அரசியல்

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 11

நாக்பூரை நோக்கி:

    சுதேசி அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர் ஜெயனுடன் நைபுண்ணிய வர்க்(ஆர்.எஸ்.எஸ்-ல் முக்கியமானவர்களுக்குக் கொடுக்கும் ரகசிய குணமுள்ள பயிற்சி கூட்டம்) பயிற்சிக்கு நாக்பூருக்கு போக வேண்டுமென்று வ்யவஸ்தா பிரமுக் மோகன் ஜி கூறினார். அது 7 தினங்கள் கொண்ட பயிற்சியாகும். இரயில்வேத் துறையில் அமைப்புக்கு செல்வாக்கு உள்ளதால் பயணச்சீட்டுகள் வெகுவிரைவாக ஏற்பாடு செய்ய முடிந்தது. இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட வகுப்பில் தான் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது(எர்ணாகுளம்- புனே எக்ஸ்பிரஸ் இரயில்). அவ்வாறு நானும் ஜெயன் அண்ணனும் இரயிலில் ஏறி உட்கார்ந்த போது தான், இயக்கப்பணிக்காக எனது வாழ்வில் நான் செய்த தந்திரங்களைப் பற்றி அங்கே கூற வேண்டியிருக்கும் என்று அவர் என்னிடம் கூறினார். மலையாளத்தில் எழுதினால் போதுமென்றும் இந்தியில் மொழிபெயர்க்க, அங்கே சுயம் சேவகர்கள் உண்டு என்றும் கூறினார். அவர் தந்த குறிப்பேட்டில், நான் எனது இயக்க செயல் தந்திரங்களை எழுதினேன். புனே  காரியாலயத்திலிருந்து தான் நாக்பூருக்குச் சென்றோம். சங்கத்தின் மிகப்பெரிய செயல் அலுவலகம். நூற்றுக்கணக்கான ஏக்கரில் பரவிக் கிடக்கின்ற சங்க அலுவலகம். ஒவ்வொரு சங்க சுயம் சேவகனின் மனதிலும் உயிர்த்துடிப்பாக இருக்கும் டாக்டர் ஜியின்(ஹெட்கேவார்) நினைவகமே அது. பெரிய அளவிலான நிறைய கட்டிடங்கள், கல்வி நிலையம், பயிற்சி மைதானம் ஆகியவை அமைந்திருக்கின்றன. வேறு விததில் சொல்வதானால் அகில இந்திய சங்க தலைமையகம். எல்லாமே இந்தியில் தான் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. “நான் இந்தியில் பயங்கர திறமைசாலி” என்பதால் ஜெயன் அண்ணன் தான் ஒவ்வொன்றிற்கும் அர்த்தம் சொல்லித் தருவார். பெயரெல்லாம் எங்கேயோ போய் பதிவு செய்தோம். தாங்கவே முடியாத வெயில் காலம். பெரிய வெங்காயத்தை வெட்டி ஒரு பாத்திரத்தில் வைத்திருந்தார்கள். அதைச் சாப்பிட்டால் சூடு தணியும் என்று ஜெயன் அண்ணன் கூறினார். நான் அவ்வாறே செய்தேன். குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துவக்க நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. பையா ஜி  ஜோஷி தான் நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த வர்த்தகப் பிரமுகர்கள் அந்த சபையில் வீற்றிருந்தனர். தற்போதைய முக்கிய தொழில் அதிபரான அதானியும் அன்று சபையிலிருந்தார். அவர் நிகழ்ச்சியில் யோகா செய்து காண்பித்தார். ‘அவர் தான் அதானி’ என்று ஜெயன் அண்ணன் தான் எனக்கு சொல்லித் தந்தார். துவக்க நிகழ்ச்சி முழுவதும் இந்தி என்பதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. மொழிபெயர்ப்பு செய்யும் சுயம் சேவகர்கள் துவக்க நிகழ்ச்சியின் போது இல்லை. துவக்க நிகழ்ச்சிக்குப் பிறகு வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு தனித் தனியே இடம் ஒதுக்கினார்கள். அங்குதான் விவாதங்கள் நடக்கும். 6 மணிக்கு சங்கஸ்தான் இருக்கிறதென்று கூறினார்கள். மற்ற விஷயங்கள் புரியவில்லை என்றாலும் சங்க மொழியில் கூறுவதை உள்வாங்க முடியும் என்பது தான் சுயம் சேவகனின் திறமை. “கயா” என்ற அறையில் வைத்து தான் விவாதம் என்று கூறியதையடுத்து நான் அங்கு சென்றேன். சுமார் 25 பேர் கேரளத்திலிருந்து வந்திருந்தார்கள். ஐ.டி.சி பயிற்சி முடித்து வெளிநாடுகளில் அதிக சம்பளத்திற்கு வேலை செய்கின்ற 6 பேரும் இதில் உட்படுவர். வெவ்வேறு தொழிலதிபர்களின் தனி உதவியாளர்களும், மருத்துவர்களும், பொறியாளர்களும் அடங்கும் குழுதான் கேரளத்திலிருந்து பங்கேற்கிறதென்று அறிமுகம் செய்ததிலிருந்து புரிந்து கொண்டேன். விவாதத்தை நடத்த மேற்கு வங்கத்தில் முன்னர் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தான் வந்திருந்தார் என்று தெரிந்து கொண்டேன். அவரது பெயர் நினைவில் இல்லை. அவரும் இந்தியில் தான் பேசினார். அது மலையாளத்தில் மொழிபெயர்த்து சொல்லப்பட்டது. திருவனந்தபுரத்திலிருந்து வந்த மோகன்லால் என்பவர் தான் மொழிபெயர்ப்பாளர்.

   இந்தியாவில் திரிபுரா, வங்கம், கேரளா ஆகியவை கம்யூனிஸ்ட் செல்வாக்குள்ள பிரதேசங்கள் என்றும் அங்கு சங்க செயல்பாடுகள் பரவலாக இல்லை  என்றும் அவர் கூறினார். இப்பிரதேசங்களில் சங்கம் சக்தியடைந்தால் இந்தியாவில் இந்து ராஷ்ட்ரம் நனவாகுமென்றும், அதுவே ஒவ்வொரு சுயம் சேவகனின் கனவு என்றும் அவர் திரும்பத்திரும்ப கூறினார். வங்கத்தின் மண், இந்துத்துவ மறுமலர்ச்சிக்கு தலைமை வகித்த இணையற்ற மனிதர்களின் மண்ணாகும். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், தேவேந்திரநாத் தாகூர் போன்ற வியக்கத் தகுந்த ஆளுமைகளின் மண் அது. துர்க்காவை ஆதரிப்பவர்களின் மண். கலை, இலக்கியம், ஆன்மிகம் ஆகியவற்றால் உலகின் தலையாய நிலைக்கு உயர்ந்த மகத்தானவர்களின் மண். கேரளமும் அது போன்று தான். மறுமலர்ச்சி நாயகர்களான ஸ்ரீ நாராயணகுரு, சட்டம்பி சாமிகள், அத்வைத தத்துவத்தை அருளிய சங்கராச்சாரியார் நம்மைப் பொருத்தவரை வழிபடத்தகுந்தவர்கள் ஆவர். ஆனால் இந்த இரண்டு இடங்களிலும் நமது அமைப்பு உள்ளது. சாகா செயல்பாடுகளும் உண்டு. ஆனால் தீவிரமில்லை. ஆட்சியதிகாரங்களைக் கைப்பற்றும் நிலைக்கு நம்மால் வரமுடியவில்லை. அதற்கு, கம்யூனிசக் கருத்து பரவியிருப்பதே காரணம் ஆகும். இவைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பலவிதமான பாதைகளைக் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். வங்கத்தில் 10 வருடங்களில் கம்யூனிசம் துடைத்தெறியப்படும் என்று கூறினார். அதற்கு வெவ்வேறு பிரிவுகளாக ரகசிய இந்து அமைப்புகளின் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

  1. தொழில்:

    முக்கிய தொழிலதிபர்களின் அமைப்பு – சமூகத்தில் இவர்களுக்குள்ள செல்வாக்கை ரகசியமாக சங்க வளர்ச்சிக்கு பயன்படுத்துவது.

  1. அதிகாரிகள்:

   ஆட்சி நிர்வாக உதவிக்காக அமைக்கப்பட்ட அந்த மாநிலத்தின் அதிகாரிகளின் குழு.

  1. சாமியார்களின் அமைப்பு:

    ஆன்மீக சொற்பொழிவாளர்கள், சாமியார்கள் ஆகியவர்களின் குழு.

  1. ஆசிரியர்களின் அமைப்பு:

    பிரபலமான பல்கலைக்கழக கல்லூரி ஆசிரியர்களின் கூட்டமைப்பு.

  1. மருத்துவர்களின் அமைப்பு:

    பிரபலாமான மருத்துவர்களை உள்ளடக்கிய குழு.

  1. ஊடகக் குழு:

    பொருளாதார உதவி செய்து, மாநில ஆட்சியின் குறைபாடுகளை பெரிதுபடுத்திக் காண்பிப்பதற்கான ஊடக செயல்பாட்டாளர்களின் குழு.

  1. பண்பாட்டுக் குழு:

    கலை, இலக்கியம், திரைபடம் போன்ற துறைகளில் உள்ளவர்களின் குழு.

    சப்த சாகரங்களின் (ஏழு கடல்கள்) பெயர்கள் தான் இவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளன. வெளிபடையாக யாரும் சாகா செயல்பாடுகள் நடத்த வேண்டியதில்லை. ரகசியமாக, ஆட்சியின் தோல்விகளை பெரிதுபடுத்திக் காட்டி சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்தில் உள்ளவர்களையும், இவற்றைப் பற்றி அறிந்தவர்களாக மாற்றவேண்டும். இவ்வாறு சிறிய அளவில் துவங்கி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, இவர்களின் கூட்டத்தில் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தெரிவிக்க வேண்டும். இப்படி செய்யும் போது கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தகர்வுக்கு ஆளாகும் என்பது உறுதி என்று அவர் கூறினார். இந்த யுக்தியே வங்கத்தில் இன்று செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. கேரளத்திலும் இது போன்ற ரகசிய குழுக்களை உருவாக்கி செயல்படுத்துவதற்கு யோசனை செய்ய வேண்டும். பொது மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை ஏற்பட தாமதப் படுத்தும் செயலை செய்தாலே  போதுமானதாகும். அது அதிகாரிகளின்   குழுவால் இயலும். அரசு உதவிகளை தாமதப்படுத்துவதைப் போன்ற செயல்களைச் செய்யும் போது, பொது மக்களுக்கு உளவியல் பிரச்சனை ஏற்படும். அதனால் மக்கள் மனதில் மாற்றத்தின் தத்துவம் உருவெடுக்கும். அந்த மாற்றம் நமக்கு நன்மை பயக்கும். உதாரணமாக, அவர் இதைத் தான் குறிப்பிட்டார். இணையத்தின் பயன்பாடு எல்லா சுயம் சேவகர்களுக்கும் நன்மை தரும். இனி வரவிருப்பது இணைய யுகமாகும். நாட்டில் நடக்கும் எலலாவிதமான, இணையத்துறை சம்பந்தமான மாற்றமும் சுயம் சேவகர்களுக்கு சென்று சேர வேண்டும். நாம் கூறுவதை மட்டும் கேட்கின்ற நிலையை நோக்கி இளைஞர்களை மாற்றுவதற்கு இது உதவுமென்றும் கூறினார். பயிற்சியின் எல்லா தினமும் கேரளத்தில் ஒரு குழு அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்ந்தறிய வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் பெயர் பரிந்துரை மட்டும் இந்த நிகழ்ச்சியின்போது செய்யப்பட்டது. ரகசியக் குழுக்களை அமைப்பதற்கு, சென்னை நகரத்தை மையமாக வைத்துக்கொண்டால் போதுமென்று ஜெயன் அண்ணன் கூறினார். ஒவ்வொருவரும் தங்கள் செயல் அறிக்கையை அறிமுகப்படுத்தி பேசினார்கள். என்னுடைய செயல் அறிக்கையை ஒரு நகைச்சுவையை ரசிக்கும் தன்மையுடன் ஆர்வமாக  கவனித்தார்கள்.  கிட்டார் மாட்டிக்கொண்டு மேரி மாதா பள்ளிக்கு சென்றதும், அங்குள்ள எல்லா வகுப்புகளுக்கும் 4 தினங்கள் தொடர்ச்சியாக பாடம் கற்பித்ததும், காரியாலயத்தில் வைத்து அங்குள்ள மாணவர்களுக்கு வித்யா கோபாலார்ச்சனை நடத்தியதும் வெவ்வேறு பள்ளிகளுக்கு உள்ளே நுழைய, நான் நடைமுறைப்படுத்திய தந்திரங்கள் அனைவருக்குள்ளும் ஆர்வத்தைத் தூண்டியது. அட்டபாடியில் செயல்பாட்டை ஆரம்பித்தது எவ்வாறு என்று விவரித்தேன். சாலக்குடியில் நடத்திய செயல்பாடு குறித்து கூறினேன். இவையெல்லாம் மனிதசக்திக்கு மீறிய செயல்பாடுகள் என்பது அவர்களது கருத்து. ஒரு தவறிலிருந்து இன்னொரு தவறை நோக்கி பயணிக்கும், எண்ணம், என்னை அறியாமலேயே எனக்குள் வளர்கிறது என்பதை நானறிந்திருக்கவில்லை. பயிற்சியின் இறுதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தது ஒரு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆவார். இந்து என்பது ஒரு பண்பாடு என்றும், அந்த பரந்து விரிந்த பண்பாட்டை நிலைத்திருக்கச் செய்ய ஜாதிய சிந்தனைகளை அகற்றிட வேண்டுமெனவும் அவர் கூறியதாக ஜெயன் அண்ணன் கூறினார். நாங்கள் எர்ணாகுளத்திற்கு திரும்பி வந்த பிறகு,  நான் கண்ணூருக்குச் சென்றேன். விசால ஹிந்து மாநாடு(விசால=பரந்த) இந்தியாவெங்கும் பரவலாக நடந்து கொண்டிருந்த வேளையில் தான் சொந்த ஊருக்குச் சென்றேன். கூத்துப்பறம்பு விசால ஹிந்து மாநாட்டில் எனக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள். அதன் பிறகு தான் பால கோகுலம் மாவட்டத் தலைவராக பொறுப்பேற்றேன். தலசேரி அலுவலகத்தில் தான் தங்கியிருந்தேன். பின்னர் வடக்கு பொயிலூரை மையமாகக் கொண்டு செயல்பட வேண்டுமென்று சங்கம் கூறியது.  தலசேரியில் தங்கியிருந்த போது அலுவலகத்திற்கு காங்கிரஸ் தலைவர் ஒருவரின் உதவியாளர் சுரேந்திரன் ஜி அடிக்கடி வந்து செல்வார். அலுவலகத்திற்காக டைல்ஸ் வாங்குவதற்கான கடையை(கண்ணூர்) பரிந்துரைத்து, அங்கிருந்து வாங்கினால் போதுமென்றும் கூறினார். அலுவலகச் செயலாளர்(காரியாலய பிரமுக் என்பது சங்க மொழி) பிரமோதிடம் தான் அவர் பேசினார். இரவு 12 மணிக்கு பிறகு தான் வந்தார். சுதாகரன் ஜி(மேலே குறிப்பிடப்பட்ட, கண்ணூரிலுள்ள காங்கிரஸ் தலைவர்) தலசேரியிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருப்பதாகக் கூறிவிட்டு சென்றுவிட்டார். பிரமோத் தான் மீதிக்கதைகளையும் கூறினார். இந்த அலுவலகத்திற்காக லட்சக்கணக்கான ரூபாய் உதவி செய்துள்ளார். வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பலருக்கும் இவர் உதவி வருகிறார். அவர் விக்ரம்சாலில் சசியை கொல்ல திட்டமிட்டதாகவும் கூறினார். சங்கத்தின் ஆளல்ல என்றாலும் இந்துவத்தை நேசிக்கும் நபரென்றும் அவரைப்பற்றி பிரமோத் கூறினார். சங்கத்தின் வளர்ச்சியினால் மட்டுமே கண்ணூரில் சி.பி.ஐ(எம்) -ஐ தகர்க்க முடியுமென்று அறிந்து வைத்துள்ள காங்கிரஸ்காரர் தான் சுதாகரன். பிணராயியில் பிறந்த கம்யூனிஸ்ட் கட்சியை அங்கு வைத்தே வீரியமிழக்கச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறார். அதற்காக சங்கத்தின் உதவி இனியும் தேவையென்றும், மூன்று கொலைகளை நடத்தியது அவரது கருத்துப்பிரதிபலிப்பின் மூலம் தான் என்றும் கூறினார். இதோடு சங்கத்தின் காங்கிரஸ் எதிர்ப்பு என்பது வெறும் கபடவேடம் என்று எனக்குப் புரிந்தது. இனம்புரியாத வித்தியாசமான மனநிலைக்கு ஆட்பட்டவாறு உள்ள  எனது நிலையையும், என் முகத்தில் வெளிப்பட்ட உணர்வுகளையும் பார்த்த பிரமோத், எனது தோளில் தட்டி ஒரு கண கீதம் (ஆர்.எஸ்.எஸ் பாடல்) சொன்னார்.

துன்பம் மிகுந்த இடைஞ்சல்களே யானாலும்

கைவிடேன் இந்த பாதையை

போகா தெந்தன் கால்கள் வேறொரு பாதையில்

“பாதையல்ல இலட்சியமே முக்கியம்” என்ற கிருஷ்ண பதத்தைச் சொல்லி, நான் இரவில் படுத்துறங்கினேன். என்னுடைய மனதில் நீதியின் சிந்தனை அந்த இரவில்த் தான் தோன்றத் துவங்கியது என்று எண்ணுகிறேன். இனம்புரியாத ஒரு வித்தியாச உணர்வு எனது வேகத்தைக் குறைத்தது. இராமாயணத்தில் வரும் மாரீசனாக என்னை பற்றி நானே எண்ணினேன்.  சங்கம் என்பது காங்கிரசின் கூலிப்படையாகவா வேலை செய்கிறது என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நாட்களே தலசேரியில் தங்கியிருந்தேன். அங்கிருந்து பானூருக்குப் போகச் சொன்னார்கள். அப்படித்தான் நான் வடக்கு பொயிலூருக்கு வந்து சேர்ந்தேன். பானூர் ஒரு கலவரப் பகுதியாகும். ஏராளமான கொலைகள் நடந்த பூமி. எங்கும் மனித குருதியின் நெடி. அமைதியின் அறிகுறியே தோன்றாதது போன்ற தன்மை கொண்ட பூமிப்பிரதேசம். அது, ஓ.கே.வாசுவும், அசோகன் அண்ணனும் தீவிரமாக பி.ஜே.பி-யில் செயல்பட்டுவந்த வேளை. பாலகோகுலத்தின் செயல்பாட்டுக்காக சென்ற வேளையில் மூன்று தடவைகள் மட்டுமே நான் ஓ.கே. வாசுவைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாள் அவரது வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தேன். கண்ணூர் மாவட்டத்திலுள்ள இயக்கத்தின் இன்றைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. அங்கே நிதி முறைகேடுகளும் விபச்சாரமும் அமைப்பின் எல்லா பகுதிகளிலும் பரவலாக ஊடுருவி உள்ளதாக வாசு மாஸ்டர் எனக்கு நினைவுபடுத்தினார். மத்திய பொயிலூரில், பாடம் கற்றுக்கொடுக்கும் அமைப்பான “சரஸ்வதி க்ஷேத்ரம்” என்ற பெயரில் உள்ள  கல்வி நிலையத்தை, சட்டவிரோத ஆயுதத் தயாரிப்புக் கூடமாகவும், விபச்சார விடுதியாகவும் மாற்றிக்கொண்டிருப்பதை எண்ணி வாசு மாஸ்டர் மிகுந்த வருத்தம் கொண்டிருந்தார். இதையெல்லாம் கேள்விப்பட்டு நான் பயந்தேன். எங்கே துவங்க வேண்டும் எப்படித் துவங்க வேண்டுமென்று சொல்ல முடியாத நிலையில் இருந்தேன். நான் எங்கிருந்து துவங்கினேன்? மத்திய பொயிலூரில் சாகா நடக்குமிடத்திற்கு அருகிலுள்ள சாலையோர மாமரத்தடியில் வைத்து தான் துவங்கினேன் என்று தான் கருதுகிறேன். திலீபன் என்று ஒரு  சுயம் சேவகனிடம், சாகா வகுப்பு எப்போது நடக்கும் என்று கேட்டதற்கு,  எப்போதாவது தான் நடக்கும் என்று அவர் பதிலளித்தார்.  அது ஏன் என்று கேட்ட போது கம்பால் அடிக்கத் தெரிந்தால் போதுமா? எதிரிகளை வீழ்த்த கம்பால் அடிப்பதும் தண்டா பிரயோகமும் மட்டும் போதாது என்று கூறினார். அப்படியெனில், வெடிகுண்டு தயாரிக்கவும், ஆயுதங்களைச் சேகரிக்கவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்று எனக்குப் புரிந்தது. அன்று பானூரில் தாலுகா பிராச்சாரகராக இருந்தவர் ரதீஷ் அண்ணன், பின்னர் மாவட்ட பிரசாரகரானார். மூன்றாவது வருட ஓ.டி.சி-க்கு நியுக்தா பயிற்சி அளிப்பவராகவும் செயல்பட்டு வந்தார்.  உறுதியான உடற்கட்டும், நல்ல தோற்றப் பொலிவும் அமையப் பெற்றவர். அவர் மீது சுயம் சேவகர்களுக்கு மிகுந்த பயம் உண்டு. ரதீஷ் அண்ணன் 7 மணிக்கு மத்திய பொயிலூரில் வருவதாகச் சொல்லியிருந்தார். நான் அங்கே காத்திருந்தேன். ரதீஷ் அண்ணனும் கொஞ்சம் ஊழியர்களும், அங்குள்ள சங்கத்தின் கல்வி நிலையத்தில் பைடக்கிற்காக(கூட்டம்) வந்திருந்தனர். நானும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றேன். பள்ளியின் பரிதாப நிலை, ஊரில் நடக்கும் பொருளாதார அராஜகங்கள், கலவரநிலை போன்றவைகள் தான் பிரதான விஷயங்கள். “பணம் ஒரு பெரிய பிரச்சனை என்றும், அதை உருவாக்குவதற்கு தெரிந்துகொள்ள வேண்டுமென்றும், கோவில் செயல்பாடுகளில் இருக்கிறீர்கள் என்றால் அங்கிருந்து பணத்தைத் திரட்டக் கூடாதா?” என்ற ரதீஷ் அண்ணனின் கருத்திற்குள் “முத்தப்பன் மடப்புரை” மறைந்து கிடந்தது. மிகுந்த சொத்துக்கள் அந்த கோவிலுக்கு உண்டு. ஓ.கே. வாசு கோவில் குழுவிலிருக்கும் வரைக்கும் எதுவும் செய்ய முடியாது. அவரைக் கோவில் குழுவிலிருந்து மாற்ற வேண்டும். குழுவிலிருந்து அவரை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. அதனால், வேறு ஏதாவது வழிகள் இருந்தால் யோசித்துச் சொல்லச் சொன்னார்கள். கொஞ்சம் நேரம் எல்லோரும் யோசித்தனர். ஒரு சுயம் சேவகர் இந்த ஊரில் முஸ்லிம்கள் மிகவும் பலமாக இருக்கிறார்கள் என்றும், செல்வந்தர்களாக இருக்கிறார்கள் என்றும், ஏதாவது ஒரு பசுவை அறுத்து கோவில் வாசலில் போட்டு, அதன் மூலம் ஒரு கலவரம் நடத்த முடியுமானால், மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றும் கூறினார். கூட்டத்தில் கலந்துகொண்ட மீதமுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் திருடலாம் என்றும் யோசனை சொன்னார்கள். இந்த யோசனைகள் ஏதும் நடக்காதெனில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வர இருப்பதாகவும், போலி ரசீதுகள் அச்சடித்து, மிரட்டி பணம் திரட்ட முடியும் என்று ஒரு சுயம் சேவகன் கூறியதைக் கேட்டு பதறிப்போனேன். பாலகோகுலம் அமைப்பின் மாவட்டத் தலைவரான எனது முன்னிலையிலேயே இது போன்று பேசுகிறார்கள் என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சரியாகச் சொன்னால் வாசு மாஸ்டர் சொன்னதும், அந்தக் கூட்டத்தில் நடந்ததும் ஒரு போல எனது மனதில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. நான் இரவு வீட்டிற்கு சென்றேன். வீட்டில் இவ்விஷயத்தைக் கூறினேன். அதெல்லாம் விளையாட்டாகத் தான் சொல்லியிருப்பார்கள் என்று எனது அண்ணன் கூறினார். மறுதினம் காலையில் ராஜீவ் நாராயணன் என்ற மாவட்டப் பிராச்சாரகர் என்னைக் காண வீட்டிற்கு வந்து அழைத்தார். அரை மனதோடும் பயத்தோடும் நான் உடன் சென்றேன். இருசக்கர வாகனத்தில் தான் பயணம் செய்தோம். நான் முன்தினம் நடந்த விஷயங்களை அவரிடம் கூறினேன். “சுதீஷ் ஜி! இது கண்ணூர். மிதிபட்டு இறுகிப்போன மண்ணில் விவசாயம் செய்ய சில வழிமுறைகள் உண்டு.

“பகையும் வெறுப்பும் நஞ்சு கலந்த

கொடிய முட்கள் தாக்கும்போது

போர்களங்களில் சூடான குருதி ஒழுகும் போதும்

கைவிடமாட்டேன் இந்தப் பாதையை.”

என்ற பாடலைத் தான் அவர் பாடினார். “வடக்கு பொயிலூரில் ஒரு இராமாயணச் சொற்பொழிவு இருக்கிறது சுதீஷ் ஜி!”. நான் இராமாயணச் சொற்பொழிவு நடத்தவேண்டும் என்பதே, அவரது  இப்போதைய தேவை. மாலைநேர நிகழ்ச்சிக்கு சீக்கிரமாகவே சென்று சேர்ந்தோம். அந்நிகழ்ச்சிக்கு நல்ல முறையில் தயாரிப்பு வேலைகளை ஊழியர்கள் செய்து கொண்டிருந்தார்கள். எல்லோரையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். ரதீஷ் அண்ணனும்(பிராச்சாரகர்) வந்திருந்தார். என்னுடைய தோளில் தட்டி,”நேற்று பயந்தவாறு தான் வீட்டிற்கு போனீர்களா?”. நான், “இல்லை” என்று சொன்னேன்.லட்சியம் தான் சுயம் சேவகர்களை வழி நடத்த வேண்டுமென்ற உணர்வை எல்லோருக்குள்ளும் உருவாக்க வேண்டும். அப்படி உருவாவது நல்லது என்று எனக்கு அறிவுரை கூறினார். அங்குள்ள அனைவரும் பல்வேறு துறைகளில் தங்கள் திறமையை நிருபித்தவர்கள் ஆவர். வெடிகுண்டு தயாரிப்பு, வாள் நிபுணர், துப்பாக்கி நிபுணர் எனபது போன்ற வெவ்வேறு பிரிவுகளில் வல்லவர்கள். சொற்பொழிவு நிகழ்ச்சி ஆரம்பித்தது. உண்மை உணர்வுகளின் மூர்த்தியாக தோற்றமளிக்கும் மரியாதைக்கு உரியவரான இராமன், காமவயப்பட்ட உள்த்தோற்றம் கொண்ட இராவணன், மோகவயப்படாத சீதை இவர்களில் யாரிடமிருந்து துவங்க வேண்டுமென்று குழப்பம் அங்கே தோன்றியது. சீதை என்ற உண்மையைத் தேடி மார்பிலடித்து அலறி அழும் தாசரதியாகிய இராமனின் எண்ண ஓட்டம் அந்த சொற்பொழிவு நடக்கும் சபையிலிருந்த எனக்கு உண்டானது. நான் சொற்பொழிவைத் துவக்கினேன்.

    ஒன்றில் அரக்கர்களின் வடிவான இராவணனிலிருந்து தேவ வடிவான இராமனை நோக்கி அல்லது பிரகாசத்தின் விடிவெள்ளி போன்ற ஒளி வடிவமான இராமனில் துவங்கி இருளின் மொத்த உருவமான இராவணனை நோக்கி… இதில் ஏதாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுக்க ஊழியர்களிடம் நான் வேண்டினேன். புனிதமான பழைய பண்பாட்டின் வேரான இராமனின் மந்திரம் இந்தியாவின் ஆத்மாவாக இருந்ததோடு அதன் வேரறுந்து போகாமல் இருந்து வந்தது. மூடனாக இருந்த இரத்னாகரனை வால்மீகி என்ற தேவமுனிவராக மாற்றிய புனிதப்பெயர். அந்த மந்திரத்தை செய்கையிலும் குணத்திலும் கொண்டுவர வேண்டும். வாளை எடுத்துக் கொள்வதற்காக வானை நோக்கி கையை உயர்த்தும் போது, அந்த வாளால் நாம் கொல்லப்பட சிலநிமிடங்கள் போதும் என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும். இலட்சியம் முக்கியமானது தான், ஆனால் நதியை கடப்பதற்காக நதியை வற்றச் செய்வது கடினமாகும். அத்தகைய பாதைகள் இலட்சியத்தை அடைவதற்கு தடங்கல் அல்லவா என்று நான் சபையினரைப் பார்த்து கேட்டேன். கடல் நீரை முற்றிலுமாக அருந்தி முடித்த தவமுனிவர்கள் நமது நாட்டில் வாழ்ந்ததுண்டு. அதை நல்ல சினதனையோடு உள்ள வல்லமையினால் தான் செய்தார்கள். நாம் தேர்ந்தெடுத்த பாதையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். துன்புறுத்தலின் மூலமாக தர்மத்தை நிலைநாட்ட வேண்டுமா? துன்புறுத்தல் கோழைகளின் பாதையாகும். அகிம்சையே வீரர்களின் பாதை என்ற வார்த்தைகளுடன் நிறைவு செய்தேன். என்னுடைய புதிய செயல்பாட்டின் துவக்கத்தின் முதல் அத்தியாயத்தை அங்குதான் நான் எழுதினேன். நிகழ்ச்சிகள் முடிந்து கூட்டம் நடந்தது. இராமாயணச் சொற்பொழிவுக்காக ஒரு இராம ஆசிரமம் வேண்டுமென்ற கருத்து அனைவருக்கும் இருந்தது. அவசரமாக பாலகோகுலம் வகுப்புகளில் “குழந்தைகளிடம் இராமாயணம் வாசிப்பு” என்ற பெயரில் இயக்கமாக துவங்க வேண்டுமென்ற வேண்டுகோளை நான் முன்வைத்தேன். பின்னாட்களில் “குழந்தைகளிடம் இராமாயணம் வாசிப்பு”  என்ற தத்துவத்தின் மூலமாகத் தான் வடக்கு பொயிலூர், மத்திய பொயிலூர், செறுவாஞ்சேரி, சிராற்ற போன்ற பகுதிகளில் பாலகோகுலம் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. குற்றியேரியிலும் கல்லுவளப்பிலும் முன்பு பாலகோகுலம் வகுப்புகள் இருந்தன. பத்தாயக்குந்நு என்ற இடத்தில “கணிதம் இனிமை” என்ற பெயரில் பாலகோகுலம் வகுப்பு ஆரம்பிப்பதற்கான முயற்சி நடந்தது. அது அவ்வளவாக வெற்றி பெறவில்லை. “இராம ஆசிரமம்” என்ற கருத்து நல்லது என்று எனக்குத் தோன்றியதால், நான் அதை ஆதரித்தேன். ரசீது அச்சடித்து வசூல் செய்தோம். கட்டிட வேலை துவங்கியது. கொஞ்ச நாள் அங்கு இருந்துவிட்டு செறுவாஞ்சேரிக்கு போனேன். அங்கு போன போது தான் இரண்டு பிரிவுகளாக பிரிந்து, மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்தது. செறுவாஞ்சேரியிலும் சிராற்றயிலும் சங்க சுயம் சேவகர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் நிலைக் காண முடிந்தது. உண்மையில் நான் முள் கிரீடம் தரித்த மன்னனின் நிலையில் இருந்தேன். கல்லுவளப்பு, செறுவாஞ்சேரி நகரம், சிராற்ற, அத்வாறக்காவு ஆகிய 4 சாகாக்கள் செறுவாஞ்சேரியில் இருந்தது. பாலகோகுலம் வகுப்பு கல்லுவளப்பில் மட்டுமே இருந்தது. செறுவாஞ்சேரி நடு நிலைப் பள்ளியிலும், செறுவாஞ்சேரி உயர் நிலைப் பள்ளியிலும் வகுப்புகள் நடத்தினேன். அதன் மூலம் கிடைத்த தொடர்புகளைக் கொண்டு சிராற்றயில் பாலகோகுலம் வகுப்பு ஆரம்பித்தேன். எல்லா பாலகோகுலம் வகுப்புகளும் இணைந்து “வைகாசி மாலை” என்ற மாலைநேர  கலை நிகழ்ச்சியை சிராற்றயில் நடத்தினோம். நந்தன் அண்ணன் தான் முக்கிய சொற்பொழிவாளர். எல்லா சங்க செயல்பாட்டளர்களும் அங்கே ஒன்றிணைந்து நின்றனர். 1 மணிநேரம் நடந்த சங்கீத நிகழ்ச்சி, விழாவுக்கு சிறப்பு சேர்த்தது. ஏராளமானவர்களின் பங்கேற்போடு விழா நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகும் சங்கத்தில் நடந்து வந்த, தங்களுக்குள் மோதிக்கொள்ளும் போக்கு மட்டும் அப்படியே தொடர்ந்தது. அசோகன் அண்ணனுடன் தான் இவர்களுக்குப் பிரச்சனை. நான் அந்த பிரச்சனைகளில் தலையிட முயற்சிக்கவில்லை. நான் வடக்கு பொயிலூருக்கு திருப்பிச் சென்றேன். அங்கே பசு, ஆடு போன்ற ஏராளமானவைகள் திருடு போனதாக அறிந்தேன். இதெல்லாம் அப்பகுதியிலுள்ள சுயம் சேவகர்கள் இராம ஆசிரமத்தின் கட்டுமானப் பணிகளின் தேவைகளுக்காகத் திருடினார்கள் என்று, அன்றிரவு அவர்களே என்னிடம் தெரிவித்தார்கள். கொஞ்சம் நேரம் கழித்து சுதாகரன் அண்ணனும் சுனி அண்ணனும் அங்கு வந்தார்கள்.  எதற்கென்று கேட்டபோது சும்மா வந்ததாகக் கூறினார்கள். சந்தோஷ் அவர்களை அழைத்து ஏதேதோ கூறிக்கொண்டிருந்தார். வெடிகுண்டு செய்வதற்காகவும், ஹரீந்திரன் (சி.பி.ஐ.எம்) என்ற தோழரைக் கொலை செய்யவும் திட்டமிடத் தான் வந்துளார்கள் என்று நிதீஷ் என்னிடம் கூறினார். விளக்கோட்டூர் ராஜீவ் அண்ணன் இரவில் தான் அங்கு வந்து சேர்ந்தார். என்னை சிக்குவின் வீட்டிலுள்ள அலுவலகத்தில் படுக்க வைத்துவிட்டு, அலுவலகத்தின் மேல்பகுதியில், இவர்கள் அனைவரும் அமர்ந்தார்கள். அவர்களின் பேச்சில் வெடிகுண்டு தயாரிப்பு, ஹரீந்திரன் அண்ணனைக் கொலை செய்தல், மற்றும் பானூரில் உள்ள அனில் என்ற தோழரைக் கொலை செய்தல் என்பன போன்ற விஷயங்களும் இருந்தன. நீங்கள் எங்கள் பக்கம் நின்றாலே போதும் என்று அங்கிருந்தவர்களிடம் ரதீஷ் அண்ணன் சொல்லிக்கொண்டிருந்தார். அனால் அதற்குப்  பின்னர் என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது. மறுதினம் பத்தாயக்குந்நு கொங்கச்சிக்கு போனேன். அங்கே கோகுல தாசின் வீட்டில் தங்கினேன். அவ்வீட்டிலுள்ள சித்ரா அண்ணன் காலையில் மெயிலோம் சிவன் கோவிலுக்குச் சென்று பிரார்த்திக்கலாம் என்று கூறினார். அதிகாலை 4 மணிக்கு கோவிலுக்குச்  சென்றோம்.(முன்னர் இந்த கோவிலில் தினசரி பூஜை கிடையாது. சங் பரிவார் தான் கோவில் நிர்வாகத்தை நடத்துகிறது) கோவிலைத் திறந்த போது சிவனின் சிலையைக் காண்பதற்கு பதிலாக ஜிகிஷ் என்ற சுயம் சேவகனையும் உடன் ஒரு இளம் பெண்ணையும், அங்கே நாங்கள் பார்த்தோம். விஷயத்தைக் விசாரித்ததில் திருமணம் செய்ய விரும்புவதாக உறுதிபடக் கூறியவாறு, அங்கிருந்து அவர்கள் நடந்து வெளியேறினார்கள். கோகுல்தாசின் வீட்டில் தான் உணவு உண்டேன். அம்மா உணவு பரிமாறித் தந்தார்கள். சங்க செயல்பாடுகளைக் குறித்தெல்லாம் கேட்டார். கம்யூனிஸ்ட் காரர்கள் காலையில் துவங்கி, பிறரின் நோய்களைப் பற்றியும், ஓய்வூதியம், மருத்துவமனை உதவிகள், ரத்ததானம், அரசு உதவிகள், வங்கிக் கடனுதவிகள் என்றல்லாம் செய்யும் போது நீங்கள் மாலையில் சாகா செயல்பாடுகளுக்கு போகிறீர்கள். மனிதனைக் கொலை செய்யக் கற்றுக்கொடுப்பது நல்லாதா? இரவு நேரங்களில் எல்லோரும் வீடுகளில் தூங்கும்போது, நீங்கள் சுற்றித் திரிகிறீர்கள். ஊரில் எங்கும் விபச்சாரமும் திருட்டும் நடக்கின்றன. உங்களுடைய அமைப்பு, என்ன மாதிரியான அமைப்பு? என்று கேட்டு நிறுத்தினார். அம்மா வீட்டில் வந்தவர்களிடம் இப்படியெல்லாமா கேட்பது? என்றவாறு கூறி கோகுல்தாஸ் சமாதானப்படுத்தினார். அன்று மாலை சாகா வகுப்புகள் முடிவடைந்து வடக்கு பொயிலூருக்கு சென்றேன். அங்கு இராம ஆசிரம கட்டுமானப் பணிகள் நடக்குமிடத்திற்கு இரவில் தான் சென்று சேர்ந்தேன். பானூரிலுள்ள பலிதானியின்(ஆர்.எஸ்.எஸ் -ல் தியாகியை குறிப்பிடும் சொல்) மனைவியை அங்கே அப்போது பார்த்தேன். இரவில் இங்கே எதற்காக நிற்கிறீர்கள் என்று விசாரித்தேன். சும்மா தான் என்றவாறு சிக்குவின் வீட்டிற்கு தனது தாயைக் கொண்டுவிட வந்ததாகக் கூறி அங்கிருந்து சென்றுவிட்டார். அன்று நான் பிரசாந்த் அண்ணனின் வீட்டில் தான் தங்கினேன். மறுநாள் அதிகாலையில் காலைநேர சாகா வகுப்புக்கு மத்திய பொயிலூரில் நானும் நிகிலும் சேர்ந்து போய்க்கொண்டிருக்கும் போது, நான் மேற்குறிப்பிட்ட பலிதானியின் மனைவியுடன் கொஞ்சம் பேர் காரில் போவதைப் பார்த்தேன். விபச்சாரத்திற்கு பலிதானியின் மனைவியைக் கூட பயன்படுத்தும் நிலை. ஏனோ, நான் மத்திய பொயிலூருக்குப் போகவில்லை. கண்ணூருக்கே திரும்பிவிட்டேன். ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி தொடர்பான கூட்டத்திற்காகத் தான் போனேன். எனக்கு பானூருக்கான பொறுப்பு தரப்பட்டது. கைவேலிக்கல் பள்ளியில் பானூர் தாலுகாவின் பைடக்(கூட்டம்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமானவர்கள் பங்கேற்றனர். மதுபானம் அருந்தி ஊர்வலம் நடத்துவது, அடாவடித்தனமான பணவசூல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டுமென்று வலியுறுத்தினேன். இவைகள் தான் எனது முக்கிய வேண்டுகோள்கள்.  இதையெல்லாம் மீறியதோடு, கைவேலிக்கலில் மதுபானம் தயாரித்து என் முன்னாலேயே மது அருந்த போட்டியிட்டார்கள். விழா ஊர்வலம் வண்ணக்கோலம் பூண்டது. என் மனது மட்டும் கருமை படர்ந்தது. அந்த நிறைவு நிகழ்ச்சியில் நான் தான் முக்கிய சொற்பொழிவாளர். சொற்பொழிவு முடிந்த அன்று இரவு தாலுகா பிராச்சாரகர் ரதீஷ் அண்ணனைப் பார்த்தேன். விஷயங்கள் பற்றி பேசினோம். 5 வயது முதல் இந்தக் காவிக்கொடியை இதயத்தில் வைத்து திரிந்து கொண்டிருப்பவன் நான். எனது தாயார்  என்னை எண்ணி மிகுந்த பெருமை கொள்வது உண்டு. அதைவிட அவருக்கு இந்த இயக்கத்தின் பேரில் மிகுந்த பெருமை உள்ளது. ஆனால் இன்று எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது…… சங்கத்தின் சமூகநலச் செயல்பாடுகளை எங்கும் பார்க்க முடியவில்லை. பலிதானிகள் தான் இயக்கத்தின் உயிர் போன்றவர்கள். அத்தகைய பலிதானிகளின் மனைவியைக் கூட விபச்சாரத்திற்கு பயன்படுத்துகிறார்கள். இரவு நேரங்களில் மட்டும் நடமாடுபவர்களாக சுயம் சேவகர்கள் மாறியிருக்கிறார்கள். தினமும் ஆயுதங்களை கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இரத்தம் தோய்ந்த ஆயுதத் திரட்சிகள். உறக்கமின்றி, இரவுக்காலங்களில் மட்டும் நடமாடுபவர்களாக சுயம் சேவகர்கள் மாறிவிட்டனர். உங்களைப் போன்றவர்கள் கொலை செய்ய அறைகூவல் நடத்துபவர்களாக மட்டும் மாறி விட்டீர்கள். பிரச்சாரகர்கள் கூலிப்படை தலைவர்களா? நான் பயணம் செய்த எல்லா இடங்களிலும் மது, மாது, திருட்டு, கொள்ளை முதலியவைகளே உள்ளன. இது தர்மத்தின் இயக்கமல்ல. அதற்கு மாறாக கொள்ளைக் கும்பலாக அல்லவா இருக்கிறது? என்று அவரிடம் கேட்டேன். நீ என்னைத் தவிர வேறொருவரிடம் இதை கூறியிருந்தால் உனது மூச்சு இங்கேயே நின்று போயிருக்கும் என்று கூறியவாறே, அவர் எங்கேயோ பார்த்தவாறு நடந்து போய்க் கொண்டேயிருந்தார். நான் பயணம் மேற்கொண்ட கண்ணவம், செறுவாஞ்சேரி, சேமஞ்சேரி, வடக்கு பொயிலூர், குற்றியேரி, கொற்றாளி, தலசேரி, வடக்கும்பாடு, இரிட்டி, கைவேலிக்கல், தலசேரி மாக்கூட்டம், மாஹி(முன்னர் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து தற்போது பாண்டிச்சேரி யூனியனின் கட்டுபாட்டில் இருந்துவருகிறது. மையழி என்பதே இதன் உண்மைப் பெயர்) போன்ற இடங்களில் எல்லாம் நான் முன்பு சொன்ன விஷயங்கள் தான் நடந்து வருகின்றன.  தேவையற்ற பிரச்சனைகளின் பாழ் குழிக்குள் வீழ்ந்து கொண்டே இருக்கும் அமைப்பு. தவறிலிருந்து மிகப்பெரிய தவறை நோக்கி சறுக்கிக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பாகவே எனக்கு ஆர்.எஸ்.எஸ் தோற்றமளித்தது. வடக்கு பொயிலூரில் “நாட்டிய மாலை” என்னும் மாலை நேர நிகழ்ச்சியை நடத்தினோம். ஒரு வருடமாக பொறுப்பு வகித்து வந்த பாலகோகுலம் மாவட்டத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக, அமைப்பிடம் தெரிவித்துக் கொண்டு எர்ணாகுளத்தை நோக்கி புறப்பட்டேன். அம்மா அப்பாவை நினைத்து ஏற்பட்ட மனவேதனையை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு, ஒரு நீண்ட பெருமூச்சுடன் தான் இரயில் ஏறினேன். பயணச்சீட்டு பரிசோதகரிடம் பிராச்சாரகன் என்று கூறினேன். அவரிடம் இருக்கை எண்ணை எழுதி வாங்கிக் கொண்டு எர்ணாகுளத்தை நோக்கி பயணத்தைத் துவங்கினேன்.

நான் முற்றிலுமாக மௌனத்தில் ஆழ்ந்திருந்தேன். செய்த தவறுகளின் ஒப்புதல் வாக்குமூலத்தை எனக்கு நானே உள்ளுக்குள் சொல்லிக் கொண்டிருந்தேன்.  கொடூரத் தன்மையின் உச்சியில் தான் அமர்ந்திருக்கிறேனோ என்ற சந்தேகம் எனக்குள் தோன்றத் துவங்கியது. பிராந்தியக் காரியாலயத்திற்கு போய் விஷயங்களைச் சொன்னேன். ஒரு வீரனும் மரணத்தைத் தவிர்த்த வேறொரு வழியிலும் திரும்பிச் செல்ல ஆசைப்படுவதில்லை, என்று தான் மோகன் ஜி சொன்னார். “நான் ஒரு வீரனா…? எது எனது படை…?” எனது மனதுக்குள் பதிலில்லாத கொஞ்சம் விசும்பல்கள் மட்டும் மீதமானது…

   இனி நான் வடஇந்தியாவில் செயல்பட வேண்டுமென்று அமைப்பு முடிவு செய்துள்ளதாக சொன்னார்கள். மும்பையை மையப்படுத்தி செயல்பட வேண்டுமென்று சொன்னார்கள். சத்திரபதி சிவாஜி என்ற இந்து ராஷ்ட்ர நாயகனின் வீடு, இரட்டிப்பான மனவுறுதி கொண்டவர்களின் ஊர். உனது சந்தேகங்களுக்கு அங்கே விடை கிடைக்கும் என்று கூறினார்கள். பயணச் சீட்டு முன்பதிவு செய்யப்பட்டது. ஸ்ரீதர் ஜி தான் பூணூல் அணியக் கற்றுக்கொடுத்தார். சத்திரியனுக்கு பூணூல் கண்டிப்பாக வேண்டும். ஆர்.எஸ்.எஸ் சத்திரிய இயக்கமாகும். அதனால் இந்த பூணூல் அங்கே தவிர்க்க இயலாத ஒன்றாகும் என்று எனக்கு விளக்கிக் கூறினார்.

சுதீஷ் மின்னி

(தமிழில்: K.சதாசிவன்)

Related Posts