷ்டமாகும் என்றும் கூறினார். எர்ணாகுளத்திலுள்ள விவேகானந்தா கிளப்பின் தலைவர் ஆஷா லதா தான் அவரது ஆங்கில உரையை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். பல்வேறு மாநிலங்களிலிருந்து அரசின் திட்டக்குழு உறுப்பினர்கள் போன்ற முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முக்கிய செயல் திட்டத்தை ஜெயன் அண்ணன் தான் விளக்கிப் பேசினார். கேரளத்தில் இயக்கத்தின் செயல்பாடு பலகீனமாக உள்ளது. மற்ற மதக்காரர்கள் நிறைய ஆதாயம் அடைந்து வருகிறார்கள். கம்யூனிஸ்டுகளுக்கு செல்வாக்கு உள்ள பகுதிகளில் வேர்விட முடியவில்லை. என்ன விலை கொடுத்தாவது இந்நிலையை மாற்ற வேண்டும். அதற்கான உத்திகளை உருவாக்குவதே இந்த மூன்று தின முகாமின் குறிக்கோள் என்றும் அவர் கூறினார். டெல்லியில் ‘சங்கல்ப்’ என்னும் ஐ.ஏ.எஸ் தேர்வு பயிற்சி மையம் இருக்கிறதென்றும், சங் பரிவாருக்கு சொந்தமான அந்த நிறுவனம் மூலமாக, வெளிவருபவர்களே இந்தியாவில் சிவில் சர்வீஸ் பதவிகளில் பெரும்பாலும் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தகர்ப்பதன் மூலம் தான் மக்களிடம் நாம் நம்பிக்கை ஏற்படுத்த முடியும். மக்களின் ஆத்மா புரட்சிகரமான மண்ணில் தூங்கிக்கொண்டிருக்கிறது. புன்னப்புரா, வயலார், கைய்யூர், கரிவெள்ளூர், மொறாழ போன்ற புரட்சி மயமான இடங்களில் நுழைய வேண்டும். ஒவ்வொரு பகுதியின் உள்வடிவங்களையும் வரைப்படங்களோடு தனித்தனியே சொல்லிக் கொடுத்தார்கள். அங்கெல்லாம் உள்ள மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், மக்களால் அதிகம் வழிபடப்படும் கோவில்கள், சந்தைகள், பேருந்து வசதிகள், மருத்துவமனை போன்றவற்றைப் பற்றி தெளிவாக கூறினார்கள். அப்பகுதிகளில் பணியாற்றும் அதிகாரிகளிடம் இருந்து தான் இந்த விவரங்களை சேகரித்தார்கள். கூடாளி மேல்நிலைப்பள்ளி, அஞ்சரக்கண்டி மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கணித மன்றம் (Maths Club) ஆரம்பிக்கப் பட்டதும், பிணராயியில் கணக்கு வகுப்பின் மூலம் சாகா வகுப்பு ஆரம்பிக்க சாத்தியப்பட்டதும் இந்த விவரங்களின் அடிப்படையிலேயே தான். இதுபோன்று ஆன்மீக வகுப்புகள் யோகா, சேவை செயல்பாடுகள், டியூஷன் வகுப்புகள், வேலைவாய்ப்பு பயிற்சி மையம் போன்ற வழிகளில் கொஞ்சம் கொஞ்சமாக செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்ல தீர்மானிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். நாம் சுயம் சேவகர்கள் என்று எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் யாருக்கும்  தெரியவரக் கூடாது என்றும், அருகிலுள்ள சாகாவிலோ சங்கத்தின் நிகழ்ச்சிகளிலோ பங்கேற்கக் கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டது. தனது குறிக்கோள் நிறைவேறுவது வரை அப்பகுதியில் செயல்பாட்டைத் தொடரவேண்டும். “நான் ஒரு இந்து” என்ற உணர்வை உருவாக்கி இயக்கச் செயல்பாட்டுக்கு பாதை அமைக்கவே ஒவ்வொருவரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அந்த மூன்று தின நிகழ்ச்சிகள் மூலம் எனக்குப் புரிந்தது. இது போன்று கிறிஸ்தவர்கள் அதிகமுள்ள பகுதி பற்றியும், அங்கு வாழும் இந்துக்களின் நிலை பற்றியும் தெளிவாகப் புரிய வைத்தார்கள்.

   முஸ்லிகள் அதிகமுள்ள பகுதி பற்றியும், அங்கு நடக்கும் தீவிரவாதச் செயல்பாடு, நோம்பு காலங்களில் கட்டாயமாக கடைகள் அடைத்தல், ஐயப்ப பக்தர்களுக்கு அப்பகுதியில் ஏற்படும் இன்னல்கள் போன்றவைகளையும்  விளக்கிப் புரிய வைப்பார்கள். அதன்பிறகு ஒவ்வொருவரும் இத்தகைய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டங்கள், அதற்கான பொருளாதார வழிகள், போன்றவைகளை ஒரு காகிதத்தில் எழுதி உறையிலிட்டு ரகசியமாகக் கொடுக்க வேண்டும். மிகவும் ரகசியமான வழிகளில் அவர்களுக்கு சங்கத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். இந்த மூன்று தின முகாமிலிருந்து தான், முகாமுக்கு வந்தவர்கள் எல்லாம் கேரளத்தின் வெவ்வேறு பகுதிகளில் செயல்படும் கபட வேடதாரிகளான மாயாவிகளென்றும், மாயாஜாலங்கள் நிறைந்த சூழ்ச்சிகளை செய்து, அப்பகுதிகளில் இந்துத்துவா செயல்திட்டத்தை செயல்படுத்தவே நோக்கமிட்டிருப்பதும் புரிந்தது. முகாம் முடிவடைந்த நாளில், எல்லோரும் தங்கள் செயல்பாடு எவ்வாறு இருக்கும், அதற்கு இயக்கம் தரவேண்டிய தொகை ஆகியவற்றை விளக்கி, வங்கிக் கணக்கு எண்ணையும் குறிப்பிட்டு எழுதிய காகிதத்தை உறையிலிட்டு கொடுத்துவிட்டு விடைபெற்றார்கள். என்னிடம் அது போன்று எதுவும் எழுத வேண்டாமென்றும், சும்மா இருந்தாலே போதுமென்று கூறப்பட்டிருந்தது.

சுதீஷ் மின்னி

(தமிழில்: K.சதாசிவன்)

Related Posts