அரசியல்

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 4

ஆர்.எஸ்.எஸ். என்னும் வடிவம்:

விராடனை  மாதிரியாக்கிய செயல் திட்டம்

      ஆர்.எஸ்.எஸ் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ள அதன் அமைப்பு வடிவத்தையும் இயக்க முறைகளையும் பற்றி அறிந்து கொள்வது தேவையான ஒன்றாகும். பிரதேசத்தின் தன்மைக்கேற்றவாறு  நான்கோ ஐந்தோ மண்டலங்களாக உருவெடுக்கும்.  அப்படி, ஏழோ எட்டோ மண்டலங்கள்  இணைந்தால் ஒரு தாலுகாவாக கருதப்படும். ஏழு அல்லது எட்டு தாலுகாக்கள் ஒரு “விபாக்” ஆகும் (மாவட்டம் என்பதன் சங் பரிவார் மொழி). கண்ணூர் மாவட்டம் என்பது சங் பரிவாரைப் பொறுத்த வரையில் இரண்டு மாவட்டங்களாகும்.  கண்ணூர் மற்றும் பைய்யனூர் மாவட்டங்கள் தான் அவை. என்னுடைய தாலுகா தலசேரியாகும். ஆனால் சங் பரிவார் பார்வையில், நான் கூத்துபறம்பு தாலுகாவைச் சார்ந்தவன். இவ்வாறு பதினெட்டோ பத்தொன்பதோ “விபாக்”கள்  சேர்ந்து “பிராந்தம்” (மாநிலம்) என்று வழங்கப்படும். கேரளம் ஒரு ‘பிராந்த’மாகும். “பிராந்த காரியாலயம்” (மாநில அலுவலகம்) கொச்சி எளமக்கரையில் உள்ள “மாதவ நிவாஸ்” ஆகும்.

 1.  கடா பிரமுக்:

 வெவ்வேறு இடங்களிலிருந்து ஆட்களைத் ஈர்த்து, அந்தந்த பகுதிகளில் உள்ள சாகாவுக்கு கொண்டு வருபவர்கள்.

 2.  முக்ய சிக்ஷக்:  சாகாவில் உள்ள முதன்மைப் பயிற்றுவிப்பாளர்.
 3.  சிக்ஷக்:  உதவி பயிற்றுவிப்பாளர்.
 4.  சாகா காரியவாக்:  சாகா நிகழ்ச்சிகளைப் பராமரித்து செயல்பாட்டை   நிலைநிறுத்துபவர்.
 5.  சேவா பிரமுக்:  சேவை சம்பந்தமான விஷயங்களைக் கவனிப்பவர்.

 

இது மண்டல அளவில் உள்ள பொறுப்புகள்

 1.  மண்டல் காரியவாக்: மண்டலச் செயலாளர்.
 2.  சக காரியவாக்:  உதவி மண்டலச் செயலாளர்.
 3.  மண்டல் சாரீரிக் பிரமுக்:  சாகாவின் உடற்பயிற்சிகளிலும் உதவி பயிற்றுனர் போன்ற விஷயங்களின் பொறுப்பாளர்.
 4.  மண்டல் பௌதிக் பிரமுக்:   கதை, விளையாட்டு போன்ற கருத்துரீதியான விஷயங்களுக்குப்  பொறுப்பாளர்.
 5.  மண்டல் சேவா பிரமுக்:   சேவை தொடர்பான          விஷயங்களுக்குப் பொறுப்பாளர்.
 6. மண்டல் சம்பர்க் பிரமுக்: தனித்தொடர்பு அதிகாரி.

தாலுகா அளவிலும் இது போலத்தான் பொறுப்புகள் வகைப்படுத்தப் பட்டிருக்கும்.

 

தாலுகா அளவில்:

தாலூக் சங்க சாலக்: 

   இதர பரிவார் இயக்கங்களையும், சமூகத்தையும், சாகா திட்டங்களையும், சங்கத்தின் திட்டங்களையும் உட்படுத்தி ஒருங்கிணைக்கும் பிரதான பொறுப்புகள் உள்ள, பிரணாம் வணக்கத்திற்குரிய தகுதிபடைத்த பொறுப்பாளர் ஆவார். சில தாலுகாக்களில் தாலுகா பிரச்சாரகர்கள் இருப்பார்கள். பிரச்சாரகர்கள் என்பவர்கள் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து முழுநேர செயல்பாட்டிற்காகவும் அனுப்பப்படுவார்கள். பிரச்சாரகர்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபடக் கூடாது. பிரச்சாரகர் பொறுப்பிலிருந்து விடுபட்டால் திருமண வாழ்க்கை நடத்த இயலும்.

மாவட்டப் பொறுப்புகள் பின்வருமாறு:

 1. ஜில்லா பிரச்சாரக்: மாவட்டப் பொறுப்பாளர்.
 2.  ஜில்லா வ்யவஸ்தா பிரமுக்: பொருளாதார ரீதியிலான கொடுக்கல்-வாங்கல்கள் நடத்துபவர்.

பிராந்திய மட்டத்திலும் மேற்கூறியது போலவே, பிராந்திய என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு, பிராந்த பிரச்சாரக், பிராந்த சேவா பிரமுக், பிராந்த வியவஸ்தா பிரமுக் போன்ற பொறுப்புகள் இருக்கும். இந்த பொறுப்புகளை வகிப்பவர்கள் முழுநேர செயல்பாட்டாளர்கள் ஆவர். மூன்று பிராந்தியங்கள் சேர்ந்து க்ஷேத்ரம்  என்று அழைக்கப்படும். கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மூன்றும் சேர்ந்து  ஒரு ஷேத்ரமாகும். அவ்வாறு சுமார் பத்து  க்ஷேத்ரங்கள் இணைந்தால் “அகில பாரதீய” என்று வழங்கப்படும். இங்கு பூஜனீய சர் சங்க சாலக் என்னும் பொறுப்பு மிகவும் பிரதானமான பொறுப்பாகும். அதற்கடுத்து சர் காரியவாக், சக சர் காரியவாக் போன்றவை உயர் பொறுப்புகளாகும். சர் சங் சாலக் என்னும் பொறுப்பு, இறந்தாலோ நோயாளியாகி கண வேடம் (ஆர்.எஸ்.எஸ் சீருடை தரித்த தோற்றம்) தரிக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ மட்டுமே மாற்றப்படுவதாகும். அகில இந்திய அளவில் உள்ள யாராவது ஒருவரின் பெயரை சர் சங் சாலக் பதவிக்கு முன்மொழிவது வழக்கம். டாக்டர் ஹெட்கேவார், குருஜி கோல்வால்கர், தேவாஸ், இராஜேந்திர சிங், சுதர்சனன், டாக்டர் மோகன் பகவத் போன்றவர்கள் இதுவரை சர் சங் சாலக் பதவிக்கு வந்தவர்கள் ஆவர். இப்போது மோகன் பகவத் இந்த பொறுப்பில் இருக்கிறார். முன் சொன்ன மற்ற அனைவரும் மரணமடைந்து விட்டார்கள். பிராந்தியப் பிரதிநிதி சபா என்பது ஜில்லா, விபாக் அளவில் உள்ளவர்களின் பிரதிநிதித்துவம் உள்ள சமிதியாகும், இதர பரிவார் இயக்கங்களுக்காக சங்கம் கொடுக்கும் பிரச்சாரகர்களும் இந்த சமிதியில் இடம் பெறுவார்கள். மாநில பொறுப்பில் உள்ளவர்களின் சமிதியும் உண்டு. வருடத்திற்கு ஒருமுறை கூடும் பைடக்-க்கு (கூட்டம் என்பதைக் குறிக்கும் சங் பரிவார் மொழி) “காரியகாரி” என்று கூறுவார்கள்.

  அகில பாரதீய பிரதிநிதி சபா என்பது, முன்பு சொன்னது போல பிராந்திய, க்ஷேத்திர காரியகர்த்தாக்கள் மற்றும் விசேஷ அழைப்பின் பேரில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள்(இவர்களை “சதஸ்யர்”கள் என்று சங் பரிவார் மொழியில் அழைக்கிறார்கள்) ஆகியவர்களை உள்ளடக்கியதாகும். வருடத்தில் ஒருமுறை நடக்கும் இந்த சமிதியின் கூட்டத்தை, “அகில பாரதீய காரியகாரி” என்று அழைக்கிறார்கள். சங்கத்தின் அந்தந்த வருடச் செயல்பாட்டைப் பற்றி பரிசீலிக்கும் இந்தக் கூட்டத்தில்(இரகசிய கூட்டம்) சாணக்கியனின் அர்த்த சாஸ்திரத்தில் கூறப்படுகின்ற விஷயங்களை இன்றைய செயல்பாட்டுக்கு உதவும் தந்திரங்களாக வடிவம் கொடுக்கிறார்கள். அகில பாரதீய பிரதிநிதி சபையில் 2 சதவிகிதம் மட்டுமே தலித் பிரிவைச் சார்ந்தவர்கள் இருப்பார்கள். நான் சொல்லும் சில பெயர்கள் தெளிவாக புரியவேண்டும் என்பதற்காகவே அமைப்பின் நிர்வாக உள்கட்டமைப்பைப் பற்றி இங்கு விவரித்துள்ளேன்.

 

தாக்குதல்களும் திட்டங்களும்

    சிறுவயதிலேயே நான் பிராதன பயிற்றுவிப்பாளராகி விட்டேன் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அது போலவே எனது மூத்த சகோதரர் “இரவு சாகா”வின்(17 வயதுக்கு மேல்  உள்ளவர்களுக்கான சாகா வகுப்புகள்) பொறுப்புக்கு அமர்த்தப்பட்டார். “இரவு சாகா” மாலை 7 மணி முதல் 8 மணி வரை நடக்கும். முக்கிய சிக்ஷக் சசி அண்ணன் ஆவார். பல பிரச்சாரகர்களும் காரிய கர்த்தாக்களும் (செயலாளர்கள்) எங்கள் ஊருக்கு வழக்கமாக வருவதுண்டு. ஒருமுறை தொக்கிலங்ஙாடி என்ற இடத்திலுள்ள வல்சன் அண்ணன்(அன்றைய தாலூக் காரியவாகக்) ராஜன் அண்ணன்(தாலூக் சாரீரிக் பிரமுக்)வடகரையிலிருந்து வினீதா(பெண் ஊழியர்) ஆகியோர் எங்கள் ஊருக்கு மாலைவேளையில் வந்தது எனக்கு நினைவில் உள்ளது. அன்று இரவு சாகா பயிற்சி முடிந்து எனது வீட்டிற்கு பின்புறமுள்ள குன்றின் மிக உயர்ந்த பகுதியிலுள்ள காட்டுக்குள் பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் அவர்கள் ஒன்று கூடினார்கள். தாசன், மனோகரன், சஜீவன், சந்திரன், சுதாகரன், ஆகியவர்களோடு நானும் எனது அண்ணனும் வட்டவடிவில்  அமர்ந்திருந்தோம். வல்சன் அண்ணன் தான் விவாதத்தைத் துவக்கினார்.  மாவட்ட சங்கத்தின் வழிகாட்டுதல் படி வந்துள்ளதாகவும் 1984-ம் வருடம் கோச்சேக்கண்டி இராகவன் என்ற கம்யூனிஸ்ட் ஊழியரை வெட்டிக் கொன்றது, இங்குள்ள இரண்டு சுயம் சேவகர்களின் மனதில் தோன்றிய உபாயத்தால் உருவான திட்டம் என்றும் அதில் பங்கேற்ற தாசன் அண்ணனுக்கும் சந்திரனுக்கும் நிர்ணயிக்கப்பட்ட 15000 ரூபாய் பரிசாக வழங்குவதாகக் கூறி அந்த பணத்தை அவர்களிடம் வழங்கினார். நமது அமைப்பு, மார்க்சிஸ்ட் தீவிரவாதிகளின் சவால்களை, உயிரைக் கொடுத்தாவது எதிர்கொள்ள வேண்டுமென்றும், தொடர்ச்சியான தாக்குதல்கள் தான் நமது முறை என்றும் விளக்கப்பட்டது.

   இதனைக் கேட்டுகொண்டிருந்த தாசன் அண்ணன், “ஆயித்தரையிலும் நிலைமை மோசமாகிவிட்டது. 1980-ல்  ஆயித்தரை மடப்புரை தெய்யம் (கண்ணூர் பகுதிகளில் கோவில்களில் நிகழ்த்தப்படும் ஆட்டக்கலை) தொடர்பாக நடந்த பிரச்சனையில் நாம் அவர்களுக்குக் கொடுத்த தாக்குதலால் பிரச்சனை இல்லாமல் ஆனது. இப்போது விவசாயிகள் சங்கம் தான் தம்புரானுக்கு(நம்பூதிரி ஜாதியை சேர்ந்த நிலவுடைமையாளர்) எதிராக நிற்கிறார்கள். இந்தப் பிரச்சனைக்காக கம்யூனிஸ்ட் காரர்கள் களத்தில் இறங்கி இருக்கிறார்கள். இந்த ஒரு பிரச்சனைக்கும் ஒரு முடிவு ஏற்படுத்தத் தான் நாம் இங்கே வந்திருக்கிறோம். விவசாய நிலம் விவசாயிகளுக்கே என்ற சட்டம் தவறானது. ஆயித்தரை பகுதியில் நதிக்கரையில் இருக்கும் நிலத்தை தம்புரானுக்கே கொடுக்க வேண்டும். அந்த போராட்டத்திற்கு தலைமை தங்குகின்ற கல்லி பாலகிருஷ்ணனை(அன்றைய சி.பி.ஐ.எம் பகுதிக்குழு உறுப்பினர்) வாய்ப்புக் கிடைத்தால் கொலை செய்து விட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. தம்புரான் மீது தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதாகக் கூறி அவரது இல்லத்தை(நம்பூதிரிகளின் வீடுகளை இல்லம் என்று தான் அழைப்பார்கள்) சுற்றிலும் ஆட்களை காவலுக்கு நிறுத்த வேண்டும். தம்புரானுக்கும், அவருக்குப் பிடித்தமானவர்களுக்கும் நம் மீது நல்லெண்ணம் உருவாகும். அவ்வாறு ‘மக்கள் கூட்டமைப்பு’க்கு தெய்யம் நடத்த விட்டுக்கொடுக்கப்பட்டிருக்கும் தம்புரானின் மடப்புரையை நாம் கைப்பற்ற வேண்டும். பள்ளிக்கூட மைதானத்தை ஒட்டியிருக்கும் நிலம் நமது அமைப்பின் ஆயித்தரை பகுதிச் செயல்பாட்டுக்கு உகந்ததென்றும், அதன் சிறுபகுதியை நமது மாவட்ட அறக்கட்டளையின் பெயருக்கு பதிவு செய்து வாங்கிக் கொண்டு அவ்விடத்தில் ஒரு படிப்பகம் அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

    ஆயுதங்கள் நம்மிடம் குறைவாக உள்ளதாக ராஜன் அண்ணன் எடுத்துக் கூறிய போது, வாளும் கோடாரியும் அதிகாலையில் தொக்கிலங்ஙாடியில் உள்ள புருஷுவின் வீட்டிலிருந்து எடுத்து தருவதாகவும், இனிமேல் வெடிகுண்டு தான் நமது மிகப்பெரிய ஆயுதமென்றும் கூறப்பட்டது. வெடிகுண்டு தயாரிப்பைக் கற்றுக்கொள்ளவே அன்றையதினம் அங்கு அந்த கூட்டம் நடந்தது. இரண்டு பைகளிலிருந்து கொஞ்சம் சணல் நூல், பல்ப், ஆணி, கறுப்பு நிறத்திலுள்ள தூள் ஆகியவற்றை வெளியே எடுத்தார்கள். புருஷு அண்ணன், எங்களிடம் வீட்டிற்கு செல்லும்படி கூறினார். வானொலியில் கதகளி பாட்டு துவங்கும் போது, உங்கள் வீட்டிலிருக்கும் வினீதா அக்காவை, இங்கே அனுப்பி வைய்யுங்கள் என்றும், சீக்கிரம் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும் கூறினார். நாங்கள் அது போலவே செய்தோம். அன்றிரவு பயங்கர வெடிச்சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து நாங்கள் அதிர்ச்சியுடன் எழுந்தோம். மறுநாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது, தாத்தா பெரிய கத்தியுடன் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார் ஏனென்று கேட்ட போது, கம்யூனிஸ்ட் காரர்களிடமிருந்து தம்புரானின் உயிருக்கு அச்சுறுத்தல் வந்துள்ளதாகவும், அவரைப் பாதுகாக்க வேண்டியது இந்த ஊரின் முக்கியத் தேவை என்றும் கூறினார். நான் சாகாவுக்கு சென்ற போது, இன்று முதல் சாகா பயிற்சிகள் தம்புரானின் வீட்டின் முன்புறத்தில் தான் நடத்த வேண்டுமென்று என்னிடம் சுனி அண்ணன் கூறினார். அதன்படி நாங்கள் அங்கே சென்ற போது தாசன் அண்ணன் தாத்தா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆயுதங்களுடன் தம்புரானின் வீட்டைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்தார்கள். தம்புரானையும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளையும் வீட்டிற்குள்ளேயே இருந்து கொள்ளும்படி கூறி இருந்தார்கள். தேவன் அண்ணன் (தம்புரானின் உறவினர்) சாகா பயிற்சி நடத்துவதற்கான இடத்தை எங்களுக்குக் காண்பித்தார். நான் விசில் ஒலி எழுப்பி சாகா பயிற்சிகளைத் துவக்கினேன். மூன்று தினங்களுக்கு அங்கே தான் சாகா வகுப்புகள் நடந்தன. சாலையில் நடந்து சென்ற மார்க்சிஸ்ட் ஊழியர்கள் கல்லெறிந்து விரட்டப்பட்டார்கள்.

  இந்த சம்பவம் ஊரில் அமைதியின்மையை விதைத்தது. மோதல் தன்மையை உருவாக்கியது. பலரும் பயத்தினால் வேலைக்குச் செல்லவில்லை. விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவது ஊர் நலத்திற்கு மிகவும் தேவை என்றும், அதற்காக ஆர்.எஸ்.எஸ்-ஐ வலுப்படுத்த வேண்டுமென்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் ஆதரவாளர்களாக இருந்த மின்னி ராஜன், காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்த கோடாயி கோபாலன் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ்-சில் இணைந்தனர். ஆர்.எஸ்.எஸ் மாவட்டப் பொறுப்பாளர் சந்திரசேகரன் அண்ணன், ரஞ்சித் மோகனன் ஆகியோர் சாகாவுக்கு தம்புரானை அழைத்து வந்தார்கள். எல்லோரும் தம்புரானுக்கு பிரணாமம் செய்தோம்(வணங்கினோம்). அவ்வாறு சாகாவில் வைத்து 10 சென்ட் நிலத்தை ஆர்.எஸ்.எஸ்-க்கு அளிப்பதாக தம்புரான் அறிவித்தார். பொதுவாக அமைதியாக இருக்கும் இடங்களில் நிம்மதியின்மையை உருவாக்கி கலவரத்தை வளர்க்கும் ஆர்.எஸ்.எஸ் தந்திரத்தின் மாதிரி தான் இச்சம்பவம்.

  விவசாயிகள் போராட்டம் நீதிமன்றம் மூலமாக தீர்க்கப்பட்டு, விவசாயிகளுக்கே நிலம் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் சங் பரிவார் இதைப் பயன்படுத்தி தங்கள் இலட்சியத்தையும் நிறைவேற்றிக் கொண்டார்கள். பின்னர் தான், அந்த 10 சென்ட் நிலத்தில், ஹெட்கேவார் ஸ்மிருதி மந்திரம்(நினைவு இல்லம்) உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வயலும் பாகம் என்ற பகுதியில் நடந்து வந்த சாகா, முத்தப்பன் மடப்புரைக்கு மாற்றப்பட்டது. மக்கள் கூட்டமைப்பு நடத்தி வந்த மடப்புரையை “மடப்புரை-க்ஷேத்ர சம்ரக்ஷண சமிதி”க்கு (மடப்புரை-கோவில் பாதுகாப்புக் குழு) கொடுத்த போது பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

-சுதீஷ் மின்னி

(தமிழில்: K.சதாசிவன்)

 

Related Posts