அரசியல் அறிவியல்

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020:சட்டப்படி இயற்கையை விற்கும் சாகசம்

கொரோனா காலத்தில் மோடி அரசாங்கம் செய்துவரும் அநியாயங்கள் சொல்லி மாளாது. இந்த பேரிடரை முன்வைத்து இந்த அரசு செய்து வரும் மக்கள் விரோத நடவடிகை கணக்கில் அடங்காது. மக்கள் வரி பணத்தில் உருவாக்கப்பட்ட  ரயில்வே உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் கார்ப்ரேட் பெருமுதலாளிகளுக்கு கொடுப்பது இயல்பான ஒன்றாக மாறி உள்ளது. துண்டு துண்டாய் கொடுத்து மிகவும் சலித்துபோன மோடி அரசு தேசத்தின் வளங்கள் அனைத்தையும் ஒரே சட்டத்தின் மூலம் அடகு வைக்க துணிந்து விட்டது. அதன் பெயர் சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 ஆகும் (Environment Impact Assessment -2020).

இணைய வழி சில நிமிட கூட்டங்களில் எடுக்கும் அல்லது அறிவிக்கும் முடிவுகள் மிகவும் பேரழிவை தரக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக சுற்றுசூழல் மற்றும் அதையொட்டிய மக்கள் வாழ்வாதார பாதிப்புகள் மிகப்பெரிய அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. உதாரணமாக

ஐந்து திட்டங்கள்:

1. சூரியன் உதயமாகும் நிலம், இயற்கை அதிசயம் என குறிப்பிடப்படுகிற,  அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் 4 தேசியப் பூங்காக்கள் மற்றும் 7 வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன. 83.749 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாகும். பன்முக தன்மை வாய்ந்த, பல்லுயிரி நெருக்கம் நிறைந்த அருணாசல பிரதேசத்தில் நெட்டாலின் ஹைட்ரோ பவர் திட்டத்திற்கு இக்காலத்தில் அனுமதி கொடுக்கப்படுள்ளது. திபாங் ஆற்றில் 278 மீட்டர் உயரத்துக்கு அணை  கட்ட 1,600 கோடி அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால் இந்தியாவிலேயே மிக உயரமான அணையாக இது இருக்கும். ஆனால் இந்த நீர் பரபின் உயர்வால் குடும்பங்களை இழக்கும் வன மக்களின் வாழ்வாதாரம் என்னவாகும்?

2. அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மற்றும் நகாவோன் மாவட்டங்களில் அமைந்துள்ள தேசியப் பூங்கா காசிரங்கா வனவிலங்கு சரணாலயம்  ஆகும். சுமார் நானூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு விரிந்திருக்கும் இங்கு இந்தியாவின் பெருமைக்குரிய அரியவகை ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்கள் வசிக்கும் பிரம்மபுத்ரா நதிப் படுகையில் உள்ள இந்த காடுகளில் உலகின் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு வசிக்கின்றன. இவை தவிர யானைகள், காட்டெருமைகள், மான்கள் மற்றும் அரியவகைப் பறவையினங்களும் காசிரங்காவின் சிரப்பு அம்சமாகும். 1905ஆம் ஆண்டில் காசிரங்கா காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. 1974ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக மாற்றப்பட்டது. 1985ஆம் ஆண்டில் இதனை உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகாரம் செய்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இப்பகுதியில் யாணைகள் காப்பகம் அருகில்  பகுதியில் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி கொடுக்கப்படுள்ளது.

3. மத்தியபிரதேச கஜூரஹோவிற்கு அருகில் அமைந்துள்ளது பண்ணா தேசியப் பூங்கா. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் அதிகம் புலிகளைக் காணலாம். பண்ணா காட்டு பகுதியில்தான் மோடியின் முதல் நதிகள் இனைப்பு திட்டம் உருவானது. பண்ணா புலிகள் காப்பகத்தின் 4141 ஹெக்டேர் நிலங்கள் பிடுங்கப்பட்டது. அதவது 105 சதுர கிலோமீட்டர் பகுதி சூரையாடப்பட்டது. அப்போது எதிர்ப்பு கிளம்பியவுடன் இது மக்களுக்கு ஆதரவான திட்டம், இனி இங்கு எவ்வித சுரங்க பணிகளும் நடக்காது என மோடி அரசு சத்தியம் செய்தது. ஆனால் இப்போது  இக்காடுகள் பகுதியில் வைரம் எடுப்பதற்கு கார்ப்ரேட் கம்பெனிக்கு அனுமதி வழங்கப்படுள்ளது.

4. 650 கிமீ தூரம் கொண்ட பிட்ர்கனிகா சதுப்புநில காடுகள் நிறந்த ஒடிசா மாநில சந்திரபிலா சுரங்கம் உள்ள வனப்பகுதியில் தாளபிரா II மற்றும் III நிலக்கரி சுரங்கம் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது, இது 2018 ஆம் ஆண்டு அதானி எண்டர்பிரைசஸ் லிமிட்டட் நிறுவனத்திடம் சுரங்கத்தை உருவாக்கி இயக்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்கியது. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவுக்கு அளித்த அறிக்கையில் அதானி நிறுவனம், சுரங்கம் 12,000 கோடி வருமானம் ஈட்டும் என்று குறிப்பிட்டது. இதனால் வனம் கொடூரமாக அழிக்கப்பட்டது. இது போதாதென இப்போது அதானி நிறுவனத்திற்கு அந்த நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் மிகப்பெரிய திட்டத்திற்கும் மோடி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

5. குஜராத் மாநிலத்தின், சௌராட்டிர தீபகற்பத்தில், கிர் சோம்நாத் மாவட்டத்தில், உலகப் புகழ் பெற்ற ஆசிய சிங்கங்களுக்கான, கிர் தேசியப் பூங்கா இந்தியாவில் மட்டுமல்லாது ஆசிய அளவில் தனித்தன்மை வாய்ந்தது. இது சிங்கங்களின் சரணாலயமாக உள்ளது. 1412 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் காடுகளில் சிங்கங்கள், வங்கப் புலிகள், சிறுத்தைகள் உள்ளன. இந்த பகுதியையும் விட்டுவைக்கவில்லை மோடி அரசு குஜராத் கீர் காடுகளில் சுண்ணம்பு கல் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இவைகளுக்கு யாரிடமும் அனுமதி பெறாமல் இருக்க அவர்கள் கொண்டுவந்துளதுதான் EIA – 2020 ஆகும்.

வளம் நிறைந்த இந்தியா:

இந்தியா மிகவும் வளம் மிக்க பன்முகத்தன்மை வாய்ந்த நிலபரப்பைக் கொண்டது. பசுமை காடுகள் நிறைந்த, 6 மாநிலங்களில் படர்ந்து செல்லும் மேற்கு தொடர்ச்சி மலைகளும், Ever Green Forest  என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநில  பசுமை காடுகள், கிழக்கு தொடர்ச்சி மலைகள் அதில் உள்ள கனிம வளங்கள், பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரம் கொண்ட கடற்கரைகள், 100க்கும் மேற்பட்ட ஆறுகள், சதுப்பு நில காடுகள், தக்கான பீட பூமி என வியத்தக வளங்களை கொண்ட நாடு. ஆனால் இந்த வளங்களை கொன்றழிக்க மோடி அரசு அலைகிறது. அதற்கு தடையான சட்டங்களை உடைத்து வருகிறது.

  1972-ம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் “மனித சூழல் குறித்த ஸ்டாக்ஹோம் மாநாடு பிரகடனத்தின்” அடிப்படையில், “சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் அடிப்படைக் கடமை” (Fundamental Duty) என்பது 1976-ல் கொண்டு வரப்பட்ட 42-வது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில்தான் “போபால்” துயரத்திற்குப் பிறகு – “சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது, ‘சூழலியல் தாக்க மதிப்பீடு 2006’ சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சுற்றுசூழல் சட்டமே பல குறைபாடுகளை கொண்டதுதான். இருப்பினும் ஒரு சில பாதுகாப்புகளாவது அதில் இருந்தது. சுற்று சூழலை பாதுகாப்பதில் பசுமை தீர்ப்பாயம், உயர் மற்றும் உச்ச நீதி மன்றங்களில் தலையீடுகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. ஆனால் 2006 சட்டத்தை வலுவாக்க போகிறோம் என்ற பெயரில் மிகவும் ஆபத்தானதாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 வந்துள்ளது.

கொரோனா பாதிப்புள்ள இந்த சூழலில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி வரைவு அறிக்கையை தயாரித்து ஏப்ரல் 11 ஆம் தேதிக்குள் இதுகுறித்த கருத்துக்களை மக்கள் கூற வேண்டும் என கூறியது. இதனிடையே டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இது இந்திய நாடு முழுவதும் பாதிப்புகளை உருவாக்கும் வரைவு என்பதால் 22 மாநில மொழிகளில் இதை மொழிபெயர்த்து 10  நாட்களில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு கருத்து சொல்லும் காலத்தை ஆகஸ்ட்11 வரை தள்ளி வைத்துள்ளது. ஆனல் இதுவரை மொழிபெயர்ப்பு பணி நடக்கவில்லை. 

சுற்று சூழல் தாக்க அறிக்கை என்பது என்ன?

              இந்த அறிக்கையை அரசு திட்டங்கள் எனில் அரசும், தனியார் திட்டங்கள் எனில் அரசு அனுமதிபெற்ற தனியார் அமைப்புகளை வைத்தும் முதலில் சாத்திய கூறு அறிக்கையையும் (Feasibility Report)  பின்பு சுற்றுச்சூழல் தாக்க மதிப்ப்பீட்டு அறிக்கையையும் ( Environment Impact Assessment Report)  தயார் செய்து அதை திட்ட அமலாக்கம் உள்ள மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்  மூலம் வெளியிட்டு 30 நாட்கள் மக்கள் கருத்துக்கு காத்திருந்து பின்னர் உள்ளூர் மொழிகளில் கருத்து கேட்ப்பு கூட்டத்திற்கு அறிவிப்பு செய்வர். பின்னர் பொதுமக்கள் கருத்துக்கேட்பு (Public Hearing)  கூட்டம் நடத்தி மக்கள் மக்கள் கருத்துக்களை கேட்டு பின்புதான் அந்த திட்டம் அமலாக்கம் நடக்கும். இதில்கூட தனியார் நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுவது உண்டு.

              உதாரணமாக 2014 ஆண்டு கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் வேலிங்கிராயன் பேட்டை கிராமத்தில் குட் எர்த் ஷிப் யார்டு என்ற கப்பல் கட்டும் தளம் துவக்க கருத்துகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. ஆனால் அந்த தளத்துடன் ஒரு இரசாயன நிறுவனம் துவங்கும் செய்தியை மறைத்திருந்தனர். மேலும் அந்த கூட்டத்திற்காக வெளியிடபட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்ப்பீட்டு அறிக்கையை தயார் செய்திருந்தது அண்ணா பல்கலைகழகம். ஆனால் அப்போது அந்த பல்கலை கழகத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்ப்பீட்டு அறிக்கை தயாரித்து கொடுக்கு அனுமதியே இல்லை என்பதை கண்டறிந்து அதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி அன்றைய சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.பாலகிருஷ்ணனும் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களும், சுற்று சூழல் அமைப்புகளும் உள்ளூர் மக்களும் இணைத்து போராடி அந்த திட்டத்தை இரத்து செய்ய வைத்தனர்.       

பிரிவை மாற்றி வழ்வை சூரையாடும் கதை:

2006 ஆண்டு சட்டத்தில் பிரிவு A என்பது மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திடம் அனுமதி வாங்க வேண்டிய திட்டங்கள் என்றும், பிரிவு B மாநில அரசுகள் அனுமதி வாங்க வேண்டிய திட்டங்கள் என்றும் இருந்தது. ஆனால் இந்த இரண்டுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்ப்பீட்டு அறிக்கையயும், மக்கள் கருத்து கேட்பும் முக்கியம் ஆனால் 2020 சட்டத்தில் பிரிவுகள் A மற்றும் B என்பதை மாற்றி  பிரிவுகள் A1, B1, B2 என மூன்றாக பகுத்துள்ளனர் இதில் B2 என்ற பகுதியில் வரும் திட்டங்களுக்கு எவ்வித சுற்றுச்சூழல் தாக்க மதிப்ப்பீட்டு அனுமதியும் தேவையில்லை என்று வகுத்திருப்பது மிகவும் ஆபத்தானதாகும்.

உதாரணமாக B2 பகுதியில் பாதுகாப்பு துறை, முக்கியத்துவம் வாய்ந்த துறைகள், மின்சார கம்பங்கள் அமைப்பது, 8 வழி, 4 வழி சாலைகள் மைப்பது, ரயில் தண்டவாளங்கள் அமைப்பது, கேஸ் பைப் லைகள் அமைப்பது, சூரிய மின்சாரம் தயாரிப்பது, நச்சு வாய்வு நிறூவனங்கள்  என வாழ்விட நிலங்களை, காடுகளை, விவசாய வயல்களை, ஆறுகளை, மலைகளை துளைத்து செல்லும் நேர் கோட்டு திட்டங்கள், கடலில் 15 நைட்டிங்காம் தூரத்திற்கு அப்பால் வரும் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட 40 வகையான திட்டங்களுக்கு அனுமதி வேண்டாம் என குறிப்பிடப்படுள்ளது.

இது எத்தகைய அபாயம் என சொல்லி விளக்கிட வேண்டாம். அதேபோல 2006 சட்டத்தின் படி கனிம வளங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்களுக்கு 30 ஆண்டுகள் மட்டுமே அனுமதி (இதுவே அதிகம்) ஆனால் 2020 சட்டத்தின்படி 50 ஆண்டுகள் என உயர்வு. அணை மற்றும் அணு நிறுவனங்களுக்கு 10 வருட அனுமதி என்பது 15 வருடங்களாக  உயர்த்தப்படுள்ளது. இதர திட்டங்களுக்கு 5 ஆண்டுகள் என்பது 10 ஆண்டுகளாக உயர்த்தபடுள்ளது. மேலும் கொடுமையாக தற்போது சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இல்லாமல் நடந்துக்கொண்டிருக்கும் பல நிறுவனங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது. சமீபத்தில் 15 உயிர்களை பரித்த, பல மக்கள் உடல் நலனை பாழ்படுத்தி உள்ள காற்றையும் நீரையும் நஞ்சாக்கி உள்ள விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி பாலிமர்ஸ் என்ற நிறுவனமும் இதில் அடங்கும்.

அழிக்கப்படும் மணல் திட்டுக்கள்:

அதேபோல் ஒரு திட்டம் துவங்க நிலம் வாங்கிய பிறகு அனுமதி வாங்குவதற்கு முன்பே அந்த நிலத்தை சம தளமாக்கலாம் என்ற EIA 2020 திட்டமும் மிகவும் ஆபத்தனது. தனது அதிகார பலத்தால் நிலங்களை வாங்கும் நிறுவனங்கள் விளை நிலங்களை அழித்து  சமதளமாக்கலாம். அவர்களுக்கு காவல்துறை உதவி இருந்தால் போதும். அவர்கள் திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் முன்பே பல பணிகளை செய்து முடிப்பர். இதில் மிகவும் ஆபத்தானது கடற்கரையோரம் வரும் திட்டங்கள்தான்.  ஏனெனில் கடற்கரையை சார்ந்த மணல் திட்டுக்கள் (Sand dunes) சூழலியலுக்கு மிகவும் முக்கியமானவை. இயற்கை பேரிடர்களிலிருந்து மக்களை காப்பவை.  இவைகளை அழித்த பின்பு அனுமதி வாங்கி என்ன செய்வது. கடலூர் அருகில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள கடற்கரை மணல் திட்டுக்களை நாகார்ஜுனா என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் அழித்த வரலாறு உண்டு. ஆனால் அந்த நிறுவனம் இன்றுவரை பல்வேறு காரணங்களால் துவங்கப்படவில்லை என்பதும் அழிந்த மணல் திட்டுகள் சமதளமாய் நிற்பதும் வரலாறு.

CSR நிதி: 

மக்கள் வாழ்வதரத்தை பறித்து அமலாக்கபடும் திட்டங்கள், அதனால் வாழ்விழந்த மக்களின் வாழ்வாதரத்தை பாதுகாக்க அங்கு செயல் படும் நிறுவனங்கள் அம்மக்களின் வாழ்வாதர மேம்பாட்டுக்கு செலவு செய்யும் தொகை CSR நிதி எனப்படும் (Corporate Social Responsibility Fund). இது பெரு நிறுவனங்களில் பிச்சை அல்ல அவர்களின் சமூக கடமை. அல்லது அதை பெற வேண்டியது வாழ்விழந்த மக்களின் அடிப்படை உரிமை. அந்த அடிப்படையில்தான் தங்களது லாபத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகையை நிறுவனங்கள் கிராம மக்களுக்கு செலவு செய்து வருகிறது. உதாரணத்திற்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆண்டுக்கு 1200 கோடி லாபம் அடைந்தால் அதிக பட்சம் 45 கோடியை இந்த வகையில் மக்களுக்கும் அவர்களுக்கான திட்டங்களுக்கும் செலவு செய்ய வேண்டும்.  ஆனல் EIA 2020  வரைவு படி இதற்கும் ஆபத்து வந்துள்ளது.

மோடி அரசு கொரோனா பேரிடர் காலத்தில்  இந்த CSR நிதியைக் கூட மக்களுக்கு செலவு செய்யவிடாமல், நிறுவனங்களை மிரட்டி தனது தனி பட்ட நிதி நிறுவனமான பி.எம்.கேர்ஸ்க்கு இந்த நிதியை களவாடியது தனி கதை. (அதிகாரபூர்வமற்ற மோடியின் இந்த பி.எம்.கேர்ஸ் கணக்கிற்கு நெய்வேலி நிலக்கரி நிறூவனம் 20 கோடி கொடுத்துள்ளது.) ஆனால் இனி மக்கள் வாழ்வாதரத்தை சூரையாடி கொழுக்கும் நிறுவனங்கள் ஆண்டுக்காண்டு CSR நிதியைக் கூட கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  தனது திட்ட வரைவின் போது ஒப்புக்கொள்ளும் நிதியை கொடுத்தால் போதும் என்ற நிலையை உருவாகி உள்ளது இந்த புதிய சட்ட வரைவு.

வளரப்போகும் கட்டிடங்கள்:

இதுவரை 20,000 சதுர மீட்டருக்குள் மட்டுமே நிறுவனங்கள் கட்டிடங்களை கட்ட அனுமதி இருந்தது. அதற்கு மேல் கட்ட வேண்டுமெனில் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. ஆனல் இனி 1,50,000 சதுர மீட்டர் வரை அனுமதி இல்லாமல் கட்டிடங்களை கட்டிக்கொள்ளலாம் என்ற மாற்றம் செய்யப்படுள்ளது. ஏற்கனவே சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்கள் வானுயர எழுப்பப்படும் கட்டிடங்களால் மூச்சு தினறி வரும் சூழலில் இனி இயற்கை வளங்களை கொள்ளையடித்து அந்த இடங்களில் எல்லாம் கான்கிரீட் அகழிகள் எழுந்து நிற்க போகிறது.

அதுமட்டுமல்ல எந்த ஒரு நிறுவனமும் அனுமதி வாங்கிய அளவுக்கு மீறி தனது நிறுவனத்தை ஓர் அடி விரிவாக்கம் செய்ய வேண்டுமெனில் முறையான அனுமதி வாங்க வேண்டுமென்பது இதுவரௌ இருக்கும் சட்டம் ஆனால்  EIA 2020 இதையும் ஒழித்துக்கட்டுகிறது. அதாவது எனத ஒரு நிறுவனமும் அல்லது திட்டமும் 50  சதம் வரை EIA அனுமதி இல்லாமல் விரிவாக்கம் செய்து கொள்ளலாம். அதாவது 100 கிலோ மீட்டர் சாலைக்கு அனுமதி வாங்கி 150 கிலோ மீட்டர் போட்டுக்கொள்ளலாம். பின்பு அனுமதி வாங்கினால் போதும். இது எவ்வுளவு அக்கிரமான திட்டம் என்பதை இந்த வரைவு திட்டவட்டமாக விளக்குகிறது.             

அரசியல் சட்டத்திற்கு எதிரானது இந்த EIA 2020:

குறிப்பாக இன்னொரு கவனிக்க வேண்டிய அம்சம், சூழலுக்கு ஊறு விளைவிக்கும் தொழிற்சாலைகளை எதிர்த்து சில அமைப்புகளும் தனி நபர்களும், அரசியல் இயக்கங்களும் நீதிமன்றங்களுக்குச் செல்கின்றன அல்லவா. இனி அது முடியாது! அதனைத் தடை செய்கிறது இந்த வரைவு. ஒரு நிறுவனத்தை எதிர்த்து குடிமை சமூகமோ, தனி நபர்களோ இனி நீதிமன்றங்களுக்குச் செல்ல முடியாது. அரசு அமைப்புகள் மட்டுமே செல்ல முடியும் என்கிறது இந்த வரைவு. இது எவ்வுளவு மோசமான ஆபத்து என்பதை நாம் அறிய முடியும். குடிமக்களின் அடிப்படை உரிமையைக்கூட மறுக்கும் பாஜக பாசிச குணத்தின் வெளிபாடு இது. அதுமட்டுமல்ல மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தலைவரையும், உறுப்பினர்களையும் மத்திய அரசே நியமிப்பது கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தைச் சவக்குழியில் தள்ளுவதற்கு சமமாகும்.

இந்திய அரசியல் சாசன சட்டத்தில் பிரிவு 21, இந்திய அரசியலமைப்பு சட்டம், 1950 ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளின்படி அல்லாமல் எந்த ஒரு மனிதரின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுதல் கூடாது.  பிரிவு 3, ஐ. நா சபை மனித உரிமைப்பிரகடனம், 1948 ஒவ்வொருவரும் தாங்கள் உயிர் வாழ்வதற்கும், தங்களது சுதந்திரத்திற்கும் மற்றும் பாதுகாப்பிற்கும் உரிமை உள்ளவர்கள். பிரிவு 6:1, அகில உலக சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்பாடு, 1966: உயிர் வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதரின் உள்ளார்ந்த உணர்விலிருந்து வருகிறது. இந்த உரிமை சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டும். எவருக்கும் இது தன்னிச்சையாக மறுக்கப்படக்கூடாது.

இந்திய அரசியல் சாசன சட்டத்தில் பிரிவு 51 A (9) ஒவ்வொரு குடிமகனுக்கும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அடிப்படை கடமை என்று அறிவிக்கிறது. அப்படி எனில் சுற்றுச்சூழலை சூரையாடுவோரை எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமையை EIA 2020 பறிப்பது எப்படி சரியாகும்? மக்கள் வாழ்விடங்களை, வாழ்வாதரங்களை பறிக்கும் திட்டங்களை எதிர்த்து கேள்விகேட்கும் உரிமையை அல்லது மக்கள் கருத்து கேட்கும், சொல்லும் உரிமையை பறிப்பது எப்படி சரியாகும்? ஆக அரசியல் சட்டத்தின் அடிப்படையை கேள்வி கேட்கும் இந்த சட்டத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

 யானை இறப்பது விபத்தாலா?

கஸ்தூரிரங்கன் அறிக்கை மேற்கு தொடர்ச்சி மலையில் வெறும் 30 சதமான இடங்கள் மட்டுமே பாதுக்காப்பட்ட இடங்கள் என சுட்டுகிறது. மீதம் உள்ள இடங்கள் எல்லாம் லாப வெறி பிடித்தவர்களில் வேட்டை காடக மாறிவருகிறது. இதன் விளைவு என்ன? பல்லுயிரிகள் வாழ வழி இல்லாமல் அழிந்து வருகிறது. மனித இனத்தின் வழ்விற்கு அத்தியாவசிய அடிப்படையான பூச்சியினங்கள் அழிந்து வருகிறது. அயல் மகரந்த சேர்க்கை குறைந்து வருகிறது. பறவை இனங்கள் தொலைந்து வருகிறது. வனாந்திரத்தில் உரிமையுடன் கம்பீரமாய் வாழ்ந்த மிருகங்கள், தங்கள் வாழ்விடங்களை இழந்து  அனாதைகளாக சுற்றி திரிகின்றன. இந்த உயிர் வாதையின் உச்சம்தான் கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவு தேடி அலைந்த 67 யானைகள் இரயில் தண்டவாளங்களிள் அடிப்பட்டு இறந்து போன கொடூரம்.  தண்டவாளங்களில் கதை இத்தோடு முடியவில்லை கடைசியாக நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுத்த முடிவுகள் என்ன?

 உத்தர பிரதேசத்தில்  2 ரயில்வே திட்டங்களுக்கும் அசாமில் ஒரு திட்டத்துக்கும் அனுமதி அளித்து ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, உத்தர பிரதேசத்தின் சாஜன்வா- டோக்ரிகாட் இடையே 81.17 கிமீ புதிய ரயில்வே பாதை அமைக்கப்படும். மற்றொரு வழித்தடம் உத்தர பிரதேசத்தின்  அலகாபாத்- முகல்சராய் எனப்படும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா சந்திப்பு வரை  150 கிமீ நீளத்துக்கு 3வது வழித்தடம்  அமைக்கப்படும்.  அசாமில் புதிய பங்கைகான்- அக்தோரி இடையே இரட்டை ரயில்வே தடம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இது, 142.97 கிமீ நீளத்தில்  அமைக்கப்படும். நேர் கோட்டு திட்டஙக்ளைதான் இந்த வரைவுபடி கேள்விகேட்க முடியாதே? 

 லாபம் மட்டுமே லட்சியமாய் கொண்ட கார்ப்ரேட் நிறுவனங்கள் இந்த கொடூரங்களை மேலும் உற்சாகமாக செய்து இயற்கையை அழித்து பணமீட்ட இந்த  இயற்கை வளங்களை காவு கேட்கின்றனர். தன்னை வாழவைக்கும் இவர்களுக்கு இவைகளை படையல் செய்ய மோடியும் உற்சாகமாய் தலையசைத்து அதற்கு ஒப்பம் அளிக்கும் சட்ட வரைவை நம்முன்னே வைத்து அனுமதி கேட்கிறார். என்ன செய்ய போகிறோம்? 

சுயசார்பு இந்தியா இதுவென மார்தட்டுவோர் ஆட்சியில் புதிய நவீன தாளாரமய பொருளாதார கொள்கை சார்ந்து கார்ப்ரேட்டுகள் நலன்களை பாதுகாக்க இந்த கொரோனா பேரிடர் காலத்திலும் மோடி அரசு செய்த வெட்கமற்ற செயல்பாடுகள் லட்சகணக்கான மக்களை தேசத்தில் சாலைகளில் நிராதாரவாக அலைய வைத்தது. நடந்து நடந்து கலைத்து சாலைகளில் மக்கள் சுருண்டு விழுந்து இறந்தனர். ரயில் தண்டவாளங்கள் கண்டம் துண்டமாக கிடந்தனர்.

              ”சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020” மோடி அரசா முன்வைக்கப்படுகிறது. உணவ்உ தேடி அலைந்த யானைகள் போல நாமும் அடிபட்டு சாகப்போகிறோமா அல்லது இந்த வரைவை எதிர்த்து போராட போகிறோமா என்ற கேள்வியே முன் நிற்கிறது. வாழ்வாதாரம் நமது உரிமை!

மத்திய அரசின் இந்த வரைவு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 2020, ஆகஸ்ட் 11 வரை அவகாசம் வழக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது கருத்துகளை eia2020-moefcc@gov.in என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்புவது மிகவுமவசியமாகும் மக்கள் இயக்கங்கள் இதை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்றிட வேண்டும். 

எஸ்.ஜி.ரமேஷ்பாபு

கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம்

Related Posts