அரசியல்

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 5

தெய்யம் – ஆர்.எஸ்.எஸ்-சின் உரிமை கொண்டாடல்

     மடப்புரை திறப்பு நடத்துவதென்று ஆர்.எஸ்.எஸ் தீர்மானித்தது. கோவில் தலைவராக சுதாகரனையும் செயலாளராக தாசனையும் நியமித்துள்ளதாக சாகாவில் அறிவிக்கப்பட்டது. மார்ச்-22 ம் தேதி தெய்யம் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. 10 ரூபாய் வசூல் சீட்டுகளுடன்(கூப்பன்) சிறுவர்களாகிய நாங்கள் வீடு வீடாகச் சென்று வசூல் செய்தோம். தம்புரான் சாகாவுக்கு வந்து எல்லா வாக்குறுதிகளையும் எங்களுக்குத் தந்தார். பள்ளியில் 10-ம் பத்தாம் வகுப்புத் தேர்வு நடந்த நேரமென்பதால் சிறுவர்களாகிய எங்களுக்கு பள்ளியில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    ஒரு நாள் இரவு ஒரு தோட்டத்திலிருந்து கொஞ்சம் வாழைக்குலைகளை, சிலர் வாளால் வெட்டிக்கொண்டு வந்து எங்கள் முன்னே போட்டார்கள். அதைப்பற்றி கேட்டபோது மம்பறம் பிரபாகரன் நமக்குக் கொடுத்துள்ளார் என்று தாசன் அண்ணன் கூறினார். சுமார் 100  வாழைக்குலைகள், வாழைக்கூம்புகள் ஆகியவற்றை நாங்கள் எல்லோரும் சேர்ந்து மடப்புரையில் கொண்டு வந்து சேர்த்தோம். அவற்றை மம்பறம் லாலு அண்ணனின் வண்டியிலேற்றி கொண்டு சென்றார்கள். அதற்கடுத்த தினம் சாகாவுக்கு போலிஸ் வந்தது. சாகவுக்குள் போலிஸ் நுழையக்கூடாது என்று போலீசைத் தடுத்தார்கள். மம்பறம் பிரபாகரன் அண்ணனும் போலீசுடன் இருந்தார். அப்போது தான் அவர் அறியாமல் அவரது தோட்டத்திலுள்ள வாழைக்குலைகளை திருடியிருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரிந்தது.

  தர்மத்தை நிலைநாட்ட பல வழிகளிலும் பயணம் செய்ய வேண்டியது வரும் என்று காரியவாக் பொறுப்பிலுள்ள மனோகரன் சாகாவில் கூறினார். அதுபோலவே மின்னி சதானந்தன் அண்ணனின் தோப்பில் உள்ள தென்னை மரங்களிலிருந்து ஏராளமான தேங்காய்களும் இளநீர்க்காய்களும் வெட்டப்பட்டு வண்டியிலேற்றி கொண்டு செல்லப்பட்டன. அடுத்தநாள் சதானந்தன் அண்ணன் அழுதுகொண்டே சாகாவுக்குள் வந்து கேட்டவுடன், சந்திரன் அண்ணன் அவரது கன்னத்தில் அறைந்து அனுப்பி வைத்தார். காலையில் 5.30 மணிக்கு அனைவரையும்  மைதானத்திற்கு வரச் சொன்னதன் பேரில், அங்கே சென்றோம். தாசன் அண்ணன் அனைவரது கைகளிலும் ஒவ்வொரு பெரிய பையைத் தந்தார். கமலா எஸ்டேட்டிலிருந்து முந்திரி கொட்டைகளை சேகரித்துக் கொண்டு வரச் சொன்னார். நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் கொடுக்கப்பட்ட பைகள் நிறைய முந்திரிக்கொட்டைகளை சேகரித்துக்கொண்டு வந்தனர். இவையனைத்தையும் கோவில் சபையின் ஊழியர்கள் சாக்கில் கட்டி விற்றார்கள். அன்று சாகாவில் எல்லோருக்கும் பாயசம் கொடுக்கப்பட்டது. சிறுவர்களைப் பயன்படுத்தி முந்திரிக்கொட்டைகளைத் திருடினார்கள் என்ற விஷயம் பின்னர் தான் தெரிய வந்தது.

    தெய்யம் நடக்கவிடாமல் தடுப்போம் என்று கம்யூனிஸ்ட் காரர்கள் கூறியிருக்கிறார்கள் என்றும், அவர்களின் எண்ணத்தை தோற்கடிக்க வேண்டுமென்றும் எல்லா வீடுகளுக்கும் போய் தகவல் சொல்லப்பட்டது.  இதைகேட்ட அனைவரும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன், தெய்யம் நடத்த தீவிரமாக முன்வந்தார்கள். காவித்தோரணமும், குருத்தோலையும் பயன்படுத்தி ஆயித்தரை முழுவதும் அலங்கரிக்கப்பட்டது. வயதில் மூத்த ஏராளமான ஊழியர்கள் வாளேந்தி முன்னே நடக்க, அவர்களின் பின்னே எங்களைப் போன்ற சிறுவர்கள் அணிவகுத்து நடந்தோம். அச்சுதன் நினைவுப் படிப்பகத்தின் முன்பாக கணகீதம் முழங்கி நடந்து சென்றோம். அன்று இரவு ராஜன் அண்ணனை (ஆர்.எஸ்.எஸ் ஊழியர்) கூத்துபறம்பில் கம்யூனிஸ்ட் காரர்கள் கொன்றதாக செய்தி வந்தது. அசோகன் அண்ணன் உட்பட சிலர் சம்பவ இடத்திற்கு சென்றார்கள்.

   கூத்துபறம்பு மருத்துவமனை சவக்கிடங்கிலிருந்து பிணத்தைக் கொண்டு வரும்போது சி.பி.ஐ.எம்-ன் கூத்துபறம்பு பகுதிக்குழு அலுவலகத்தை அடித்து உடைத்துவிட்டதாக அசோகன் அண்ணன் எங்களிடம் கூறினார். அவரது காலில் உள்ள காயம் அதனால் ஏற்பட்டது என்றும் கூத்துபறம்பு அரசு ஆஸ்பத்திரியில் காயத்திற்கு தையல் போட்டதாகவும், அசோகன் அண்ணன் எனது அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். சாகாவில் 100-க்கும் மேற்பட்ட ஆட்கள் சேர்ந்தார்கள். முதன் முதலாக அன்று அக்கரையிலிருந்து பிரபு அண்ணனும் சசி அண்ணனும் சாகவுக்கு வந்தார்கள். ராஜன் அண்ணனின் பலிதனத்திற்கு (இயக்கச் செயல்பாடு மூலம் எதிரிகளால் ஏற்படும் மரணத்தை பலிதானம் என்று சங் பாரிவாரத்தினர் கூறுகிறார்கள். தியாகிகளை பலிதானி என்று கூறுகிறார்கள்) மௌனம் காத்து அவரது ஆத்மாவுக்கு மோட்சம் கிடைக்க பிரார்த்திக்க வேண்டுமென்று முக்கிய சிக்ஷக் ஆகிய நான் சாகவில் சொன்னேன். ராஜன் அண்ணனைப் பற்றி சஜீவ் அண்ணன் சாகாவில் பேசினார். அதன் பின்னர் தெய்யம் நடத்தியதற்கான வரவு-செலவு கணக்கை தாசன் அண்ணன் சமர்ப்பித்தார். வாழைக்குலை, தேங்காய், முந்திரி ஆகியவற்றின் கணக்கைப் பற்றி ராஜன் அண்ணனின் கேள்விக்கு தாசன் அண்ணனிடம் பதிலில்லை. அந்தக் கணக்கு சாகவுக்கு வெளியில் வைத்து சொல்லப்படும் என்று பின்னர் பதிலளித்தார். கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது. சாவதான் என்று கட்டளை பிறப்பிக்க தாசன் அண்ணன் என்னிடம் சொன்ன போது நான் அதற்கு உடன்பட்டேன் (சாவதான் என்றால் நேராக, மௌனமாக நிற்கவும் என்று பொருள்) சாகா நிகழ்ச்சிகள் பிரார்த்தனையோடு நிறைவடைந்தது. அதற்கு முன்பேயே தாசன் அண்ணன் சாகாவை விட்டு சென்று விட்டார்.


சத்தியனின் கொலை

    அடுத்தநாள் மதியம் சத்தியன் என்ற தடகள வீரர் கொல்லப்பட்டார் என்று சதானந்தன் அண்ணன் என்னுடைய வீட்டில் வந்து சொன்னார். அம்மாவிடம் கேட்ட போது “சத்தியன் நல்லவனில்லை” என்று கூறினார். இன்று சாகா வேண்டாமென்று சதானந்தன் அண்ணன் கூறினார். கங்கா அண்ணனின் கடையிலிருந்து பொருட்கள் வாங்க என்னிடம் கடைக்கு போகச் சொன்னார்கள். மின்னியில், கடைகள் இருக்கும் பகுதியில் நிறைய போலிஸ்காரர்கள் குவிக்கப்பட்டிருந்தார்கள். கங்கா அண்ணனின் கடை உட்பட எல்லா கடைகளும் மூடப்பட்டிருந்தன. நான் திரும்ப வீட்டை நோக்கி ஓடினேன். அன்று நாங்கள் போலீசுக்கு பயந்து தாமு அண்ணனின் வீட்டில் தான் தங்கியிருந்தோம். போலீஸ் வந்தால் சமாளிப்பதற்காக சுற்றிலும் ஊழியர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஊரெங்கிலும் போலீசார். பெரியவர்கள் யாரும் ஊருக்குள் இருக்க முடியாத நிலை. சாகா பயிற்சி நடத்த புருஷு அண்ணன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அச்சத்துடன் சாகா வகுப்பெடுத்ததை இன்றும் நான் நினைவு கூறுகிறேன். சாகாவின் சுற்றிலும் கூட போலீஸ் இருந்தது.

   அன்று சத்தியன் யாரென்று எனக்குத் தெரியாது. தடகள ஓட்ட வீரர் என்று மட்டும் தெரியும். அதனால் தான் அந்த கொலையைப் பற்றி எனக்கொன்றும் தெரியாது. நான் 10-ம் வகுப்பு படிக்கும் போது “அபிமன்யு” பாலகோகுலத்தின் காப்பாளரானேன். அதன் மூலம் எனக்கு இன்னொரு பொறுப்பு அதிகமாகக் கிடைத்தது. அந்த நேரம் நான் அசோகன் அண்ணனிடம் அந்தக் கொலையைப் பற்றி கேட்ட போது, அது சாதாரண விஷயமல்ல என்றும், நீ அறிந்து கொள்ள வேண்டியதில்லை என்றும் கூறினார். பிற்காலத்தில் இந்த வழக்கிற்கு போதிய ஆதரமில்லை என்று கூறி நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. அதற்கெதிராக சத்தியனின் அம்மா சமர்ப்பித்த மனுவை ஏற்று நீதிமன்றம் மறுவிசாரணை நடத்திய போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் குற்றவாளிகள் என்று தெரியவந்தது.  இந்தக் கொலை வழக்கில் சங்பரிவார் எதற்காக அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று விபாக் பிரச்சாரகரான வினோத் அண்ணனிடம் கேட்ட போது, நாம் நடத்துவது தர்ம யுத்தம் என்றும் அதில் பல விஷயங்களுக்கும் பதிலிருக்காது என்றும் என்னிடம் கூறினார்.

இந்த சம்பவத்தைப் பற்றி சுரு அண்ணன் இவ்வாறு கூறினார்:

  “சத்தியனின் குடும்பம் ஒரு சாதாரண ஏழைக் குடும்பம். கேரளத்திலேயே மிகவும் பிரபலமான தொலைதூர தடகள ஓட்ட வீரர்களில் ஒருவர் தான் சத்தியன். அவர் அதிகாலை 3 மணி முதல் ஊருக்குள்ளே ஓடி, சுமார் 30 கிலோமீட்டர் கடந்து பேரளசேரி மம்பறம் சந்திப்பை எட்டுவார். ஒருமுறை, அதிகாலை வேளையில் ஒரு வீட்டிலுள்ள குடும்பத் தலைவரான சுயம் சேவகர் வேலைக்குச் சென்ற பிறகு, அவரது வீட்டில் ஆர்.எஸ்.எஸ்-ன்  தலைவர் ஒருவர் (தாசன்) நுழைவதை, ஓடிக் கொண்டிருந்த சத்தியன் பார்த்துவிட்டார். அந்த தலைவருடன் ரகசிய உறவு வைத்திருந்த, அந்த வீட்டிலுள்ள ஆர்.எஸ்.எஸ் ஊழியரின்  மனைவி,  தாசன் தங்கள் வீட்டிற்குள் நுழையும் காட்சியை, சத்தியன் கவனிகிறார் என்பதைப் பார்த்துவிட்டார். சத்தியன் பார்த்து விட்டார் என்ற விஷயத்தை அந்த சங்கத் தலைவரிடம் அப்பெண்மணி கூறி எச்சரித்தார். அப்பெண்மணியிடம் ‘சத்தியன் பார்க்கும் பார்வை சரியில்லை’, என்று கணவனான சுயம் சேவகனிடம் கூறும்படி சொல்லிவிட்டு தாசன் அவ்வீட்டிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து அடுத்த நாள் அப்பெண்மணி கூறியதன் அடிப்படையில், சிலர் அவ்வீட்டின் அருகில் நின்று கண்காணித்தார்கள். சத்தியன் ஓடுவதற்கிடையில் அவ்வீட்டை கடக்கும் போது, முன்தினம் தான் கவனித்த விஷயத்தின் தொடர்ச்சியாக ஏற்பட்ட அனிச்சையான ஆர்வத்தில் அந்த வீட்டை கவனிப்பதை, அவர்கள் பார்த்தார்கள். அதன் படி சத்தியன் ஏதோ தீய நோக்கத்தில் பார்ப்பதாக முடிவு செய்து, அவரைக்  கொலை செய்ய வேண்டுமென்ற திட்டம் உருவாகியது. தொடர்ந்து உருவான திட்டப்படி சத்தியனை கொலை செய்யும்  முயற்சிகள் துவங்கப் பட்டன.  இந்த திட்டம் வெற்றிபெறுமா என்ற பயமும் சங்கத்தினருக்கு  இருந்திருக்கிறது. ஒருநாள் தினேசன், கணேசன் என்ற இரு காங்கிரஸ் ஆதரவாளர்கள் ‘இரவு சாகாவு’க்கு வந்து சுயம் சேவகர்களில் ஒருவரைக் குறிப்பிட்டு, “சொந்த சகோதரியிடம் தவறாக நடந்தவன்” என்று கூறினார்கள்.

    அதற்கு பழிவாங்கும் விதமாக தினேஷனை பேருந்திலிருந்து இறக்கி தாசன், ராஜன், சந்திரன் ஆகிய மூவரும் சேர்ந்து தாறுமாறாக வெட்டினார்கள். பலத்த காயங்களுடன் நீண்ட காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இவர்களின் நடுவே வாழமுடியாது என்ற பயத்தினால் அவர்கள் சங்பரிவார் ஆதரவாளர்கள் ஆனார்கள் இந்த கொலை முயற்சி உண்மையிலேயே சத்தியனை கொல்வதற்கான ஒத்திகை தான் என்று சுரு அண்ணன் கூறினார். அடுத்தநாள் மதியம் கூத்துபறம்பிலிருந்து வந்துகொண்டிருந்த சத்தியனை ஆயித்தரையில் வைத்து வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து இறக்கி கொலை செய்தார்கள் கோடாரியால் வயிற்றைப் பிளந்து, குடலை எடுத்து வெளியே போட்டார்கள் அதன்பிறகு, வயிற்றுக்குள் மண்ணை அள்ளிப்போட்டார்கள். இது ஒரு மிகக்கொடூரமான சம்பவமாகும். ஆயித்தரை ஒரு சிற்றூர் ஆகும். அனைவரும் ஏதோ ஒருவகையில் உறவினர்கள் ஆவர். ஒற்றுமையும் அமைதியும் நிறைந்திருந்த எங்கள் ஊரில் பயங்கரவாதம் தலைவிரித்தாடத் தொடங்கியது. ஒவ்வொரு கொண்டாட்டமும் சக்தியை வெளிபடுத்தும் இடமாக மாறிவந்தது. கழுகுகளைப் போல் இரவும் பகலுமாக இரைகளைத் தேடி அவர்கள் அலையத் தொடங்கினார்கள். பலத்த சிரிப்பும் உல்லாசங்களும் பாதைமாறிப் போய் ஆயித்தரை என்ற சிறு கிராமம் மரண வீடாக மாறியது. ஆங்கிலப் பத்திரிகையான இந்தியன் எக்ஸ்பிரஸ் உட்பட பல பத்திரிகைகளும் எங்கள் ஊரின் துர்ப்பாக்கிய நிலையை உலகுக்குச் சொல்லின. அமைதியின்மையின் கருநிழல் படர்ந்த ஊராக எனது ஊர் மாறியது. இல்லை அவர்கள் மாற்றினார்கள். இரவு நேரங்களில் பயங்கர வெடிச்சத்தங்களையும் வாளின் ஓசைகளையும் கேட்கமுடியும். ஆடும் கோழியும், மரவள்ளிக்கிழங்கும், வாழைக்குலையும் திருடு போவது அன்றாட  நிகழ்வுகளாக மாறின. இதற்கெல்லாம் பின்னால் இருப்பது ஆர்.எஸ்.எஸ் தான் என்று இயக்கத்திற்குள்ளேயே முணுமுணுப்புகள் கேட்கத் தொடங்கியது. ஊரிலேயே முதல் OTC பயிற்சி(பிரதம வர்ஷ சங்க சிக்ஷா வர்க்) முடித்த ஸ்ரீதரன் அண்ணன், தனது சொந்த சகோதரியிடம் தவறாக நடப்பதை நேரில்பார்த்து மனம் வெதும்பி, அற.எஸ்.எஸ்-லிருந்து விலகி, சிபிஐஎம்-ல் சேர்ந்து நீர்வேலி என்னும் இடத்தில் வசித்து வந்தார். இந்த ஒரு சம்பவம் இயக்கத்திற்குள் பெரிய விவாதமானது மாநிலத் தலைவர்கள் இது குறித்து விசாரணை செய்ய வந்தார்கள். மோகனன் என்ற பிரச்சாரகர் இப்பாடலை பாடினார்.

ஒன்றாகச் சேர்ந்தவர்கள் இடையில் திரும்பலாம்.

நன்றென்று சொன்னவர்கள் நாளை மாற்றியுரைக்கலாம்

தனது உற்ற சொந்தங்கள் தளர்ந்து நிலத்தில் வீழலாம்

ஆனாலும் சொல்லுவோம் உயர்ந்த சங்க மந்திரம்.

-சுதீஷ் மின்னி

(தமிழில்: K.சதாசிவன்)

 

Related Posts