கலாச்சாரம் சமூகம்

திருநங்கை வேலைவாய்ப்பு: மறுக்கப்படும் அடிப்படை உரிமை (லிவிங் ஸ்மைல் வித்யா)!

-லிவிங் ஸ்மைல் வித்யா

லிவிங் ஸ்மைல் வித்யா

லிவிங் ஸ்மைல் வித்யா

இந்திய அரசியலமைப்பு சட்டம் எந்தவொரு இந்திய குடிமகன்/மகளுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை மருத்துவம், சமூக பாதுகாப்பு, குடும்பம் போன்ற அடிப்படை உரிமைகளை வழங்குவதில் பாலின பேதம் இருக்கக்கூடாதென்கிறது. ஆனால், பாலினம் என்னும் போது பாலியல் சிறுபான்மையினர்களை அது கணக்கில் கொண்டதாக தெரியவில்லை.

சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் ஆண்டுக்கு ஒருவர் என்று கூட வேண்டாம், இத்தனை ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக ஒரேயொரு திருநங்கையோ/திருநம்பியோ ஒரு நபர் கூட அரசு பணிகளில் அமர்த்தப்படவில்லை. கண்கூடான இவ்வளவு பெரிய தொடர் புறக்கணிப்புபை பாலியல் சிறுபான்மையினர்கள் மீது இந்திய அரசும், அரசியலமைப்பு சட்டமும்  கூச்சமின்றி நடத்திவருகின்றன.

வேலைவாய்ப்பு மட்டுமல்ல கல்வி, குடும்பம், சமூகப்பாதுகாப்பு, குடியிருப்பு வசதி என அனைத்து அடிப்படை மனித உரிமையையும் நிறைவேற்றத் தவறியதன் மூலம். திருநங்கைகளையும்/ திருநம்பிகளையும் தாய்நாட்டு அகதிகளாக கையேந்த வைத்து வேடிக்கை பார்க்கும் நாடாகவே இந்தியா உள்ளது.

இந்தநிலையில் சமீபத்தில் பானு, சொப்னா, செல்வி ஆகிய திருநங்கைகளும், ஜெபின், செல்வம் என்னும் திருநம்பிகளும் சேர்ந்து பாலியல் சிறுபான்மையினருக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அடிப்படை உரிமை என்பதைக் கடந்து வேலைவாய்ப்பு என்பது திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் மிக மிக அவசியமாகிறது.

குறிப்பிட்ட வயதிற்குப்பின் தனது நிஜ பாலினம் இது தான் என உணர்ந்து அதற்கு நேர்மையாக இருக்க விரும்புபவர்களே பாலியல் சிறுபான்மையினர். இதனால் ஒரு இந்திய பிரஜைக்கு அனுகூலமான அத்தனை சலுகைகளையும் இழக்க நேரிடும் என்று அறிந்த போதும்,  தம் பாலினத்திற்கும் தமக்கும் நேர்மையாய் இருக்கவே விரும்புகிறோம்.

ஒரு குடும்பம் தன் மகன்/மகள் குறிப்பிட்ட வயதிற்குப்பின் அவர் மகன்/மகளே அல்ல என்றும் அவர் திருநங்கை/நம்பி என்பதை அறியும் பட்சத்தில் மாற்றுப்பாலினம் குறித்த புரிதலின்மையை கடந்து அக்குழந்தையை ஏற்று க்கொள்வதில் உள்ள சிக்கல் அக்குழந்தையின் எதிர்காலம் என்னாவாகும் என்ற பயமே.

குறிப்பாக திருநங்கையாக இருக்கும் பட்சத்தில் இனி அவள் கடைகடையாக பிச்சை எடுக்கப்போகிறாள் என்பதையோ, அல்லது இரவு நேரத்தில் உடலை விற்று உணவு கொள்ளும் பாலியல் தொழிலாளியாக மங்கிய வெளிச்சத்தில் நிற்கப்போகிறாள் என்பதை எந்த இந்திய பெற்றோரால் ஏற்றுக்கொள்ள முடியும்?. ஆனால், அத்திருநங்கையே தம் தகுதிக்கேற்ப ஒரு கண்ணியமான வேலை செய்யமுடியும், அதற்கான வாய்ப்பு திறந்திருக்கும் சூழலில் என்றாவது ஒருநாள் அவளை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புண்டாகும். குறைந்த பட்சம், பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாத சூழலிலும் சமூகப் பாதுகாப்பு, இன்னபிற, ஏதுமற்ற சூழலிலும் தனது வாழ்க்கையையாவது கண்ணியமாக நடத்திக்கொள்ளவாகிலும் இவ்வேலைவாய்ப்பு உதவும்..

ஒருவேளை பாலியல் சிறுபான்மையினர்களால் பிறவி ஆண்/பெண்களைப்போல சராசரி பணியினை செய்யமுடியுமோ? என்ற முட்டாள்தனமான சந்தேகம் இருக்குமேயானால், அதனையும் பல திருநங்கைகள் தகர்த்துள்ளோம். எழுத்தாளர்களாக, அரங்க கலைஞர்களாக, ஓவியர்களாக, நடன கலைஞர்களாக, நிர்வாக திறமை கொண்ட ஆளுமைகளாக பல துறைகளில் அரசின் உதவியின்றியே நிரூபித்துள்ளோம். ஆனாலும், இன்றுவரை எங்களின் திறமைகள் அரசால் அங்கீகாரம்பெறவில்லை.

இது ஒருபுறமிருக்க திருநங்கைகளுக்காக இயங்கும் தொண்டு நிறுவனங்கள் என்ன செய்து வருகின்றன? என்று உற்றுநோக்கினால், அங்கே மாபெரும் சுரண்டல் நடைபெற்று வருவது தெளிவாகும். குழந்தைத்தொழிலாளியை மீட்கும் ஒரு தொண்டு நிறுவனம் அக்குழந்தைகளுக்கு மறுவாழ்வுதானே தர வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்காக பணியாற்று தொண்டு நிறுவனம் அவர்களின் நல்வாழ்விற்குதானே உதவகிறது. தலித்துகளுக்கெதிரான வன்முறைகளுக்காக பணியாற்றும் அமைப்புகள் சாதி வன்முறைக்கு எதிராகத்தானே பணியாற்ற வேண்டும்.

ஆனால் திருநங்கைகளுக்காக பணியாற்றுவதாக காட்டிக் கொள்ளும் தொண்டு நிறுவனங்களோ, சில போரளிகளோ திருநங்கைகளை தொடர்ந்து பாலியல் தொழிலாளிகளாக மட்டுமே தக்கவைத்து வருகின்றனர். ‘அவர்களின் பாதுகாப்பான உடலுறவு’ (!) என்ற தாரக மந்திரத்தை கையிலெடுத்து  ஆணுறைக்கான சந்தையாக மட்டுமே இந்திய அளவில் தொடர்ந்து தக்க வைத்து வருகின்றன. மற்றபடி அவர்களில் கல்வி, குடும்பம், சமூக பாதுகாப்பு, வேலைவாய்ப்பு குறித்து அக்கறை கொள்வதில்லை. பாலியல் தொழிலிலின் போது காவல் துறையினர் மற்றும் தவறான ஆண் கஸ்டமர்களால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு மட்டுமே குரல் எழுப்புவர்களாக இருக்கிறார்கள் ஏனெனில் தொழில் பாதிக்கப்படக்கூடாது.

பாலியல் தொழிலும், பாலியல் தொழில் செய்யும் திருநஙகைகளின் எண்ணிக்கைதான் இத்தொண்டு நிறுவன்ங்களின் ஃபண்டு பெறுவதற்கான மூலதனம். அதனை இழக்க அவர்கள் தயாராக இல்லை. திருநங்கைகள் மற்றும் சமபாலின ஆண்களுக்காக நூற்றுக்கணக்கில் தொண்டு நிறுவனங்கள் உள்ளதென்றால், சமபால் ஈர்ப்புடைய பெண்களுக்கும், திருநம்பிகளுக்கும் விரல்விட்டு எண்ணக்கூட முடியாத தொண்டு நிறுவனங்கள் இல்லை என்பதும் இதனால் தான். திருநங்கைகளை விட திருநம்பிகளுக்கும் சமபால் ஈர்ப்புடைய ஆண்களை விட சமபால் ஈர்ப்புடைய பெண்களுக்கும் தான் இயல்பு வாழ்க்கைக்கு பல சவால்களும், சிக்கல்களும் உள்ளன.

இப்பின்னணியை அறியாமல் தமது போராட்டங்களுக்கு தொண்டு நிறுவன்ஙகளின் ஆதரவு வேண்டி சென்ற அப்பாவி தோழிகளை,  போராட்டம் பண்ண வேண்டாம் என்றும் மீறி செய்தால் அது பாலியல் தொழிலை பாதிக்கும் என்ற காரணத்தால் அத்திருநங்கைகளுக்கு அவர்கள் உதவ மறுத்தனர். உதவ மறுத்த பின்பும் எந்த தொண்டு நிறுவனத்தின் உதவியோ அமைப்புகளின் உதவியோ இல்லாதபட்சத்திலும் திட்டமிட்டபடி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டிய கோரிக்கையை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்திய பின் மறைமுகமாகவும், ஆள் வைத்து அடிப்போமென நேரடியாகவும் மிரட்டியுள்ளனர்.

புறக்கணிக்கும் அரசு, முதிர்ச்சியற்ற சமூகம், சுரண்டும் தொண்டுநிறுவனங்கள் என மும்முனை தாக்கத்தையும் மீறி தங்கள் கோரிக்கையிலும், போராட்டத்திலும் உறுதியாக இருக்கும் திருநங்கைகளுக்கு மற்றொரு சிக்கலும் உள்ளது.

தொண்டு நிறுவனம் என்ற அடையாளம் இன்றி தம்மை சமூக போராளிகளாக அடையாளம் காட்டிக்கொள்ளும் சில மூத்த போராளி திருநங்கைகளோ இப்போராட்டத்திற்கு ஆதரவு வேண்டுமெனில் கார்-போக்குவரத்து வசதி வேண்டும். நல்ல ஹோட்டலில் அறை வேண்டும் என்று ஆடம்பர கோரிக்கை வைப்பது ஒருபுறம் என்றால்,. திருநம்பிகள் தங்களின் கோரிக்கைக்காக அவர்களே தனியாக போராடட்டுமே இப்போதைய இப்போராட்டம் அதன் நோக்கமும் திருநங்கைகளுக்கான கோரிக்கைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று திருநம்பிகள் மீதான காழ்ப்புணர்வோடு பேசி இப்போராட்டத்திற்கு தம் ஆதரவினை தர மறுத்து வருகின்றனர்.

வேலைவாய்ப்புக்கான கோரிக்கையை வெகு சில செய்தி ஊடகங்கள் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. 2006-ல் இந்தியாவில் முதல்முறையாக மதுரையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு திருநங்கையாகவே பெண் என்ற அங்கீகாரத்தோடே பணியாற்றியவள் நான். இம்மாபெரும் வெற்றியை அன்று ஒரு செய்தி ஊடகமும் தனிப்பட்ட முறையில் செய்தியாக்கியதே இல்லை. இப்போதும் கூட ஆண்டுதோறும் பிரிட்டானிய அரசும், சார்ல்ஸ் வாலேஸ் இந்தியா நிறுவனமும் இணைந்து முதல்முறையாக இவ்வாண்டு ஒரு திருநங்கைக்கு அவரது அரங்க கலைக்கு வெகுமதியாக விருதளித்து லண்டனில் 6 மாதம் தங்கிப்படிக்க உதவியுள்ளது. கடவுசீட்டு பெறுவதே போராட்டமான இந்திய திருநங்கைக்கு பிரிட்டானிய அரசு படிக்க முழு உதவித்தொகை அளித்து படிக்க வைக்கும் முக்கிய செய்தி தினகரன் தவிர வேறு எந்த செய்திதாளில்களும் கவனம் கொள்ளவில்லை.

திருநங்கைகளை கேளிக்கை மாந்தர்களாக, பாலியல் வெறியர்களாக, சமூக விரோதிகளாக சித்திரிக்கும் செய்தி ஊடகங்கள், கூத்தாண்டவர் திருவிழாவின் போது விழுப்புரத்தில் குவியும் தமிழகத்தின் அனைத்து சேனல்களின் கேமாராக்களோ பாலியல் சிறுபாண்மையினரின் கல்வி-வேலைவாய்ப்பு என்ற வரும்போது மட்டும் மௌனம் சாதிப்பது புதிராகவே இருக்கிறது. வழக்கமான பேட்டிகளில் கூட நான் பணியாற்றுவதையே கல்வி, வேலைவாய்ப்பில் அரசு இடஒதுக்கீடு தரவேண்டுமென்று கூறுவதை பெரும்பாலும், நீக்கிவிட்டு மற்ற கருத்துகளையே பிரசுரம் செய்து வருவதையும் நான் கவனித்தே வருகின்றேன்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மட்டுமே எந்தவொரு ஒடுக்கப்பட்ட மனிதக்குழுவிற்கும் தன்மானமிக்க வாழ்க்கையை தரும் என்பதை இந்திய வரலாறு பெண்கள் மற்றும் தலித்துகள் மூலம் நிரூபித்துள்ளது. திருநங்கைகளும், திருநம்பிகளும் அவ்வாறு மனிதர்களாக, இந்தியர்களாக சக மனிதர்கள் என்னும் அங்கீகாரத்துடன் கல்வி வேலைவாய்ப்பு பெற்று தலை நிமர்வோம் என்ற நம்பிக்கை இன்றைய இளைய தலைமுறையினர் பானு, சொப்னா, Dr.செல்வி ஆகியோரின் விடாமுயற்சியின் மூலமாக கிடைத்துள்ளது. அதற்கு ஊடகங்களும், சமூக களப்பணியாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், பெண்ணியவாதிகளும், குறிப்பாக ஊடகங்களும் திறந்த மனதுடன் எங்களுடன் கைகோர்க்க வேண்டும்.

Related Posts