புதிய ஆசிரியன் மார்ச் 2015

ஈஸ்வர அல்லா தேரே நாம் – பேராசிரியர் அருணன்

வி.பி.சிந்தன் ஒரு சித்தாந்தவாதியாக மட்டுமின்றி களப் போராளியாகவும் வாழ்ந்து காட்டினார். அவர் நினைவாக நடக்கும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன். ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற வரிகள் காந்திஜிக்கு மிகவும் பிடித்தமான வரிகள். கடவுளைப் பார்த்து ஈஸ்வரனும் நீதான், அல்லாவும் நீதான் என்று கூறுவது உண்மையான மதநல்லிணக்கவாதிகளுக்குத்தான் சாத்தியம். கடவுளுக்கு இந்த இரண்டு பெயர்கள் மட்டுமல்ல, வேறு பல பெயர்களும் உண்டு என்ற நல்ல புத்தியை எல்லோருக்கும் கொடு (சப்கோ சன்மதி தே பகவான்) என்று கடவுளை அவர் வேண்டினார்.

இந்து முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய மூன்று அம்சங்களுக்கு அவர் முன்னுரிமை கொடுத்தார். இந்த மூன்றையும் விட்டுவிட்டு அவரது பிறந்த நாளன்று தூய்மை இந்தியா என்ற வேறொரு முழக்கத்தை மோடி கொடுத் தார் எனில், அவரது நோக்கம் தெளிவானது. காந்திஜி வலியுறுத்திய அடிப்படை அம்சங்களிலிருந்து மக்களைத் திசைதிருப்ப வேண்டும் என்பதுதான் அது.

எது தாய் மதம்?
சங்பரிவாரம் முடுக்கிவிட்டிருக்கும் பிரச்சாரத்தின்படி இந்துக்கள் மட்டும் தான் இந்தியக் குடிமக்கள். அப்படியானால் முஸ்லிம்களும் கிறித்தவர்களும் நம் நாட்டின் குடிமக்கள் இல்லையா?  முஸ்லிம்களையும் கிறித்தவர்களையும் மீண்டும் தாய்மதத்திற்குக் கொண்டு வருகிறோம் என்கிறார்கள். எது தாய் மதம்? இந்து மதம் என்ற பெயரே பின்னர் வந்ததுதான். முன்பு அது வேதமதம் என்றும் பின்னர் சனாதன மதம் என்றும் அழைக்கப்பட்டது. கி.பி. 300-லிருந்து 1000 வரையிலான 700 ஆண்டுகளில் நம் நாட்டில் பெரிய மதமாக இருந்தது சமணம். அடுத்து பவுத்தம். அதற்கு அடுத்தே வேதமதம் இருந்தது. அம்பேத்கர் 4 லட்சம் பேருடன் பவுத்த மதத்திற்கு மாறினார். இன்று வேறு மதங்களிலிருந்து மாற்றப்படுபவர்கள் தங்களது தாய் மதமான பவுத்தத்திற்குத் திரும்புகிறோம் என்று கூறினால் அதை சங்பரிவாரத்தினர் ஏற்றுக் கொள் வார்களா?

வேற்று மதத்திற்கு மாறியது ஏன்?
இங்கிருந்து ஏன் வேற்று மதத் திற்கு மாறினாங்க? தாய்வீட்டை ஒழுங்கா வச்சிருந்தீங்கன்னா ஏன் மாறப் போறாங்க? சனாதன மதத்தில் பிறப்பின் அடிப்படையில் வர்ணாசிரம ஏற்றத்தாழ்வுகள் இன்றும் நீடிப்பதை யாராவது மறுக்க முடியுமா? வேறு மதத்திற்கு மாறினால் சாதிய ஒடுக்கு முறையிலிருந்து தப்பிக்கலாம் என்ற  எண்ணத்தில் சிலர் மாறினர். அங்கு போயும் அவர்களுக்கு விடியல் கிடைக்கவில்லை என்பது வேறு. இஸ்லாமியர்கள் ஆட்சியில் வாள் முனையில் இந்துக்களையெல்லாம் தங்கள் மதத்திற்கு மாற்றிக் கொண்டுபோய்விட்டதாக சங்பரிவா ரத்தினர் பிரச்சாரம் செய்கின்றனர்.  ஆனால் அவர்களது 1000 ஆண்டு கால ஆட்சியில் பெரிய அளவுக்கு மதமாற்றம் இல்லை என்பதைப் புள்ளிவிவரங்கள் எடுத்துக் காட்டு கின்றன. நாட்டிலும் டில்லியிலும் இன்றும் முஸ்லிம்கள் சிறுபான்மை யினர்தான். எந்த சாதியில் சேர்ப்பீர்கள்? சரி, தாய்மதத்திற்கு அழைத்து வருகிறோம் என்கிறீர்கள். மத மாற்றத் தடைச் சட்டம் வேண்டும் என்று கேட்கும் தொகாடியா தாய் மதத்திற்குத் திரும்புவது மத மாற் றமே அல்ல என்று ஒரே போடாகப் போடுகிறார். சரி, தாய் மதத்திற்கு மீண்டு வந்தவர்களை எந்த சாதி யிலே சேர்ப்பீங்க? இங்கே சாதி யில்லாத பிரிவினர் உண்டா? இந்து மதத்தின் கெடுபிடி அதன் அகமண முறையில் இருக்கிறது. சாதிவிட்டு சாதி திருமணம் செய்து கொள்வதை ஏற்பவர்கள் மிகமிகக் குறைவு. அதி லும் பெண்ணை எடுப்பார்களே தவிர, கொடுக்கத் தயாராக இருக்க மாட்டார் கள்.

இந்து மதம் என்றால் அது மதமே அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காட்டுகிறீர்கள். அப்படியானால், ஒரு படிவத்தை நிரப்பும்போது மதம் என்ற பிரிவுக்கு நேரே இந்து என்றுதானே எழுதுகிறீர்கள்? மதமே அல்ல என்று எழுதுவீர்களா? குஜராத்தில் உள்ள சட்டம் கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் குஜராத்தில் இருக்கிறது. அங்கு யாராவது மதம் மாற விரும்பி னால் அரசின் அனுமதி வேண்டும். அனுமதி வாங்காமல் மதம் மாறினால் 3 ஆண்டு சிறைத் தண்டனை. இதன் நோக்கம் என்ன? இந்து மதத்தி லிருந்து யாரும் வேறு மதத்திற்கு மாறுவதைத் தடுக்கவே இச்சட்டம். நம்மைப் பொறுத்த அளவில் மதம் மாறினால் எந்தப் பிரச்சனையும் தீர்ந்துவிடப் போவதில்லை என்று தெரிந்தாலும் தானாக விரும்பி மதம் மாறும்  உரிமை ஒருவருக்கு வேண் டும் என்று ஏன் கேட்கிறோம்? ஏனென் றால், அது தனிமனித உரிமை.

எந்த மதத்தைப் பின்பற்றவும் பிரச்சாரம் செய்யவும் நமது அரசியல் சட்டம் நமக்கு உரிமை அளிக்கிறது. இவர்களா இந்து மதத்திற்கு எதிரிகள்? முஸ்லிம்கள் இங்கு நாடுபிடிக்கத் தான் வந்தார்கள். ஆனால் நம் முடைய நாட்டையே தங்கள் நாடாக, சொந்த மண்ணாக ஏற்று மண்ணின் மைந்தர்களாக இங்கேயே வாழ்ந்து மடிந்தார்கள். இந்திய வரலாற்றை முதலில் எழுதிய அல் பெருனி ஓர் இஸ்லாமியர்தான். இந்தியாவில் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 14 சதவீதம்.  கல்வி, தொழில் ஆகிய துறை களில் இவர்கள் மிகவும் பின்தங்கி யே இருக்கிறார்கள் என்கிறது சச்சார் குழு அறிக்கை. அரசுப் பணிகளில் இவர்கள் இரண்டிலிருந்து இரண்டரை சதம்தான். சட்டமன்றங்கள், நாடாளு மன்றங்களில், ஆட்சிப் பணிகளில், காவல் துறையில் இவர்களது எண் ணிக்கை மிகக் குறைவுதான். இவர்களா இந்து மதத்திற்கு எதிரிகள்? அல்ல, அல்ல. சங்பரிவாரத்தால் உருவாக்கப்படும் கற்பனை எதிரிகள்.

இந்து பாமரர்கள் தங்களது உண்மை யான எதிரிகளை அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காகவே சங்பரி வாரத்தினர் இவர்களை எதிரிகளாக முன்னிறுத்துகிறார்கள். இந்து வாக்கு வங்கியைக் கெட்டிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். மண்டல் கமி ஷன் அறிக்கையை அமல்படுத்த வி.பி. சிங் அரசு முடிவெடுத்தபோது அதற்கெதிராகக் கலவரம் செய்தவர் கள் இவர்கள்தானே? மண்டலுக்கு எதிராகக் கமண்டலத்தை நிறுத்தி னார்களே? அத்வானி ரதயாத்திரை யைத் தொடங்கியதும் மண்டல் கமிஷனுக்கு எதிராகத்தானே? பெரும்பான்மையான இந்துக்களுக்கும் எதிரானவர்கள்

சங்பரிவாரத்தினர் முஸ்லிம்களுக் கும் கிறித்தவர்களுக்கும் எதிரானவர் கள் என்ற கருத்து பொதுவாக இருக் கிறது. அது உண்மைதான். ஆனால் அது மட்டுமே உண்மையல்ல. அவர் கள் பெரும்பான்மையான இந்துக் களுக்கும் எதிரானவர்கள்தான். இந்து சமூகத்தின் சாதிக்கொடுமை, ஆணாதிக்கம், மூடநம்பிக்கைகள் எல்லாம் நீடிக்க வேண்டும், ஒழிந்து விடக் கூடாது என்று நினைப்பவர்கள். தீண்டாமைக்கெதிராக இவர்கள் களத்தில் இறங்கியதுண்டா? அனைத்து சாதியினரும் அர்ச்சகராவ தற்குக் குரல் கொடுத்ததுண்டா? அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்கள் தங்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் எனக் கோரி வழக்குப் போட்டிருக்கிறார்கள். அந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ள இந்துமுன்னணி தயாரா?

ஆர்.எஸ்.எஸ். ஒரு தேசபக்த இயக் கம், கலாச்சார மேன்மைக்கான இயக்கம் என்கிறார்கள். இவ்வளவு உயர்ந்த அமைப்பில் பெண்கள் சேர அனுமதி கிடையாது. நாடாளுமன்ற சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சத இடஒதுக்கீடு கிடைத்தால் பெரும் பாலும் இந்துப் பெண்கள்தானே பலன் அடையப் போகிறார்கள்? மேடைகள் தோறும் முழங்கும் மோடி இதை ஆதரித்து ஒரு முறைகூடப் பேச வில்லையே, ஏன்? நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கும் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்கும் அவசரச் சட்டம் போடும் மோடி அரசு பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்த அவசரச்சட்டத்தைப் பிறப்பிக்க வில்லையே?

செல்வக் குவிப்பு பற்றி தாமஸ் பிக்கெட்டி:
மக்களின் இன்னொரு மெய்யான எதிரி சுரண்டல் கூட்டம். வரன்முறை யற்ற கொள்ளையடிக்கும் கூட்டம். தாமஸ் பிக்கெட்டி என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிஞர் 21ஆம் நூற்றாண்டில் மூலதனம் என்ற நூலை எழுதியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள செல்வம் சில குடும்பத்தினர் கைகளில் குவிந் திருக்கிறது. 1977-லிருந்து 2007 வரையிலான 30 ஆண்டுகளில் அமெரிக்காவில் உயர்ந்த தேசிய வருமானத்தில் 60 சதம் ஒரு சத விகிதத்தினரிடமே போய்ச் சேர்ந்தி ருக்கிறது. இப்படிக் குவியும் செல் வம் வாரிசுகளுக்குப் போய்ச் சேருகிறது. முதலாளித்துவம் தனி மனிதனுக்கு நிறைய வாய்ப்பைக் கொடுப்பதாகச் சொல்வார்கள். செல்வந்தர்களாக அப்பாவும், பாட்ட னாரும் இருந்தால் வாரிசுகளுக்கு நிறைய வாய்ப்பைக் கொடுக்கிறது என்பதுதான் உண்மை. இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம். இந்த செல்வக்குவிப்பு உலகிற்கே ஆபத்து.

உலகில் உள்ள 230 நாடு களில் உலகப் பொருளாதாரத்தை ஆட்டி வைப்பது 20 நாடுகள்தான். இது உலகின் ஜனநாயகக் கட்ட மைப்பையே தகர்க்கும் என்கிறார் பிக்கெட்டி. 20, 30 ஆண்டுகளில் இந்தச் செல்வக்குவிப்பைத் தடுக்க வேண்டுமென்றால், செல்வ வரியை உயர்த்திக் கொண்டே செல்ல வேண்டும். வருமானவரியை 80 சதம் வரை உயர்த்த வேண்டும். செல்வக் குவிப்பைத் தடுக்க ஒரே வழி அரசின் தலையீடுதான் என்று தனது தீர்வையும் முன்வைக்கிறார் பிக்கெட்டி.

செல்வக் குவிப்பு பற்றி பிக்கெட்டிசொல்வதெல்லாம் உண்மைதான்என்றுஏற்றுக் கொள்ளும் பில் கேட்ஸ் அவர் பரிந்துரைக்கும் அரசின் தலையீடு என்ற தீர்வை மட்டும் ஏற்க மாட்டேன் என்கிறார். இவ்வளவு தீவிரமாக உலகம் முழுவதிலும் இந்தியாவிலும் உள்ள ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி மோடி என்றாவது பேசியதுண்டா? மதச்சார் பற்ற முதலாளித்துவக் கட்சிகள்கூட ஏற்றத் தாழ்வுகளைப் பற்றிப் பேசுவ தில்லை. ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து மக்கள் எழுந்துவிடாமல் இருக்கவே சங்பரிவாரத்தினர் பொய் எதிரிகளை உருவாக்குகிறார்கள். நிலத்தை, இன்சூரன்சை, விவசாயியைப் பலி கொடுக்க அரசு தயாராகிவிட்டது. அதைத் திசைதிருப்பப் பயன்படும்  தந்திரமேசங்பரிவாரத்தினர் உருவாக்கும் மதப் பகைமை மோதல்கள்.

Related Posts