அரசியல்

விவசாயத்தின் அழிவில் உருவாகும் அமராவதி …

  • சிவகுரு

கடந்த நாடாளுமன்ற தேர்தலோடு பிரிக்கப்பட்ட ஆந்திர மாநில தேர்தலும் நடந்து அதில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது அறிந்ததே.

மிகப்பெரிய மாநிலங்களின் ஒன்றான ஆந்திராவை தெலுங்கானா, ஆந்திர என பிரித்தார்கள். அம்மாநில தலைநகரமாக தற்போது இருக்கும் ஹைதராபாத் குறிப்பிட்ட சில ஆண்டுகள் பொதுவாக இருக்கும் என்றும், பின்னர் ஆந்திராவுக்கு தனி தலைநகரம் உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டது.

எதையும் வித்தியாசமாக செய்ய முடிவுகள் எடுக்கும் சந்திரபாபு இதிலும் எப்போதும் போல வேலைகளை ஆரம்பித்தார் எந்த இடம் என்பதற்கு பல லட்சம் ரூபாய்கள் செலவில் ஆய்வுகள் நடந்தது. அரசு இந்த வேலையை துவக்கியவுடனேயே ரியல் எஸ்டேட் வியாபாரம் சூடு பிடிக்க துவங்கியது. அதற்கிடையில் சந்திரபாபு பல முறை சிங்கப்பூர் சென்று எப்படி தலைநகரை நிர்மாணிக்க வேண்டும் என பலரோடு ஆலோசனைகள் செய்தார்.

தலைநகரத்தை உலக தரத்தில் உருவாக்க வேண்டுமென தன் தீராத ஆசை எனும் பேட்டி கொடுத்தார். இப்படியெல்லாம் பில்டுஅப் ஏற ஏற ஊடகங்களும் அவர்கள் பங்குக்கு பல இடங்களை முன்வைத்து செய்திகள், கட்டுரைகள், என சூட்டை ஏற்றி விட்டன.

இறுதியாக குண்டூர் அருகே கிருஷ்ணா நதிக்கரையில் அமராவதி எனும் பெயரில் தலைநகரம் அமையும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அமராவதி எப்படி இருக்க போகிறது என்பதற்கான வரைவு படம் வெளியிடப்பட்டது. அங்கு என்னவெல்லாம் கட்டுமானம் செய்யப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டது. பன்னாட்டு விமான நிலையம், வானுயர்ந்த கட்டிடங்கள், மெட்ரோ ரயில் சேவை, இத்யாதிகள் அறிவிப்புகள் வந்தன.

இதில் இன்னொரு முக்கிய அம்சமாக பொது தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கூடுதல் நிதி வழங்குவோம் என்று பாஜக அறிவித்தது. சந்திரபாபுவும் மோடி வந்தால் கண்டிப்பாக செய்வார் என ஒத்து ஊதினார்.

ஆனால், அந்த வாக்குறுதியும்  ஓட்டு வாங்குவதற்கான அரசியல் தந்திரம் மட்டுமே.

அழித்து உருவாகும் அமராவதி….

ஒரு புது நகரத்தை உருவாக்குவது என்பது தற்காலத்தில் அவ்வளவு எளிதல்ல என்பதை சாமானிய பாமரன் கூட சொல்லுவார். ஆனால் இன்னும் 4அல்லது 5 ஆண்டுகளில் அனைத்து வசதிகளும் கொண்ட நகரமாக அமராவதி இருக்கும் என பிரகடனப்படுத்துகிறார்கள்.

30,000 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகும் இந்நகரம் சிங்கப்பூர் நாட்டை விட ஒரு படி மேலே இருக்க வேண்டும் என எதிர்பார்பைக் கூட்டுகின்றனர்.  உயர்நீதிமன்றம், அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள், மாநில தலைமை செயலகம், அதையொட்டிய அமைச்சர்கள் ,உயரதிகாரிகளின் குடியிருப்புகள், என பல கட்டடங்கள் வரவுள்ளன.

இதையெல்லாம் பற்றி சொல்லி விளம்பரப்படுத்தும் ஆந்திர அரசு பல முக்கியமான உண்மைகளை மறைக்கிறது. ஆந்திர மாநிலம் விவசாயம் செழிப்பாக நடக்கும் மாநிலங்களில் ஒன்று. அதுவும் தலைநகரம் அமையவுள்ள விஜயவாடா- குண்டூர் பகுதி மிக செழிப்பான பூமி. அந்த பகுதியில் 30,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவது விவசாயிகளை பாதிக்கும் என்பதை சொல்லாமல் மறைக்கின்றனர்.

நிலங்களை கிட்டதட்ட கையகப்படுத்தியுள்ள அரசு எவ்வாறு செய்திருக்கிறது? என்பது அதிர்ச்சியான உண்மை. நிலம் கொடுப்பவருக்கு நிவாரணம், தற்போதைய சந்தை மதிப்போடு ஒப்பிட்ட விலை, என்பதையெல்லாம் செய்ய வில்லை. மாறாக தனியார் மூலம் விவசாயிகளின் நிலத்தை வாங்கி, கட்டுமானப் பணிகளை தொடங்கவுள்ளனர்.

நகர்புற வளர்ச்சி என்பது உலகமய சூழலில் எப்படி நடக்கின்றது என்பதை நாம் இன்று உணர்கிறோம். சமத்துவமில்லாத வளர்ச்சி தான் மேலோங்கி வருவது நம் அனுபவம். வானுயர்ந்த கட்டிடங்கள், வியாபார நோக்கில் உருவாக்கப்படும் பெரும் மால்கள் யாருக்காக?

இத்தனையும் முடித்து அமராவதியில் எழுப்பட இருப்பதோ புத்தரின் சிலை. அவர் முன்மொழிந்த தத்துவத்தின் நிலை?

அமராவதி நகரை திட்டமிட்ட படி உருவாக்க நினைக்கும் ஆட்சியாளர்கள் அனைவருக்குமான நகரமாக அதை நிர்மாணிக்கவில்லை. மாறாக உலத்தரம் வாய்ந்த எனும் சொற்றொடரை மட்டும் பிடித்து கொண்டு மக்களை பந்தாடுகிறார்கள். ஒரு தகவல் புதிய தலைநகரில் பூ அதாவது மலர்களை பயிரிட முடியாது. இயற்கையை கொல்லுவதற்கு இதை விட சாட்சி வேண்டுமா?

ஏமாற்றும் வேலையை அரசே செய்வதா?

புதிய தலைநகரை உருவாக்குவதில் பல சாதுரியங்களை அரசு செய்யும் என சண்டிகார் நகரை உருவாக்கிய அதிகாரிகளில் ஒருவரான தேவசகாயம் சொல்கிறார். எப்படி? ஒரு நகரை உருவாக்கும் போதே, கையகப்படுத்தும் நிலங்களை வங்கிகளில் அடமானம் வைத்து கடன் வாங்கும். அதன் பிறகு தனியாரிடம் (ரியல் எஸ்டேட் புரோக்கர் மூலம்) விற்று ஒரு தொகையை உருவாக்கும் . அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் தான் அடிப்படை வேலைகளே துவங்கும். அடிமாட்டு விலைக்கு வாங்கி அரசே அதை லாபத்துக்கு விற்பது என்ன விதத்தில் நியாயம் என விவரிக்கிறார்.

இதை விட மோசமான முறையை கையாண்டுள்ளது தெலுங்கு தேச அரசு. அக்கட்சியில் உள்ள செல்வாக்கு படைத்த ரியல் எஸ்டேட் முதலைகளிடம் அரசு இந்த வேலையை கொடுத்துள்ளது. மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பல இடங்களில் நிலம் பிடுங்கப்பட்டுள்ளது. நிலம் கொடுத்தால் அரசு வேலை கிடைக்கும் என ஏமாற்றப்பட்டு பலரிடம் எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.

அமராவதி நகர் உருவாக்கப்படுவதின் காரணமாக 7 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைக்கும் என சந்திரபாபு சொல்லியுள்ளார். அமராவதி உருவாக்கத்தில் பெரும் வர்த்தக சூதாட்டம் நடைபெறுகிற சூழலில் நிலம் எடுக்க பல யுத்திகளை கையாண்டதை அங்குள்ள சமூக ஆர்வலர்கள், சுற்று சூழல் பாதுகாப்பாளர்கள் விமர்சனம் செய்துள்ளனர். முழுமையான நகரம் அமைக்கப்பெற இன்னும் 3000 ஏக்கர் நிலம் திட்டப்படி தேவைபடுகிறதாம் . அதையும் கையகப்படுத்த பல்வேறு முறைகளை அந்த அரசு கையாளும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.

பூமிபூஜை எனும் ஆடம்பரம்:

கடந்த அக்டோபர் 22ஆம் தேதி மோடி பங்கேற்போடு அமராவதி உருவாக்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மோடி பங்கேற்றார். அவர் ஆந்திரா வருவதையொட்டி பத்திரிக்கைகள் அம்மாநிலத்துக்கான சிறப்பு நிதியினை / அந்தஸ்தை அறிவிப்பார் என்றெல்லாம் தலையங்கம் தீட்டின. ஆனால் எப்போதும் போல கைகளை ஆட்டி பேசி விட்டு ஒன்னும் சொல்லாமல் போய் விட்டார். ( அவரிடம் என்ன இருக்கு கொடுக்க……) சந்திரபாபு உட்பட எல்லோருக்கும் ஆப்பு …..இதோடு சேர்த்து இன்னோரு கூத்தும் நடந்தது.

நாட்டின் முக்கிய நதிகளிலிருந்து தண்ணீர் எடுத்து வரப்ப்ட்டு யாகங்கள் நடத்தப்பட்டு, பெரும் பொருட்செலவில் மக்களை “திரட்டி” விழா நடந்தேறியுள்ளது. புதிய மாநிலத்தை வழி நடத்த வருவாய் இல்லை என புலம்பும் அரசு ஆடம்பரமாக விழா நடத்துவது ஏன் ? எனும் கேள்விக்கு பதில் நம்மிடமே உள்ளது. அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள், மூலதனங்களை தலைநகருக்கு இழுக்கும் தந்திரங்களில் இதுவும் ஒன்றல்லவா?

அருமையான விளை நிலங்கள், இயற்கை வளங்கள் என பலவற்றை பாழடித்துவிட்டு உருவாகப்போகும் ஆந்திர தலைநகருக்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம், சுற்று சூழல் துறை என அனைத்தும் எவ்வித தடையும் விதிக்கவில்லை என்பதே அப்பட்டமான விதி மீறல் ஆகும்.

எதையும் பகட்டாக செய்து தன் இமேஜை காப்பாற்றி கொள்ள நினைக்கும் அரசியல்வாதிகளில் சந்திரபாபுவும் ஒருவர் என்பதை நாம் அறிவோம். அமராவதி அரசியலில் செல்வாக்கை உயர்த்தி கொள்ள அவர் முயற்சிக்கிறார். ஒரு மாநிலம் தனியாக பிரிக்கப்படும் போது ஏற்படும் நிர்வாக தேவைகள் அதிகம் என்பதில் மாற்று கருத்து இல்லை… ஆனால் அதற்காக பல கோடிகளில் செலவு செய்து தலை நகரம் உருவாக்குவது மட்டும் தீர்வாகாது. மக்களின் வாழ்நிலை முன்னேற்றம், தனிநபர் வருவாய் அதிகரிப்பு, என அடிப்படைகளில் மாற்றங்கள் தேவை.

மேலும் தலைநகரம் மட்டும் அழகுற அனைத்து வசதிகளுடன் இருப்பதும், ஏனைய நகரங்கள் அடிப்படை தேவைகளுக்காக ஏங்குவது நியாயமில்லை என்பதை ஆட்சியாளர்கள் நினைத்திடல் அவசியம்.

ஆக அமராவதி விதிமுறைகளை மீறும் ஒரு தலைநகரம் …… அங்கு நமது வடிவேலு பாணியில் சொன்னால் இருக்கும் ….ஆனா…இருக்காது என்பதே நினைவுக்கு வரும் எது இருக்கும் எது இருக்காது என்பது உலகறிந்த உண்மை.

Related Posts