அரசியல்

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 10

அட்டப்பாடி:

   தலசேரியிலிருந்து அட்டப்பாடிக்கு பயணம் செய்தேன். அந்த பயணம் ரசனை மிகுந்ததாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருந்தது. காட்டின் வசீகரிக்கும் தன்மையும், இயற்கை அழகும் ஒருசேர விளையாடும் இடமான அட்டப்பாடியை நோக்கி, மயில்வாகனம் என்ற பெயரிடப்பட்டிருந்த பேருந்தில் ஏறி, மன்னார்க்காட்டிலிருந்து துவங்கிய, மழைப்பிரதேச பயணம் மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகும். முக்காலி என்ற இடத்தை அடையும் போது சோதனைச் சாவடி ஒன்றுண்டு. அவ்விடத்தை சென்றடைந்த போது சிறு மழைத் தூறல். அந்த ஊருக்கு வரும் விருந்தினர்களையும் பார்வையாளர்களையும் வரவேற்க இயற்கை ஏற்பாடு செய்த உபசரிப்பு தான் அந்த மழை என்று எனக்குத் தோன்றியது.

   செம்மண்ணூரை சென்றடைந்த போது இடதுபுறமாக தொலைவில், காதில் ஏதோ ரகசியம் சொல்ல நிற்பது போல ஒட்டி உரசி நிற்கும் மலைகள். எல்லோரும் அம்மலையை நோக்கியவாறு, அதன் உச்சியைத் தொடுவதைப் போன்று பாவனை செய்து நெற்றியில் வைப்பதைக் கண்டு நானும் அதுபோலவே செய்தேன். எனது அருகிலிருந்த பயணி “அது தான் மல்லீஸ்வர முடி” என்று கூறினார். மல்லீஸ்வரன் பார்வதியின் முன்னால் மோக அம்பு தொடுத்து, சிவ நடனத்தின் போது அருளிய தேவமொழி தான் ‘மல்லீஸ்வரன்’ என்று, எனது தாய் சொல்லித் தந்ததை நினைவு கூர்ந்தேன். மல்லீஸ்வரன் என்பது சிவனின் பெயராகும். அட்டப்பாடியிலுள்ள ஏழை ஆதிவாசி  சமூகத்தினரின், ஒரு போதும் நில்லாது பெய்யும் பெருமழை போல், பெய்து கொண்டே இருக்கும் துக்கங்களையும், துயரங்களையும் முறையிடும் போது, அதைக் செவிமடுக்கும் பொருட்டு இருப்பதாக, அந்த மக்களால் எண்ணப் படும், தெய்வீக நம்பிக்கை தான் அம்மலை ஆகும். சிவராத்திரி அந்த ஊரின் திருவிழா ஆகும். அட்டப்பாடியில் 3 முக்கியமான பிரிவைச் சேர்ந்த மக்கள் உள்ளனர். அவர்கள் இருளர், குரும்பர், முடுகர் ஆகிய மூன்று ஆதிவாசிப் பிரிவைச் சேர்ந்தவர்களாவர். அம்மூன்று பிரிவினராலும் முடிவு செய்யப்பட்ட மூப்பன்(இனத் தலைவர்கள்) என்ற பொறுப்பிலுள்ளவர்கள், சிவராத்திரி நாளில் அந்த மலையேறி உச்சிக்கு சென்று விளக்கு ஏற்றுவார்கள். அந்த தீப ஒளியோடு திருவிழா கொடியேற்றம் நடக்கும். அந்த தீப ஒளியை அட்டப்பாடியிலுள்ள எல்லா ஊரிலிருந்தும் காண முடியும். அந்த தீபத்தை பார்த்த பிறகு, மக்கள் தங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு, செம்மண்ணூரிலுள்ள மல்லீஸ்வரன் கோவிலுக்கு சென்றடைவார்கள். இரவு முழுவதும் தூங்காமல் சிவராத்திரியைக் கொண்டாடுவார்கள். தங்கள் சமூகத்திலிருந்து விலகி, உலகின் எந்த மூலையில் சிதறுண்டு கிடந்தாலும், அந்த திருவிழாவில் பங்கேற்க, அந்த திவ்ய வேளையை வரவேற்க சிவராத்திரி தினத்தில் அனைவரும் குடும்பத்தோடு ஒன்றாக இருப்பார்கள். மல்லீஸ்வரன் அந்த ஊரின் ஆத்மா ஆவார். சக பயணியின் இந்த வரலாற்று விளக்கம் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. என்னிடம், குளிபீடிகை என்ற இடத்தில இறங்க வேண்டுமென்று சொல்லப்பட்டிருந்தது. குளிபீடிகையில், பேருந்திலிருந்து இறங்கி ஆட்டோ ரிக்ஷாவில் நெல்லிப்பதி என்ற இடத்திற்கு சென்றடைந்தேன்.  அங்குள்ள மல்லீஸ்வர வித்யாலயத்தின் கீழ்ப்பகுதியில் எனக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நீண்ட காலம் அங்கேயே இருந்து வரும் தங்கப்பன் அண்ணன்(கோட்டயத்தைச் சேர்ந்தவர்) என்னை வரவேற்றார். சங்கத்தின் பார்வையில் அட்டப்பாடி என்பது ஒரு தாலுகா ஆகும். ஒற்றைப்பாலம் மாவட்டம் ஆகும். அப்பகுதியின் மாவட்டப் பிரச்சாரகர் வினோதன் என்பவர் ஆவார். அட்டப்பாடி மதமாற்றம் அதிகமாக நடக்கும் ஆதிவாசி பகுதியாதலால் அதிகமான பிரச்சாரகர்கள் அங்கு இருந்தார்கள். சிவப்பிரசாத் அதில் ஒருவர் (ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்தவர்). இவர் கொல்லம் மாவட்டத்தில் ஒரு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாவார். வேறொருவர் ஹரிதாஸ் என்பவர் ஆவார்(வனவாசி கல்யாண ஆஸ்ரமம்). இவர் சமீப காலத்தில் அகளி என்ற ஊரில் வல்லி என்ற ஆதிவாசி பெண்ணை, திருமண வாக்குறுதி அளித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பத்திரிகைச் செய்தி வந்திருந்தது. இவர்களைச் சந்தித்த பிறகு டாக்டர். நாராயண் ஜி அங்கு வந்தார். அவர் விவேகானந்தா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஆவார். அவரது தனிப்பட்ட முயற்சியினால்த் தான், இன்று அது பெரிய மருத்துவமனையாக மாறியிருக்கிறது. குழந்தை நல சிறப்பு மருத்துவரான அவர் அப்பகுதியில் உள்ள ஊர்களுக்கு போய் ஏராளமான சேவை செயல்பாடுகள் நடத்தியிருக்கிறார். அங்கு விபாக் பிரச்சாரகராகப் பணியாற்றுபவர் ஹரிகிருஷ்ணன் அண்ணன் ஆவார். தங்கப்பன் அண்ணன் சங்கத்தின் கல்வி நிலையமான மல்லீஸ்வர வித்யா நிகேதனின் சுற்றுப் புறங்களில் விவசாயத்தைக் கையாளும் பொறுப்புக்கு சங்கத்தால் நியமிக்கப்பட்ட பிரச்சாரகர் ஆவார். இதன்றி மோகன் ஜி என்ற பிராச்சாரகரும் வந்திருந்தார். இதயம் தொடர்பான நோயின் காரணமாக இப்போது அனாதை இல்லத்தின் செயல்பாட்டை கவனிக்கும் பொறுப்பு வகிக்கிறார். இரண்டு தினங்களுக்கு பிறகு தாலுகா பிரச்சாரக் சிவப்பிரசாத், ஜில்லா பிரச்சாரக் வினோதன், விபாக் பிராச்சாரக் ஹரிகிருஷ்ணன் மற்றும் மோகனன் ஆகியவர்கள் பங்கேற்கும் ஒரு கூட்டத்தை வித்யாலயத்தில் வைத்து நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

   விபாக் பிராச்சாரகர் ஹரிகிருஷ்ணன் பேசினார். அப்பகுதியின் புவியியல் ரீதியான சிறப்பியல்புகளைப் பற்றி சொல்லித் தந்தார். அப்பகுதியில் மதமாற்றத்தின் விளைவுகளை நேரடியாக பார்க்க இயலும். கிறிஸ்தவ முஸ்லிம் மதத்தவருக்கு, வெளிநாட்டுப் பணம் கோடிக்கணக்கில் மதமாற்றம் செய்வதற்காக கிடைக்கிறது. சங்கப் பரிவாரின் எல்லா அமைப்புகளும் ஒருங்கே நின்று தந்திரமான முறையில் மிகக் கவனமாக இந்த சூழ்நிலையைக் கையாள வேண்டும். இந்து மதத்தில் மற்ற ஜாதிகளில் உள்ளவர்களும் இப்பகுதியில் உள்ளார்கள். முக்கியமாக இவர்கள் சிறிய நகரங்களை மையப்படுத்தியே, அதாவது குளிக்கடவு, அகளி, நெல்லிப்பாறை, கோட்டத்து அடியகண்டியூர், முக்காளி, கள்ளமலை, பெட்டிக்கல், கோழிக்கூடம், போன்ற இடங்களில் தான் அதிகமாக வாழ்கிறார்கள்.  அங்கெல்லாம் பாலகோகுலம் வகுப்புகள் ஆரம்பிக்கவேண்டும். அதற்காகவே அகளி மேல் நிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி கணித வகுப்புகள் நடத்த வேண்டும் என்று வேண்டினார். நெல்லிப்பாறை, கோட்டத்தரை, ஷோளயூர், முக்காளி ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் மாதம் 3 முறையாவது சென்றுவர வேண்டும். அவ்வாறு, பள்ளிக் கூடத்தில் குழந்தைகளுடனான அறிமுகத்தின் பேரில், அவர்களது வீடுகளுக்குச் சென்றுவர இயலும். அதன் மூலம் முன்பு சொன்ன பிரதேசங்களில் சாதகமான மையங்களை கண்டறிந்து, ஞாயிற்றுக் கிழமைகளில் பாலகோகுலம் வகுப்புகள் துவங்க வேண்டும். அப்பகுதிகளில் உள்ள டியுஷன் சென்டர்களிலும் முடிந்தால் வகுப்புகள் நடத்திட வேண்டும். (இவைகள் 3 மாதத்திற்குள் செய்து முடிக்கப்பட வேண்டும்). அது போலவே சில முக்கியமான ஊர்களிலும் சாகா வகுப்புகள் துவங்க வேண்டும். ஆயுதப் பயிற்சி அளித்து, அதன் மூலம் ஆதிவாசிகளை முஸ்லிம்-கிறிஸ்தவ பிரிவினரோடு மோத விட்டு, இங்கிருந்து முஸ்லிம் கிறிஸ்தவர்களை விரட்டியடிக்க வேண்டும்.

ஆதிவாசிகள் எஸ்.டி பிரிவின் கீழ் வருவதால் சட்டம் அவர்களுக்குச்  சாதகமாக இருக்கும். அப்பகுதியிலுள்ள ஊர்களான அகளி, கள்ளமலை, ஜெல்லிப்பாறை, புத்தூர், வெண்டைப்பெட்டி, முள்ளி, ஷோளயூர் போன்ற இடங்களில் முதலில் பஜனைகள் ஆரம்பிக்க வேண்டும். இளைஞர்களிடையே விளையாட்டுத் துறையில் ஆர்வத்தை உருவாக்க வேண்டும். ஷட்டில் பேட், கிரிக்கெட் பேட், பந்துகள் இவைகளை பயிற்சியளிக்க சிவப்பிரசாத்தை விளையாட்டுப் பயிற்சி அளிப்பவராக அனுப்பி வைக்க வேண்டும். முன்பு சொன்ன எல்லா ஊர்களிலும் சாகா வகுப்புகள் துவங்கி ஒரு மாதத்திற்குள் த்வஜோல்சவம் (கொடி திருவிழா) நடத்த ஏற்பாடு செய்திட வேண்டும்.

   [ஒரு சாகா வகுப்பு துவங்கிய உடன், அங்கே கொடி வழங்க மாட்டார்கள். 6 மாதமாவது வழக்கமாக சாகா வகுப்பு பயிற்சிகள் நடத்தி சராசரி 10 சுயம் சேவகர்களாவது கலந்து கொள்கிறார்கள் என்று சங்கத்திற்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே த்வஜம் (காவிக்கொடி) வழங்குவார்கள். அன்று சாகா வகுப்பு ஒரு திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். முக்கிய பிரமுகர்களை வரவழைத்து உரையாற்ற வைப்பார்கள். பாயசம், இனிப்புப் பலகாரங்கள்  முதலியவை வழங்கி கொண்டாடப்படும் இந்த விழவே த்வஜோல்சவம். அட்டபாடியின் புவியியல் சிறப்பு இயல்புகளை கணக்கில் கொண்டு விசேஷ சட்டப்படி ஒரு மாதத்திலேயே  த்வஜோல்சவம் நடத்த ஏற்பாடு செய்யலாம் என்று கூறப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களை அகளி பகுதியின் பெரிய திருவிழாவாக மாற்ற இந்த செயல்பாடுகளை எல்லாம் ஒருங்கிணைத்தாலே போதும் என்று அவர் குறிப்பிட்டார். அதன்படி மறு நாளே அகளி உயர் நிலைப் பள்ளிக்கு சென்று அங்குள்ள கணித ஆசிரியரை, கணிதத்தின் மாயாஜாலத்தைக் காட்டி வசப்படுத்தினேன். வகுப்புகள் நடத்த தலைமையாசிரியர் அனுமதியளித்தார். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடந்த வகுப்புகளுக்குப் பிறகு அதன் அனுபவங்களையும், பெயர், விலாசம், தொடர்பு எண்கள் ஆகியவற்றையும் எழுதித் தரக் கூறியதைத் தொடர்ந்து, மாணவர்களும் அவ்வாறே எழுதி என்னிடம் ஒப்படைத்தனர். பின்னர் நானும் மோகன் ஜியும் அந்த விலாசங்களை பகுதிவாரியாக பிரித்து வீடுகள் தோறும் சந்திப்புகள் (சம்பர்க்க என்பது சங்க பரிவார் மொழி) நடத்தினோம். கணிதமும் புராண தத்துவங்களையும் பற்றி புரிந்துகொள்ள ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, முன்னமே பார்த்து ஏற்பாடு செய்யப்பட்ட அகளியிலுள்ள ஒரு வீட்டிற்கு வரச் சொன்னோம். சனிக்கிழமை இரவே ஒரு பெரிய கிருஷ்ண சிலையை தேடிப் பிடித்தோம். அந்த வீட்டில், பக்திமயமான சூழலை ஏற்படுத்துவதற்காக நன்றாக சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்தோம். காலையில் கணபதி ஹோமத்திற்கு வரவேண்டும் என்று பெற்றோரிடம் கூறி இருந்தோம். சுமார் 50 பெற்றோர்கள் வந்திருந்தனர். வெவ்வேறு அரசியல் கட்சிகளில் நம்பிக்கையுள்ள அவர்களுக்கு, அங்கு நடப்பவை எதுவும் வித்தியாசமாகத் தோன்றவில்லை. விபாக் பிராச்சாரகர் ஹரிகிருஷ்ணன் அண்ணன் தான் பூசாரியின் வேடமேற்றிருந்தார். பனி மூட்டத்தால் ஹோம குண்டத்தில் தீ பற்றவில்லை. வேறு வழியின்றி இரு சக்கர வாகனத்திலிருந்து, ஒரு பாட்டிலில் கொஞ்சம் பெட்ரோல் எடுத்து, விறகில் ஊற்றி தீ பற்ற வைத்தோம். கணபதி ஹோமம் துவங்கியது. எல்லோருக்கும் பிரசாதம் கொடுத்தோம். சரியாக 10 மணிக்கு மாணவர்கள் வந்தனர். ஆரம்பத்திலேயே 70 குழந்தைகள் அந்த பாலகோகுலம் வகுப்பிற்கு வந்தனர். மோகன் ஜியும் நானும், ஒருவர் மாற்றி ஒருவர் வகுப்புகள் நடத்துவோம். பாலகோகுலம் என்று வெளிப்படையாகச் சொல்லாமல், கொஞ்சம் கணிதம், கொஞ்சம் புராணக்கதைகள் மட்டும் வகுப்பில் சொல்லிக் கொடுப்போம் என்று பெற்றோர்களிடம் சொல்லியிருந்தோம். பின்னர் குழந்தைகளின் குடும்பங்களை உட்படுத்தி குடும்ப பூஜைகள் ஏற்பாடு செய்தோம். 300 பேர் பங்கேற்றார்கள். பெற்றோர்களுக்கு எங்களிடம் அன்பும் மரியாதையும் உருவானது. அன்றைய தினம் ஒரேயொரு நாளுக்கான பூஜை மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தன.

   கிறிஸ்தவ-முஸ்லிம் அத்து மீறல்கள் இந்துக்களுக்கு எதிரானது என்பதற்கு ஏராளமான ஆதாரங்களை முன் வைத்ததோடு, பல கவரங்களிலும் இந்துக்களின் துயர நிலையை சொற்பொழிவாளர் வெட்ட வெளிச்சமாக்கினார். “நான் ஒரு இந்து” என்று இடது கையை நெஞ்சோடு சேர்த்து வைத்தவாறு சொல்லச் சொன்னோம். அனைவருக்குள்ளும் நானொரு ஹிந்து என்ற உணர்வை உருவாக்கினோம். கணிதம் மற்றும் புராணம் பற்றி வகுப்புகள் ஏற்பாடு செய்வதற்கான குழுக்களை உருவாக்கினோம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவரும் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆவர். எல்லா இடங்களிலும் கல்வி நிலையங்கள் மூலமாக நடக்கும் வகுப்புகளைப் பயன்படுத்தி பாலகோகுலம் வகுப்புகளை துவங்கினோம். முன்பு விவரித்ததைப் போன்ற முறையிலேயே செயல்பாடுகளை முன்னெடுத்தோம். எல்லா இடங்களிலும் பாலகோகுலம் வகுப்புகள் தீவிரமாக செயல்படத் துவங்கின. சனிக் கிழமைகளில் காலை 10 மணி முதல் 11.30 மணி வரையிலும்  மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10 மணி முதல் 11.30 மணி வரையிலும்  மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் என்ற கால அட்டவணைப்படி எட்டு இடங்களில் பாலகோகுலம் வகுப்புகள், திட்டமிட்டபடியே கொஞ்சம் கணிதம், கொஞ்சம் புராணம் என்ற அடிப்படையில் துவங்கினோம். அப்பகுதியில் உள்ள ஊர்களில், என்னுடைய செயல்பாடு வெந்தபெட்டி என்னும் ஊரிலிருந்து தான்  துவங்கியது. அகளியிலிருந்து ஆனக்குடி பேருந்தில் ஏறி ஆனக்குடியில் இறங்கினேன். அங்கிருந்து 7 கி.மீ நடந்து செல்ல வேண்டும். 40 வீடுகள் அங்கே உள்ளன. கடுமையான வறுமையும் வேலையின்மையும் தான்  அவர்களது அடையாளங்கள். இந்த விவரங்கள் அனைத்தும் முன்னரே எனக்குத் தெரியும். நான் ஆனகுடிக்கு சென்று அங்குள்ள ஒரு கடையில், பொருட்களுக்கான ஒரு பெரிய பட்டியலைக் கொடுத்து, அதன்படி பொருட்களை தயார் செய்து வைக்கச் சொன்னேன்.

2 கிலோ பச்சரிசி                  – 40 பொட்டலங்கள்

4 கிலோ ரவை                    – 40 பொட்டலங்கள்

10 கிலோ அரிசி                   – 40 பொட்டலங்கள்

1 கிலோ சிறுபயறு                – 40பொட்டலங்கள்

1 கிலோ உப்பு                    – 40 பொட்டலங்கள்

1 கிலோ சர்க்கரை                – 40 பொட்டலங்கள்

500 கிராம் தேயிலைத்தூள்         – 40 பொட்டலங்கள்

1 மிளகாய்த்தூள் பாக்கெட்         – 40 எண்ணிக்கைகள்

500 மி.லி தேங்காய் எண்ணெய்     – 40 பாக்கெட்டுகள்

போன்ற பொருட்களில் துவங்கி சோப்பு, பிரஷ், குளியல் சோப்பு, 2 கிலோ அவல் 40 பொட்டலங்கள் ஆகியவற்றை எடுத்து வைக்கச் சொன்னேன். இதற்காக 20,000 ரூபாயும் கொடுத்தேன். 2 நாட்களுக்குள்  தயாராக எடுத்து வைப்பதாகச் சொன்னார். 15 கிலோ அரிசி, 4 கிலோ வெல்லம், ஒரு தேங்காய், முந்திரிப்பருப்பு, 6 பால் பாக்கெட், ஆகிய பொருட்களோடு பூஜை சாமான்கள் விற்கும் கடையிலிருந்து கணபதி படம், ஊதுபத்தி, குத்துவிளக்கு, திரி, தேங்காய் எண்ணெய் ஆகியவைகளையும் வாங்கி ஒரு ஜீப்பை வாடகைக்கு ஏற்பாடு செய்து பயங்கர சாகசம் செய்வது போன்று, பாதி வழி வரை கொண்டு சென்று சேர்ந்தேன். பொருட்களை எல்லாம் இறக்கி அருகிலுள்ள வீட்டில் வைத்துவிட்டு ஊருக்குள் சென்றேன். அந்த ஊர் மூப்பனிடம் விஷயத்தைக் கூறினேன். இங்குள்ள எல்லோருக்கும் நல்ல காலம் வந்துவிட்டது என்றும், இங்கு விஷேச பூஜை நடத்த விஷ்ணு நம்பூதிரி வருகிறார் என்றும் பஜனை தினமும் நடத்த வேண்டுமென்றும் அதற்கான அனுமதியை வாங்கவே வந்திருக்கிறேன் என்றும் கூறினேன். பூஜை நடத்த எல்லாவித அனுமதியையும் அவர் அளித்தார். பாயசம் தயாரிப்பதற்கான பொருட்கள் இங்குள்ள ஒரு வீட்டில் வைத்திருக்கிறேன் என்று கூறியதோடு, இப்பகுதியிலுள்ள இளைஞகர்களிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டுமென்றும் கூறினேன். அவற்றுக்கான அனுமதியையும் தந்து, தகுந்த ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். அவரை முன்வரிசையில் அமரவைத்து பஜனை துவங்கியது. இளைஞர்களிடம் விளையாட்டுக் கல்வியின் முக்கியத்துவத்தைக் குறித்து ஒரு எளிய உரை நிகழ்த்தினேன். விளையாட்டு பயிற்சியளிக்க, ஒரு ஆசிரியரை இப்பகுதிக்கு அனுப்பி வைப்பதாக அவர்களுக்கு வாக்குறுதியளித்தேன். அதுபோல இப்பகுதியிலுள்ள எல்லா குடும்பங்களுக்கும் மளிகைப் பொருட்கள் ஆனக்குடியில் உள்ள ஒரு கடையில் ஏற்பாடு செய்யச் சொல்லி இருப்பதாகவும், நீங்களும் என்னுடன் இணைந்து உதவினால், அவற்றை 4 ஜீப்புகளில் இங்கே கொண்டு வந்து சேர்த்துவிடலாம் என்றும் கூறினேன். அன்றைய பஜனை நிகழ்ச்சியிலும் பாயசம் பரிமாறியதிலும், அவர்கள் தங்கள் பங்களிப்பைச் செலுத்தினார்கள். இரண்டு தினங்களுக்குப் பிறகு, அவர்கள் மளிகைச் சாமான்களுடன் 4 ஜீப்புகளில் புறப்பட்ட போது அவர்களுடன் நானும் பிரச்சாரகர் சிவப்பிரசாத்தும் வேறொரு ஜீப்பில் சென்றோம். 5 ஜீப்புகளுக்கும் வாடகை நாங்கள் தான் கொடுத்தோம். அங்கு வந்து சேர்ந்த மளிகைப் பொருட்களை அனைவருக்கும் சமமாக வினியோகம் செய்தோம். இளைஞர்களை சிவப்பிரசாத் அண்ணனுக்கு அறிமுகப்படுத்தினேன். விளையாட்டுப் பயிற்சி என்ற பெயரில் வெந்தபெட்டியில் சாகா பயிற்சி முதன்முதலாக துவங்கப்பட்டது. இதோடு முள்ளி, கோழிக்கூடம் போன்ற இடங்களில் மட்டுமே இந்த முறை வெற்றியடைந்தது. மற்ற இடங்களிலிருந்து அவர்கள் என்னை வெளியேற்றினார்கள். வெளியேற்றிய ஊர்களில் மருத்துவ முகாம்கள் மூலம் பஜனையும் சாகாவும் துவங்கப்பட்டது. எது எப்படியோ நெல்லிப்பதி, வெட்டிக்கல், வெந்தபெட்டி, கோழிக்கூடம் ஆகிய இடங்களில் ஒரு மாதத்தில் த்வஜோல்சவம் நடத்தி முடிக்க சங்கத்தால் முடிந்தது. அட்டபாடியிலும் சாகா வகுப்புகள் நடத்துவதற்கு பச்சைக்கொடி சமிக்ஞை கிடைத்தது. வரலாறு காணாத அளவில்  ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஊர்வலத்தையும் நடத்தி முடித்துவிட்டு தான், அப்பகுதியிலுள்ள ஒரு வருட செயல்பாடுகளை நான் நிறைவு செய்தேன். ஐ.டி.சி, ஓ.டி.சி பயிற்சிகளைப் பெற்ற, அட்டப்பாடி பகுதியிலேயே உள்ள சுமார் 25 ஆதிவாசி இளைஞர்களை, சுயம் சேவகர்களாக சங்கச் செயல்பாடுகளை நடத்தும் விதத்தில் பயிற்றுவித்து விட்டு தான் நான் திரும்பி வந்தேன். உணர்வு பூர்வமான முறையில் என்னை அப்பகுதியிலுள்ள ஊழியர்கள் வழியனுப்பி வைத்தார்கள். எல்லா விழிகளும் என்னையே கூர்ந்து நோக்கும் அந்த விழா எனக்குள் மிகுந்த ஆனந்த பரவசமூட்டியது. எண்ணிப் பார்க்கவே முடியாத ஏதோ சாதனைகளை செய்து முடித்த தலைவராக, என்னை நான் உளப்பூர்வமாக எண்ணிக் கொண்டேன். மலையிலிருந்து கீழிறங்கும் பயணம் காரில்த் தான் துவங்கியது. எல்லோருடைய கைகளும் இருபுறமும் மெல்ல அசைந்து விடை கொடுத்தன. “டா டா…பை…பை” என்ற மழலைகளின் குரல்கள் எனக்குக் கேட்டன. கார் நகர்ந்து செல்ல மலையின் கீழ்ப்பகுதி வழியே அங்குள்ள இயற்கையோடும் மலையோடும், நதியோடுமெல்லாம் விடை சொல்லி இதயத்தில் ஆழப்பதிந்த நினைவுகளாக மாறிய ஒரு பயணம், “ஹிர்தந்து ஸ்புரத்துவக்ஷ யாத்யேயனிஸ்டம்” சங்க பிரார்த்தனை வரிகள் போல் மனதில் நிறைந்தது.

விளக்கம்: “தனது இலட்சியத்தை இதயத்தில் இருத்திக் கொண்டு தான், அந்த இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டும்”

மல்லீஸ்வரலையின் அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தேன். அங்குள்ள கோவிலுக்குப் போய் வணங்கி கோவிலை சுற்றி வலம் வந்த பின்பு காரில் ஏறி அந்த மலைக்கு விடை கொடுத்தேன். சரியாகச் சொன்னால் ஒரு ஊமை விடைகொடுப்பது போல விடை கொடுத்தேன்.

    நல்ல மனது, அன்பு போன்றவற்றுடன், இயற்கையோடு வேற்றுமை பாராட்டாமல் இரண்டறக் கலந்து வாழும் ஒரு சமூகத்தை இந்து என்ற உணர்வை உருவாக்கி, இங்குள்ள கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் விரட்டியடிப்பதற்காக ஆயுதப் பயிற்சியளிக்க சங் பரிவாருக்கு வழியைத் திறந்துவிட்ட, நான் எவ்விதத்தில் நல்லவனாவேன்? அவர்களின் களங்கமின்மையையும் பண்பாட்டையும் தகர்த்து அழித்த, தந்திரம் நிறைந்த நரி தான் நான் என்று அறிய மேலும் சில நாட்கள் ஆனது. அவ்வாறு எர்ணாகுளத்திலுள்ள பிராந்திய காரியாலயத்திற்கு சென்றடைந்தேன். உண்மையில் பட்டியல் ஜாதி-பட்டியல் இன மக்களுடன் சங் பரிவார் அமைப்புகள், என்ன மனநிலையுடன் அணுகுகிறார்கள் என்று அந்த மக்களுக்கு தெரியாது. இப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு செய்வதைப் பற்றி கோல்வால்கர் இவ்வாறு தான் எழுதியிருக்கிறார்.

    1950-ல் குடியரசான நாள் துவங்கி, அடுத்த பத்து வருடத்திற்கு மட்டும் தனிப்பட்ட கவனம் செலுத்துவதைப் பற்றி தான், இடஒதுக்கீடு சம்பந்தமாக டாக்டர்.அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இப்போது 1973 ஆகிவிட்டது. அது இன்னமும் நீட்டிக்கப்படவே வாய்ப்புள்ளது. ஒரு தனிப் பிரிவினருக்கு விசேஷ கவனம் செலுத்தப்படுவது தொடர்வதை நாங்கள் எதிர்க்கிறோம். அது, அச்சமூகம் மற்ற சமூகங்களோடு கொண்டிருக்கும் உறவுக்கு ஆபத்தானதாகும்.

சுதீஷ் மின்னி

(தமிழில்: K.சதாசிவன்)

Related Posts