அரசியல்

சகமனுசிகளின் சமத்துவத் தேடல்கள்…… !பாகுபாடுகள் மலிந்த இந்திய சமூகத்தில் சமத்துவத்தின் சிறிய கூறாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது. பெண்களுக்கும் குடும்ப சொத்தில் பங்குள்ளது என்பதை அத்தீர்ப்பு உறுதி செய்துள்ளது. மணமான பெண்களும் பிறப்பால் குடும்ப உறுப்பினர்களே என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழக மக்கள் இதை வரவேற்று 1989ம் ஆண்டே இச்சட்டம் இங்கு நிறைவேறியது என்பதை நினைவு கூர்ந்து பதிந்தனர். அதேசமயம் சிலர் பெண்ணுக்கு பலவகையில் செலவு செய்யப் படுவதால் குடும்ப சொத்தில் பெண்களுக்கு பங்குதர வேண்டியதில்லை, என ஆங்காங்கு பதிந்ததையும் காண முடிகிறது.பெண்ணின் இரண்டாம் நிலை மாறுவதை விரும்பாத எண்ணத்தின் நீட்சியே இக்கருத்துகள் !

பெண்ணின் பெருமை தாய்மையில் உள்ளதாக போதித்துக் கொண்டே நாளும் பெண் மீதான பாலியல் வன்முறைகள் தொடரும் ஆதிக்க சமூகமிது! அவளின் பாதுகாப்பு குறித்த கவலையுடன் கற்புக் கோட்பாடும் இணைவதால் மடியில் நெருப்பை சுமக்கும் உணர்வுடன் பெண்ணைப் பெற்ற குடும்ப நிலை உள்ளது.

பெண்ணின் திருமணத்தையே சமூகம் இதற்கு தீர்வாக இன்றும் முன் வைக்கிறது. ஆனால் மணப்பெண் வீட்டாருடன் இணைந்து அவர்கள் வீட்டில் ஆண் வாழ்வது கேவலமாகவும் மணமகன் வீட்டாரை சிறப்பாய் கவனிப்பதே மணம் புரிந்த பெண்ணின் கடமை என சொல்லும் சமூகத்தில் வாழ்கிறோம்! எனவே தான் பிறந்த வீட்டின் பெருமைக்கும் புகுந்த வீட்டின் கடமைக்கும் இடையே சிக்கும் பெண் வீடு சார்ந்த ஒவ்வொரு அம்சத்திலும் பாராட்டுப் பெறுவதை விட அதிகமாய் விமர்சிக்கப் படுகிறாள்.

பிறந்த குழந்தையின் பாலினம் அறிய ’வூட்டுக்கா ஊருக்கா ‘எனும் விசாரிப்பு இன்றும் பல ஊர்களில் நடைமுறையில் உள்ளது. ஊருக்கு என வரையறுக்கப்படும் பெண் தன் சாதிக்காரன் வீட்டுடன் தான் இணைய வேண்டும் என்பதிலும் சமூகம் தெளிவாக உள்ளது.

சம்பாரிக்கும் பெண் இரட்டைக் குதிரை சவாரி சிறப்பாக செய்வதையே சமூகம் நல்ல பெண்ணின் அளவுகோலாக அவள் மீது திணிக்கிறது. ஏதோ காரணத்தினால் அவள் தனிப் பெண்ணாக வாழ நேர்ந்தால் குடும்பம் மற்றும் சமூகம் அவளை மதிப்பதில்லை .
இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பு குடும்பம் இயல்பாய் நடைமுறைப் படுத்த பெண் குறித்த மதிப்பீடுகள் மாற்றப் படவேண்டும். சமூகம் பெண் உடலின் சிறப்பம்சங்களையே அவள் படும் உபாதைகளை மட்டும் பெரிது படுத்தி பெண்ணை இரண்டாம் இடத்தில் வைக்கிறது. அவளின் தேவை கண்டு உதவுவதும், ஆளுமைத் திறனை மதிப்பதும், அவள் உள்ளத்தின் மீது நம்பிக்கை கொள்வதும் அவசியம். இவை சமூகம் குடும்பம் எனும் இரு தளத்திலும் பார்வை மாற்றத்திற்கான சூழலை உருவாக்கும்.

ஆனால் இச்சூழல் தானாய் வராது என்பதே உலக மற்றும் உள் நாட்டு அனுபவமும் கூட ! 1950ல் குடியரசான இந்தியாவின் வாக்குரிமை சாதி மற்றும் பாலின, பொருளாதார பாகுபாடின்றி அனைவருக்கும் சட்டமாக்கப் பட்டது . இது உலக அரங்கில் நம் நாட்டை முன்னோடியான மாபெரும் ஜனநாயக நாடெனும் பெருமை சேர்த்தது.

அடுத்த மாபெரும் ஜனநாயக ஏற்பாடென பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேறியது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் 50% இட ஒதுக்கீடு தமிழகத்தில் உள்ளது. ஆனால் இன்னமும் நகர்ப்புற அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கவில்லை. நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை, ரிசர்வ் தொகுதிகளில் வென்ற தலித் பெண் தலைவர்களுக்கு மரியாதை இல்லை எனும் கசப்பான உண்மைகளும் நீடிக்கிறது.
பெண்களின் கல்வி,வேலை, சுயசார்பு மற்றும் தன்னம்பிக்கை, வளர பலதரப்பட்ட ஆளுமைகளும், அரசியல் கட்சிகளும், மாதர் அமைப்புகளும் பல வகையில் பெரும் உழைப்பை செலுத்தியுள்ளனர்.

அரசமைப்பு சட்ட உருவாக்கம் செய்த டாக்டர் அம்பேத்கர் முதல் பலரும் இணைந்து செய்த சிவில் சட்ட மாற்றங்கள் குடும்பம் எனும் மிகச்சிறு அலகில் முக்கியமான ஜனநாயக விளக்குகளை ஏற்றியுள்ளன. இவைகளும் சனாதன சக்திகளின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டே கிடைத்துள்ளன.
இப்போதைய நீதிமன்றத் தீர்ப்பு குடும்ப ஜனநாயகத்தின் விரிவாக்க திசையில் ஒரு முக்கிய அடி வைப்பு ! ஆனால் ஜனநாயகக் காற்று வீச வேண்டிய தூரம் அதிகம் ! எனவே பெண்கள் அரசியல் ஆளுமைகளாக உருவாக வேண்டிய அவசியம் உள்ளது ! சட்டசபை மற்றும் நாடாளுமன்றம் தான் கொள்கை முடிவுகளை தீர்மானிக்கின்றன !

எனவே சொத்துரிமைக்காக தமிழக சட்டசபையில் கோரிக்கை வைத்த பாப்பா உமாநாத் போன்ற ஆளுமைகள் உருவாகப் பாடுபடுவோம் !நீண்ட கால கிடப்பில் உள்ள 33% ஒதுக்கீட்டுக் கோரிக்கை நிறைவேற வலியுறுத்து வோம் ! சமூக சமத்துவம் உறுதிப்பட, ஜனநாயகம் வலுப்பட இவ்வகை
முன்னெடுப்புகள் தேவை என்பதை உணர்வோம்! பெண்களும் ஆண்களும் அரசியல் கட்சிகளும் மாதர் அமைப்புகளும் இணைந்து போராடுவோம் ! சாதிப்போம் !


– செம்மலர்.

Related Posts