அரசியல் அறிவியல்

மின்சாரம் மக்களின் உரிமை! அதை அளிப்பது அரசின் கடமை!!

ebசுதந்திர இந்தியாவில் மின் துறையின் வளர்ச்சி மகத்தானது. மின்சார உற்பத்தி 1326 மெகாவாட்டில் துவங்கி இன்றைக்கு 2,11,766 மெகாவாட் அளவிற்கு உயர்ந்து நிற்கும் துறையாக இந்திய மின்துறை வளர்ந்து உள்ளது. மின் உற்பத்தியில் மட்டும் அல்லாமல் மின்சாரத்தை நாடு முழுவதும் கொண்டு செல்லும் தொடரமைப்பு பாதை ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 3708 சுற்று கிலொ மீட்டரில் துவங்கி மூன்று லட்சம் கிலொ மீட்டராக விரிவடைந்து உள்ளது. இவை அனைத் தும் மின் துறை பொதுத்துறையாகவே இருந்த காரணத்தினால் சாதித்த சாதனைகளாகும்.1990 1991 ஆம் ஆண்டுகளில் நவீன தாராள மயக்கொள்கை அமலுக்கு வந்த பின்னர் ஆளும் அரசுகள் மின்துறையில் தனக்குள்ள பொறுப்பை தட்டிக் கழித்து தனியாரை சார்ந்திருக்கும் நிலை எடுத்த காரணத்தினால் மின்சார உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவ தில் ஒரு பெரும் தோல்வியையே சந்தித்துள்ளது.

அதாவது மின்சார உற்பத்தியில் 1990க்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 84 சதவீதம் அடைந்த போது 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் 2012 ஆம் ஆண்டு வரை இலக்கில் 59 சதவீதத்தையை அடைய முடிந்துள்ளது. நாடு முழுவதும் மின் உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டதனால் மின் பற்றாக்குறையும் மின்வெட்டும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது. மின் பற்றாக்குறையினால் மின் பகிர்வு சமமாக இல்லாத காரணத்தால் மின் பற்றாக்குறையை ஈடு செய்ய ஒதுக்கீட்டு அளவுக்கு அதிகமாக மின் அளவை ஈர்க்கும் போது மின் தொடரமைப்பு துண்டிக்கப்பட்டு இந்தியாவில் ஒரு பகுதி முழுவதும் இருட்டடிப்பு ஏற்பட்டு. அதனால் பல கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படும் நிலை அவ்வப்போது நிகழும் நிகழ்வுகளாக உள்ளது. மின்சாரப் பற்றாக்குறையும் கிடைக்கின்ற மின்சாரத்தை கிராமப்புறங்களுக்கு முறையாக அளிக்க வேண்டும் என்ற திட்டம் இல்லாத காரணத்தினால் இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபது ஆண் டுகள் கடந்த பின்னரும் 11 ஐந்தாண்டு திட்டங்கள் முடிந்த பின்னரும் இன்னும் மின் பற்றாக்குறை 86,095 மெகாவாட்டாக அதாவது 9 சதவீதமாக உள்ளது. நூற்று இருபது கோடி மக்களுக்கு மேல் உள்ள பாரத திருநாட்டில் 40.4 கோடி மக்கள் மின்சாரத்தை நுகராத நிலை உள்ளது. இந்திய கிராமங்களில் 33,060 கிராமங் களுக்கு மின்சாரம் சென்றடையாத நிலைதான் உள்ளது.

அதாவது 32.8 சதவீத வீடுகள் நகர்ப்புறத்திலும் 44.7 சதவீத வீடுகள் கிராமப்புறத்திலும் மின்சாரம் சென்றடையாத அவலநிலை தான் இன்றும் நீடிக்கின்றது. 2007 ஆம் ஆண்டு முதல் அரசு பின்பற்றும் மின்சாரக் கொள்கை மானியங்கள் வெட்டு, திறந்த வெளி மின் பரிவர்த்தனை கொள்கை, எரிபொருள் பற்றாக்குறை, நிலக்கரி உள்ளிட்ட எரிபொருள் இறக்குமதி, மின் உற்பத்தியில் தனியாரின் ஆதிக்கம் போன்ற காரணிகளால் மின் கொள் முதலில் அதிக விலைக்கொடுத்து (ஒரு யூனிட் ரூ.18/ வரை) வாங்குவது போன்ற காரணங்களால் மின்சாரக் கட்டணமும் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு போல் ஆண்டுக்கு பலமுறை மின் கட்டண உயர்வை அறிவிக்க வேண்டிய அரசின் கொள்கையினால் மக்கள் செலுத்த முடியாத அளவிற்கு மின் கட்டணம் உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பொதுவாக சமூகப் பொருளாக இருந்த மின்சாரத்தை சந்தைப் பொருளாக மாற்றும் நிலை இதனை நியாயப்படுத்தும் முறையில் வருடத்திற்கு இரண்டு முறை மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியத்தின் ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு போன்றவைகளால் மின் நுகர்வோர் செலுத்த முடியாத அளவிற்கு மின் கட்டணமும் அதை எதிர்த்த போராட்டங்களும், உயிர் இழப்புகளும் அன்றாட நிகழ்வுகளாக மாறி உள்ளது.

அரசு பின்பற்றும் மின் கொள்கையினால் பாதிக்கப்படுவது மின் நுகர்வோர்கள் மட்டும் அல்ல. மின்வாரிய ஊழியர்களும் தான் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மின்வாரிய ஊழியர்களின் எண்ணிக்கை வெகுவாக வெட்டி குறைக்கப்பட்டுள்ளது. 1984 கால கட்டத்தில் 12 லட்சம் மின் வாரிய ஊழியர்கள், 2009 ஆம் ஆண்டில் 7,58,234 ஆகவும் 2012 ஆம் ஆண்டில் 5,64,667 ஆக வெட்டி சுருக்கப்பட்டுள்ளது. காலி பணி இடங்களால் ஏற்பட்ட பணியை, தினக்கூலி, ஒப்பந்தம், அவுட் சோர்சிங் மூலம் செய்ய வைத்து உழைப்புச் சுரண்டலை அரசுகளே அரங்கேற்றும் அவல நிலைதான் நீடிக்கிறது.

இந்திய மின் கூட்டமைப்பின் 7 வது அகில இந்திய மாநாடு கோவில் நகரமாம் காஞ்சி மாநகரில் 2013 ஆகஸ்ட் 10, 11, 12 தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டில்தான் மேற்கண்ட பிரச்சினைகளுக்காக போராட்டத்தை அறிவித்துள்ளனர். இப்போராட்டங்களை வெற்றிபெற செவ்யதுதான் மின்துறையை பாதுகாக்க சிறந்த வழியாகும்.

மூன்று கட்ட இயக்கம்:

* மின்சாரம் மக்களின் அடிப்படை உரிமை! அதை அளிப்பது அரசின் கடமை!!* இந்திய மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்ப மின்சாரத்தை அளிக்க வேண்டும்
* மின்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நாடு தழுவிய ஊதியக் கொள்கை, தற்காலிக பணியாளர்களின் நிரந்தரத்திற்கான கொள்கை என்பன போன்ற கொள்கைகளோடு
* மக்களை சந்தித்து விழிப்புணர்வு பெறச்செய்வதும்
* அரசை வலியுறுத்தும் விதமாக இயக்கங்களை நடத்துவதும்
* பிரச்சார இயக்கமாக ஆகஸ்ட் 29 லிருந்து செப்டம்பர் 14 வரை மாற்றுக் கொள்கைகளை முன் வைத்து பிரச்சாரம் நடத்தவும்
* டிசம்பர் 11 ல் தில்லியில் கருத்தரங்கம் நடத்தவும் மாநாடு முடிவு செய்தது.
மூன்றாம் கட்ட இயக்கமாக நாடாளு மன்றம் நோக்கி பேரணி நடைபெற உள்ளது.
___________________________________________________________
தீக்கதிர் நாளிதழில் திரு எஸ்.எஸ். சுப்பிரமணியன் அவர்கள் இன்று எழுதிய கட்டுரையின் முக்கிய பகுதிகள்

Related Posts