பிற

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 6

மதுரையில் பிரதம சங்க சிக்ஷா வர்க்:

   1995-ம் ஆண்டில் தான் சி.பி.ஐ.எம் தலைவர் இ.பி.ஜெயராஜனைக் கொல்ல முயற்சி நடந்தது. ரயிலில் ஆந்திரப் பிரதேசத்தில் வைத்து தான் அந்த சம்பவம் நடந்தது. துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி நடந்தது. ஆனால் ஜெயராஜனை சுட்டவனுக்கு குறி தவறியது. நவீன, தீவிர சிகிச்சையின் பலனாக ஜெயராஜன் உயிர் பிழைத்தார். விக்ரம்சாலில் சசி, வேட்டை தினேசன் ஆகியோரை சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கிகளுடன், ரயில்வே போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவருமே என்னுடைய சாகா வகுப்புக்கு வருவதுண்டு. “சிங்கக்குட்டிகள்” என்று தாசன் அண்ணன் அவர்கள் இருவரையும் அன்று சாகாவில் வருணித்துப் பேசினார். இந்த வருடத்திற்கு 2 பேரை ஓ.டி.சி வகுப்பிற்கு தேர்ந்தெடுத்திருப்பதாக, அன்றைய சாகா வகுப்பில் தான் அவர் தெரிவித்தார்.

மதுரையில் வைத்து நடக்கவிருந்த, 25 நாட்கள் கொண்ட பயிற்சி முகாமுக்கு, நானும் சுனி அண்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தோம். மதுரை திருபேடகம் விவேகானந்தா கல்லூரியில் தான் அப்பயிற்சி முகாம் நடத்தப்பட இருந்தது. எந்தவொரு சுயம் சேவகனுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய வாய்ப்பு தான் இந்த பயிற்சி. இந்த பயிற்சி முகாம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாக இருந்தது. மாவட்டத்  தலைமையிலிருந்து தான் பெயர்கள் பரிந்துரைக்கப்படும். கேரள பிராந்திய அளவில் நடக்கும் இப்பயிற்சிக்கு எல்லா பிரிவுகளிலிருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட சுயம் சேவகர்கள் இருப்பார்கள். எப்போதுமே SSLC தேர்வுகள் நிறைவடைந்த  பிறகு தான் முகாம் துவங்கும்.  சசி அண்ணன் தான் அன்றைய கூத்துபறம்பு தாலுகா பிரச்சாரக் (அன்றைய கூத்துபறம்பு அலுவலகம், எருமைத் தெருவிலுள்ள அம்மன் கோவிலுக்கு பின்புறம் இருந்தது. இன்று அது தொக்கிலங்கடியிலுள்ளது.) மாவட்ட பிரச்சாரக் ஆக கணேசன் அண்ணன் இருந்தார். மருத்துவப் பரிசோதனை அறிக்கை காண்பிக்க வேண்டும். அதன் பிறகு உறுதிமொழியேற்பு. தாலுகா சங்க சாலக் பொறுப்பிலிருந்த சசி அண்ணன் உறுதிமொழி சொல்லிக்கொடுத்தார். இந்து மதத்தின் அங்கமென்ற முறையில் வாழ்வின் இறுதி வரை இயக்கத்துடன் நின்று, எனது உடலையும் மனதையும் அதற்காக அர்ப்பணிக்கிறேன் என்பதே அவ்வுறுதி மொழியாகும். அதன் பிறகு ஒரு சொற்பொழிவு நடைபெறும். இறுதியில் உணர்ச்சிமயமான சூழலை உருவாக்குவார்கள்.

வீரசிவாஜியின் படைகளைப் போன்று எண்ணத் தகுந்த, மரணம் வரை போராடும் உறுதியோடுள்ள படை தான் நம்முடையது என்ற எண்ணம் நமக்கு உருவாகும். பயணத்திற்கு தயாரானோம். 28 நாட்கள் மகனைப் பார்க்க முடியாதே என்ற வருத்தம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இருந்தது. தீரம் நிறைந்த மகனின் தலையில் கைவைத்து ஆசீர்வதித்து வழியனுப்பும் நிகழ்ச்சிக்கு மற்ற சுயம் சேவகர்கள் மங்கல வாழ்த்து கூறினார்கள். தலசேரியிலிருந்து ரயில் மூலம் பயணம். மாவட்டம் முழுவதுமிருந்து சுமார் 25 சுயம் சேவகர்கள் இருந்தனர். சசி அண்ணன் (தாலுகா பிரச்சாரக்) உள்ளிட்ட குழுவினர் இரயிலில் ஏறினர். எல்லா தாண்டாக்களை (நீண்ட மூங்கில் தடி) அடுக்கி வைத்தோம். ரயில் பாலக்காட்டை அடைந்தவுடன் அருகிலிருந்த அறிமுகமற்ற பயணி ஒருவரை எங்கள் பகுதியிலிருந்து அடித்து விரட்டினோம். நாங்கள் முகாமுக்கு சென்றடைந்த பிறகு தான், அடித்து விரட்டப்பட்டவர், அப்பகுதியின் காவல்த்துறை உதவி ஆய்வாளர் என்று தெரிய வந்தது. முகாமிற்கு  வந்திருந்த அவருடன் அறிமுகம் ஏற்பட்டதோடு, அந்தப் பிரச்சனை சுமுகமாகத் தீர்ந்தது. பயிற்சி முகாம் துவங்கியது.

முகாமின் பொறுப்பாளர் அக்கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் வன்னியராஜ் ஆவார். பிற்காலத்தில் அவர் சங்கத்தின் க்ஷேத்ரீய பொறுப்பை அடைந்தார். முந்தைய பயிற்சி முகாம்களில் கற்றுக்கொண்டவைகளும் சங்கத்தின் சட்ட திட்டங்களையும் இப்பயிற்சியில் சுருக்கமாக கூறினார்கள்.  உடற்பயிற்சி, தண்டா யுத்தா, பத வின்னியாஸ் முதலியவற்றை இன்னும் கொஞ்சம் விளக்கமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் சொல்லிக்கொடுப்பார்கள். தினமும் சொற்பொழிவுகளும் விவாதங்களும் நடைபெறும். அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதோடு எழுத்துத் தேர்வுமிருக்கும். கண வேடம் (காக்கி அரைக்கால் சட்டை, வெள்ளைச் சட்டை, வெள்ளை பனியன், பெல்ட், ஷூ, காலுறைகள், கறுப்புத் தொப்பி, தண்டா ஆகியவற்றை முறையாகத் தரித்து இருக்கும் சுயம் சேவகனின் சீருடை) மிகச்சரியாகத் தரிக்க பயிற்சி அளிப்பார்கள். கிறிஸ்தவ முஸ்லிம் மதப்பிரிவினரின் வேகமான வளர்ச்சி, அவற்றின் எதிர் விளைவுகள் என்பவை தான் முக்கிய பொருள். கம்யூனிச நாடுகள் தத்துவங்கள் என்பவை குறித்து தனியே விளக்கப்படும். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், கம்யூனிஸ்டுகள் ஆகியோர் தேசத்துரோகிகள் என்று விளக்க ஏராளமான சம்பவங்களை  அட்டைகளில் வரைந்து  காட்சிப்படுத்துவார்கள். கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் பாரதப் பண்பாட்டுக்கு எதிரானவர்கள் என்று கூறுவார்கள். கோல்வால்கர் அவர்களைப்பற்றி பின் வருமாறு கூறியுள்ளார்.

“புதியதொரு நம்பிக்கை முறையை ஏற்றுக் கொண்டதனால், மொத்தமாக அவர்கள் இந்து பண்பாடற்றவர்களாக மாறிவிட்டார்கள். அவர்கள் ஏற்றுக்கொண்ட அல்லது தாங்கள் உட்படுவதாக அவர்கள் கருதுகின்ற பண்பாடு இந்துக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டதாகும். அவர்களின் வீர நாயகர்களும், வீர ஆராதனைகளும், அவர்களின் விழாக்களும், கொண்டாட்டங்களும், சிந்தனைகளும், வாழ்க்கை குறித்த பார்வைகளும், இப்போது நமக்குரிய  பொது அம்சத்தைக் கொண்டதல்ல என்ற நிலைக்கு மாறி  விட்டது.”

பாரத மாதாவை வெட்டி கூறுகளாக்கும், கடல் கடந்து வந்த இந்த ராட்சதர்களை என்றென்றைக்குமாக துரத்த இன்னொரு போராட்டத்திற்கு ஆயத்தமாக வேண்டியுள்ளது என்று நம்மை எண்ணச் செய்வார்கள். தேசபக்திப் பாடல்கள் பாரதம் தாயென்ற சிந்தனையைத் தூண்டும். வந்தேமாதரத்தை தேசியப்பாடலாக்க வேண்டுமென்ற விவாதம் நடைபெறும். வந்தேமாதரத்தின் ஒலியலைகள் முகாமில் எப்போதும் நிறைந்து நிற்கும். ஒரு புத்துணர்வு பிறப்பெடுக்கச் செய்வார்கள். பயிற்சிகளின் முடிவில் அகண்ட பாரதம் வரைவார்கள். சீனா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பூட்டான் போன்ற நாடுகளை இணைத்து வரைந்தால், அதுவே அகண்ட பாரதம். வெள்ளை கோலப்பொடியால் தரையில், அகண்ட பாரதம் வரையப்படும். ஒவ்வொரு பிரதேசத்தின் முக்கிய புராணத் தலங்கள் அடையாளப் படுத்தப்படும். உதாரணமாக நேபாளத்தில் ஜனகனின் அரண்மனை, ஆப்கானிஸ்தானில் காந்தாரம் முதலானவை. தொடர்ந்து முகாமில் விளக்குகள் அணைக்கப்பட்டு அகல் விளக்குகள் ஏற்றப்படும். உதாரணமாக இலங்கை இருக்குமிடத்தில், ஒரு சுயம் சேவகன் அகல் விளக்கு ஏற்றி வைப்பார். அப்பகுதி தெளிவாகத் தெரியும். அப்போது அசரீரி போன்று இனிய இசையில் பாடல் பாடப்படும்.

“அறுந்தகன்றது மனதுக்கினிய இலங்கை

மகாதேவி உன் காலின் பொற்ச் சலங்கை

அற்று வீழ்ந்தது காந்தார தேசம்

மகாதேவி உன் உடலின் அழகிய பாகம்”

 

    இவ்வாறு இவ்வன்னையின் எல்லா அங்க அவயங்களும் தொலைந்து போனது. காஷ்மீரைப் பிரிக்க முயல்கிறார்கள். சீனா, இந்திய கம்யூனிஸ்டுகளின் துணையோடு பாரத தேசத்தை பிடிக்க முயல்கிறது. நாகாலாந்திலும் அசாம் எல்லையிலும் கிறிஸ்தவர்கள் தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்துகிறார்கள். இந்த தாயை அழித்தொழிக்க நினைக்கும் தீய சக்திகளை இங்கிருந்து விரட்டியடிக்க வேண்டுமென்று கூறுவார்கள். கோட்சேவின் சிதையின் சாம்பலை கரைக்காமல் இப்போதும் பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அகண்ட பாரதம் என்று நனவாகிறதோ அன்று தான் அது கரைக்கப்படும் என்றும் கூறினார்கள்.

    அகண்டபாரதத்தின் எல்லா புண்ணிய தலங்களிலும் தீப ஒளியால் வெளிச்சமாகும். அகண்ட பாரதம் என்ற சிந்தனை நம்மை மாறுபட்ட அபூர்வமான ஓரிடத்திற்கு கொண்டு சேர்க்கும். இந்த ஒரேயொரு பயிற்சியின் மூலம் உளவியல் ரீதியாக  மற்றொரு நிலையைச் சென்றடையும் தன்மையை நமக்கு உருவாக்குவார்கள். கிறிஸ்தவர், முஸ்லிம், கம்யூனிஸ்ட் பிரிவினரை முற்றிலும் அழித்தொழிக்கும் மனநிலை சிறிது சிறிதாக  ஒவ்வொருவருக்குள்ளும் உருவாகும். அந்த பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களை  பிரிவினைவாதத்தின், வேறொரு விதமான போதையிலாழ்ந்த மனநிலைக்கு கொண்டு சேர்த்தது என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூற முடியும்.

     பயிற்சி முகாம் முடிவாக “திக்ஷாந்த சமாரோக” என்னும் நிகழ்ச்சி நடந்தது. இது சங்கம் என்று சொல்லும் கணமே இதயத் துடிப்புகளில் கரைவதற்கு அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சியாகும். ஒரு மணிநேரம் நடந்த நிகழ்ச்சியில் ரத்தினநிறத் திலகமிட்டு இனிப்பு பதார்த்தங்களை தின்று பிரிந்தோம். பிறகு மதுரை மீனாட்சியம்மன் கோயில் சென்று திரும்பும் போது சாலையோர வியாபாரிகளான நான்கு முஸ்லிம்களை தண்டாவினால் தாக்கி நிலைகுலையச் செய்து வீழ்த்தியதில் நானும் பங்காளியானேன். முஸ்லிம்களான அவர்களை கொல்ல வேண்டுமென்ற வெறி எனக்குள் தோன்றியது. ஏதோவொரு சுயம் சேவகன் விலை பேரம் பேசியதில் ஏற்பட்ட வாய்த் தகராறு தான் இந்த மோதலுக்கான துவக்கமானது. அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அந்த பகுதிவாசிகள் சிலர் முன்வந்தார்கள். வண்டியிலேற்றும் போது தமிழில் ஏதேதோ உரக்கக் கூறிக்கொண்டே சென்றார்கள். அந்த நான்கு வியாபாரிகளின் கடையிலுள்ள மொத்தப் பொருட்களையும் நாங்கள் சூறையாடினோம். எனக்கு மயிலுடன் இருக்கும் முருகனின் உருவச்சிலை கிடைத்தது. நான் அந்தச் சிலையுடன் தான் வீடு வந்து சேர்ந்தேன்.

நான் ஊரில் இல்லாத நாட்களில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அம்மா என்னிடம் கூறினார்கள். இரவு நேரங்களில் பல இடங்களிலிருந்தும் பயங்கர வெடிச்சத்தம் கேட்பதாகவும் கூறினார்கள். இரத்தத்தின் வாசம் பரவிய குருதிக்களத்தை அமைத்துத் தான் எனது ஊர் என்னை வரவேற்றது. கலவரத்தினால் ஊரே முற்றிலுமாக மாறிபோய் விட்டதென்று புரிந்து கொண்டேன். முக்கிய பயிற்றிவிப்பாளர் மற்றும் பாதுகாவலர் ஆகிய பொறுப்புகள் இருந்ததனால் ஓ.டி.சி முடிந்த பிறகு அந்தப் பொறுப்புகளிலேயே தொடரும் படி சங்கம் எனக்கு அறிவுறுத்தியது. ப்ரி டிகிரி படிப்புக்கு(PUC அல்லது இப்போதைய +2 படிப்புக்கு ஈடானது) பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தேன். ஊரில் நிலைமை மோசமானதைத் தொடர்ந்து படிப்பை முடிக்க முயற்சி செய்யாமல் எர்ணாகுளத்தில் உள்ள எம்.பி டைஸ் கெமிக்கல்ஸ்(MP Dyes Chemical) என்ற நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். அதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் பிராந்திய அலுவலகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, மாதவ நிவாசுக்கு (பிராந்திய காரியாலயத்தின் பெயர்) வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டேன். அங்கிருந்தபடியே காரியாலய பிரமுக்(அலுவலக செயலாளர் புருஷு அண்ணனின் உதவியுடன் ப்ரி டிகிரி, தேர்வெழுதி தேர்ச்சி பெறவும் தொடர்ந்து இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளை தொலைதூரக் கல்வி முறையில் படிக்கவும் வ்யவஸ்தா பிரமுக்(கொடுக்கல்-வாங்கல் போன்றவைகளை கவனிக்கும் சங்க பொறுப்பாளர்) மோகன்ஜி அவர்கள் அறிவுறுத்தினார்.  அதன்படி எனக்கு மாதவ நிவாசில் உள்ள சேவா பிரிவில் தாங்கிக்கொள்ள அனுமதி கிடைத்தது. அவ்வாறு சுதேசி விஞ்ஞானத்தில், ஜெயன் அண்ணனின் உதவியுடன் வேதகணிதப் பாடப்பிரிவில் சேர்ந்தேன்.

    ஒரு வருடத்திற்கான அடிப்படை படிப்பும், ஒன்றரை வருடத்திற்கான மேம்படுத்தப்பட்ட உயர்படிப்பும் வேத கணித பாடத்திட்டமாகும். கணக்கில் அபார நிபுணத்துவம் பெற்ற திரிவிக்கிரமன் சார், விஜய குமார் சார், ஹரிதாஸ் சார், ஹைதராபாத்தில் உள்ள நரேந்திர சர்மா சார் ஆகியவர்களின் வகுப்புகள் எனக்கு கணித தத்துவங்கள், எந்த குழப்பதிற்கும் இடமளிக்காத வகையில் எளிதானவையென்று தோன்ற வைத்தது. இந்த இரண்டு படிப்புகளையும் முடித்ததோடு, பாஸ்கராச்சரியரின் ‘லீலாவதி’, ஆரியப்பட்டரின் ‘ஆரியப்பட்டீயம்’, வராகமிகிரனின் ‘ப்ருகத் சம்கிதா’, ஸ்ரீதரச்சாரியாரின் ‘தந்திர சம்கிரகம்’ முதலான அதிசயத்திலாழ்த்தும் பண்டைய கணித நூல்களை மனப்பாடம் செய்து கொண்டேன். உண்ணிக்கிருஷ்ணன் சாரிடம் வேறு சில படிப்புகளையும் மேற்கொண்டேன்.

இந்த படிப்புகள் முடிந்தவுடன் கேரளத்தில் ஏதாவது கிறிஸ்தவ முஸ்லிம் பிரிவினர் அதிகமாக உள்ள அல்லது அப்பிரிவினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் எப்படியாவது உள் நுழைந்துவிட வேண்டுமென்பது தான் அடுத்த திட்டம்.

அத்தகைய கல்வி நிறுவனங்களின் நடுநிலை, உயர்நிலை பள்ளிகளின் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் சென்று கணித வகுப்பெடுத்து, மாணவர்களை ஒவ்வொருவிதமான மாய வலைகளுக்குள் சிக்க வைக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும், வகுப்பு முடியும் தருவாயில் எல்லா மாணவர்களின் கைகளிலும் முகவரி எழுதுவதற்கான படிவத்தைக் கொடுப்போம். அதனை பூர்த்தி செய்து தரச் சொல்லுவோம் அல்லது எங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுத்தனுப்புவோம். குழந்தைகள் வீடுகளுக்குச் சென்றவுடன் இந்த கணக்குகளின் மாயாஜாலங்களைப் பற்றி சொல்லுவார்கள் என்பது உறுதி. பெற்றோர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளுவார்கள். அவர்களை லெட்சுமி பூஜை, வித்யா பூஜை, கோபாலார்ச்சனை போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்போம். அவ்வாறு இந்து ராஷ்ட்ரம் என்ற கற்பனையை நோக்கி அவர்களையும் சிந்திக்கச் செய்வோம். என்னுடைய வாழ்க்கையில் 500-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களில் வகுப்புகள் நடத்தியிருக்கிறேன். மேலே குறிப்பிடப்பட்ட பூஜைகளை நடத்துவதற்கென்றே பயிற்சி பெற்ற ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் கூட இருக்கிறார்கள். அப்பூஜைகள் உளவியல் ரீதியில் சிந்திக்கச் செய்யும் விதத்தில் இருக்கும். அவ்வளவு தூரம் பெரிய அளவிலான பயிற்சிகளை சங் பரிவார் அவர்களுக்கு அளித்திருக்கிறது. சாலக்குடியில் உள்ள கார்மல் உயர்நிலைப்பள்ளியில் தான், முதல்முதலாக எனது கணிதம் கற்பிக்கும் பணி ஆரம்பமானது. அங்குள்ள மாணவர்களை பதஞ்சலி வித்யாபீடம் என்ற சங் பரிவார் நிறுவனத்திற்கு வரவழைத்து பூஜையும் யோகாவும் கற்பித்தேன். 200 மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்ட அந்நிகழ்ச்சியில், இந்நாட்டிலுள்ள கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தேசத்துரோகிகளென்றும் அவர்கள் பாரத மாதாவை சின்னாபின்னமாக்கவே வந்திருக்கிறார்கள் என்ற உணர்வை மெல்ல உருவாக்கினோம். முதல் நிகழ்ச்சியே பெரிய வெற்றியடைந்ததாக சங்கம் கூறியது. இப்படி பல போலி பெயர்களிலும், போலி கல்வி நிறுவனங்களின் பெயர்களிலும் சங் பரிவாரின் இந்து ராஷ்ட்ரம் என்ற இலட்சியத்தை நனவாக்க, பல கல்வி நிலையங்களுக்குள்ளும் நுழைந்து, இத்தகைய செயல்பாடுகளை நடத்தினேன். இதிகாச புருஷனான ராமனின் ராஜ்ஜியத்தை நனவாக்குவதற்கு அல்ல. காம தாகமுடைய ராவணனின் ராஜ்யத்தை நனவாக்கவே. ராமனைக் கூட மாய வளையத்திற்குள் சிக்கவைக்கும் திறன் படைத்த மாரீசனைப் போல நான் மாறிக்கொண்டிருக்கிறேன் என்று மிகவும் தாமதமாகவே  உணர்ந்தேன்.

சுதீஷ் மின்னி

(தமிழில்: K.சதாசிவன்)

 

Related Posts